கரோனா தாக்கி ஆக்சிஜன் குழாய் வழியாகச் சுவாசித்தபடி அடுப்பங்கரையில் நின்று சமைத்துக்கொண்டிருக்கும் ஓர் இந்தியப் பெண். தாய்மையைப் போற்றும் வாசகத்தைத் தாங்கி இப்படியொரு பெண்ணின் புகைப்படம் அன்னையர் தினத்தன்று சமூக ஊடகங்களில் உலாவந்ததைப் பலரும் கண்டிருக்கக் கூடும். இந்தியாவில் கரோனா தாக்கப்பட்டு 9 ஆண்கள் உயிரிழக்கும்போது 10 பெண்கள் இறப்பதாக அறியப்படுகிறது. இதற்குக் காரணம், இந்தியப் பெண்களின் உடல் ஆரோக்கியம் பொருட்படுத்தப்படுவதில்லை என்பதை சர்வதேச அங்கீகாரம் பெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செட்’ சுட்டிக்காட்டுகிறது. உடல் உபாதைகள் ஏற்படும்போது உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அந்த இதழ் கூறுகிறது.
கரோனா வைரஸ் என்னவோ பாலின பேதமின்றி எல்லோர் மீதும்தான் தொற்றிக்கொள்கிறது. ஆனால், இந்தியா, நேபாளம், வியட்நாம், ஸ்லோவேனியா ஆகிய நாடுகளிலோ ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக கரோனாவால் உயிரிழந்துவருகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெண்களின் இறப்பு விகிதம் கூடுதலாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் உதாசீனப்படுத்தப்படுவதுதான். பெரும்பாலான உலக நாடுகளில் கரோனாவுக்கு ஆண்களே அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நேர்ந்த கரோனா மரணங்களில் 63% ஆண்கள் என்று உலக சுகாதார மையம் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது. சீனா எதிர்கொண்ட கரோனா பலிகளில் 70% ஆண்கள் என்கின்றனர் சீன ஆராய்ச்சியாளர்கள். கரோனா தொற்றினால் மட்டுமல்லாது 2003-ல் பரவிய சார்ஸ் நோயினாலும் ஆண்களே அநேகமாக உயிரிழந்தனர். ரோம் உயர் மருத்துவ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையிலும் 5 பெண்களுக்கு 8 ஆண்கள் என்கிற விகிதாச்சாரத்தில் கரோனா மரணங்கள் ஏற்படுவதாக வெளியிடப்பட்டது. நியூயார்க் நகரத்தில் கரோனா மரணங்களில் ஆண்-பெண் விகிதாச்சாரம் 13:10 என்ற அளவில் இருந்தது பதிவாகியிருக்கிறது.
புதிய கண்டுபிடிப்பு!
இயற்கையாகவே ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு எதிர்ப்புசக்தி கூடுதலாக இருப்பதாக உயிரியல் அடிப்படையில் இது நிறுவப்படுகிறது. அதுமட்டுமின்றி புகைப்பழக்கம் உள்ளிட்ட நடத்தைக் கோளாறுகள் காரணமாக ஆண்களின் இறப்பு விகிதம் அதிகரிப்பதாகத் தெரியவருகிறது. மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் வியாதிகள் ஆகியவை ஆண்களை எளிதில் தாக்கும் போக்கும் மற்றொரு காரணம்.
இந்நிலையில், மனித இனத்தில் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களிலும் ஆண்/பெண் விகிதாச்சாரத்தை மையப்படுத்திப் புதியதொரு ஆராய்ச்சி முடிவு தற்போது வெளிவந்துள்ளது. இங்கிலாந்தின் பாத் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘தி மில்னர்’ பரிணாம வளர்ச்சி மையத்துக்கு உட்பட்ட பல்லுயிர்த் துறைப் பேராசிரியர் தாமஸ் ஸெக்கிளி, பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் புதியதொரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுத் தந்தை டார்வின் சிந்தனைக்குப் புதிய வடிவம் கொடுத்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
மயில் எழுப்பிய கேள்வி
டார்வின் முன்மொழிந்த கருத்தாக்கங்களில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை ‘இயற்கைத் தேர்வு’, ‘பாலியல் தேர்வு’. எந்தக் கட்டத்திலும் உயிர் வாழ வேண்டி உயிரினங்கள் தகவமைத்துக்கொள்ள இயற்கை நிர்ப்பந்திக்கிறது. இதற்கு ஒரு உயிரினத்தின் நன்மை அளிக்கும் பண்புகள் மக்கள்தொகையில் பரவித் தழுவுவதே இயற்கைத் தேர்வு என்றார் டார்வின். கடவுள் மனிதனைப் படைத்தார் என்று இரண்டாயிரம் ஆண்டுகள் நம்பப்பட்டுவந்த போக்கை டார்வினின் இந்தச் சிந்தனை புரட்டிப்போட்டது. ஆயினும் டார்வினுக்குள் எழுந்த சில கேள்விகளுக்கு அதில் விடை கிடைக்கவில்லை. ‘‘மயில் தோகையின் வண்ணமயமான இறகுகளைக் காணும்போதெல்லாம் நான் எதையோ கண்டுபிடிக்கத் தவறிவிட்டேனோ எனச் சோர்ந்து போகிறேன்!” என்று தன் நண்பருக்குக் கடிதம் எழுதினாராம் டார்வின்.
பின்பு 1859-ல், ‘உயிரினங்களின் தோற்றம்’ புத்தகத்தில் முதன்முதலில், ‘பாலியல் தேர்வு’ குறித்து எழுதினார். இதன்படி உயிர் பிழைத்திருக்க மட்டுமே உயிரினங்கள் எத்தனிக்கவில்லை. அடுத்த சந்ததியை உருவாக்க ஒரு பாலினம் எதிர் பாலினத்தில் சிறந்ததைத் தேர்ந்தெடுக்க முயல்கிறது. அது மட்டுமின்றி, தான் சிறந்தவன் என்பதை நிறுவ தன்பாலினத்துடன் போட்டி போடுகிறது. தன்பாலினத்துடன் சரிசமமாகப் போட்டி போடக் கொம்புகள், கோரமான பற்கள், குளம்புகள், பெரிய உருவம் ஆகியவற்றைத் தற்காப்பு ஆயுதங்கள்போல விலங்குகள் கொண்டிருப்பதாகவும், தோகை, இறகுகள் ஆகியவற்றை எதிர் பாலினத்தை ஈர்க்கும் நோக்கில் இனக்கவர்ச்சிக்காகக் கொண்டிருப்பதாகவும் டார்வின் நிறுவினார்.
அதிக பெண்கள், அதிக போட்டி
இதில் குறிப்பாக ஆண்/ பெண் விகிதாச்சாரம் குறித்த டார்வினின் கூற்று கவனத்துக்குரியது. ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது தனக்கான இணையை ஈர்த்துத் தக்கவைத்துக்கொள்ள ஆண் இனம் பிரயத்தனப்படுவதே பாலியல் தேர்வின் அடிப்படை என்றார் டார்வின்.
டார்வினுடைய இந்தக் கருதுகோளுக்கு நேரெதிரான கோணத்தைப் புதிய ஆய்வு நிறுவியுள்ளது. இதில் பெண்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும்பட்சத்தில்தான் பாலியல் தேர்வு தீவிரமாக நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு டார்வின் காலத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகள் புதிய ஆய்விலும் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி முதல் பாலூட்டிகள் வரை எக்காலத்திலும் ஆண் இனத்தை விடவும் பெண் இனம் கூடுதல் எண்ணிக்கையில் இருந்ததற்கான சான்றுகள் காட்டப்பட்டுள்ளன. ஆனால், பறவை இனங்களுக்கு இந்தக் கூற்று பொருந்தாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல 462 விதமான ஊர்வன, பாலூட்டி, பறவை இனங்களை ஆராய்ந்து, பொதுவாகப் பெண்களை விடவும் ஆண்கள் உருவத்தில் பெரியதாக இருப்பதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது. தன்னுடன் போட்டி போடும் ஆணை வீழ்த்திப் பெண்ணைக் கவரவே புஜபலமும் ஆகிருதியான தோற்றமும் ஆணுக்கு வாய்த்துள்ளதாம்.
பலம் வாய்ந்தவளே
பறவை இனத்தைத் தவிர, மற்ற உயிரினங்களில் பெண் இனமே அதிக எண்ணிக்கையில் நீடிக்கிறது. குறிப்பாக, பாலூட்டிகளில் பெண் இனத்தின் ஆயுட்காலம் தனது ஆண் இணையை விடவும் கூடுதலாக இருப்பதே இதற்கான மூல காரணம். அதிலும் மனிதர்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 5% கெட்டி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கச் சிங்கத்திலும் கில்லர் திமிங்கிலத்திலும் (killer whale) ஆணைக் காட்டிலும் பெண் இனத்துக்கு 50% ஆயுட்காலம் கூடுதலாம்.
இதன் நீட்சியாகவே பெருந்தொற்றிலிருந்தும் உயிர்க்கொல்லி நோயிலிருந்தும் உயிர் தப்பிப் பிழைப்பவர்களில் பெண்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதாக இந்த ஆய்வு வலியுறுத்துகிறது. மொத்தத்தில், இதுகாலம் வரை சொல்லப்பட்டு வந்த ‘பெண் பலவீனமானவள்’ என்கிற பொதுப்புத்தியைப் புரட்டிப்போடும் புதிய பார்வையாக இந்த ஆய்வு இருக்கிறது.
- இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க‘காமதேனு’ மின்னிதழ்: https://www.hindutamil.in/kamadenu/
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago