சட்டமன்ற கொறடா, எதிர்க்கட்சி துணைத் தலைவர் தேர்வு செய்திகளைவிட அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் தான் திரும்பிய பக்கமெல்லாம் எதிரொலிக்கிறது. ‘எங்கள் தயவால் தான் அதிமுக இத்தனை இடங்களை வெல்ல முடிந்தது’ என பாமகவின் அன்புமணி ராமதாஸ் சொன்னதற்கு புகழேந்தி பதில் கொடுத்த மறுநாள், ‘கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக’ அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது அதிமுக தலைமை.
அடுத்து என்ன நடக்கும்? புகழேந்தி நமக்களித்த பேட்டியிலிருந்து...
அதிமுகவில் என்னதான் நடக்கிறது?
அதிமுகவில் புரட்சி தலைவி அம்மா அவர்களின் அன்புக்குப் பாத்திரமான தொண்டனாக நான் இருந்திருக்கிறேன். அம்மா அவர்கள், வழியில் எங்காவது என்னை பார்த்தால்கூட காரை நிறுத்தி விசாரிக்காமல் போனதில்லை. அம்மாவிடம் அத்தகைய செல்வாக்குடன் இருந்த என்னை கட்சியைவிட்டு நீக்கி இருக்கிறார்கள். கட்சியின் அனைத்து அதிகாரங்களையும் தன்வசப்படுத்தி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசமி, ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார். அவரால் அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் கிட்டத்தட்ட ஓரங்கட்டப்பட்டுவிட்டார். ஓபிஎஸ் தான் கடை முதலாளி என்பார்கள். ஆனால், அவரால் எதுவும் செய்யமுடியாது. அவர் கடையை சுத்திப் பார்த்துவிட்டுப் போய்விட வேண்டும்; எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது. அது மாதிரியான ஒரு சூழலை உருவாக்கி வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி என் மீது எடுத்திருக்கும் நடவடிக்கை அகம்பாவ ஆணவத்தின் உச்சம். நான் தெரியாமல் தான் கேட்கிறேன்... ‘நாங்கள் இல்லை என்றால் அதிமுக 20 இடத்தில் தான் ஜெயித்திருக்கும்’ என ஒரு சுண்டைக்காய் அளவுள்ள கட்சி சொல்வதை கேட்டுக்கொண்டு சொரணை உள்ளவனால் எப்படி சும்மா இருக்க முடியும்?
‘ஜெயலலிதாவுக்கு கமிஷன் வாங்கிக் கொடுக்கும் புரோக்கராக இருந்தவர், ஒரு ப்யூன் வேலைக்குக்கூட தகுதியில்லாத உனக்கு முதல்வர் பதவி ஒரு கேடா?’ என்றெல்லாம் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்துக் கேட்டவர்தான் அன்புமணி ராமதாஸ். சொத்துக் குவிப்பு வழக்கில் அம்மா அவர்கள் நிரபராதி என பெங்களூரு நீதிமன்றம் முதலில் தீர்ப்பு சொன்னபோது அதை எதிர்த்து அப்பீல் செய்யும்படி ஜி.கே. மணி மூலமாக கர்நாடக முதல்வருக்கு கடிதம் கொடுத்துவிட்டவர் மருத்துவர் ராமதாஸ். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவரின் படத்தை சட்டமன்றத்தில் வைக்கக் கூடாது என எதிர்த்தவர் ராமதாஸ். இந்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அதிமுகவுக்கு எதிராக இப்போது உதிர்க்கும் வார்த்தைகளை பொறுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் படைத்தவராக எடப்பாடி பழனிசாமி இருக்கலாம். ஆனால், புகழேந்திக்கு அந்த மன பக்குவம் இல்லை. நாஞ்சில் சம்பத் சொல்வது போல், மூஞ்சியில் துப்பினால் வழித்துப் போட்டுவிட்டுப் போக நான் தயாராக இல்லை.
இத்தனை கசப்புகள் இருந்தும்தானே தேர்தலில் பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது?
கரெக்ட். இதையெல்லாம் மறந்துவிட்டுத்தான் கூட்டணி வைத்தோம். கழகத்தின் இரண்டு கண்மணிகள் தைலாபுரத்துக்கே சென்று அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்து அவர்களை மகிழ்வித்துவிட்டு வந்தார்கள். பாமகவுக்கு 23 இடங்களைக் கொடுத்தோம். அதில் அவர்கள் 18 இடங்களில் தோற்றது அதிமுகவுக்குத்தான் பெரிய இழப்பு. ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டுத்தான் ‘நாங்கள் இல்லை என்றால் அதிமுக 20 இடத்தில் தான் ஜெயித்திருக்க முடியும்’ என்று சொல்கிறார் அன்புமணி.
ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். இரட்டை இலை வென்ற 66 தொகுதிகளில் 51 தொகுதிகள் ஏற்கெனவே 2016-லும் வென்ற தொகுதிகள். 9 தொகுதிகள் பாமக என்றே அமைப்பே இல்லாத தொகுதிகள். எஞ்சிய 6 தொகுதிகள் தான் பாமகவுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள். இதை யாரும் மறுக்கவே முடியாது. உண்மை இப்படி இருக்கும்போது எதற்காக எங்களுடைய கட்சியை இழிவுபடுத்துவதுபோல் பேசவேண்டும்? “ஓபிஎஸ்ஸுக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. அவர் சொல்வதை எல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை” என்று எங்கள் கட்சியின் தலைவரைப் பற்றி அன்புமணி ராமதாஸ் பேசுகிறார். எங்கள் தலைவரைப் பற்றி இப்படியெல்லாம் தவறாகப் பேச வேண்டாம் என்று நான் கேட்டது தவறா?
ஆனால், இதற்கு பதில் சொல்ல வேண்டிய ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இருக்கிறார்களே?
நியாயமாகப் பார்த்தால் அவர்கள் தான் பதில் சொல்லி இருக்க வேண்டும். ஆனால், அன்பு மணி இப்படியெல்லாம் பேசி ஒரு வார காலம் ஆன பிறகும் அவர்கள் ரியாக்ட் பண்ணவில்லை. “அன்புமணி இப்படியெல்லாம் அசிங்கப்படுத்துகிறார் உங்களுக்கெல்லாம் சூடு சொரணை இல்லையா?” என்று கட்சித் தொண்டன் கேட்க ஆரம்பித்துவிட்டான். அதனால் ஒரு கழகத்தின் செய்தி தொடர்பாளர் என்ற முறையில் அன்புமணி ராமதாஸுக்கு நான் பதில் சொன்னேன். இதில் என்ன தப்பு?
உங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாமகவுக்கு பதில் சொன்னது மட்டும்தான் காரணமா?
இல்லை. எதிலாவது நான் சிக்க மாட்டேனா என அவர்கள் காத்துக்கொண்டிருந்தார்கள். இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திவிட்டார்கள்.
தலைமைக்கு உங்கள் மீது வேறு என்ன கோபம்?
இதைத்தான் நாடே கேட்கிறது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக நான் ஒருவன் தான் குரல்கொடுக்கிறேன். இவனை எப்படியாவது காலி செய்துவிட்டால் அடுத்ததாக ஓபிஎஸ்ஸுக்கு எளிதில் செக்வைத்து விடலாம் என நினைத்தார்கள். இன்றைக்குச் சொல்கிறேன் எழுதிவைத்துக் கொள்ளுங்கள்... தலைமைப் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்க முடிவெடுத்து காய்நகர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கான முதல் பலியாக புகழேந்தி வெளியேற்றப் பட்டிருக்கிறான். அடுத்த செக் ஓபிஎஸ்ஸுக்குத்தான். இன்று நான் நாளை ஓபிஎஸ் அவ்வளவுதான்.
அதற்கு முன்னதாக என்னைப் போல் தளபதிகளாக இருக்கும் நான்கு பேரை ஓபிஎஸ்ஸிடம் இருந்து பிரித்துவிட்டால் அவரை எளிதில் வெளியேற்றிவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால், இதை ஓபிஎஸ் எந்தளவுக்கு புரிந்திருக்கிறார் என்று தெரியவில்லை. ஒருவேளை, புரிந்திருந்தாலும் இப்போதைக்கு நாமும் ஏதாவது பிரச்சினை செய்தால் நம்மையும் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்களோ என்ற அச்சத்தில்கூட அவர் அமைதியாக இருக்கலாம். ஆனாலும் அவரைப் பற்றி நான் குறைசொல்ல விரும்பவில்லை. அவர் மீது நான் வைத்திருக்கும் மரியாதை என்றைக்கும் குறையாது.
அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என எல்.முருகன் சொன்னபோதுகூட நீங்கள் நறுக்கென்று பதிலடி கொடுத்தீர்கள். அப்போது அதற்காக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே?
அன்றைக்கு, எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என எல்.முருகனுக்கு நான் பதிலடி கொடுத்தேன். அது தனக்கு சாதகமான அம்சம் என்பதால் பழனிசாமி என்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது நான் ஓபிஎஸ்ஸுக்கு அல்லவா ஆதரவாக நிற்கிறேன்.
உங்களை நீக்கிய பிறகு ஓபிஎஸ் உங்களிடம் ஏதாவது பேசினாரா?
“நான் தப்புப் பண்ணிவிட்டேன் புகழேந்தி. உங்களை நீக்குவதற்கு எல்லோருமா சேர்ந்து எனக்கு நெருக்கடி கொடுத்து கையெழுத்துப் போட வைத்துவிட்டார்கள். கட்சி முழுக்க அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள போயிருச்சு. எல்லாரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க என்னால ஒண்ணும் செய்ய முடியல. நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க புகழேந்தி” என்று சொன்னார். அப்பத்தான் அவரும் சதிவலையில சிக்கிட்டார்னு தெரிஞ்சுது.
அவர் சொன்னத நீங்க எப்படி எடுத்துக்கிறீங்க?
தப்புப் பண்ணிட்டேன்னு அவரே சொல்லும்போது அதுக்கு மேல் அவரைப் பற்றி கண்ணியக் குறைவாக நான் பேச விரும்பவில்லை.
ஓபிஎஸ்ஸை அப்படி என்ன சொல்லி மிரட்ட முடியும் என நினைக்கிறீர்கள்?
“உங்களுக்குப் பதவி இல்லை” என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்.
பதவியைத் தக்கவைப்பதற்காக நியாயமற்ற காரியத்தைச் செய்வாரா ஓபிஎஸ்?
அந்த மாதிரி ஒரு முடிவு எடுக்கக்கூடாது தான். இப்படிப்பட்ட பதவி எனக்குத் தேவையில்லை. அடிமை வாழ்க்கை எனக்கு வேண்டாம் என ஓபிஎஸ் முடிவெடுத்திருக்க வேண்டும். நல்லவர்களை எல்லாம் கட்சி இழக்கும் போது, “கட்சி போய்விடும் என்பதற்காக ஒத்துழைத்தேன்” என்று சொன்னால் என்ன அர்த்தம்... கட்சி இருந்தால் தானே கட்டிக்காக்க முடியும்?
உங்களுடைய அடுத்தகட்ட நடவடிக்கை?
என்னைக் கட்சியிலிருந்து நீக்கியதற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனென்றால்... இப்போது தான் அரசியல் சதுரங்க வேட்டை ஆரம்பமாகி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை எனக்கு 30 வருசமா தெரியும். அரசியல் ரீதியாக எடப்பாடி பழனிசாயை சந்திக்க நான் ரெடியாகிவிட்டேன். சில காலம் அவர் வெளியில் இருக்க முடியாது; ஜெயிலில் தான் நாட்களைக் கழிக்க வேண்டி வரும். அந்த நாட்கள் தான் எனக்கு ஓய்வாக இருக்கும். அது ஒன்றுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. ஆக, எடப்பாடி பழனிசாமியை அரசியலைவிட்டே அரவே தூக்கி எறியும் வரை நான் ஓயமாட்டேன்.
கடந்தா ஆட்சியில் நடந்த ஊழல்களுக்கு ஈபிஎஸ் மட்டுமா பதில் சொல்ல வேண்டி வரும்... ஓபிஎஸ் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களுக்கும் தானே அதில் பங்கிருக்கும்?
யாருக்கும் எந்த முக்கியப் பொறுப்பையும் இவர்கள் கொடுக்கவில்லையே. அனைத்தையும் இவர்கள் தானே வைத்திருந்தார்கள். ஆக, அனைத்துக்கும் பொறுப்பேற்க வேண்டிய மனிதர் பழனிசாமி தான்.
கொறடா பதவியையும் கொங்கு மக்களே கைப்பற்றிவிட்டார்களே?
கொறடா பதவியை மனோஜ் பாண்டியனுக்கு தருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் தேர்வு விவகாரத்தில் அவர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக நியாயம் கேட்டுவிட்டார். அதுதான் அவர் செய்த தவறு. அதனால் அவரை தள்ளிவிட்டு விட்டார்கள். அழிவுப் பாதையில் போய்க்கொண்டிருக்கும் கட்சிக்கு இன்னும் ஆழமாக குழி தோண்டும் வேலையில் பழனிசாமி இப்போது இறங்கியிருக்கிறார்.
அப்படியானால் கட்சிக்குள் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவான கிளைகளை கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக் கொண்டே வருகிறார் ஈபிஎஸ் என்கிறீர்களா?
கொஞ்சம் கொஞ்சமாக வெட்டவில்லை. சுத்தமாகவே முடிந்துவிட்டது.
பழனிசாமி சிறை செல்வார் என்கிறீர்கள். உங்களை நீக்கிவிட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடா இது?
ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் ஏற்கெனவே நான் பழனிசாமிக்கு எதிராகப் புகார் கொடுத்திருக்கிறேன். அதை இன்னும் நான் வாபஸ் வாங்கவில்லை. எந்தக் காலத்திலும் வாபஸ் வாங்கவும் மாட்டேன். பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது. என்னை நீக்கிய காரணத்தால் இதை நான் சொல்லவில்லை. புகழேந்தி இந்த ஊழல் புகாரைக் கொடுத்து மூன்று வருடங்களாகிவிட்டது.
முன்பு ஆட்சி அதிகாரம் கையில் இருந்ததால் அனைவரும் ஈபிஎஸ்ஸுக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள். ஆனால், அதிகாரம் போனபிறகும் கட்சி அவரைச் சுற்றித்தானே சுழல்கிறது?
எல்லாம் பணம் தான். பணம் பாதாளம் வரைக்கும் பாய்கிறது. மந்திரிகள் சிலரை கொள்ளையடிக்க அனுமதித்ததால் அந்த பாசம், அந்த நன்றி விசுவாசம். இன்னும் பணம் கையில் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு எதுவும் செய்வார். இப்படிப்பட்ட மோசமான மனிதரை எனது அரசியல் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை.
கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்கள் ஈபிஎஸ் பக்கம் நிற்கிறார்கள். ஆனால், முக்குலத்து முன்னாள் அமைச்சர்கள் 10 பேர் இருந்தும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக யாருமே பேசமறுக்கிறார்களே?
நீங்கள் சொல்லும் அந்த பத்துப் பேர் யார் என்று என்னாலும் அனுமானிக்க முடிகிறது. ஆனால், அதில் ஒருவர் நல்லவர் போலவே ஓபிஎஸ் கூடவே இருப்பது போல் காட்டிக்கோண்டு தென் மாவட்டத்தில் ஓபிஎஸ்ஸுக்கு குழிபறித்துக் கொண்டிருக்கிறார். தென் மாவட்டத்தில்கூட ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்க இரண்டு முன்னாள் அமைச்சர்களை நியமித்திருக்கிறார் பழனிசாமி. ஆனால், தமிழக அரசியலில் என்றைக்குமே சாதி அரசியல் எடுபடாது.
ஆனால், எடப்பாடியாரின் பின்னால் சாதி தானே நிற்கிறது?
அதனால் தானே அவர் அழிவுப் பாதையில் பயணிக்கிறார்.
உங்கள் கூற்றுப்படியே ஈபிஎஸ் சிறைக்குப் போனால் அதிமுகவின் எதிர்காலம்?
பழனிசாமி என்ற நபரை நம்பி அதிமுக இல்லை. எம் ஜிஆர், அம்மா, இரட்டை இலை இந்த மூன்று அம்சங்களை நம்பித்தான் இயக்கம் இருக்கிறது. பழனிசாமி தூக்கி எறியப்பட்டால் அதிமுக காப்பாற்றப்படும்.
அதிமுகவைக் காப்பாற்ற மீண்டும் வருவேன் என்று சசிகலா சொல்லிக் கொண்டிருக்கிறார். பழனிசாமியை வீழ்த்த தேவைப்பட்டால் அவருடன் கைகோப்பீர்களா?
எனக்கு அப்படியான எண்ணமெல்லாம் இல்லை. இதுவரை நான் இருந்த இடத்துக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் இருந்திருக்கிறேன்.எனக்காக பரிந்து பேச அதிமுகவிலும் அதிமுகவுக்கு வெளியிலும் நண்பர்கள் ஏராளம் இருக்கிறார்கள். அவர்களுடன் கலந்தாலோசித்து உரிய முடிவை விரைவில் எடுப்பேன். இந்தக் கட்சியை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து மீட்க வேண்டும் என்பது தான் இப்போதைய எனது ஒரே லட்சியம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago