மனிதர்களால் மேற்கொள்ளப்படும் அழிவுகளுக்கும் கொடுங்கோன்மைகளுக்கும் மத்தியிலும் மற்ற உயிர்களுடன் தொடர்புகொள்ளும் அசாத்தியத் திறனானது மனித உயிருக்கு மட்டுமே அரிய பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதை மறுபடியும் நமக்கு நினைவூட்டும் ஆவணப்படம், சமீபத்தில் ஆஸ்கர் விருதுபெற்ற ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’.
நத்தைக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆக்டோபஸ். லட்சக்கணக்கான ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் தன்னைப் பாதுகாக்கும் ஓட்டை இழந்து, அதிசயிக்கத்தக்க திறனுள்ள அறிவை இழப்பீடாகப் பெற்றது. அப்படிப்பட்ட ஆக்டோபஸ் ஒன்றுடன் ஆவணப்படக் கலைஞர் க்ரெய்க் பாஸ்டர் கொள்ளும் நேசம் மிகுந்த நட்புதான் இந்த ஆவணப்படம். ஆப்பிரிக்கக் காடுகளில் கானுயிர்த் திரைப்படங்களை, ஓய்வெடுக்க அவகாசமின்றி எடுத்துத் தள்ளிய க்ரெய்க் பாஸ்டர், தன் வாழ்க்கையின் ஒருகட்டத்தில் கேமராவும் எடிட்டிங் அறைப் பணியும் வேண்டவே வேண்டாம் என்று களைப்புற்று, தன் சிறுவயதுக் காதலான ஆழ்கடலில் அடைக்கலம் தேடுகிறார். தென்னாப்பிரிக்காவில் கேப் டவுனுக்கு அருகில் உள்ள கடற்பூண்டுக் காடு அடர்ந்த ஆழ்கடல் பகுதிக்குத் தனது வீட்டிலிருந்து மேற்கொள்ளத் தொடங்கும் தினசரி யாத்திரையில் அறிமுகமாகும் ஆக்டோபஸுடன் கொள்ளும் நட்புதான் ‘மை ஆக்டோபஸ் டீச்சர்’.
தலை மட்டுமில்லாமல் உடலின் எட்டுக் காலிலும் எட்டு மூளைகளைக் கொண்டது ஆக்டோபஸ்கள்; முதுகெலும்பிலிகளிலேயே அதிகபட்ச அறிதிறன், விழிப்பைக் கொண்டதாகும். கடலின் அடியில் இயங்கும் பிரம்மாண்ட மூளை என்று ஆக்டோபஸை வர்ணிக்கிறார்கள். அந்த ஆக்டோபஸைத்தான், க்ரெய்க் பாஸ்டர் தனது ஆழ்கடல் நீச்சலில் தற்செயலாக ஒரு கற்றாழைச் செடியின் அளவில் பார்க்கிறார். எந்த உயிர்களோடும் தொடர்புகொள்ள, அதன் கண்கள் மிகவும் அவசியமானவை. ஆனால், கண்களைக் கொஞ்சம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய ஆக்டோபஸுடன் க்ரெய்க் தொடர்புகொள்ளத் தொடங்குகிறார். ஒவ்வொரு கணமும் வேட்டையாடப்படலாம் எனும் சூழலில், லட்சக்கணக்கான ஆண்டுகள் அச்சத்திலும் ஆச்சரியத்திலுமே தன் வாழ்வை வைத்திருக்கும், அதிகபட்சமாக ஊறுபடச் சாத்தியமுள்ள உயிராக ஆக்டோபஸ் உள்ளது. அப்படியான ஓர் உயிர் தனது அச்சத்தைத் தாண்டி க்ரெய்க் பாஸ்டருக்குத் தனது கசையிழை ஒன்றால் தொட்டு அவருடன் நேசக்கரத்தை முதலில் நீட்டுகிறது. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘ஈ.டி.’ திரைப்படத்தில் வேற்றுக்கிரக உயிர் முதன்முறையாகத் தனக்கு அடைக்கலம் கொடுத்த சிறுவனைத் தொடும்போது பார்வையாளர்களுக்கு ஏற்படும் சிலிர்ப்பு இந்தத் தருணத்தில் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறை ஒரு உயிர் இன்னொரு உயிரைத் தொடும்போதும் முதல் முறை ஸ்பரிசிப்பது போன்ற உணர்வும் புதுமையும் நமக்கு இன்னும் குறையவில்லை.
