மன்னார் வளைகுடாப் பகுதியில் உயிர்ச்சங்குப் படுகைகள் அருகிவருகின்றன. இந்தச் சூழலில் 2007-லிருந்து தூத்துக்குடி சங்கு குளியாளிகள், பழங்காலப் படுகைகளில் புதையுண்ட சங்குகளைச் சேகரிக்கும் தொழிலுக்கு நகர்ந்துள்ளனர். மாவட்டத்தின் வட எல்லையான வேம்பாருக்கும் தூத்துக்குடி துறைமுகத்துக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் 8-13 கடல்மைல் தொலைவில் அதிகபட்சமாக 20 மீட்டர் ஆழம் வரை கம்ப்ரெசர் உதவியுடன் முக்குளித்துப் புதைசங்கு சேகரித்துவருகின்றனர். ஒரு படகுக்கு ஏழு குளியாளிகள், நான்கு உதவியாளர்கள். படகில் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்ரெசரிலிருந்து ஒவ்வொரு குளியாளிக்கும் குழாய் மூலம் செலுத்த வேண்டிய காற்றின் அழுத்தத்தைக் கண்காணிப்பது, ஏதேனும் சிக்கல் நேர்ந்தால் குளியாளிகளை எச்சரித்து அழைப்பதும் உதவியாளர்களின் வேலை.
“இன்றைக்கு தூத்துக்குடியில் 600 படகுகளில் 4,000 குளியாளிகள் புதைசங்கு குளித்தலில் ஈடுபடுகிறார்கள்” என்கிறார் பாலமுருகன் (32, மாதவநாயர் காலனி, தூத்துக்குடி). 12 வயதில் தன்மூச்சு சங்கு குளிக்க இறங்கிய இவர், இப்போது புதைசங்கு குளிக்கிறார். புதைசங்கு குளி தொழிலின் பின்னணியை விவரிக்கிறார் பாலமுருகன்: “2007-ல் இரண்டே இரண்டு படகுகள் புதைசங்கு குளித்தலுக்குப் போய்க்கொண்டிருந்தன. கொல்கத்தா வியாபாரிகள் புதைசங்குகளின் தரத்தைப் பார்த்து அதிகப் பணம் கொடுத்தபோது, தூத்துக்குடி சங்கு வணிகத்தின் போக்கே தலைகீழாகிவிட்டது. புதைசங்குக்குக் கிடைக்கும் விலையில் 25%-தான் உயிர்ச்சங்குக்குக் கிடைத்தது.”
ஆபத்து நிறைந்த தொழில்
2007 தொடங்கி இன்று வரை புதைசங்கு குளி தொழிலில் 85 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். உயிர் தப்பியவர்களில் பக்கவாதம் உள்ளிட்ட நோய்களால் பீடிக்கப்பட்டோர் 40 பேருக்கும் மேல். நீண்ட காலம் சங்கு தொழிலில் ஈடுபட்டதன் காரணமாக ஏற்பட்ட தீவிர உடல் உபாதைகளால் தொழிலை விட்டு வெளியேறியவர்கள் 500-க்கும் மேற்பட்டோர்.
கடலுக்குள் இயங்கியவாறு அதிகபட்சம் ஓரிரு நிமிடங்கள்தான் மனிதன் மூச்சுப்பிடிக்க முடியும். செயற்கை மூச்சு உபாயமின்றி இந்த ஓரிரு நிமிடங்களைக் கையாளும் அபாரத் திறமைதான் தன்மூச்சு குளியாளியின் தனித்துவம். ஆனால், புதைசங்கு குளியைப் பொறுத்தவரை அப்படியல்ல. செயற்கை சுவாச உபாயத்துடன் 15-20 மீட்டர் ஆழத்தில் முக்குளித்து (அரை மணி நேர இடைவெளியுடன்) ஐந்து மணி நேரம் வேலை செய்கிறார்கள். கம்ப்ரெசர் இயந்திரத்தின் உதவியுடன் புதைசங்கு சேகரிக்கும் தொழில்முறையானது தற்கொலைக்கு நிகரான சாகசம். கடலாழத்தில் நீண்ட நேரம் தங்கியிருக்கும்போது நைட்ரஜன் குமிழ்கள் வெளியேறி ரத்தக் குழாய்களை அடைத்துக்கொள்ளும் அபாயம் உண்டு. மூட்டுகள் செயலற்றுப்போவதும், உடல்வலி ஏற்படுவதும், பக்கவாதம் ஏற்படுவதும் இதன் விளைவுகளாகும். இது தவிர, செவித்திறன், பார்வைத்திறன், நினைவுத்திறன் இழப்பு நேர்வதும் உண்டு.
