நீட்டும் கைகள் உயரட்டும்!

By சமஸ்

இரவு வெகுநேரமாயிற்று வேலை முடித்துச் செல்ல. குளிர் உடலுக்குள் ஊடுருவிச் சென்றது. உள்ளூர் ரயில் நிலையங்களில் எப்போதும் நிற்கும் கூட்டம் இல்லை. நடைமேடைக் கடை ஒன்றுக்குத் தண்ணீர் போத்தல் வாங்கச் சென்றேன். வாங்கிவிட்டுக் கடையருகிலேயே நின்றுகொண்டிருந்தேன். தலையைச் சுற்றி கம்பளி மப்ளரைக் கட்டிக்கொண்டு, கைகளை இறுகக் கட்டியவராக உட்கார்ந்திருந்தார் கடைக்காரர்.

“எப்படி இருந்த ஊர், எப்படியாயிட்டு பாருங்க…” என்றார். என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவரே தொடர்ந்தார், “ஒரு பத்து லட்சம் பேர் ஊரைவிட்டுப் போயிருப்பாங்களா?” என்றார். அப்புறமும் அவரே தொடர்ந்தார், “கூடவே இருக்கும். உலகப் போர் சமயங்கள்லகூட சென்னையில இவ்வளவு மக்கள் வீட்டை விட்டு வெளியேறி இருக்குமானு தெரியலை. அவ்ளோ போயிருக்கு சனம். அகதிங்க மாதிரி. சீக்கிரம் திரும்பிரும். ஆனா, எவ்ளோ கஷ்டம்!”

கொஞ்ச நேரம் அமைதியானவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை; ஒரு பிஸ்கட் பொட்டலத்தை எடுத்துப் பிரித்தார். அவர் இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்துக்கொண்டு என் பக்கம் இரண்டை நீட்டினார். மீண்டும் கொஞ்ச நேரம் அமைதி. “இனி மேலும் இவங்களையெல்லாம் இப்படியே விடக் கூடாதுங்க!” என்றார். சிரித்தேன். ரயில் வந்தது. வெறிச்சோடிக் கிடந்தது. ரயிலின் வேகம் குளிரை மேலும் கூட்ட ஆரம்பித்தது. மனம் ஒரு நிலையாக இல்லை.

மக்கள் மாற்றத்துக்குத் தயாராக இருக்கிறார்களா? இப்படி ஒரு கேள்வி கேட்டால், எப்போதுமே அதற்கான பதில் ஆம். ஆனால், புதிய மாற்றங்களுக்கான முயற்சிகள் ஏன் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிகின்றன?

நேற்றுகூட ஒரு வாசகர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், “தமிழ்நாட்டில் எவ்வளவோ பேர் புதிய அரசியல் முயற்சிகளுடன் வந்திருக்கிறார்கள். எல்லோரும் இதுவரை தேர்தலில் தோல்விகளைத்தானே தழுவியிருக்கிறார்கள்? சரி, நீங்கள் குடிமைச் சமூகம் எழுச்சி பெற்றால் மாற்றம் வரும் என்று எழுதுகிறீர்கள். சமூக வலைதளங்களின் வழி குடிமைச் சமூகம் நடத்திய முதல் புரட்சி அரபு வசந்தம். இப்போது அந்த நாடுகளின் கதியெல்லாம் என்ன? எங்கும் குழப்பம்தானே? இந்தியாவில் குடிமைச் சமூகத்தின் முதல் முயற்சியான ஆம்ஆத்மி கட்சியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் என்னவானார்கள்? இன்றைய அரசியலில் மேலும் ஒரு சப்ளாக்கட்டை. அவ்வளவுதானே?” இன்னொரு வாசகர், “பிள்ளைகளுக்கு அரசியல் சொல்லிக்கொடுங்கள் என்றால், என்ன அர்த்தம்? வீட்டுக்கு ஒருவரைத் தேர்தலில் நிற்கப் பழகச் சொல்லி வளர்க்கச் சொல்கிறீர்களா?” என்று கேட்டிருந்தார்.

