சூரியனை நகர்த்தும் பூமி

By என்.ராமதுரை

சூரியனுடன் ஒப்பிட்டால் கிரகங்கள் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தி மிகவும் குறைவு



பம்பர விளையாட்டின்போது சில சமயம் பம்பரம் தூங்குகிறது என்பார்கள். அதாவது, அப்போது பம்பரம் ஆடாது அசையாது சுற்றிக்கொண்டிருக்கும். அப்படி உறங்கும் பம்பரமும் சரி, மிக அற்ப அளவுக்கு இப்படியும் அப்படியுமாக நகரும். அதாவது, அந்த பம்பரத்தின் ஆணி தரையில் சிறிய வட்டம் போடும். தனது அச்சில் சுழன்றுகொண்டிருக்கின்ற சூரியனும் ஒரு புள்ளியில் நிலைத்து நிற்காமல் இவ்விதம் சிறு வட்டம் போடுகிறது.

இது ஏன் என்பதைக் கவனிப்போம். சூரிய மண்டலத்தில் பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றிச் சுற்றிவருகின்றன. இந்தக் கிரகங்கள் சூரியனைச் சுற்றுவதை நிறுத்திவிட்டு, சூரிய மண்டலத்திலிருந்து வேறு ஏதோ திசையில் செல்ல முற்படுவதில்லை. இதற்கு சூரியனின் ஈர்ப்புச் சக்தியே காரணம்.

வியாழனைச் சுற்றும் கிரகங்கள்

சூரியனுக்கு ஈர்ப்புச் சக்தி உள்ளதுபோலவே கிரகங்களுக்கும் ஈர்ப்புச் சக்தி உண்டு. சூரியனின் ஈர்ப்புச் சக்தி மிக மிக அதிகம். சூரியனுடன் ஒப்பிட்டால் கிரகங்கள் ஒவ்வொன்றின் ஈர்ப்புச் சக்தி மிகவும் குறைவு. தவிர, கிரகங்களின் ஈர்ப்புச் சக்தி அதனதன் அளவைப் பொறுத்தது.

பூமியின் ஈர்ப்புச் சக்தி காரணமாக, பூமியைச் சந்திரன் சுற்றிவருகிறது. மனிதன் உயரே அனுப்பியுள்ள எண்ணற்ற செயற்கைக்கோள்களும் இதே காரணத்தால் பூமியைச் சுற்றிவருகின்றன. பூமியைச் சந்திரன் சுற்றுவதுபோலவே வியாழன் கிரகத்தை 64 சந்திரன்கள் சுற்றிவருகின்றன. சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் வியாழன்தான் மிகப் பெரியது. எனவே, அது மற்ற கிரகங்களைவிட அதிக ஈர்ப்பு சக்தி கொண்டது. வியாழனின் ஈர்ப்புச் சக்தியானது பூமியின்மீதும் சிறு அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது.

கிரகங்கள் சூரியனின் ஈர்ப்புச் சக்திக்கு உட்பட்டுள்ள அதே நேரத்தில், அவை ஒன்றின்மீது மற்றவை ஈர்ப்புச் சக்தியைச் செலுத்துகின்றன. இது மெல்லிய அளவுக்கு உள்ளது. யுரேனஸ் கிரகம் 1781-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அதன் சுற்றுப்பாதையில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது. யுரேனஸ் மீது அதற்கு அப்பால் இருக்கக்கூடிய ஏதோ ஒரு கிரகத்தின் ஈர்ப்புச் சக்தியானது பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தோன்றியது. இதை வைத்துத்தான் 1846-ம் ஆண்டில் யுரேனஸுக்கு அப்பால் நெப்டியூன் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு புறம் இருக்க பூமியின்மீது சந்திரனின் ஈர்ப்புச் சக்தி மிக மெல்லிய அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது, கடல் அலைகள் கொந்தளிப்பதற்கு சந்திரனின் ஈர்ப்புச் சக்தியே காரணம். அப்படியானால் வியாழன், சனி, பூமி முதலான கிரகங்கள் சூரியன்மீது பாதிப்பை உண்டாக்குகின்றனவா என்று கேட்கலாம். அப்படியான பாதிப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இவை அனைத்தும் சூரியன்மீது ஏற்படுத்துகின்ற பாதிப்பு மிக அற்ப அளவில்தான் உள்ளது. இந்தப் பாதிப்பு காரணமாகவே சூரியன் மிக அற்ப அளவுக்கு இப்படியும் அப்படியுமாக நகருகிறது.

இப்போது விண்வெளி சமாச்சாரத்துக்கு வருவோம். மிகத் தொலைவில் உள்ள ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தை மிக நுட்பமான கருவிகளைக் கொண்டு ஆராய்கிறோம். அந்த நட்சத்திரம் மிக அற்ப அளவுக்கு அசைவதாகத் தெரிகிறது. அப்படியானால் அந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் அல்லது பல கிரகங்கள் சுற்றி வருகின்றன என்று ஊகித்துக்கொள்ளலாம். விண்வெளியில் எங்கோ சூரியன் போன்று இருக்கின்ற நட்சத்திரத்துக்கு அருகே கிரகங்கள் உள்ளனவா என்று கண்டுபிடிக்க இந்த முறை உபயோகமாக உள்ளது.

வானில் எண்ணற்ற நட்சத்திரங்களை ஆராய்கின்ற கெப்ளர் என்னும் பறக்கும் டெலஸ்கோப் இந்த வழியைப் பின்பற்றி நட்சத்திரங்களுக்குக் கிரகங்கள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடித்துவருகிறது. கெப்ளர் டெலஸ்கோப் இந்த முறையின் மூலம் பல கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது.

டெலஸ்கோப்புகளின் பங்கு

பல சமயங்களிலும் கெப்ளர் சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில் தரையில் உள்ள டெலஸ்கோப்புகளும் ஒருங்கிணைந்து வானை ஆராய்கின்றன. ஆலன் டெலஸ்கோப், தென் அமெரிக்காவில் உள்ள டெலஸ்கோப்புகள் ஆகியவை இதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

எனினும் இந்த விஷயத்தில் ஒரு குறைபாடு உண்டு. சூரியன்மீது பூமி ஏற்படுத்தும் பாதிப்பைவிடப் பூமியைப் போல 1,300 மடங்கு பெரிய வியாழன் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். அந்த வகையில் எங்கோ இருக்கின்ற ஒரு நட்சத்திரத்தின்மீது வியாழன் கிரகத்தைப் போல உள்ள பெரிய கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். எனவே, அண்டவெளியில் உள்ள கிரகங்களை ஆராயும்போது, வியாழன் போன்று உள்ள பெரிய கிரகங்களை நன்கு கண்டுபிடித்துவிட முடிகிறது. இக்காரணத்தால்தான் கெப்ளர் கண்டுபிடித்துள்ள கிரகங்களில் பெரும்பாலானவை வியாழன் கிரகத்தைப் போல அல்லது அதைவிடப் பெரிதாக உள்ளன.

பூமி சைஸில் உள்ள ஒரு கிரகம் அதன் தாய் நட்சத்திரம்மீது ஏற்படுத்தும் விளைவு குறைவு என்பதால், பூமி போன்ற கிரகங்கள் எளிதில் தட்டுப்படுவதில்லை. எதிர்காலத்தில் மேலும் நுட்பமான ஆய்வுமுறை உருவாக்கப்படும்போது, பூமி போன்ற கிரகங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியலாம்.

சூரிய மண்டலத்தில் வியாழன் கிரகம் சூரியனிலிருந்து சுமார் 140 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. (சூரியனிலிருந்து பூமியானது சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது). ஆனால், கெப்ளர் ஆராய்ந்த நட்சத்திரங்களில் சிலவற்றில் வியாழன் போன்ற பெரிய கிரகம் அந்த நட்சத்திரத்துக்கு அருகிலேயே உள்ளது.

நட்சத்திரத்தின் வளையும் ஒளி

கிரகங்களைக் கண்டுபிடிக்க கெப்ளர் டெலஸ்கோப் வேறு ஒரு முறையையும் பின்பற்றுகிறது. இரவு வானைக் காணும்போது நம் பார்வையில் ஒரு நட்சத்திரத்துக்கு மிக அருகில் இன்னொரு நட்சத்திரம் தென்படலாம். உண்மையில், அவை அருகருகே இல்லாமல் ஒரு நட்சத்திரத்துக்குக் கிட்டத்தட்ட நேர் பின்னால் - பல சமயங்களிலும் - வெகு தொலைவில் வேறு நட்சத்திரம் அமைந்திருக்கலாம். அப்படியான நிலையில் நம் பார்வையில் இந்த இரண்டும் அருகருகே இருப்பது போன்று தோன்றும்.

எனவே, பின்னால் இருக்கின்ற நட்சத்திரத்தின் ஒளியானது முன்புறத்தில் உள்ள நட்சத்திரத்தை மிக நெருக்கமாகக் கடந்து வர நேரிடும். முன்புறத்தில் உள்ள நட்சத்திரத்தின் ஈர்ப்புச் சக்தி காரணமாகப் பின்னால் உள்ள நட்சத்திரத்தின் ஒளி சற்றே வளைந்துவரும். அதே சமயத்தில், ஒரு கிரகம் இருந்தால் அது சற்றே பெரிதாகத் தெரியும். இந்த விளைவுகளை வைத்துப் பின்னால் இருக்கின்ற நட்சத்திரத்துக்கு இருக்கக்கூடிய கிரகங்களைக் கண்டறிய இயலும்.

சூரியன் மாதிரியான நட்சத்திரங்களுக்கு அருகே உள்ள கிரகங்களைக் கண்டுபிடிப்பதில் இந்த முறை உபயோகமாக உள்ளது. இவ்விதமாக கெப்ளர் டெலஸ்கோப் எங்கோ இருக்கின்ற கிரகங்களைக் கண்டுபிடிக்கப் பல முறைகளைப் பின்பற்றுகிறது. கெப்ளரின் சாதனை பற்றி அடுத்து கவனிப்போம்.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: nramadurai@gmail.com

(வியாழன்தோறும் தொடர்வோம்...)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்