குரோம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ரயிலிலிருந்து இறங்கி வீட்டுக்கு நடந்துசெல்லும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யாவை அடிக்கடி பார்ப்பதற்கான வாய்ப்பு அப்போது கிடைத்தது. பள்ளிக்கூடத்தில் நாங்கள் நடத்திய போராட்டத்துக்கு உதவி கேட்டுச்சென்ற அவருடைய வீடு, பெரும் அரசியல் வரலாற்றைக் கொண்டது என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை. பழைய புத்தகக் கட்டுகளுக்கு இடையில் செய்தித்தாளில் அச்சாகியிருந்த, ‘வறுமையின் நிறம் சிவப்பு அல்ல, வறுமையைப் போக்க வந்த நிறமே சிவப்பு - சட்டமன்றத்தில் சங்கரய்யா பேச்சு’ என்ற செய்தியைப் பார்த்த பிறகு, ‘தாத்தா’ என அதுவரை அழைத்துக்கொண்டிருந்த சங்கரய்யா எனக்குத் தோழராக மாறினார்!
சங்கரய்யாவின் 40 வயது வரையிலான வாழ்க்கையை ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால் ‘ஏறுனா ரயில், இறங்கினா ஜெயில்’ எனலாம். அவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை மாணவராகப் பயின்றுகொண்டிருந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை அழைத்துக் கூட்டம் நடத்தினார். அதன் காரணமாக, இறுதியாண்டுத் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
பிற்காலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காமராஜர் ஆகியோர் சங்கரய்யாவின் சிறைச்சாலை சகாக்கள். கல்லூரி மாணவராக இருந்த காலத்தில், மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சி கிளை உறுப்பினராக ஆன அவர், சில ஆண்டுகளிலேயே ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆனார். விடுதலைப் போராட்டத்தால் அடிக்கடி சிறை சென்ற அவர், சிறையினுள்ளே காங்கிரஸ் சார்புடையவர்களுக்குப் பொதுவுடமை அரசியலின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி அவர்களை கம்யூனிஸ்ட் ஊழியர்களாக மாற்றிவிடுகிறார் என்று சிறை நிர்வாகம் அஞ்சியது. இதனால், வேலூரிலிருந்து கேரள மாநிலம் கண்ணூர் சிறைக்கு மாற்றப்பட்டார். நாட்டு விடுதலைக்காக, மக்களின் வாழ்வாதார உரிமை சார்ந்த போராட்டங்களுக்காக என எட்டு ஆண்டுகள் சிறையிலும், ஐந்து ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தார் சங்கரய்யா.
கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி மதுரையில் 1946-ல் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். மக்கள் கூடுவதற்கு இடமில்லாததால், வைகை ஆற்றுக்குள்ளேயே கூட்டம் நடத்தப்பட்டது. எப்படி அந்தக் காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியால் ஒரு லட்சம் பேரைக் கூட்ட முடிந்தது என்ற கேள்விக்கு, “மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடைய பிரச்சினைகளுக்காகத் தன்னடக்கத்தோடு இணைந்து செயல்பட்டால், மக்கள் நம்மை நோக்கி வந்துகொண்டே இருப்பார்கள்” என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதல் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி தொடங்கி, மார்க்சிஸ்ட் கட்சியின் இன்றைய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வரை கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துத் தலைவர்களுடனும் இணைந்து பொதுவுடைமை இயக்கத்தை வழிநடத்திய தலைவர் சங்கரய்யா. அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வர் ராஜாஜி தொடங்கி, இன்றைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை தமிழ்நாட்டின் முதல்வர்களுடனும் இணைந்து பயணித்தவர்.
