வேளாண் துறை மேம்பாட்டுக்கு 281 யோசனைகள்

By செல்வ புவியரசன்

தேர்தல் களத்தில் வெற்றி தோல்வி என்ற கணக்குகளுக்கு அப்பாற்பட்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே பாமக வெற்றிபெற்றுவிட்ட விஷயம் ஒன்று உண்டு. அது, வேளாண் துறைக்கெனத் தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தமிழ்நாட்டின் பிரதானக் கட்சிகளில் ஒன்றான திமுக தெரிவித்திருந்த வாக்குறுதி. தற்போது ஆளுநர் உரையிலும் அது உறுதிப்பட்டிருக்கிறது. 2008-லிருந்து வேளாண் துறைக்கென நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுவரும் பாமக, இந்த ஆண்டின் இரண்டாவது அறிக்கையை 75 தலைப்புகளில் 281 யோசனைகளுடன் அளித்துள்ளது.

உற்பத்திப் பெருக்கத்தைப் போலவே விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்பது இந்த நிழல் அறிக்கையின் முதன்மையான அக்கறைகளில் ஒன்று. இது தொடர்பாக பாமக முன்னிறுத்தும் பல திட்டங்களை திமுகவும் தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு மாநில அரசே விலை நிர்ணயம் செய்யும் வகையில், ஆணையம் ஒன்றும் அனைத்து விளைபொருட்களையும் கொள்முதல் செய்வதற்கு வாரியம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்கிறது பாமகவின் நிழல் அறிக்கை. கேரளத்தை முன்மாதிரியாகக் கொண்டு வேளாண் விளைபொருட்களுக்கு மாநில அளவில் விலை நிர்ணயிக்கப்படும் என்றும் அதற்காக மாவட்ட அளவில் விவசாயிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் என்றும் திமுக தனது தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளது. எனவே, அதற்கான முன்னெடுப்புகளைத் தனது முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கையிலேயே திமுக தொடங்க வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு.

இந்த ஆண்டுக்கான பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை, வேளாண் கல்வி கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து, ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனி வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்பது அதன் நோக்கம். கோவை தவிர தஞ்சை, வேலூர், நெல்லை ஆகிய ஊர்களில் புதிய வேளாண் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு நான்கு வேளாண் பல்கலைக்கழகங்கள், நான்கு மாவட்டங்களுக்கு ஒரு வேளாண் கல்லூரி என்பது வெவ்வேறு தட்பவெப்பச் சூழல்களையும் மண் வகைகளையும் கொண்டுள்ள தமிழ்நாட்டுக்கு அவசியமானதுதான்.

மதுரையில் புதிதாக ஒரு வேளாண் பல்கலைக் கழகமும் கிருஷ்ணகிரியில் தோட்டக்கலைப் பல்கலைக்கழகமும் தொடங்குவதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி பல்கலைக்கழகங்கள் என்பவை அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கியவையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, வேளாண் துறைக்கான சிறப்புப் பல்கலைக்கழகங்களுக்கு முன்புபோல் எளிதில் அங்கீகாரம் கிடைக்குமா என்பது தெரியவில்லை.

இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உடனடி இழப்பீடு, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளல், காய்கறிகளையும் பழங்களையும் பாதுகாக்கக் குளிர்பதனக் கிடங்கு, நேரடிக் கொள்முதல் நிலையங்களில் உலர்த்தும் வசதி கொண்ட கிடங்குகள், மாவட்டம்தோறும் வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்கவும் ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள், கால்நடை வளர்ப்புக்கும் மீன்வளர்ப்புக்கும் முக்கியத்துவம், நதிகள் இணைப்பு, நிலத்தடி நீர்ப் பராமரிப்பு, தடுப்பணைகள், பனைப் பொருட்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகள், சீமைக் கருவேல மரங்கள் அழிப்பு, இயற்கை வேளாண்மை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்துதல் உள்ளிட்ட பல விஷயங்களில் திமுகவின் நிலைப்பாடும் பாமகவின் நிலைப்பாடும் ஒன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், ஒன்றிய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்கள் தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே வெளிப்படையான கருத்து வேறுபாடு இருக்கிறது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது திமுகவின் கருத்தாக இருக்கையில், விவசாயிகளின் அச்சம் களையப்படும் வகையில் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு பாமக தனது கூட்டணி தர்மத்தைக் காத்து நிற்கிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கோயம்பேடுபோல மிகப் பெரிய அளவிலான வேளாண் விளைபொருட்கள் சந்தை, இரவு நேரத்தில் அரசுப் பேருந்துகளில் விளைபொருட்களை ஏற்றிச்செல்ல அனுமதி, விளைபொருட்களைச் சந்தைக்கு ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் தள்ளுபடி, மாவட்டம்தோறும் நவீன மாட்டுப் பண்ணைகள் ஆகியவை படிப்படியாக நடைமுறைப்படுத்திவிடக்கூடிய திட்டங்கள்தான். பாசனப் பரப்பை விரிவுபடுத்தும் வகையில் நீர்ப் பாசனத்துக்கு என நான்காண்டுத் திட்டம் ஒன்றையும் வகுத்திருக்கிறது பாமகவின் நிழல் அறிக்கை. நீர்ப் பாசனத் திட்டங்களுக்கான பெரும் முதலீடுகள் இப்போது சாத்தியம்தானா என்று தெரியவில்லை. கரும்பு கொள்முதல் விலை படிப்படியாக அதிகரிக்கப்பட வேண்டும் என்கிறது பாமக. சர்க்கரை ஆலைகளில் பாக்கி வைத்திருக்கும் தொகையை உடனடியாகக் கொடுத்துவிட்டாலே விவசாயிகளுக்குப் பெரும் ஆறுதலாக இருக்கும். பொதுத் துறை வங்கிகளில் உள்ள பயிர்க் கடன் தள்ளுபடிக்கான நிதிச் சுமையைத் தற்போதைய நிலையில் தமிழ்நாடு அரசு தாங்குமா என்பதும்கூடச் சந்தேகமே. மாவட்டம்தோறும் வேளாண் சிறப்பு மண்டலங்கள், நிலப் பயன்பாட்டுக் கொள்கை போன்ற திட்டங்கள் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நிறைவேற வேண்டியவை.

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டம் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என்கிறது பாமக அறிக்கை. அத்திட்டம் கருணாநிதி முதல்வராக இருந்தபோது தொடங்கிவைக்கப்பட்டது என்பதால் விரைந்து நிறைவேற்றிட திமுகவும் ஆர்வம் காட்டுவது தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் ஒன்றிணைக்கும் விரிவான திட்டங்கள் தொலைநோக்கு இலக்காகக் கொள்ளப்பட வேண்டியவை. இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு முழுமையும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறதேயன்றி, ‘மூன்றாக’ அல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

வேளாண்மை தவிர தோட்டக்கலை, வேளாண் சந்தை ஆகியவற்றுக்குத் தனித் தனி அமைச்சகங்கள் அமைக்க யோசனை தெரிவித்திருக்கிறது பாமக. வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையிலும் பாமக அறிக்கையில், வேளாண் துறை என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் என்பது பாமகவின் விருப்பம். 125 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி திமுகவின் இலக்கு. விருப்பங்களும் இலக்கோடு இணையட்டும்.

- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்