கடந்த ஒன்றரை ஆண்டில், தமிழ்நாட்டுக் கல்விச் சூழலில் அதிகம் ஒலித்த சொற்கள் `ஆல் பாஸ்’. கரோனாவைக் காரணம் காட்டி, பள்ளிப் பொதுத்தேர்வுகளையும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்துசெய்துவிட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அளித்தது முந்தைய அதிமுக அரசு. 2020-ல் பெருந்தொற்றை எதிர்கொள்ளும் ஆற்றலும் திட்டமும் இல்லாத காரணத்தினால், பொதுத்தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டதில் நியாயம் இருந்தது. ஆனால், இந்த ஆண்டும், ‘‘தமிழ்நாட்டில் 9-ம், 10-ம், 11-ம் பள்ளி மாணவர்கள் ஆல் பாஸ்” என்று சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதத்தில் அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்துச் செய்யப்பட்ட இந்த அறிவிப்பின் பலனைத் தேர்தலில் அதிமுக அறுவடை செய்ய இயலாமல் போனது வேறு விஷயம். மறுபுறம், மாணவர்களின் உயர்கல்விக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம் என்பதால், அது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்துவந்தது. 9-ம் வகுப்பு மதிப்பெண்களைப் பிரதானமாக வைத்து, 10-ம் வகுப்புக்கான மதிப்பெண்களை நிர்ணயிக்க முடிவெடுத்தது.
திமுக அரசு தலைமையேற்ற பிறகு, தமிழ்நாட்டு 10-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் கடந்த வாரம் வெளிவந்தது. சிறப்பாகப் படித்துவந்த பல மாணவர்களுக்கு மிகக் குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது இதில் தெரிய வந்துள்ளது. பொதுத்தேர்வு நடத்தப்பட்டிருந்தால், நிச்சயம் உயர் மதிப்பெண்களை வென்றிருப்போம் என மாணவர்கள் பலர் வருந்துவதைக் காண முடிகிறது. ‘ஆல் பாஸ்’ என்பது மகிழ்ச்சி அளித்தாலும் ‘ஜஸ்ட் பாஸ்’ என்பதால், ஆயிரக்கணக்கான மாணவர்களும் பெற்றோரும் ஆசிரியர்களும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். இந்நிலையில், ‘இது யாருடைய வகுப்பறை?’, ‘வன்முறையில்லா வகுப்பறை’, ‘ஆயிஷா’ குறுநாவல் உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய கல்வியாளர் இரா.நடராசனுடன் உரையாடியதிலிருந்து...
பிளஸ் 1-ல் மாணவர் சேர்க்கையானது 10-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், 9-ம் வகுப்பை முன்வைத்து வெளிவந்துள்ள 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
எப்போது 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை நடத்த முடியாமல் போனதோ, அப்போதே ‘‘மாணவர்களின் விருப்பப்படி பிளஸ் 1-ல் குரூப் வழங்கப்படும்” என்ற அரசாணையை ஒன்றிய அரசும் மாநில அரசும் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படியொரு அரசாணை வெளிவரவில்லை. இதனை அரசு செய்திருந்தால் கல்வி சரியான திசையில் பயணிப்பதாக வரவேற்கலாம். சொல்லப்போனால், 10-ம் வகுப்புக்கு மட்டுமல்ல 9-ம் வகுப்புக்கும் ஆண்டு இறுதித் தேர்வு கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. அப்படியிருக்க 9-ம் வகுப்பில் காலாண்டுத் தேர்வா அல்லது அரையாண்டுத் தேர்வா எதன் அடிப்படையில் தற்போது மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன என்பதில் தெளிவில்லை. அடுத்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அந்த வருகைப் பதிவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுதவிர, 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத மாணவர் பதிவுசெய்திருந்தாரா என்பதைக் கண்டறிய உதவும் ஆதார் எண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உண்மை யாதெனில், பல பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்புக்குக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகள் முறைப்படி நடத்தப்பட்டதற்கான அத்தாட்சி இல்லை. மொத்தத்தில், இது இட்டுக்கட்டிக் கற்பனையில் வடிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியலாகும். இதை வைத்து, ஒரு குழந்தை பொறியாளராவதையோ பொருளாதார நிபுணராவதையோ ஒரு நொடியில் நீங்கள் முறியடிக்கிறீர்கள் என்பதை உணருங்கள். இந்த நாட்டுக்கே அரசு கொடுக்கப்போகும் மிக மோசமான தோல்வியாக இது மாறும் அபாயம் உள்ளது.
மதிப்பெண்கள் அடிப்படையில் அல்லாமல் பிளஸ் 1-ல் சேர்க்கை நடத்தச் சட்டத்தில் இடம் உள்ளதா?
10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை வைத்துதான் பிளஸ் 1-ல் எந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்வது என்பதும் எந்த குரூப்பில் சேர்வது என்பதும் இதுவரை நிர்ணயிக்கப்பட்டுவந்திருக்கிறது. சட்டப்படி இடஒதுக்கீட்டைப் பின்பற்றித்தான் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்பதுதான் விதி. மற்றபடி, மதிப்பெண் அடிப்படையில் குரூப் வழங்க வேண்டும் என்று இந்திய அரசமைப்பிலோ கல்வி தொடர்பான அரசாணைகளிலோ எழுதப்படவில்லை.