உடல்தகுதிச் சான்று அவசியம்
தொழில்முறைக் குளியாளிகளுக்கு உடல்தகுதி சார்ந்து ஏற்படும் உயிர் அபாயங்களைப் பட்டியலிட்டால் நீண்டுகொண்டே போகும். வலிப்பு நோய், சுவாசக் கோளாறு, இதயநோய், புற்றுநோய் உள்ளவர்கள் தொழில்முறைக் குளியலுக்குத் தகுதியற்றவர்கள். நீரிழிவு நோயாளிகள் 30 மீட்டருக்குக் கீழே முக்குளிப்பதற்கு மேலைநாடுகளில் தடை விதித்துள்ளனர். அங்கே பொழுதுபோக்குக் குளியாளிகள், தொழில்முறைக் குளியாளிகள் எவரானாலும் உடல்தகுதிச் சான்று பெற்றாக வேண்டும். இந்தியாவில் முக்குளிக்கும் தொழிலாளிகளுக்கு இவை குறித்த அடிப்படை விழிப்புணர்வு கிடையாது. அரசுத் தரப்பும் இதுகுறித்து இன்று வரை அக்கறைப்பட்டதாய்த் தெரியவில்லை.
உயிரற்ற சங்குகளின் இருப்பு நீண்ட காலத் தொழிலுக்குத் தாக்குப் பிடிக்கும் என்று மாரிலிங்கம் (34, திரேஸ்புரம், தூத்துக்குடி) குறிப்பிடுகிறார். “ஒரு நாள் குளியலில் அதிகபட்சம் 35, 40 சங்குகள் வரை எடுத்திருக்கிறேன். ரூ.10,000 வரை வருமானம் கிடைத்ததுண்டு” என்கிறார் இவர். தடையற்ற தொழிலும் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்குப் பெரிய வருமானமும்தான் உயிருக்கு ஆபத்தான சாகசத்தில் அவர்களை ஈடுபட வைக்கிறது. கி.பி.1822-1858 காலத்தில் முத்துக்குளித் துறையில் ஆங்கிலேயரின் முத்து வருவாய் வீழ்ச்சியடைந்தது காலனியப் பேராசையின் கதை. முத்துச் சிப்பிகளிலிருந்து பரவிய காலரா தொற்று, ஆயிரக்கணக்கான குளியாளிகளையும் அவர்களின் குடும்பத்தினரோடு கொன்றழித்தது. அடிப்படை வசதிகளற்ற, சுகாதாரமற்ற சூழலில் 15,000 முதல் 30,000 சங்கு குளியாளிகளைக் குடும்பத்தினருடன் முகாம்களில் அடைத்து வைத்திருந்தனர். கொள்ளைநோய் பரவிக்கொண்டிருந்த சூழலிலும் அவர்களை முத்துக்குளிக்குமாறு அச்சுறுத்தினர்.
பேராசையின் அடையாளமா?
தன்மூச்சு சங்கு குளியாளியான பரமசிவன் (62, மேட்டுப்பட்டி) 2008-ல் புதைசங்கு குளித்தலுக்கு எதிராக மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்துத் தடையாணையும் பெற்றார். உள்ளூர்க் குளியாளிகளின் எதிர்ப்பின் காரணமாக வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இவர், இறுதியில் தானும் புதைசங்கு குளியாளியானார். பரமசிவனின் கதை கடலோடிகளின் பேராசையின் அடையாளமா அல்லது அவர்கள் ஆட்பட்டிருக்கும் வாழ்வாதார நெருக்கடியின் வெளிப்பாடா?
1975-ல் தன்மூச்சு சங்குகுளி விபத்து உதவிக்கென ‘வலம்புரி’ என்கிற விசைப்படகு, கடலில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்ததை நினைவுகூர்கிறார் தூத்துக்குடி முத்து சங்கு குளியாளி மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர் இசக்கிமுத்து (65, திரேஸ்புரம்). புதைசங்கு குளி விபத்தில் சிக்கி, ஒருவாறு கரைசேர்க்கப்படும் குளியாளியை இன்று நகரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலில், மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் மரணம் நேர்ந்துவிடுகிறது. “விபத்தில் சிக்குபவர்களை மீட்பதற்காகக் கடலில் ஒரு விரைவுப் படகும், கரையில் ஒரு சிறப்பு மருத்துவமனையும் அரசுத் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்” எனக் கேட்கிறார் இசக்கிமுத்து. அது மட்டும் போதுமா?
2007 தொடங்கி இன்று வரை நேர்ந்துள்ள கடல் மரணங்கள், விபத்துகளைக் கணக்கில் கொண்டு, மீன்வளத் துறை இந்தத் தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும். தடை நிரந்தரத் தீர்வாகாது. புதைசங்கு குளித்தலால் எழ வாய்ப்புள்ள சூழலியல் மீன்வளச் சிக்கல்களை அரசு ஆய்ந்து, கூடிய விரைவில் கொள்கை முடிவெடுக்க வேண்டும். அதுவரை சங்குகுளி உரிமம் வழங்கும் நடைமுறையின் ஒரு பகுதியாக, மேலும் இரண்டு விதிகளை இணைத்து, நீக்குப்போக்கின்றிச் செயல்படுத்த வேண்டும்: ஒன்று - குளியாளிகளின் உடல்தகுதிச் சான்றிதழ்; இரண்டு - குளியாளிகள் பயன்படுத்தும் கம்ப்ரெசர் குறித்த கண்காணிப்பு. இனியும் கடலுக்குக் குளியாளிகளைப் பலிகொடுப்பது நீடிக்கலாகாது.
- வறீதையா கான்ஸ்தந்தின், பேராசிரியர், கடல் சூழலியல் - வள அரசியல் ஆய்வாளர். தொடர்புக்கு: vareeth2021@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago