இரா.நெடுஞ்செழியன்: இரண்டாமிடத்தின் வரலாறு

By செல்வ புவியரசன்

மாணவர்களின் எழுச்சிதான் திராவிட இயக்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்குக் காரணமாயிற்று. அந்த எழுச்சிக்குத் தம் மாணவர் பருவத்திலேயே வித்திட்ட முன்னவர்கள் முறையே பேராசிரியர், நாவலர் என்று சிறப்பிக்கப்படும் க.அன்பழகனும், இரா.நெடுஞ்செழியனும். நாற்பதுகளின் தொடக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையில் சிறுபான்மையினராக ஒலித்த அவர்கள் இருவரது குரல்தான் பல்கிப் பெருகி அறுபதுகளின் மத்தியில் தமிழ்நாட்டையே ஆட்டுவித்தது.

திராவிட இயக்கம் அதன் அரசாட்சிக் களத்தில் அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கும் எவ்வளவு கடமைப்பட்டதோ அதே அளவுக்கு அதன் அறிவார்ந்த தளத்தில் அன்பழகனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது. நெடுஞ்செழியனின் தலைமையில், 1944-ல் கும்பகோணத்தில் நடந்த திராவிடர் மாணவர் மாநாடுதான் நீதிக் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றத்தை விரைவுபடுத்தியது. அக்கூட்டத்துக்குக் கிடைத்த இளைஞர்களின் வரவேற்பை அறிந்த பிறகே, பெரியார் நீதிக் கட்சியைச் சீர்திருத்தவும் பெயர் மாற்றவும் முடிவெடுத்தார். திமுகவில் அன்பழகனுக்கும் திமுக, அதிமுகவில் நெடுஞ்செழியனுக்கும் கிடைத்த இரண்டாவது இடம் என்பது திராவிட இயக்க வரலாற்றில் அவர்கள் வகித்த முதலிடத்துக்காகத்தான்.

என்றென்றும் முதலிடம்

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘நம் நாடு’ இதழின் முதலாவது வெளியீட்டாளராகப் பொறுப்புவகித்தார் நெடுஞ்செழியன். அண்ணாவை அடுத்தும் சி.பி.சிற்றரசுவை அடுத்தும் அவ்விதழுக்கு இரண்டு முறை ஆசிரியராகவும் இருந்தார் அவர். ‘மன்றம்’ என்ற பெயரில் தனி இதழ் ஒன்றையும் நடத்தினார். 1953-ல் அன்றைய முதல்வர் ராஜாஜி அறிமுகப்படுத்திய புதிய கல்வித்திட்டத்தை எதிர்த்து சென்னையில் நடந்த போராட்டத்தில் கைதான ‘ஐவர் வழக்கில்’ அண்ணாவுடன் அவரும் ஒருவர்.

கட்சி ஆட்சிக்கு வந்ததாலேயே நெடுஞ்செழியன் கல்வித் துறை அமைச்சராகிவிட்டார் என்றும் சொல்லிவிட முடியாது. அவரது அரசியல் செயல்பாடுகளே கல்வி நிறுவனங்களை மையமாகக் கொண்டுதான் அமைந்திருந்தன. அது, அமைச்சரான பிறகும் தொடர்ந்தது. கல்வியமைச்சராகக் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாக்களில், தேர்வு முறைகளின் போதாமைகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டியவர் அவர். எழுத்துத் தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், அகமதிப்பீட்டுக்கும் இடங்கொடுக்க வேண்டும் என்று எழுபதுகளின் தொடக்கத்திலேயே வலியுறுத்தியவர். ‘மாணவர்களின் நினைவு சக்திக்குப் பயிற்சியளிப்பதைக் காட்டிலும் அவர்களது அறிவியல் ஆவலைத் தூண்டுவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்’ என்று ஓயாது வேண்டியவர்.

கல்லூரிகளிலும் இலவச உணவு

பள்ளிகளில் சத்துணவு வழங்குவதைப் பற்றி இன்னமும்கூட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 1971 நவம்பரில் சென்னையில் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டத்தை ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து தொடங்கிவைத்தவர் நெடுஞ்செழியன். அத்திட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற தமது விருப்பத்தையும்கூட அவர் தெரிவித்தார். ஆனால், அத்தகைய முயற்சிகள் ஏனோ பின்பு தொடரவில்லை.

பள்ளி, கல்லூரிகளிலும் அரசியல் மேடைகளிலும் அவர் ஆற்றிய ஆயிரக்கணக்கான உரைகளும் கட்டுரைகளும் இன்னமும்கூட நூல்வடிவம் பெறவில்லை. வெளிவந்த நூல்களும் தற்போது பார்வைக்குக் கிடைக்கவில்லை. அவர் எழுதி திருச்சி திராவிடப் பண்ணை வெளியிட்ட ‘கலித்தொகை தரும் காதற்காட்சிகள்’, ‘மதமும் மூடநம்பிக்கையும்’, ‘பண்டைக் கிரேக்கம்’, ‘மொழிப் போராட்டம்’, ‘கண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம்’ உள்ளிட்ட புத்தகங்கள் அந்நாட்களில் மிகவும் பிரபலமானவை. தனது இறுதிக் காலத்தில் திராவிட இயக்கத்தின் வரலாற்றை எழுதத் தொடங்கினார். அதன் முதல் பகுதி மட்டும் வெளியானது. திராவிட இயக்கத்தின் தோற்றத்தில் தனித்தமிழ் இயக்கம் வகித்த பங்கையும் அதற்கு சைவ சமய இலக்கியங்கள் ஒரு காரணமாக இருந்ததையும் சுட்டிக்காட்ட அவர் தவறவில்லை. சங்க இலக்கியங்கள் இளைஞர்களிடம் ஊட்டிய மொழியுணர்வைக் குறிப்பிட்டபோது அதற்கு உவேசா ஒரு காரணமாக அமைந்ததையும் நினைவுபடுத்தினார்.

சங்க இலக்கியங்களிலும் சமய இலக்கியங்களிலும் தோய்ந்தவர் நெடுஞ்செழியன். வள்ளுவரையும் வள்ளலாரையும் மேற்கோள் காட்டுவது அப்போதைய திராவிட இயக்கப் பேச்சாளர்களின் வழக்கமாக இருந்த நாட்களில் அவரது பேச்சின் இடையிடையே பட்டினத்தாரும் தாயுமானவரும்கூட எட்டிப் பார்ப்பார்கள்.

அமைச்சரவையில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த நெடுஞ்செழியனை அவரது சகாக்கள் அடுத்த முதல்வராக ஏற்றுக் கொள்ளவில்லை. தற்காலிக அமைச்சரவையின் தலைமைப் பொறுப்போடு அவர் முதலிடம் முடிவுக்கு வந்தது. முன்னையோரை முந்திக்கொண்டார் என்பது கருணாநிதி தன் காலம் முழுவதும் சுமந்து நின்ற பழிகளில் ஒன்று. தனது ‘நெஞ்சுக்கு நீதி’யில் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தான் முதல்வர் பொறுப்பேற்க நேர்ந்தது தன் விருப்பத்தால் நிகழ்ந்தது அல்ல என்பதை ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் வெளிப்படுத்தியிருப்பார். கருணாநிதியின் அசாத்திய அரசியல் வியூகங்கள் அவரின் வார்த்தைகளின் மீது முழு நம்பிக்கையைக் கொடுக்காமலும்கூடப் போகலாம். ஆனால், கருணாநிதி, நெடுஞ்செழியன் இருவரோடும் பழகிய ஏனைய தலைவர்கள் எழுதிவைத்த குறிப்புகளிலிருந்து வெற்றி - தோல்விகளுக்கான காரணங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

இது ஓர் உதாரணம். ‘கதைசொல்லி’ காலாண்டிதழின் 33-வது இதழில் அண்ணாவைப் பற்றி ‘அவர் மான்களோடு ஓடினார்’ என்ற தலைப்பில் பா.செயப்பிரகாசம் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரையை அவரது சுயசரிதை எனவும் கொள்ளலாம். மொழித் திணிப்புக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை மதுரையில் முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் பா.செயப்பிரகாசம். படிப்பை முடித்த பிறகு உடனடியாக ஒரு வேலையில் சேர்ந்தாக வேண்டிய நிலையில் அவரை நெடுஞ்செழியனிடம் அழைத்துச்செல்கிறார் மொழிப் போர் தளபதியான எல்.கணேசன். ‘நாவலராகப் பேசவில்லை, கல்வி அமைச்சராகப் பேசினார்’ என்பது பா.செயப்பிரகாசத்தின் வார்த்தைகள்.

மற்றொரு வாய்ப்புக்கு அண்ணாவே பரிந்துரைத்தும் அதைச் செய்ய நெடுஞ்செழியன் தயாராகவில்லை. தான் விரும்பியவரையே நியமித்துக்கொண்டார். ‘இந்நேரம் நாவலர் இடத்தில் கலைஞர் இருந்திருந்தால், மறுபேச்சு இருந்திருக்காது; வேலை போட்டு, ஆணையை உங்களிடம் அளித்துவிட்டு, அண்ணாவிடம் போய், நீங்கள் சொன்ன அந்தத் தம்பிக்கு வேலைபோட்டுக் கொடுத்துவிட்டேன் அண்ணா என்றிருப்பார்’ இது எல்.கணேசனின் வார்த்தைகள். படிக்கிற மாணவர்களை அரசியல் களத்துக்கு அழைத்துவந்தாலும் அவர்களின் வேலைவாய்ப்பு குறித்த ஆர்வம் நெடுஞ்செழியனுக்கு ஏனோ இல்லாமல் போனது. கல்லூரியிலேயே கால்பதிக்காத கருணாநிதிதான் அவர்களில் பலரை வேலைகளில் அமர்த்தினார். தலைமைக்கான தகுதியைக் கொண்டவர்தான் நெடுஞ்செழியன். பந்தயத்தில் சற்றே பின்தங்கியது இதுபோன்ற அணுகுமுறையால்தானோ என்று தோன்றுகிறது.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in ஜூலை 11: இரா.நெடுஞ்செழியன் 101-ம் ஆண்டு நிறைவு

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்