இரு வாசகர்களின் கேள்விகளும் இருவேறு முனைகள். கவனிக்க வேண்டிய ஒரு பொருத்தம், ஏன் அரசியல் என்றவுடனே நமக்குத் தேர்தல் மட்டும் ஞாபகம் வருகிறது? நம்முடைய தோல்விகளின் மையம் இங்கேதான் குடிகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

இந்தியாவில் குடிமைச் சமூகத்தின் முதல் எழுச்சியை ஒன்றுதிரட்டியது ஆம்ஆத்மி கட்சியோ, அர்விந்த் கெஜ்ரிவாலோ அல்ல; காந்திதான் அதைச் செய்தார். இந்திய சுதந்திரப் போராட்டம்தான் இந்தியக் குடிமைச் சமூகத்தின் முதல் புரட்சி. ஆனால், இதே இந்தியச் சமூகத்தில் நூற்றுக்குத் தொண்ணூறுக்கும் மேற்பட்டவர்கள் கல்வியறிவற்றிருந்த காலகட்டத்தில் காந்தி அதை எப்படி வெற்றிகரமாக நிகழ்த்தினார்? காந்தி செய்ததைச் சுருக்கமாக விவரிக்க வேண்டும் என்றால், காந்தியின் கடுமையான விமர்சகரான அம்பேத்கர் பின்னாளில் சொன்னதைத்தான் காந்தி முன்பே செய்தார்: “கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்!”

எந்த ஒரு இயக்கத்தின் அணி திரட்டலுக்கும் அடிப்படையில் அரசியல் கல்வி முக்கியம். சித்தாந்தம் முக்கியம். சிந்தாந்த அடிப்படையில் திராளாத கூட்டத்தை வெறும் கும்பல் மனோபாவமே வழிநடத்தும். காந்தி காங்கிரஸை மட்டும் இயக்கவில்லை. கூடவே, சமூகத்தின் வெவ்வேறு பிரிவினரை ஈர்த்துக் கற்பிக்கும் வெவ்வேறு அமைப்புகளையும், பணித் திட்டங்களையும் இயக்கினார்.

1917-ல் அகமதாபாத்தில் தொடங்கிய ஆலைத் தொழிலாளர் சங்கம் ஒரு உதாரணம். அகில இந்திய நூற்போர் சங்கம் ஒரு உதாரணம், அகில இந்திய கிராமக் கைத்தொழில் நிர்மாண சங்கம் ஒரு உதாரணம். அகில இந்திய ஹரிஜன சங்கம் ஒரு உதாரணம். காந்தி நடத்திய ஆசிரமங்கள் தவிர, நாடு முழுவதும் எண்ணற்ற ஆசிரமங்களைக் காந்தியர்கள் நடத்தினர். சமூக நல்லிணக்கத்துக்கு என ஒரு இயக்கம், தீண்டாமை ஒழிப்புக்கு என ஒரு இயக்கம், விவசாயிகளுக்கு என ஒரு இயக்கம், ஆதிவாசிகளுக்கு என ஒரு இயக்கம் என்று ஏராளமான இயக்கங்கள் மக்களை ஒருங்கிணைத்துக் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தன. எல்லாவற்றுக்கும் மேல் மக்களிடம் அவர்களுடைய குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேச ஆரம்பிப்பதை இயல்பாகவே கொண்டிருந்தார் காந்தி.

இந்தியா திரும்பிய ஆரம்பத்தில் 6.2.1916 அன்று காசி இந்து சர்வ கலாசாலை தொடக்க விழாவில் அவரைப் பேச அழைத்திருந்தார்கள். அன்னி பெசன்ட் உட்பட அவரைப் பேச அழைத்தவர்கள் எவரும் அவர் பேச்சை விரும்பவில்லை. ஒருகட்டத்தில் மேடையில் இருந்தவர்கள் யாவரும் வெளியேறினார்கள். “பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதுவதால் மட்டும் சுயாட்சி வந்துவிடாது. மேடைப் பிரசங்கங்களும் தீர்மானங்களும் மட்டுமே நம்மைச் சுயாட்சிக்குத் தகுதியுடையவர்களாக மாற்றிவிடாது. நமது நடத்தை மட்டுமே அதற்கு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கிக்கொள்ளச் செய்யும். நம்மை நாமே ஆண்டுகொள்ள, நெறிப்படுத்திக்கொள்ள எப்படி முயற்சிக்கப்போகிறோம்?” என்பதே அந்தக் கூட்டத்தில் காந்தி எழுப்பிய முக்கியமான கேள்வி. காசி கோயிலுக்குச் செல்லும் வீதிகள் எங்கும் குப்பைக்கூளமாகப் போட்டிருக்கிறீர்களே இது சரியா, கோயிலைச் சுற்றி இஷ்டத்துக்கு வீடுகளைக் கட்டியிருக்கிறீர்களே இது சரியா என்கிற கேள்விகளிலிருந்து கூட்டத்துக்கு வந்திருக்கும் சீமான்-சீமாட்டிகள் இவ்வளவு நகைகளை அணிந்து வந்திருக்கிறீர்களே; இதெல்லாம் இந்நாட்டு விவசாயிகளிடத்திலிருந்து வந்த பணம்தானே; இது முறையா என்கிற கேள்விகள் வரை அவர் கேட்டார். கடைசி வரை மக்களின் மனசாட்சியுடன் அவர் உரையாடினார். முசாபர்பூர் பூகம்பத்தை “தீண்டாமைப் பாவத்துக்கான தண்டனை” என்றார் காந்தி. இன்றைக்கெல்லாம் எந்தத் தலைவருக்காவது “இந்த வெள்ளம் நாம் நீர்நிலைகளை ஆக்கிரமித்த தற்கான தண்டனை” என்று சொல்லும் துணிச்சல் வருமா?