கடற்பாசிக் கற்றைகள், பிரம்மாண்ட இலைகளைக் கொண்ட தாவரங்கள், ஜெல்லி மீன்கள், சிறிய மீன்கள், நட்சத்திர மீன்கள், ஆக்டோபஸை வேட்டையாட அலையும் பைஜாமா உடையில் இருப்பதுபோல உடலில் கோடுகளைக் கொண்ட பைஜாமா சுறாக்கள் என நீலமும் பச்சையும் அடர்ந்த மிகப் பெரிய அற்புத உலகம் நமக்கு முன்னால் விரிகிறது. பெருந்தொற்று நிர்ப்பந்தித்த ஊரடங்குக் காலத்தில், துக்கமான செய்திகளையே பார்த்தும் கேட்டும் கொண்டிருக்கும் நமக்கு வேறு ஒரு நிசப்தமான அழகிய உலகம் ஆறுதலை அளிக்கிறது.
ஒருகட்டத்தில் க்ரெய்க் பாஸ்டர் ஆழ்கடலுக்குள் செல்லும்போதெல்லாம், ஆக்டோபஸைத் தேடத் தொடங்குகிறார். க்ரெய்க்குக்காகப் படிப்படியாக ஆக்டோபஸும் வினையாற்றத் தொடங்குகிறது. ஒருகட்டத்தில் ஆழமில்லாத பகுதியில் ஒரு பாறைக்கு அடியில் வந்து, க்ரெய்க்கின் வருகைக்காகக் காத்திருக்கவும் ஆரம்பிக்கிறது.
குளிர் அதிகம் கொண்ட ஆழ்கடலில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமலேயே தாக்குப்பிடித்து அலையத் தெரிந்த க்ரெய்க்குக்குக் கடலின் அடியில் உலகத்திலுள்ள அத்தனை பிரச்சினைகளும் அல்பமாகத் தெரியத் தொடங்கிவிடுகின்றன. படிப்படியாகக் குளிர் அவருக்குப் பழக்கமாகி ஒரு விடுதலை உணர்வை அடைகிறார். ஆழ்கடலில் தான் ஒரு விருந்தினர் அல்ல, இயற்கையின் ஒரு பகுதி என்ற செய்தியை ஆக்டோபஸ் அவருக்குச் சொன்னதாகப் பகிர்கிறார். வீடு திரும்பிய பிறகும் ஆக்டோபஸ் தொடர்பான சிந்தனையானது தூக்கத்திலும் கனவிலும் அவரைத் தொடர்கிறது. இணையத்தில் ஆக்டோபஸ் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்குகிறார். தனது இருண்ட அறையில் கணிப்பொறியில் வாசித்துக்கொண்டிருக்கும் கண்ணாடி அணிந்த க்ரெய்க்கின் கண்கள், ஜெல்லி மீன்களைப் போல தெரியத் தொடங்குகின்றன.
ஆக்டோபஸ் தனது தயக்கத்தையும் அச்சத்தையும் விட்டு, தனது உலகத்தை அவருக்குக் காண்பிக்கத் தொடங்குகிறது. கசையிழைகளில் 2000-க்கு மேற்பட்ட சவ்வுக் கைகளை வைத்திருக்கும் ஆக்டோபஸுக்கு அவை விரல்களைப் போன்றவை; இரண்டாயிரம் புலன்கள் செயல்படுவதுபோல. மணலின் நிறத்துக்கு, தாவரங்களின் நிறத்துக்கு, பாறைகளின் நிறத்துக்கு சூழ்நிலைக்கேற்ப நிறம் மாற்றி உருமறைப்பை அவற்றால் செய்ய முடியும். ஆக்டோபஸ்கள் இரவாடிகளும்கூட. எதிரிகள் வந்தால், சிப்பி, கற்களைத் தன் மேல் வேகவேகமாக இட்டு கால்பந்துபோல ஆக்கி உள்ளே ஆக்டோபஸ் மறைத்துக்கொள்கிறது. க்ரெய்க்குக்குப் பழக்கமான அதன் கண்கள், கால்பந்து மறைவிலிருந்து நம்மையும் விழிப்போடு பார்த்துக்கொண்டிருக்கின்றன. பாறைகளின் அடியில் ஒரு துணிபோல இழைந்து மடிந்தும் அதனால் சென்றுவிட முடிகிறது.
