திருவிதாங்கூர் மன்னர்களும்... திராவிடக் கட்சிகளின் குறுநில மன்னர்களும்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு



*

பயிர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதால் விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டுகிறார்கள் டெல்டா விவசாயிகள். கீழ்பவானியில் பாசன வாய்க்கால்களை மேம்படுத்த வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள். மருதூர் மேலகால்வாயைத் தூர் வார வேண்டும் என்கிறார்கள் தூத்துக்குடி விவசாயிகள். அத்திக்கடவு - அவினாசி நிலத்தடி நீர் செறிவுத் திட்டத்தில் கவுசிகா நதியை மீட்டுத் தர வேண்டும் என்கிறார்கள் கொங்கு மண்டல விவசாயிகள். கொடிவேரி அணைக்கட்டு, காலிங்கராயன் அணைக் கட்டு வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும் என்கிறார்கள் ஈரோடு விவசாயிகள். கடைமடைக்கும் காவிரி செல்லும் வகையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்கிறார்கள் நாகை விவசாயிகள். பாலாற்றில் மணல் அள்ள வேண்டாம் என்கிறார்கள் காஞ்சிபுரம் விவசாயிகள். தொழுதூர் அணை - வெலிங்டன் ஏரி வாய்க்காலை தூர் வார வேண்டும் என்கிறார்கள் கடலூர் விவசாயிகள். மேட்டூர் அணை - அய்யாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள் சேலம் விவசாயிகள். வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், விவசாயிகளின் குரலை கேட்கத்தான் ஆளில்லை. விவசாயி களின் தொடர்பு எல்லைக்கு வெளியே வெகுதூரம் போய்விட்டார்கள் மக்கள் பிரதிநிதிகள். அதிகாரத்தின் முன்பு விவசாயி கூனிக்குறுகி கெஞ்ச வேண்டியிருக்கிறது. இடையிடையே பதற வைக்கின்றன மீத்தேன், எரிபொருள் எண்ணெய் குழாய் திட்டங்கள். அதிகாரிகளின் கைகள் அரசியலால் கட்டப்பட்டிருக்கின்றன. காவிரிப் பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்த 2008-ம் ஆண்டு பொதுப்பணித்துறையின் பணிப் படை (Task force) தயாரித்துக் கொடுத்த ரூ.5,100 கோடி மதிப்பி லான திட்டங்கள் கோப்புகளில் உறங்குகின்றன. திறமையான பாசனப் பொறியாளர்களை வெறுமனே மேஜை தேய்க்கவிட்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பொதுவாக கேள்வி கேட்க ஆளில்லாத ஆட்சியைப் பற்றி சொல்லும்போது, ‘இங்கே என்ன மன்னராட்சியா நடக்கிறது?’ என்று கேட்போம். ஆனால், ஒருகாலத்தில் நாஞ்சில் நாட்டு மன்னர்கள் நேரடியாக களத்துக்கு வந்து விவசாயிகளின் குரலைக் கேட்டார்கள். விவசாயிகளும் உரிமையாக மன்னர்களிடம் பிரச்சினை களை சொன்னார்கள். அவற்றை உடனுக்குடன் தீர்த்தும் வைத்தார்கள். திருவிதாங்கூர் ராஜாக்கள் காலத்தில் நடந்த இதுதொடர்பான வரலாற்று நிகழ்வுகளை அழகியபாண்டியபுரம் முதலியார்கள் ஓலைக் சுவடிகளில் எழுதி வைத்துள்ளனர். சுமார் 600 ஓலைச்சுவடிகளில் ‘மலையாமை’ (தமிழ் மற்றும் மலையாளம் கலந்த வடிவம்) மொழியில் எழுதப்பட்ட ஆவணம் அது. 12-ம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 1810-ம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள் அதில் தொகுக்கப்பட்டுள்ளன. குறிப் பாக, நீர் நிலைகள் பராமரிப்பு, பாசனம் தொடர்பான விஷயங்கள், குடிமைப் பணிகள் அவற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ‘முதலியார் ஆவணங்கள்’ எனப்படும் இவற்றில் 240 ஓலைச்சுவடிகளை கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தமிழ்படுத்தியிருக் கிறார். 100 ஓலைச் சுவடிகளை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள் தமிழ்படுத்தியிருக்கிறார்.

சுசீந்திரம் கோயில் தேரோட்டத் திருவிழாவின்போது நாஞ்சில்நாட்டு விவசாயிகள் அனைவரும் சுசீந்திரம் கோயிலில் ஒன்றாக கூடுவது அன்றைய வழக்கமாக இருந்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை அங்கு கலந்து ஆலோசித்தார்கள். இந்தக் கூட்டங்களுக்கு திருவிதாங்கூர் மன்னர்கள் நேரில் வந்து விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு கிடைக்கச் செய்தார்கள். இவ்வாறு வரும் விவசாயிகளுக்கு சுசீந்திரம் கோயிலிலேயே உணவு, தங்குமிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சுசீந்திரம் கோயில் தேரோட்டத் திருவிழாவின்போது நாஞ்சில்நாட்டு விவசாயிகள் அனைவரும் சுசீந்திரம் கோயிலில் ஒன்றாக கூடுவது அன்றைய வழக்கமாக இருந்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை அங்கு கலந்து ஆலோசித்தார்கள். இந்தக் கூட்டங்களுக்கு திருவிதாங்கூர் மன்னர்கள் நேரில் வந்து விவசாயிகளின் பிரச்சினைகளைக் கேட்டு தீர்வு கிடைக்கச் செய்தார்கள். இவ்வாறு வரும் விவசாயிகளுக்கு சுசீந்திரம் கோயிலிலேயே உணவு, தங்குமிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

கி.பி. 1785-ம் ஆண்டில் பதிவு செய்யப் பட்ட ஓர் ஆவணத்தில் ஒவ்வொரு பங்குனி, சித்திரை மாதங்களிலும் குளங்கள் தூர் வாரப்பட்டன. மதகுகளும் கரைகளும் செப்பனிடப்பட்டன. இது மன்னனின் முக்கிய கடமையாக இருந்தது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தக் காலத்தில் பறலையாற்றின் (பரளியாறு) வெள்ளம் அனந்தனாறு சென்று கடலில் கலந்துக்கொண்டிருந்தது. இதனால் விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். இதுதொடர்பாக ஊரின் பொது இடத்தில் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு தர்மராஜா நேரில் வந்தார். அவரிடம் விவசாயிகள் 6 மீட்டர் அகலமும் 8 மீட்டர் உயரமும் கொண்ட தடுப்பணை கட்டித் தர வேண்டும் என்கிறார்கள். அதன்படி அணையும் கட்டித்தந்தார் அவர்.

கடந்த 1812-ம் ஆண்டுவரை கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான நிலங்கள், சொத்துக்கள் மடங்கள், கோயில்களுக்கு சொந்தமாக இருந்தன. தனியார் சொத்துக்கள் மிகக் குறைவு. கிட்டத்தட்ட பொதுவுடைமை போன்ற அமைப்பு அது. விவசாயிகள் அனைவரும் குத்தகை அடிப்படையில் விவசாயம் பார்த்தார்கள். அப்போது நீர் நிலைகளைப் பராமரிக்க விவசாயி களிடம் கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டது. ஆனால் விவசாயிகளோ, “நாங்கள் சாகுபடி செய்தது எதையும் வீட்டுக்கு எடுத்துப் போவதில்லை. அனைத்தையும் கோயிலுக்குக் கொடுத்துவிடுகிறோம். கோயில் நிர்வாகம் எங்கள் உழைப்புக்கு கூலியாக தானியங்களை அளிக்கிறது. அதனால், கோயில் மேல்வாரத்தில் இருந்து (உபரி வருவாய்) நீர் நிலைகளைத் தூர் வார நிதி அளிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி கோயில் உபரி வருவாயிலிருந்து நீர்நிலைகளைத் தூர் வார நிதி ஒதுக்கப்பட்டது. இதை 1730-ம் ஆண்டின் ஆவணம் தெரிவிக்கிறது.

1719-ம் ஆண்டின் ஆவணம் ஒன்று மன்னனிடம் கோபித்துக்கொண்டு மலை ஏறிய விவசாயிகளைப் பற்றி சொல்கிறது. அந்தக் காலகட்டத்தில் விவசாயிகளுக்கு நில வரி விதிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அந்த வரி விவசாயிகளுக்கு கட்டுப்படி ஆகவில்லை. மன்னரிடம் வரியைக் குறைக்கச் சொல்லி விவசாயிகள் கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், மன்னன் கேட்பதாக இல்லை. பொறுத்துப் பார்த்த விவசாயிகள் ஒருகட்டத்தில் கோபம் கொண்டு, ‘இனி நாங்கள் பயிர் செய்ய மாட்டோம்’என்று சொல்லிவிட்டு, மலை மீது ஏறி சென்றுவிட்டார்கள். கடைசியில் மன்னர் வேறு வழியில்லாமல் விவசாயிகளை நேரில் சென்று சமாதானப்படுத்தி, அவர்களை நாட்டுக்கு அழைத்து வந்தார். நிலவரியும் குறைக்கப்பட்டது.

இன்று தமிழகத்தில் நடப்பது மக்களாட்சிதான். ஆனால், திராவிடக் கட்சிகளின் மக்களாட்சியில் அதிகார பீடத்தின் பிரதிநிதிகள் எல்லோரும் குறுநில மன்னர்களாக உலா வரு கின்றனர். விவசாயிகள்தான் ஒரு மன்னரையும் நேரில் பார்க்க முடிவதில்லை!



பிற்காலப் பாண்டியர்கள் கட்டிய 13 தடுப்பணைகள் ஒவ்வொன்றில் இருந்தும், எந்தந்த வயல்களுக்கு எவ்வளவு தண்ணீர் விட வேண்டும் என்கிற அளவுகள் பழைய தமிழ் எழுத்துக்களில் அணைகளில் பொறிக் கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் அ.கா.பெருமாள். அதாவது 1 எனில் க, 2 எனில் உ, 3 எனில் நு, 5 எனில் கு, 7 எனில் எ, 8 எனில் அ, 100 எனில் m ஆகிய வடிவங்களில் பழைய தமிழ் எழுத்துக்கள் இருக்கின்றன. இந்த அணைக்கட்டு பாசனத்தில் நெல்லுடன் பருத்தியும் கணிசமாகப் பயிரிடப்பட்டது. பேச்சிப்பாறை அணை கட்டிய பின்புதான் பருத்தி பயிர் சாகுபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் அழிந்துப்போனது.

(நீர் அடிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்