1956 டிசம்பரில் இதேபோன்ற ஒரு வெள்ளத்தில் அரியலூரில் ரயில் அடித்துச்செல்லப்பட்டபோது, 144 பேர் இறந்தார்கள். தார்மிகப் பொறுப்பேற்று தானாக முன்வந்து ரயில்வே அமைச்சர் பதவியைவிட்டு விலகினார் லால் பகதூர் சாஸ்திரி. இதுவரை தமிழக வெள்ளத்தில் அரசுக் கணக்கின்படியே 347 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பே வெள்ள மரணங்களுக்குப் பிரதான காரணம் என்பதை உலகமே சொல்கிறது. ஆட்சியாளர்களுக்குத் தெரியாமலா ஆக்கிரமிப்புகள் நடந்தன? இதுவரை ஆக்கிரமிப்புகளுக்காக ஒருவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை, ஒருவர் கைதுசெய்யப்படவில்லை, ஒரு பதவி விலகல்/பதவி நீக்கம் இல்லையே ஏன்? ஏனென்றால், மக்களே நிவாரண நிதியைப் பற்றித்தானே பேசுகிறோம்; 347 உயிர்களுக்கான நீதியைப் பற்றிப் பேசவில்லையே!

1917-ல் சாம்பரானில் விவசாயிகள் பிரச்சினைக்காகப் போராட அழைத்தபோது, அவர்களோடு அங்கு கிட்டத்தட்ட ஒரு வருஷம் தங்கினார் காந்தி. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு இந்தியாவில் முதல் அடி விழுந்த இடம் சாம்பரான். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் சுதந்திரத்தை இலக்காகக் கொண்டு ஆட்டத்தைத் தொடங்கும் ஒருவர், சாம்பரான் போன்ற ஒரு சிறிய பகுதியில் விவசாயிகள் பிரச்சினைக்காக ஓராண்டு தங்குவதைக் கற்பனை செய்ய முடியுமா? ஆனால், எத்தனை ஆண்டுகளாக இருந்தாலும் அந்த ஒரு பிரச்சினைக்காக அங்கு தங்க முடிவெடுத்தார் காந்தி. அங்கு அவர் கொடுத்த அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய உழைப்புதான் இந்நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளின் நம்பிக்கையை அவருக்குப் பெற்றுத் தந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் நாட்கள் எண்ணப்படுவதை அப்போதே பார்த்தேன் என்று பின்னாளில் சாம்பரான் அனுபவத்தை நினைவுகூர்ந்தார் காந்தி. சாம்பரானில் அவர் நிகழ்த்திய அற்புதம் என்ன? விவசாயிகளிடம் கற்பித்தார், விவசாயிகளை ஒன்றுசேர்த்தார், விவசாயிகளோடு புரட்சியை நிகழ்த்தினார்.

மாற்றத்துக்கான ஒரு அமைப்பின் அரசியல் பயணத்தில் அது விரிக்கும் கடைசிக் கிளைகளில் ஒன்று தேர்தலுக்கான கட்சியாக இருக்கலாம்; முதல் கிளை அதுவல்ல. மேலும், ஒரு குடிமைச் சமூக இயக்கம் அரசியல் விழிப்புணர்வைப் பெறும்போது அதற்கான தேர்தல் களத்தை அது தானே உருவாக்கிக்கொள்ளும். சமகாலத்தில் மாற்றத்துக்காக விழைபவர்களின் பெரிய பிரச்சினை என்னவென்றால், அவர்கள் கவனம் எடுத்த எடுப்பில் அந்தக் கடைசி கிளையில் இருக்கிறது. சீக்கிரமே வேர் கருகிப்போகிறது!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்