திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களுக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று பசுமை யானது. தாமிரபரணி தரும் செழிப்பு அது. மற்றொன்று ரத்தச் சிவப்பு. தேரி நிலங்களாக விரியும் சிவப்புப் பாலை அது. பசுமை விளையாதத் தரிசு அது. ஒரு பக்கம் ஓடும் ஆற்றில் கையில் அள்ளி தண்ணீர் குடிக்கிறார்கள். மறுபக்கம் நிலத்தடியை ஆழத் தோண்டினாலும் மணல்தான் மிஞ்சு கிறது. இயற்கையின் வினோதங்களில் இதுவும் ஒன்று.
திருநெல்வேலியின் நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடியின் சாத்தான் குளம் ஆகிய ஊர்களில் குடிநீருக்கே சிரமம். கூடங்குளம் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குக் குடிக்க தண்ணீர் இல் லாமல் முத்தாலங்குறிச்சி கிராமத்தின் தாமிரபரணியில் குழாய்கள் மூலம் குடிநீர் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். தூத்துக்குடியில் ரத்தச் சிவப்பில் விரியும் தேரிக்காட்டு பொட்டல்வெளிகளின் சுற்று வட்டார நிலத்தடியில் கடல் நீர் ஊடுருவி விட்டது.
சாத்தான்குளம் பகுதியில் கணிசமானோர் சிறுநீரகக் கல் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். வறட்சியால் ஊரைவிட்டு வெளியேறியவர்கள் ஏராளம். கடந்த 15 ஆண்டுகளில் இங்கே சுமார் 25 லட்சம் தென்னை மரங்கள் பட்டுப்போயிருக்கின்றன. வடகிழக்குப் பருவ மழை அடித்து தமிழகமே வெள்ளக் காடாக மாறியிருக்கும் நிலையிலும் இங்கே வெளுத்து வாங்குகிறது வறட்சி.
ஏன் இந்த வறட்சி?
தாமிரபரணியின் கடைக்கண் பார்வை பெறாத பகுதிகள் இவை. தாமிரபரணி ஆறு தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் அணையைத் தாண்டி நேராக பழைய காயல் சென்று கடலில் கலந்துவிடுகிறது. இதனால், நதியின் கீழே தென் திசையில் இருக்கும் பகுதிகளான திருநெல்வேலியின் திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடியின் சாத்தான்குளம், குலசேகரப்பட்டினம், பெரியதாழை உள்ளிட்ட பல பகுதிகள் காலம் காலமாகவே வறட்சியின் பிடியில் சிக்கியிருக்கின்றன.
புவியியல் அமைப்பின்படி மேற்கண்ட பகுதிகள் இயற்கையாகவே மழை மறைவு பிரதேசங்களாகும். தவிர, தாமிரபரணி நீர் பிடிப்புப் பகுதிகளான பொதிகை மலை, பூங்குளம், களக்காடு உள்ளிட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனங்களாக இருக்கின்றன. அங்கே மழை பொய்ப்பது இல்லை. ஆனால், மணிமுத்தாற்றின் மேலே இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகள் அழிக்கப்பட்டு அங்கெல்லாம் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. இதனால், மணிமுத் தாற்றுக்கு மழைப் பொழிவு குறைவு தான். மணிமுத்தாற்றின் கடை மடை பகுதிதான் சாத்தான்குளம்.
தவிர, இங்கே பெரியதாக எந்த ஆறும் இல்லை. நாங்குநேரி அருகில் இருக்கும் ஆயர்குளத்தின் உபரி நீர் கருமேனியாறாக சாத்தான்குளம் வழியாக ஓடி மணப்பாடு அருகே கடலில் கலக்கிறது. ஆனால், வெள்ள காலங்களில் மட்டுமே கருமேனியாற்றில் தண்ணீர் இருக்கும். இதுதவிர, மணி முத்தாறு அணை கட்டப்படும் முன்பு இந்தப் பகுதிகளுக்கு பல்வேறு காட்டாறு களின் மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. மணிமுத்தாறு அணை கட்டியப் பின்பு அந்தத் தண்ணீர் எல்லாம் மணிமுத்தாறு அணைக்குச் சென்று தாமிரபரணிக்கு சென்று சேர்ந்துவிடுகிறது.
தீர்வு தரும் திட்டங்கள்!
இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு தாமிரபரணியின் தண்ணீரைக் கொண்டுச் செல்ல இரு திட்டங்கள் தீட்டப்பட்டன. சாத்தான்குளம் பகுதியின் தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக சடையனேரி கால்வாய் திட்டம் செயல் பட்டு வந்தது. இந்தத் திட்டம் 96-ம் ஆண்டு விரிவுப்படுத்தப்பட்டது. அதன்படி மருதூர் மேலகால்வாயைத் தூர்வாரி கிளாக்குளம் வழியாக கால் வாய் கிராமத்தில் இருக்கும் கால்வாய் குளத்துக்குத் தண்ணீரை கொண்டுச் செல்ல வேண்டும்.
அங்கிருந்து சடைய னேரி கால்வாயை விரிவுப்படுத்தி கருமேனி ஆற்றின் மீதாக பயணித்து வைரவன் தருவை குளத்தை நிரப்பி, பின்பு புத்தன் தருவை குளத்தை நிரப்ப வேண்டும். இந்தத் தண்ணீர் படுக்கப்பத்து கிராமத்தில் மறுகாலாக விழுந்து கருமேனியாற்றில் கலக்கும். ஆனால், தாமிரபரணியின் தண்ணீர் பற்றாக்குறையாலும் திட்டத்தின் பல் வேறு குளறுபடிகளாலும் புத்தன் தருவை குளம் முழுமையாக நிரம்பி 118 ஆண்டுகளாகின்றன என்கிறார்கள் விவசாயிகள். இந்தக் குளம் ஒருமுறை முழுமையாக நிரம்பினால் இப்பகுதியில் 12 ஆண்டுகளுக்குத் தண்ணீர் பிரச் சினை இருக்காது.
அடுத்த திட்டம் தாமிரபரணி - கருமேனி யாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம். தாமிரபரணியில் இருந்து ஆண்டுதோறும் மழைக்காலங்களில் கூடுதலாக கடலில் கலக்கும் சுமார் 13 டி.எம்.சி. தண் ணீரை வெள்ள நீர் கால்வாய் மூலம் நாங்குநேரி, ராதாரபுரம், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்குத் தண்ணீர் அளிக்கும் திட்டம் அது. அதன்படி தூத்துக்குடியின் எம்.எல்.தேரியில் நீரை நிரப்ப வேண்டும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் இரு மாவட் டங்களிலும் 23,000 ஹெக்டேர் நிலங்கள் பாசனம் பெறும். சுமார் 5334 கிணறுகள் நிலத்தடி நீரைப் பெறும்.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ. 390 கோடி மதிப்பீடு தயார் செய்யப் பட்டு, 2006-ம் ஆண்டு ரூ. 169 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நான்கு கட்டங்களாகத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கன்னடி யன் கால்வாய் - திடியூர் வரை முதல் கால்வாயும், திடியூர் - மூலக் கரைப்பட்டி வரை இரண்டாம் கால்வாயும் வெட்டப்பட்டுவிட்டது. மேற்கண்ட பணிகள் முடிந்து நான்கு ஆண்டுகளாகின்றன. அதன் பின்பு ஒரு துரும்பையும் அசைக்கவில்லை.
ஆனால், ஒவ்வோர் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலும் திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கப்படுகிறது. கடைசியாக 2013-14ம் ஆண்டு நிதி நிலை அறிக்கையிலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற 156.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதிகாரிகளை கேட்டால் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்கிறார்கள். ஆனால், அப்படி அனுமதி பெறாமலா இரண்டு கட்டப் பணிகளை முடித்தீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்கள் விவசாயிகள்.
நதியை அடைத்த அரசியல்!
ஒருபக்கம் பெருக்கெடுத்து கடலுக்கு ஓடுகிறது வெள்ளம். மறுபக்கம் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் மக்கள். பயிர்கள் கருகுகின்றன. நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறிவிட்டது. பாலை வனத்தை நோக்கி சுமார் 40 கி.மீ. பயணித்து வந்துவிட்டாள் தாமிர பரணி தாய். இன்னும் 20 கி.மீ. வந்தால்போதும், யுகங்களாக நீளூம் மக்களின் தாகம் தணியும். பாலை யில் பசுமை துளிர்க்கும். தாயை வாரி அணைத்து வரவேற்கக் காத்திருக் கிறார்கள் மக்கள். ஆனால், அரசியல் வாதிகளுக்குதான் மனமில்லை. அநாகரிக அரசியலால் தாமிரபரணியை அடைத்து வைத்திருக்கிறார்கள்.
நதியை அநீதியால் எப்போதுமே அடைத்து வைத்திருக்க முடியாது. ஒருநாள் அது நியாயத்தின் பக்கம் சீறிப் பாய்ந்தே தீரும்!
(நீர் அடிக்கும்)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago