*
நமது கோடைக் காலம் எப்படி இருக்கும்? பூமியைப் புரட்டிப்போட்டிருக்கும் வெயில். கிட்டத்தில் வந்துவிட்டதுபோல சுட்டெரிக்கும் சூரியன். பாலையாய் பாய்ந்திருக்கும் ஆறுகள். வெறுமை சூழ்ந்திருக்கும் வானம். ஒரு துளி தண்ணீருக்கு ஏங்கும் மனம். ஆனால், இதே கோடையில் சத்தியமங்கலம், கோபிச்செட்டிப்பாளையம் பக்கம் போயிருக்கிறீர்களா?
அதிசயித்துப் போய்விடுவீர்கள். சலசலத்து ஓடும் பவானி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை போர்த்தியிருக்கும் வயல். குற்றால சாரலில் உடல் குளிரும். இத்தனைக்கு இது ஒன்றும் மலைவாசஸ்தலம் அல்ல. இயற்கையின் இனிய மாயம் இது.
நமது முன்னோர்கள் கட்டிய கொடிவேரி, காலிங்கராயன் அணைக்கட்டுகளின் பாசனத்தால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் இது. ஊரெல்லாம் கொதிக்கும் ஏப்ரல் 15-ம் தேதியில் கொடிவேரி அணையில் மட்டும் தண்ணீர் திறந்துவிடுவார்கள். வேறு எந்த அணைக்கட்டிலும் நடக்காத அதிசயம் இது. அப்போது சத்தி, கோபி, நம்பியூர், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கரில் நெற்பயிர் நடவு தொடங்கும். இந்தப் பணிகள் மே 15 முதல் 30-க்குள் முடிந்துவிடும். சுமார் அரை அடியில் தண்ணீர் தேங்கி நிற்க கடலென நீளும் பச்சை வயல்கள்.
தென்மேற்கு பருவக் காற்று தொடங்கும் காலம் இது. ஆனால், தமிழகம் மழை மறைவு பிரதேசம். மேற்குத் தொடர்ச்சி மலைகள் தென்மேற்கு பருவக் காற்றின் மழை மேகங்களை தடுத்துவிடும். ஆனால், இந்தப் பகுதியில் பெரும் பரப்பில் தண்ணீரை தேக்கிவைத்து செய்யப் படும் நஞ்சை பாசனத்தால் உருவாகும் குளிர்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளுக்குள் ஊடுருவி மறுபக்கம் இருக்கும் மழை மேகங்களை கிழக்கே இழுத்துவந்து விடுகிறது. இதனால், நீலகிரியில் மழைப்பொழிவு ஏற்பட்டு பவானியில் தண்ணீர் பெருகுகிறது. அதேசமயம் இங்கிருந்து கொஞ்சம் தள்ளி ஈரோடு பக்கம் சென்றால் வெயில் வாட்டி வதைக்கிறது. விவசாயிகள் சொல்லும் உண்மை இது.
தென்மேற்கு பருவமழை தொடங்கு வதற்குள் கொடிவேரி அணையின் பாசனப் பரப்பில் நடவு முடிந்திருக்கும். இந்த பாசனத்துக்கு ஏற்கெனவே கொடிவேரி அணையில் இருந்த தண்ணீர் இந்த நடவுக்கு போதுமானதாக இருக்கும். தவிர, நடவு போக ஆற்றில் சுமார் 150 மில்லியன் கன அடி தண்ணீரும், வயல்களிலிருந்து வடிந்த சுமார் 400 மில்லியன் கன அடி தண்ணீரும் மீதம் இருக்கும். கூடவே தென்மேற்கு பருவ மழையும் சேர்ந்துக்கொள்ளும். இப்போது ஜூன் 15-ம் தேதி காலிங்கராயன் அணையை திறந்துவிடுவார்கள். காலிங்கராயன் பாசனம் தொடங்கும். பவானி சாகர் அணை கட்டப்படுவதற்கு ஐந்து நூற்றாண்டுகள் முன்பு தொடங்கிய இந்த நீர் மேலாண்மை இன்றுவரை தொடர்கிறது. நமது முன்னோர்கள் இயற்கையை எவ்வளவு துல்லியமாக கணித்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் கொடிவேரி, காலிங்கராயன் அணைக்கட்டு பாசனங்கள்.
1948-55-ல் கீழ் பவானி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. கீழ் பவானி பாசனம் தொடங்கியதும் இந்தப் பகுதியில் புதிய ஆயக்கட்டுகள் தொடங்கின. கூடவே புதிய பிரச்சினைகளும் முளைத்தன. கீழ் பவானி தொடங்கும் முன்பு கொடிவேரி, காலிங்கராயன் அணைகள் மூலம் சுமார் 40 ஏக்கர் நிலங்களில் மட்டுமே நஞ்சை பாசனம் நடந்தது. ஆனால், கீழ் பவானி கட்டப்பட்டதும் விவசாயிகள் அனைவரும் நஞ்சையில் ஆர்வம் காட்டினர். சுமார் 2 லட்சம் ஏக்கரில் நஞ்சை பயிரிடப்பட்டது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு தொடங்கியது. தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயிகள் நினைத்தாலும் புஞ்சைக்கு மாற இயலவில்லை. ஏனெனில் நெற்பயிருக்காக நிலத்தில் அதிகளவு தண்ணீரை ஊற விட்டதில் நிலத்தடி நீர் உயர்ந்திருந்தது. இதனால் பருத்தி போன்ற புஞ்சை பாசனம் செய்ய இயலாமல் மண்ணின் தன்மை மாறிவிட்டது.
இதற்கிடையே தண்ணீர் தட்டுப் பாட்டை சமாளிக்க நெல் சாகுபடி செய்வோருக்கு அரசு அபராதம் விதித்தது. விவசாயிகளின் போராட் டங்கள் வெடித்தன. 1959-ம் ஆண்டு விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போதுதான் கீழ் பவானியில் ‘சாகுபடி பருவகால முறை வைப்பு’ பாசனத் திட்டம் உருவாக்கப்பட்டது. கீழ் பவானி நீர்த் தேக்கத்தில் ஓர் ஆண்டில் கிடைக்கும் நீரளவில் பாதியை நெல் விளைவிக்கவும் மீதியை புஞ்சை பயிரான கடலை விளைவிக்கவும் தீர்மானமானது. மொத்த ஆயக்கட்டும் முதல் போகம் மற்றும் இரண்டாம் போகம் என இரண்டாக பிரிக்கப்பட்டன. பாசன மடைகள் அனைத்தும் அதன் எண் வரிசைக்கு ஏற்ப ஒற்றைப் படை மடைகள், இரட்டைப் படை மடைகளாகப் பிரிக்கப்பட்டன.
ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 15 வரை முதல் போகத்துக்கு ஒற்றைப்படை மடைகள் மூலம் 24 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது. டிசம்பர் 16 முதல் மார்ச் 15 வரை 2-ம் போகத்துக்கு இரட்டைப் படை மடைகள் மூலம் 12 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டது. 2-ம் போகத்துக்கு தண்ணீர் திறக்கும்போது யாரேனும் நஞ்சை பயிரிட்டுவிடக் கூடாது என்பதற்காக தண்ணீர் விட்டுவிட்டு வழங்கப்பட்டது. மடைகள் 9 நாட்கள் திறந்திருக்கும். பின்பு 9 நாட்கள் அடைத்திருக்கும். முதல் போகத்தில் நஞ்சை சாகுபடி நடந்தது. 2-ம் போகத்தில் புஞ்சை நடந்தது. விவசாயிகள் இந்த முறையை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது கீழ் பவானி மூலம் 2,07,000 ஏக்கர்; கொடிவேரி அணை மூலம் 25,000 ஏக்கர்; காலிங்கராயன் அணை மூலம் 15,000 ஏக்கர் உட்பட 2,62,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கல்லணை தொடங்கி தாஜ்மஹால் வரை அதனை கட்ட உத்தரவிட்ட மன்னர்களைதான் நினைவுகூர்கிறோம். அவற் றை வடிவமைத்த சாமானியர்களை மறந்துவிடுகிறோம். உண்மையில் உயிரைக் கொடுத்து வேலை செய்த வர்கள் தொழிலாளர்கள்தான்.
இன்று நாம் அனுபவிக்கும் நம் முன்னோர்களின் கட்டுமானங்களின் பின்னால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. கல்லணை தொடங்கி காலிங்கராயன் வரை அணைக்குள் புதைந்திருக்கும் ஆன்மாக்களின் ஆசிர்வாதம்தான் நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், அந்தத் தொழிலாளர்களைப் பற்றி பெரிதாக பதிவுகள் எதுவும் இல்லாமல் போனதுதான் வேதனை. அது வரலாற்றுப் பிழையும்கூட. இங்கே நாம் கொடிவேரி, காலிங்கராயன் அணைகளைக் கட்டியதில் முக்கிய பங்கு வகித்த ‘கல் ஒட்டர்’ சமூகத்தினரையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். ஒடிசா, கர்நாடகம், ஆந்திரம் என எங்கிருந்தோ வந்து கொடிவேரி அணைக்காக உயிரைக் கொடுத்த சமூகத்தினர் இவர்கள். அணையை 2-ம் முறையாக கட்டியபோது வெள்ளத்தால் ஆயிரக்கணக்கில் பலியானது இந்த சமூகத்தின் மக்கள்தான். கர்நாடகத்தின் கபிணி அணையைக் கட்டியதிலும் இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால், பிற்காலங்களில் மண், சிமெண்ட், செங்கல் பயன்பாடு அதிகரித்தவுடன் கல்வேலையின் தேவைகள் குறைந்தன. இவர்களின் பிழைப்பும் போனது. இன்று இவர்கள் கல் வேலைக்கு பதில் கட்டிட வேலைக்குச் செல்கிறார்கள். இந்தப் பகுதியில் இருக்கும் ஒட்டரூர், ஒட்டர் கரட்டுப்பாளையம் ஆகியவை இவர்களின் நினைவை தாங்கி நிற்கும் ஊர்களே.
(நீர் அடிக்கும்)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago