தாராளமயமாக்கல் தந்த பாடங்கள்!- மான்டேக் சிங் அலுவாலியா பேட்டி

By விகாஸ் தூத்

பொருளாதாரத் தாராளமயமாக்கல் நிகழ்ந்து முப்பதாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. அந்த நிகழ்வைச் சாத்தியமாக்கிய முக்கியமானவர்களுள் ஒருவரும் முந்தைய திட்டக் குழுவின் துணைத் தலைவராக இருந்தவருமான மான்டேக் சிங் அலுவாலியாவிடம் உரையாடியதிலிருந்து…

1991-லிருந்து இந்தியப் பொருளாதாரம் அடைந்திருக்கும் பரிணாமத்தை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?

தனியார் துறையின் ஆற்றல்களைக் கட்டவிழ்த்துவிட்டு, பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவதையும், அப்படிச் செய்வதன் மூலம் போதுமான அளவு பலன்கள் ஏழைகளுக்குக் கிடைப்பதையும் நோக்கமாகக் கொண்டவைதான் அந்தச் சீர்திருத்தங்கள். இந்தக் குறிக்கோளில் அந்தச் சீர்திருத்தங்கள் நிச்சயம் வெற்றியடைந்திருக்கின்றன.

முழுமையான பலன்கள் கிடைப்பதற்குக் கொஞ்ச காலம் பிடித்தது. இதற்குக் காரணம், படிப்படியான அணுகுமுறை பின்பற்றப்பட்டதுதான். ஒரு ஜனநாயகத்தில் இது புரிந்துகொள்ளப்படக்கூடியதே. ஆனால், நீண்ட கால நோக்கில் பார்த்தோம் என்றால், அதன் விளைவுகளெல்லாம் வியப்பூட்டுபவை. 1992-லிருந்து 2017 வரையிலான 25 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது சராசரியாக ஆண்டுக்கு 7%ஆக இருந்தது. இதுவே, அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் 5%ஆக இருந்தது. அதற்கும் முந்தைய 20 ஆண்டுகளில் 4%ஆக இருந்தது. வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க வறுமை குறைந்தது. 2004-05-க்கும் 2011-12-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் 14 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். இப்படிச் சொல்வதால் குறைகள் ஏதும் இல்லை என்று அர்த்தம் இல்லை. 1991-ல் தொடங்கப்பட்ட இந்தச் சீர்திருத்தங்களில் சில, குறிப்பாகப் பொருளாதாரத் துறையில் இன்னும் முழுமையடையவில்லை. சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் நாம் எவ்வளவு செய்திருக்க வேண்டுமோ அவ்வளவு சீர்திருத்தங்கள் செய்திருக்கவில்லை; நமது வளர்ச்சிக் கொள்கைகளில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறைகள் போதுமான அளவு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. செய்ய வேண்டியவை ஏராளமாக இருக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. இன்னமும் நாம் நடுத்தர வருமானப் பிரிவு நாடுகளின் வரிசையில் கீழ்நிலையில்தான் இருக்கிறோம். அந்தப் பட்டியலில் மேலே வருவதற்கு நாம் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் ஏராளம் உள்ளன.

அந்தக் காலகட்டத்தைப் பற்றியும் ஆட்சி மாற்றத்துக்கு முன்பு திட்டமிட்ட முக்கிய மாற்றங்கள் என்ன என்பதைப் பற்றியும் சொல்ல முடியுமா?

இதைப் பற்றி ‘பேக்ஸ்டேஜ்’ என்ற என்னுடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். எனினும், இதைப் பற்றிக் கச்சிதமாகவும் சுருக்கமாகவும் விளக்க முயல்கிறேன். அந்தக் காலகட்டத்தின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் கண்டுணர வேண்டுமென்றால், சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன் இருந்த கட்டுப்பாட்டு அமைப்பின் முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

வளர்ச்சிக்கு முக்கியம் என்று கருதப்படும் துறைகள் பலவற்றில் முதலீடு செய்யத் தனியார் துறை அனுமதிக்கப்படவில்லை. அதுபோன்ற துறைகள் பொதுத் துறைக்கே ஒதுக்கப்பட்டன, அது எவ்வளவு பலவீனமாகச் செயல்பட்டாலும். தனியார்கள் அனுமதிக்கப்படும் இடங்களிலும் தொழில் துறை உரிமம் பெற்ற பிறகே அவர்களால் முதலீடு செய்ய முடியும். இந்த உரிமத்தைப் பெறுவது பெருந்தொழில் நிறுவனங்களுக்குக் கடினமாக இருந்தது. 860-க்கும் மேற்பட்ட விஷயங்கள் சிறு உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. இவற்றுள் ஏற்றுமதிக்கு அதிக சாத்தியம் உள்ள பொருட்களும் அடங்கும். வேறெந்த வளர்ந்துவரும் நாடுகளைவிட இறக்குமதிகள் மிகவும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. மிகக் குறைவான அந்நியச் செலாவணியைத் தக்கவைக்க இது அவசியம் என்று கருதப்பட்டதால், இப்படிச் செய்யப்பட்டது. நுகர்பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது என்பதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள், இறக்குமதியுடன் எந்த விதத்திலும் போட்டி போட வேண்டிய அவசியம் எழவில்லை. உற்பத்திக்குத் தேவையான பொருட்களை மட்டும் இறக்குமதி செய்துகொள்ளலாம். ஆனால், அதற்கு ஓர் இறக்குமதி உரிமம் பெறுவது அவசியம். அந்தப் பொருட்களை இறக்குமதி செய்வது அவசியம் என்றும் அந்தப் பொருட்களை மாற்றீடு செய்யக்கூடிய பொருட்கள் உள்நாட்டில் இல்லை என்றும் அரசு நினைத்தால் மட்டுமே அந்த உரிமம் கிடைக்கும். இறுதியாக, தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டது, அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படவில்லை.

அமைப்பைத் தாராளமயமாக்குவதற்கான முயற்சிகள் 1980-களில் மேற்கொள்ளப்பட்டன என்றாலும், அவை சிறுகச் சிறுக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களே. அமைப்பானது அதன் இடத்தில் அசையாமல் இருந்தது. பெரும் மாற்றம் தேவை என்பது 1990-ல் தெளிவாயிற்று. முக்கியமான தொழில் துறை, வணிக சீர்திருத்தங்கள் போன்றவற்றை அந்நியச் செலாவணி விகிதத்தின் சீர்திருத்தம், பொதுத் துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் போன்றவற்றோடு சேர்த்து விவரிக்கும் ஒரு அறிக்கையைத் தயாரிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த அறிக்கையானது, ஊடகங்களால் ‘எம் ஆவணம்’ என்று பெயரிடப்பட்டுப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பெரும்பாலானோர் அந்தச் சீர்திருத்தங்களை ஆதரித்தனர். அந்தக் காலகட்டத்தில்தான், (அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த) அஜித் சிங்கின் தலைமையிலான தொழில் துறை அமைச்சகம் தொழில் துறைக்கு உரிமம் அளிப்பதைத் தாராளமயமாக்கலாம் என்ற கொள்கையை முன்வைத்தது. அந்த முன்வைப்பை மது தண்டவதே தலைமையிலான நிதித் துறை அமைச்சகம் எதிர்த்தது. நீர்த்துப்போன வடிவம் மட்டுமே அறிவிக்கப்பட்டது.

இறுதியில், சீர்திருத்தங்களாக உருவெடுத்த கருத்துகளெல்லாம் 1991-க்கு முன்பே இருந்தவைதான். ஆனால், அப்போது அவற்றுக்கு அரசியல்ரீதியிலான ஆதரவு கிடைக்கவில்லை. பி.வி.நரசிம்ம ராவ் – மன்மோகன் சிங் இணைதான் அவற்றை 1991-ல் செயல்படுத்தியது.

அது ஒன்றும் எளிதாக இருக்கவில்லை. வலதுசாரிகள், இடதுசாரிகள் இருவருமே சீர்திருத்தங்களை எதிர்த்தார்கள். காங்கிரஸ் கட்சியிலேயே இதற்கு உடன்படாத பலரும் இருந்தார்கள். இந்தியத் தொழில் துறையினரும் முரண்பட்டனர். உள்நாட்டுத் தாராளமயமாக்கலை அவர்கள் விரும்பினார்கள். ஆனால், இறக்குமதி வழியாகவும் அந்நிய நேரடி முதலீடு வழியாகவும் வெளிநாட்டிலிருந்து வரும் போட்டி குறித்து அவர்கள் அதிருப்தி அடைந்தார்கள்.

தொழிலாளர்கள், நிலம் போன்றவற்றில் சீர்திருத்தங்கள் இன்னும் இழுத்துக்கொண்டிருக்கின்றன அல்லவா?

தொழிலாளர் சந்தைக்கான சீர்திருத்தங்களின் தேவை அப்போது உணரப்பட்டது. ஆனால் முதலில் நாம் தொழில், வர்த்தக, பொருளாதாரத் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொண்டு அதன் மூலம் நல்ல விளைவுகளை ஏற்படுத்திப் பிறகு தொழிலாளர் சந்தை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று நினைத்தோம். 10% பொருளாதார வளர்ச்சியை எட்டினால், தொழிலாளர்களை உடன்பட வைப்பதை எளிதாக்கும் என்று ஒருமுறை மன்மோகன் சிங் கூறினார். சில ஆண்டுகள் 9% வளர்ச்சியை எட்டினோம், ஆனால் தொழிலாளர்கள் வர்க்கத்தை உடன்பட வைப்பது கடினமாக இருந்தது. தற்போதைய அரசு தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களில் சில அடிகள் எடுத்துவைத்திருக்கிறது. இந்தச் சீர்திருத்தங்கள் எவ்வாறு அமல்படுத்தப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நிலச் சந்தையைப் பொறுத்தவரை, அது எங்கள் திட்டத்தின் பகுதியாக இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஒரு காரணம், நிலம் மாநிலப் பட்டியலில் இருக்கிறது என்பதுதான்.

வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக் காலத்தில் பெரும் விவாதத்துக்குள்ளானது. அந்த அரசின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு, பெருந்தொற்றுக்கு முன்பு இந்த நிலைமை மேலும் மோசமானதா?

ஐமுகூ ஆட்சிக் காலத்துக்குப் பிறகு, பெருந்தொற்றுக்கு முன்பு உள்ள காலகட்டத்தை சந்தோஷ் மெஹ்ரோத்ராவும் ஜஜதி கே. பரிதாவும் ஆராய்ந்திருக்கிறார்கள். 2016-17-க்குப் பிறகான காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாகக் குறைந்ததால், வேலைவாய்ப்புகள் 2011-12 காலகட்டத்தில் 47.40 கோடி என்ற அளவிலிருந்து 2018-19-ல் 46.90 கோடி என்ற அளவில் குறைந்திருக்கின்றன என்று அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். விவசாயத்திலும் விவசாயமற்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. இந்தப் பிரச்சினை இளைஞர்களிடையேதான் மிகவும் கடுமையாக இருக்கிறது. அவர்களிடையே 18% வேலைவாய்ப்பின்மை காணப்படுகிறது.

கரோனா பெருந்தொற்றானது வேலைவாய்ப்புகளில் சீர்குலைவு ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு மதிப்பீட்டின்படி 2020-21-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3%ஆகச் சுருக்கியிருக்கிறது. முறைசாரா துறையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாததால், இந்த மதிப்பீடானது குறைவான மதிப்பீடே என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர்.

நம் முன்னுள்ள முன்னுரிமைகள் என்னென்ன?

பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து பொருளாதாரம் நிச்சயமாக மீண்டுகொண்டிருக்கிறது. ஆனால், இந்த மீட்சிக்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும் என்பதில்தான் தெளிவில்லை. எனினும், மீட்சியானது நம்மை 2019-20 காலகட்டத்தின் அளவுக்குத்தான் கொண்டுசெல்லும்… 2022-23 காலகட்டத்தின் பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதுதான் உண்மையான கேள்வி. பெருந்தொற்றுக்கு முந்தைய வளர்ச்சி விகிதமான 4% அல்லது 5%-க்குத்தான் நாம் திரும்புவோமென்றால், வேலைவாய்ப்பைப் பொறுத்தவரையோ வறுமை ஒழிப்பைப் பொறுத்தவரையோ நமக்கு எந்த நிம்மதியும் ஏற்படாது.

‘தி இந்து’, தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

16 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

26 days ago

கருத்துப் பேழை

26 days ago

கருத்துப் பேழை

26 days ago

மேலும்