பொதுவுடைமை இயக்கத்தின் தமிழ் நாளிதழான ‘ஜனசக்தி’யின் முதல் பொறுப்பாசிரியர் அவர்தான். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தீக்கதிர்’ நாளேட்டுக்கு அதிகாரபூர்வமாகத் தேர்வுசெய்யப்பட்ட முதல் ஆசிரியரும் அவரே. தேர்ந்த தமிழ் இலக்கிய வாசிப்பும், உரையாடல்களில் பொருத்தமான இடங்களில் இலக்கியத்தை மேற்கோள் காட்டுவதிலும் வல்லவர். அவரது பேச்சானது எதிரில் இருப்பவர்களைச் சுண்டியிழுக்கும். புதிய சிந்தனைகளுக்குத் திறவுகோலாக அமையும். “ஒவ்வொரு மண்ணுக்கும் உரிய மரபான கலை, இலக்கியங்களை முற்போக்காளர்கள் ஆழ்ந்து பயில வேண்டும். சமயத் தலைவர்களுக்கோ மற்ற பண்டிதர்களுக்கோ இருப்பதைவிட, முற்போக்காளர்களுக்குத்தான் ஆழ்ந்த புலமை வேண்டும். அப்போதுதான் நம் சொல்லை நாடு கேட்கும்” என்பார் சங்கரய்யா.
அத்தியாவசியப் பொருட்களை வாங்க கிராமப்புற மக்கள் நகரங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் இருப்பதால், அனைத்துக் கிராமங்களிலும் நியாய விலைக் கடைகளைத் திறப்பது குறித்து ஆளுநர் உரையில் அறிவிக்க வேண்டும் என முதல்வராக இருந்த எம்ஜிஆர், அமைச்சர் நாஞ்சில் மனோகரன் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்தினார் சங்கரய்யா. அந்தக் கோரிக்கையை எம்ஜிஆர் ஏற்றிருந்த நிலையில், ஆளுநர் உரை ஏற்கெனவே அச்சிடப்பட்டுவிட்டதால், கோரிக்கையைச் சேர்க்க இயலாது என்றார் நாஞ்சில் மனோகரன். இந்த விஷயத்தை மட்டும் தட்டச்சு செய்து, ஆளுநர் உரையின் கீழே ஒட்டிவிடுங்கள் என ஆலோசனை கூறினார் சங்கரய்யா. அதை நடைமுறைப்படுத்தினார் எம்ஜிஆர். இதையொட்டியே, “எனக்கு மட்டும் ஒரு லட்சம் வாக்குகள் இருந்தால், ஒவ்வொரு வாக்கையும் சங்கரய்யாவுக்கே அளிப்பேன். ஏனென்றால், எனது குறைகளை வெளிப்படையாகச் சொல்லி வழிநடத்துவார் சங்கரய்யா” என எம்ஜிஆர் பேசினார்.
“தலைவர் பொறுப்பில் இல்லாமல் திமுகவில் நீங்கள் எப்படிச் செயல்பட முடியும்” என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் நிருபர்கள் ஒருமுறை கேட்டபோது, “திமுக சங்கர மடம் அல்ல... ஜனநாயக இயக்கம். எப்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாமல், சங்கரய்யா கட்சியை வழிநடத்துகிறாரோ அதுபோல் நானும் செயல்படுவேன்” என்று பதிலுரைத்தார். அரசியல் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் இருந்தாலும் தனது ‘தாய்’ நாவலுக்கு சங்கரய்யாதான் முன்னுரை எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் கருணாநிதி.
கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிர்காலம் உண்டா என ஊடகவியலாளர்கள் எழுதியபோது, “உங்களைச் சுற்றிப் பாருங்கள்... முதலாளித்துவம்தான் இன்றைக்கு நெருக்கடியில் இருக்கிறது. அந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்காக தொழிலாளர், விவசாயிகள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சாதிய, மதவாதச் செயல்பாடுகளை அது முன்னெடுக்கிறது. இந்தச் சமூக அமைப்பிற்கு மாறானது சோஷலிசம். அந்தப் பாதையில் உலகம் பயணிக்கும்” என்று கணீர்க் குரலால் பதிலளித்தார் சங்கரய்யா. லட்சியவாத அரசியல் பொய்த்துப்போனதாகக் கூறப்படும் காலத்தில், ‘கம்யூனிஸ்ட்டுகள் வாக்கின் ஒளியில்தான் இந்திய தேசத்தின் இருள் மறையும். அது வெகு தொலைவில் இல்லை’ என்று பதின்பருவத்தில் தன் நெஞ்சில் ஏற்றிக்கொண்ட வார்த்தைகளுக்குச் சாட்சியமாக நூறாவது பிறந்த நாளில் அழியாச் சுடர்போல் ஒளிர்ந்துகொண்டிருக்கிறார் சங்கரய்யா!
- ஜி.செல்வா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்.
தொடர்புக்கு: selvacpim@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
20 days ago