300-க்கும் மேற்பட்ட நாட்கள் தனது நேசத்துக்குரிய ஆக்டோபஸைத் தொடரும் க்ரெய்க் பாஸ்டர், அதன் எல்லாப் பருவங்களையும் பார்த்துவிடுகிறார். பைஜாமா சுறா ஒன்று ஆக்டோபஸைத் துரத்தி வேட்டையாடுவதை நாமும் பார்க்கிறோம். ஒரு கை துண்டிக்கப்பட்டு, ஆக்டோபஸ் வலியோடு ஒரு பாறைக்கு அடியில் மறைகிறது. அந்தக் கை மீண்டும் வளரும் வரை க்ரெய்க் பாஸ்டர் மிகவும் துக்கத்தோடு அதைத் தொடர்கிறார். ஆக்டோபஸுக்கு உணவு தர முயல்கிறார். ஆனால், அது சாத்தியமில்லை என்று தெரிகிறது. ஒருகட்டத்தில் அதன் உலகம் வேறு என்பதை உணர்ந்து, அதற்குள் மனிதனாக ஊடுருவுவதன் எல்லைகளைத் தெரிந்துகொள்ளவும் செய்கிறார். இன்னொரு தருணத்தில் இன்னொரு ஆக்டோபஸோடு அது புணர்ச்சியில் ஈடுபடுவதையும் பார்க்கிறார். முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தவுடன் இறந்துவிடும் பெண் ஆக்டோபஸின் விதியை இந்த ஆக்டோபஸும் அடைகிறது. ஆண் ஆக்டோபஸ் புணர்ச்சி முடிந்தவுடன் இறந்துவிடுமாம். சிறிய மீன்களை ஒரு விளையாட்டைப் போல நிகழ்த்தி ஆக்டோபஸ் வேட்டையாடும் காட்சிகளும் அருமையானவை.
முட்டைகளை இட்டுக் குஞ்சு பொரித்தவுடன் இறந்து, கிழிந்த துணிபோல் கிடக்கும் தனது நண்பனும் ஆசிரியனுமான ஆக்டோபஸைக் கடைசியாகத் தொடுகிறார் க்ரெய்க் பாஸ்டர். அதனுடனான உறவில் இந்த முடிவுகூட ஆறுதலானதுதான் என்கிறார் க்ரெய்க். ஏனெனில், கடலில் இல்லாத நேரங்களிலும் ஆக்டோபஸைப் பற்றியே தான் சிந்தித்துக்கொண்டிருந்ததாகவும், விடுபட முடியவில்லை என்றும் கண்ணீர் வரக் கூறுகிறார் க்ரெய்க்.
ஆழ்கடலில் ஆக்டோபஸுடன் நட்பு கொண்ட அனுபவத்துக்குப் பின்னர் க்ரெய்க்குக்கு, மனைவி, மகனுடனான உறவு மேம்பட்டுக் கூடுதல் நுண்ணுணர்வை அடைகிறது. க்ரெய்க் பாஸ்டரின் நெஞ்சில் ஒரு சிறிய சைஸ் கால்பந்தைப் போல் தனது கசையிழைகள் அனைத்தையும் சுருட்டி, மனிதக் கைவிரல்களின் வருடலுக்கு இசைந்து ஆக்டோபஸ் ஓய்வுகொள்ளும் காட்சி இந்த ஆவணப்படத்தின் அற்புதத் தருணம்.
ஆக்டோபஸின் குஞ்சுகளைத் தேடி க்ரெய்க்கும் அவரது மகனும் ஆழ்கடலில் பயணிக்கிறார்கள். அவனது கைவிரல்களுக்குள் ஒரு ஆக்டோபஸ் குஞ்சு நுழைந்து செல்வதைப் பார்க்கிறோம். ஆழ்கடல் பயணம் மகனிடம் கூடுதல் மென்மையை உருவாக்கியதாக அவர் குறிப்பிடுகிறார். மனிதனைவிட ஆயிரம் மடங்கு அறிவையும் விழிப்பையும் கொண்டு வாழ்க்கையை மிக வேகமாக வாழ்ந்து மிகச் சீக்கிரத்திலேயே மறைந்துவிடும் அந்த உயிர்கள், கடலின் சமநிலையை ஒருபோதும் சீர்குலைப்பதில்லை. அவ்வகையில், அந்த ஆக்டோபஸ் மனிதனுக்கு ஒன்றை நிச்சயமாகச் சொல்லிக்கொடுக்கின்றன. அதை நாம் கற்போமா? பயணம் சாத்தியப்படாத இந்த நாட்களில் ஆழ்கடலுக்குள் பயணம் செல்லும் உணர்வை ஏற்படுத்தும் இந்த ஆவணப்படத்தைக் குழந்தைகளோடு பார்க்க வேண்டியது அவசியம்.
- ஷங்கர்ராமசுப்ரமணியன், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
15 days ago