இதனால் வேறென்ன பாதிப்புகள் ஏற்படவிருக்கின்றன?
பொதுத்தேர்வு நடத்தப்படாமல் அந்தந்தப் பள்ளிகளே 10-ம் வகுப்பு மதிப்பெண்ணை வெளியிடும் நிலை வந்த பிறகு, பல தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் பேரம் பேச ஆரம்பித்துள்ளன. ‘‘உங்களுடைய குழந்தைக்கு இத்தனை மதிப்பெண் வேண்டுமா.. இதுதான் ரேட்” என்கிறரீதியில் பித்தலாட்டம் நடந்துகொண்டிருக்கிறது.
அடுத்து டெல்லி, பெங்களூரு போன்ற ஊர்களில் கடந்த ஆண்டும் 9-ம் வகுப்பில் இடைநிலைத் தேர்வுகளெல்லாம் முறைப்படி நடத்தப்பட்டன. அங்கிருந்து ஒரு மாணவர் உயர் மதிப்பெண் பட்டியலுடன், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1-ல் அறிவியல் பிரிவில் சேர வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். இங்கு தோராயமாக ஜஸ்ட் பாஸ் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு கை நழுவிப் போகுமே. ஆகவே, இந்த ஆண்டு மதிப்பெண் என்கிற அளவுகோல் தரவரிசைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
ஆனால், புதுச்சேரியில் ஜூலை 12 முதல் பிளஸ் 1 தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அடுத்து நேர்காணல் நடத்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதே...
எழுதாத தேர்வுக்கு எப்படி நீங்கள் தரத்தை நிர்ணயிக்க முடியும்? புதுச்சேரி அரசு செய்திருப்பது ஏற்புடையதல்ல.
தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேறி, அரசுப் பள்ளிகளில் சேர மாணவர்கள் குவிந்துவரும் நிலையில், பிளஸ் 1-ல் எல்லோருக்கும் விருப்பமான பாடப் பிரிவை வழங்குவது அரசுப் பள்ளிகளில் சாத்தியமா? அதற்கான வகுப்பறை வசதி, ஆசிரியர் எண்ணிக்கை இதற்கெல்லாம் தீர்வு?
ஒரு பாடப் பிரிவைத் தொடங்கவும் தொடர்ந்து நடத்தவும் குறைந்தபட்சம் 25 மாணவர்கள் இருக்க வேண்டும் என்கிற வரையறை உள்ளதே தவிர, அதிகபட்சத்துக்குக் கட்டுப்பாடுகள் இல்லை. ஆகையால், உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் கடமை. ஆசிரியர் பயிற்சிபெற்ற லடசக்கணக்கான பட்டதாரிகள் வேலைக்காகக் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களை அரசு முறைப்படி நியமிக்கலாமே!
புறநகர்ப் பகுதிகளிலும் சிற்றூர்களிலும் உள்ள பள்ளிகளில் கணிதம், அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதும் நீட் தேர்வு அச்சத்தால் உயிரியல் படிக்க மாணவர்கள் அஞ்சுவதாகவும் இதனைக் காரணம் காட்டியே பல அரசுப் பள்ளிகளில் அறிவியல் பாடப் பிரிவை மூடிவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுகிறதே?
சமூக, பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையிலிருந்து வரும் மாணவர்களால் உயிரியல் படித்து நீட் தேர்வை வெல்ல முடியாது என்கிற பிற்போக்குத்தனமான எண்ணம் ஆசிரியர்கள் மத்தியிலும் நிலவுவது கொடுமையானது. 10-ம் வகுப்பு வரையில் சுமாராகப் படித்த மாணவர்களில் பலர் பிற்காலத்தில் படிப்பில் பிரகாசித்திருக்கிறார்கள். மறுபுறம், நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பப் புதிய பாடப் பிரிவுகளை அரசுப் பள்ளிகள்தோறும் நிறுவ சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசிடம் வலியுறுத்திவந்தோம். கடந்த ஆட்சியில் உதயசந்திரன் ஐஏஎஸ், பாடத்திட்டச் செயலாளராக இருந்தபோது, ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனால், ஒன்றிய அரசு தலையிட்டுக் கணிதமே இன்றிப் பொறியியல் படிக்கலாம், வேதியியல் இன்றி மருத்துவம் செல்லலாம் என்று குளறுபடிகள் செய்தபோது, கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அந்தத் திட்டத்தை நிறுத்தினோம். கணிதம், கணினி அறிவியலோடு இணைந்த அறிவியல் பாடப் பிரிவு, கணிதம், கணினி அறிவியல் இல்லாத அறிவியல் பாடப்பிரிவு, வணிகவியல் பிரிவு, வரலாற்றுப் பாடப் பிரிவு, கணினி அறிவியலுடன் கூடிய தொழிற்கல்விப் பாடப் பிரிவு ஆகியன அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ளதை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை.
- இந்தப் பேட்டியின் விரிவான வடிவம் ஞாயிறு அன்று ‘காமதேனு’ மின்னிதழில் (https://www.hindutamil.in/kamadenu/) வெளியாகும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago