சுதந்திர இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டு வீரர்களுள் ஒருவரான மில்கா சிங்கை கரோனாவுக்குப் பலிகொடுத்திருக்கிறோம். 91 வயதான மில்கா சிங், கரோனாவுக்கு முன்னரும் எண்ணற்ற போராட்டங்களை வாழ்க்கையில் எதிர்கொண்டவர்; ஆனால், அவை எவையும் தனது சாதனைகளுக்குத் தடையாக நிற்க அவர் அனுமதித்ததில்லை.
இந்தியப் பிரிவினையின்போது பெற்றோர் கொல்லப்படுவதைச் சிறு வயதில் பார்த்தவர் மில்கா சிங். பஞ்சாபின் கோவிந்தபுராவிலிருந்து நல்ல வாழ்க்கைக்காக, 15 வயதில் ஓடத் தொடங்கியவர். டெல்லியில் உள்ள அகதிகள் முகாமில் ஷூ பாலிஷ் போடுவதில் தன் வேலைகளைத் தொடங்கினார். பிறகு, சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்றார். 1952-ல் ராணுவத்தில் சேரும் முயற்சி வெற்றிபெற்று செகந்திராபாதில் பணியில் சேர்ந்தார். அங்குதான் அவர் தனது முதல் ஓட்டப் பந்தயத்தைத் தொடங்கினார். ராணுவப் பயிற்சியாளர் குருதேவ் சிங்தான், முதல் பத்து பேர்களுக்குள் வந்தால் கூடுதலாக ஒரு கோப்பை பால் தருவதாகச் சொல்லி ஊக்குவித்தவர். மில்கா ஆறாவது ஆளாக வந்து 400 மீட்டர் போட்டிக்கான சிறப்புப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் வரலாறு.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு முறை தங்கப் பதக்கம் வென்றவர். 1958 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார். 1958-ல் நடந்த பிரிட்டிஷ் காமன்வெல்த் போட்டிகளில் 440 அடிகள் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் இந்தியத் தடகள வீரர்களுக்கு உலக வரைபடத்தில் இடத்தை அளித்த சாதனையாளர் அவர். காமன்வெல்த் போட்டிகளில் தனி விளையாட்டு வீரராகத் தங்கம் வென்றதற்காக, மில்காவின் கோரிக்கையை ஏற்று பிரதமர் நேரு தேசிய விடுமுறை அறிவித்தார். மில்கா, தான் பங்குபெற்ற 80 பந்தயங்களில் 77 பதக்கங்களை வென்றிருக்கிறார். 1960-ல் ரோம் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அவர் தோல்வியடைந்தாலும் அந்த ஓட்டம் மிகவும் சிறப்பானதே. 400 மீட்டர்கள் தூரத்தை இறுதிப் போட்டியில் 45.6 நொடிகளில் கடந்து வெண்கலப் பதக்கத்தை 0.1 நொடியில் இழந்தார். கடைசி 150 மீட்டர்களைக் கடப்பதற்கான சக்தியைச் சேகரிப்பதற்காக நிதானிக்கும்போது அவர் செய்த பிழை அது. அந்தப் பிழைக்காக அவர் வாழ்நாள் முழுக்க வருந்தினார்.
“எனது ஓட்ட வாழ்க்கை முழுவதும் நான் கனவுகண்ட பதக்கமானது, தீர்மானிப்பதில் நான் செய்த சிறுபிழையால் என் கைகளிலிருந்து நழுவியது” என்று தனது சுயசரிதையில் எழுதியுள்ளார். அந்தச் சுயசரிதையின் அடிப்படையில்தான் அவரைப் பற்றிய புகழ்பெற்ற திரைப்படமான ‘பாக் மில்கா பாக்’ எடுக்கப்பட்டது. ரோமில் அவர் எடுத்துக்கொண்ட நேர சாதனையானது தேசிய அளவில் முறியடிக்க முடியாததாகவே இருந்தது. “இந்தியாவில் எனது சாதனையை முறியடிக்க ஒருவர் இன்னும் பிறக்கவில்லை” என்று பெருமையாகக் கூறினார் மில்கா சிங். 38 ஆண்டுகளுக்குப் பின்னர், பரம்ஜீத் சிங் 1998-ல் முறியடித்தார்.
1960-ல் இந்திய - பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தானின் அப்துல் காலிக்கை வென்றது மிகவும் முக்கியமான நிகழ்வு. ஆசியாவின் அதிவேக மனிதன் என்று காலிக் கருதப்பட்ட காலம் அது. அவரை 400 மீட்டர், 200 மீட்டர் பந்தயங்களில் மில்கா வென்றார். காலிக்கை லாகூரில் வென்றபோதுதான் மில்கா சிங்குக்கு ‘பறக்கும் சீக்கியர்’ என்ற பட்டம் அப்போதைய பாகிஸ்தான் அதிபர் அயூப் கானால் அளிக்கப்பட்டது.
கைப்பந்து வீராங்கனை நிர்மல் கவுரை மில்கா 1963-ல் திருமணம் செய்துகொண்டார். மில்கா சிங்கின் இறப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் நிர்மல் கவுர் கரோனாவுக்குப் பலியானார்.
1964 ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு, மில்கா சிங் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார். பஞ்சாப் முதலமைச்சர் பிரதாப் சிங் கைரோனின் வலியுறுத்தலை அடுத்து ராணுவத்திலிருந்து விலகி, பஞ்சாப் மாநில அரசின் விளையாட்டுத் துறை துணை இயக்குநராகப் பதவியேற்றிருந்தார். பள்ளிகளில் கட்டாய விளையாட்டு நேரத்தை 1991-ல் அறிமுகப்படுத்தினார். கிராமங்கள் அளவிலும் சிறந்த விளையாட்டுத் திறனாளர்களை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு அணிகளை மாவட்ட அளவில் அமைத்தார்.
மில்கா சிங் போன்ற முதல்தர சாதனையாளருக்கு, இந்திய அரசின் அதிகபட்ச விளையாட்டு அங்கீகாரமான அர்ஜுனா விருது மிகத் தாமதமாக 2001-ல்தான் அறிவிக்கப்பட்டது. தேசத்துக்குத் தான் ஆற்றிய சேவைகளின் உயரத்துக்கேற்ற மரியாதை அதுவல்ல என்று கூறி, மில்கா சிங் அதை மறுத்துவிட்டார்.
மில்கா சிங் தனது சுயசரிதையின் கடைசியில் மேற்கோள் காட்டிய உருதுக் கவிதை இது. ‘உச்சத்தை அடைவதற்கு நீ விரும்பினால், உன்னுடைய ஒட்டுமொத்த இருப்பையும் அழித்துவிடு. ஏனெனில், விதை ஒன்று முளைவிட்டு மலராவதற்கு மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகிறது.’ தான் சொல்லிய சொல்லே செயலாக ஆகி, உருமாறி, தேசத்தின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒருவராக ஆனவர்தான் மில்கா சிங்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago