விவசாயிகள், விவசாயத் தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்டு ‘அக்ரி ஸ்டேக்’ எனும் மின்னணுத் தரவுத் தொகுப்பை ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ளது. விவசாயத் தரவுத் திரள் எனும் இந்தத் தொகுப்பை விவசாயப் புள்ளிவிவரத் தொகுப்பு என்று குறிப்பிடலாம். கடன் வழங்கல், விவசாய விநியோகச் சங்கிலியில் வீணாகும் விளைபொருள் போன்ற சிக்கல்களைச் சமாளிப்பதற்காக இந்தத் தரவுத் தளம் உருவாக்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறுகிறது.
இதற்காக ஒன்றிய வேளாண் அமைச்சகமும், மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனமும் 2021 ஏப்ரல் 13 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. தன் உள்ளூர் கூட்டாளி ‘க்ராப் டேட்டா’ மூலம் விவசாயிகளின் தரவுத் தளத்தையும் விவசாயிகள்/குழு எதிர்கொள்ளும் சவால்களை மைக்ரோசாப்ட் எதிர்கொள்ள முற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் அமைச்சகத் தகவல்கள்
“தேசிய விவசாயிகள் தரவுத் தளத்தின் அடிப்படையில் வேளாண் நிதி உருவாக்கப்படும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிலப்பதிவுகளை இணைப்பதன் மூலம் இந்தத் தரவுத் தளத்தை அரசு உருவாக்கிவருகிறது. அரசிடம் 5 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் நில ஆவணங்கள் உள்ளன. மேலும், பிஎம் கிசான், மண் வள அட்டை - பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் தொடர்பான தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மற்ற தரவுகளைச் சேர்க்கும் நடைமுறை தொடர்ந்துவருகிறது” என்று வேளாண் அமைச்சகம் தெரிவிக்கும் தகவல்கள் மூலம் தெரியவருகிறது. அமைச்சகத்தின் இந்த முன்னேற்பாடுகள் விவசாயத் தரவுத் திரளை அடிப்படையாகக் கொண்டவை என ஊகிக்கலாம்.
அதே நேரம், இவை யாவும் விவசாயிகளின் தரவுத் தனியுரிமைப் பாதுகாப்பு தொடர்புடைய பிரச்சினைகள் குறித்துக் கொள்கை வகுக்கப்படாத வெற்றிடத்தில் நடைபெறுவது கவலைக்குரியது. ‘தரவுதான் இன்றைய புதிய கச்சாப் பொருள்’ என்று கருதப்படும் நிலையில், பெருநிறுவனங்கள் இதில் லாபத்தை மட்டுமே அடிப்படையாக எதிர்பார்க்கும் நேரத்தில், விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு உள்ளது. இதை லாபம் ஈட்டுவதற்கு அப்பாற்பட்ட வாய்ப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அணுகும் சாத்தியம் குறைவு. தொடர்ச்சியாக, ‘சந்தைத் தீர்வுகள்’ என்கிற பெயரில் கடன் தொல்லை பெருகலாம், இடுபொருள் விற்பனை திசைமாறலாம். இது விவசாயிகளின் கடன்களை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இடப்பெயர்வையும் (displacement) அதிகரிக்கும். இந்த இடத்தில் ஆதார் அட்டை இல்லாததால் விலக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்கிற ஒப்பீடு தேவைப்படுகிறது. ஏனென்றால், தரவு என்பது இரு பக்கமும் கூரான கத்தி.
இந்தியாவில் உருவாக்கும் விளைவுகள்
“விவசாயத் தரவுத் திரள் திட்டத்தை வெறும் தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சியாக மட்டும் பார்க்க முடியாது, அதனுள் ஒளிந்திருக்கும் சமூக/பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பார்க்க வேண்டும். உலகின் பொருளாதாரச் சக்தியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ள பில் கேட்ஸின் நிறுவனம், இந்தத் திட்டத்தில் ஈடுபட்டிருப்பது, பெரும் நில அபகரிப்புக்கு வழிவகுக்கும்” என்று விமர்சிக்கிறார் சூழலியலாளர் வந்தனா சிவா.
இந்தத் திட்டம், சில காலத்துக்குச் சில நன்மைகளைத் தரலாம். அதே நேரம், ஒரு மாவட்டத்தில் விளையும் மொத்த விளைச்சல், கொள்முதல் குறித்த மொத்தத் தரவும் ஒரு பெருநிறுவனத்திடம் இருந்தால், அதன் பிறகு வேளாண் விளைபொருட்கள் சார்ந்து என்னவெல்லாம் நிகழும்? விவசாயிகளுக்கு எப்படி நல்ல விலை கிடைக்கும்? இவை யெல்லாம் விடை தெரியாத கேள்விகள். எத்தனை விவசாயிகளால் இந்த முயற்சியில் பங்கேற்க முடியும்? ஏற்கெனவே டிஜிட்டல் இடைவெளி பாரதூரமாக நிலவும் நம் நாட்டில், இது என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது?
சரி, மேலை நாடுகளில் இது போன்று செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் நிலை என்ன? அமெரிக்காவில், விவசாயிகள் இடம்பெயர்க்கப்பட்டு, பலரும் விவசாயத்தை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளனர். பெருநிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அது மட்டுமல்ல, தவறான தரவுகளாலோ, சரியாகப் பதிவேற்றப்படாத தரவுகளாலோ, காப்பீடு/கடன் கிடைக்காமல் பல சிரமங்களுக்கு ஆளாக்கலாம். காப்பீட்டுத் தொகை நேரடியாகக் கடன் கணக்குக்குச் செலுத்தப்படலாம். சரியாகப் பதிவிடப்படாத நில ஆவணங்களால், நிலம் அபகரிக்கப்படலாம்.
யார் கையில் அதிகாரம்?
இந்தியாவில் 70% பேர் 2 ஏக்கருக்கும் குறைவான நிலத்தையே வைத்துள்ளனர். இப்படி லட்சக்கணக்கானோர் தொடர்புடைய ஒட்டுமொத்தத் தரவு, உற்பத்தி, சந்தை, வாழ்வாதாரம் மின்னணுமயமாக்கப்பட உள்ளது. தரவுகளை வைத்துக்கொண்டு தனியார் நிறுவனங்கள் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை நிர்ணயிப்பது, பாதுகாப்பது, ஒழுங்குமுறைப்படுத்தப் போவது யார்?
தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள், தனியுரிமைப் பாதுகாப்பு எனப் பலவும் உறுதிசெய்யப்பட்ட பின்பே, இந்தத் திட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். மேலும், இது மாநில அரசுகளினுடைய பட்டியலின் கீழ் வருகிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்து அறியப்பட்டதா என்று தெரியவில்லை. அரசுக் கொள்கை வகுப்பாளர்களின் கொள்கைகள், நோக்கம், மக்கள் மீதான பரிவு, தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் தன்மையை உரசிப் பார்ப்பதாக இந்தத் திட்டம் உள்ளது.
- அனந்து, ஒருங்கிணைப்பாளர் - பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு/ஆஷா - தமிழ்நாடு.
தொடர்புக்கு: organicananthoo@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago