கோயில்களை ஏன் பாதுகாக்க வேண்டும்?- உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

By செல்வ புவியரசன்

இரண்டு வாரங்களுக்கு முன்புதான் காஞ்சிபுரத்தின் 11 கோயில்கள் யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்களின் தற்காலிகப் பட்டியலில் இடம்பெற்றன. பல்லவர், சோழர் காலங்களைச் சேர்ந்த இந்தக் கோயில்கள் திராவிடக் கட்டிடக் கலை மரபின் உன்னதங்கள். ஏற்கெனவே தமிழகத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில், மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஆகிய நான்கு கோயில்களும் யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. காஞ்சிக் கோயில்களுக்குத் தற்போது கிடைத்திருக்கும் சர்வதேச அளவிலான இந்த அங்கீகாரம், காஞ்சிபுரத்தின் மீது உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனம் குவிவதற்கான ஒரு வாய்ப்பு. வருங்காலங்களில் யுனெஸ்கோவின் விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு உலகப் பாரம்பரியச் சின்னங்களின் நிரந்தரப் பட்டியலிலும் காஞ்சிபுரம் இடம்பெறும். ஆனால், அதற்குச் சில ஆண்டுகளேனும் ஆகும்.

தற்காலிகப் பட்டியலில் இடம்பெற்றுள்ள காஞ்சி கைலாசநாதர் கோயிலைப் பார்த்து வியந்துதான் ராஜராஜ சோழன் தஞ்சையில் பெருவுடையார் கோயிலை எடுப்பித்தான் என்கிறது வரலாறு. அத்திவரதர் வைபவம் விமரிசையாக நடந்து முடிந்திருக்கும் நிலையில், வரதராஜப் பெருமாள் கோயிலும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. கலை, பண்பாட்டு ஆர்வலர்கள் இந்நேரம் கொண்டாடித் தீர்த்திருக்க வேண்டும். ஆனால், அப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. பெருந்தொற்றுக் காலம் என்று சமாதானம் செய்துகொள்ளலாம்தான். ஆனால், காஞ்சிக் கோயில்களையும்விட, காலத்தால் பிந்தைய மராத்தியர்களின் கோட்டைகள் யுனெஸ்கோ தற்காலிகப் பட்டியலில் இடம்பெற்றதை மஹாராஷ்டிரம் கொண்டாடத் தவறவில்லை. மும்பையிலிருந்து வெளிவரும் நாளேடுகளில் கடந்த வாரங்களில் அதைக் குறித்து தினமொரு செய்தியாய் வெளிவந்தபடியே இருந்தது.

தமிழ்நாட்டிலோ ஒரு ஆட்சிமாற்றம் நடந்திருக்கும் நிலையில், கோயில் நிலங்களில் உள்ள ஆக்ரமிப்புகள் நீக்கப்படுவதும், கோயில் சொத்துகளைப் பற்றிய விவரங்கள் அறநிலையத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படுவதும்தான் முக்கிய நடவடிக்கைகளாக இருக்கின்றன. கோயில்களைப் பாதுகாக்கவே அதன் பெயரில் சொத்துகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்று சொத்துகளைப் பாதுகாப்பதுதான் முதன்மைப் பணியாக மாறிப் போயிருக்கிறது. குறைபட்டுக்கொள்வதற்கும் ஒன்றுமில்லை; அந்த அமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கமே சொத்துகளை நிர்வகிப்பதற்காகத்தான். இனிமேலும் அப்படிக் குத்தகைப் பாக்கி வசூலிப்பவராக மட்டுமே அறநிலையத் துறை இருந்துவிட முடியாது என்பதைத் தெரிவிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 7 அன்று அளித்திருக்கும் தீர்ப்பு. நீதிபதிகள் அரங்க.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோரின் கருத்தொருமித்த 225 பக்கத் தீர்ப்பும் அதன் 75 உத்தரவுகளும் பத்திருபது வல்லுநர்கள் குழுவாகக் கூடி விவாதித்து அளித்த அறிக்கையின் பரிந்துரைகளைப் போல அமைந்துள்ளன.

காம்யுவும் ஹியூகோவும்

ஆல்பெர் காம்யுவின் வார்த்தைகளிலிருந்து தொடங்குகிறது இந்தத் தீர்ப்பு. சமூகம் என்னதான் முழுநிறைவானதாக இருந்தாலும் பண்பாடும், அது உணர்த்தும் சுதந்திரமும் இல்லாவிட்டால் காடாகவே கருதப்படும் என்கிறார் காம்யு. கட்டுமானக் கலையின் உன்னதமான உருவாக்கங்கள் தனிநபருக்கானவை அல்ல; அவை சமூகத்தின் படைப்புகள் என்ற விக்தோர் ஹியூகோவின் வார்த்தைகளும் காம்யுவைப் பின்தொடர்கின்றன. தமிழகக் கோயில்களின் முக்கியத்துவங்கள் தீர்ப்பில் பட்டியலிட்டுள்ளன.

தொன்மை வாய்ந்த கோயில் கட்டுமானங்கள், சிற்பங்கள், சிலைகள், ஓவியங்கள் ஆகியவற்றுக்காக உலகளாவிய புகழைத் தமிழ்நாடு பெற்றுள்ளது. இவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பொற்காலத்தின் சரித்திரச் சுவடுகள், பண்டைய காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைக்கும் ஒன்றுபட்ட பண்பாட்டின் குறியீடுகளும்கூட. இத்தகைய வரலாற்றுச் சின்னங்கள் எழுப்பப்பட்டதன் நோக்கம் தனிநபர்களின் சாதனையைப் பறைசாற்றுவது அல்ல; எதிர்வரும் தலைமுறைகளுக்கு சரித்திரச் சுவடுகளை விட்டுச்செல்வதே. அதன் நோக்கத்தை நிறைவுசெய்ய வேண்டும் எனில் பாரம்பரிய மதிப்பும் வரலாற்று முக்கியத்துவமும் கொண்ட இந்தச் சின்னங்கள் பாதுகாக்கப்படுவதோடு மக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படவும் வேண்டும்.

‘தி இந்து’ எதிரொலி

இந்த வழக்கானது ‘தி இந்து’ நாளேட்டில் 6.1.2015 அன்று வெளியான வாசகர் கடிதத்தின் அடிப்படையிலானது. பாரம்பரியச் சின்னங்கள் குறித்துக் கருத்துரைகள் தெரிவிப்பதற்காக 17 உறுப்பினர்கள் அடங்கிய ஆணையத்தைத் தொடங்காத அரசின் செயலின்மை தொடர்பான அந்தக் கடிதம், அப்போதைய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வால் தானாக முன்வந்து வழக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பாரம்பரியச் சின்னங்களுக்கான ஆணையம் தொடர்பாக ஒரு சட்டத்தை இயற்றப்போவதாக 2012-ல் தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது; தொல்லியல் ஆர்வலர்களின் வரவேற்புக்கிடையே அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை கட்டுரைக்கு ஒப்பான அந்த வாசகர் கடிதம் கவனப்படுத்தியிருந்தது. ஹம்பியை முன்னுதாரணமாகக் கொண்டு மாமல்லபுரத்தில் அமைக்கவிடவிருப்பதாகச் சொல்லப்பட்ட உலகப் பாரம்பரியப் பகுதி மேலாண்மை ஆணையமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அதையும் அந்தச் செய்தி நினைவூட்டியது.

வணங்கவும், தான் விரும்பிய சமய நம்பிக்கைகளைப் பின்பற்றவும், அதைப் பரப்பவும் இந்திய அரசமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமையானது சமயச் சின்னங்களைப் பாதுகாப்பதையும் உள்ளடக்கியதுதான். அத்தகைய பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் அரசமைப்புக் கடமையிலிருந்து அரசுகள் வழுவுகையில் நீதிமன்றங்கள் அதை முன்னெடுக்க வேண்டியிருப்பதை இந்தத் தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது. எனவே, பாரம்பரியச் சின்னங்களுக்கான தனி ஆணையத்தையும், மாமல்லபுரம் உலகப் பாரம்பரியப் பகுதி மேலாண்மை ஆணையத்தையும் அமைக்க உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் இது தொடர்பிலான மற்ற வழக்குகளையும் இவ்வழக்கோடு சேர்த்து ஒன்றாக விசாரித்து விரிவான உத்தரவுகளை அளித்துள்ளது.

விவாதம், கலைகள், கண்டுபிடிப்புகள், கட்டுமானம், இசை, வணிகம் ஆகியவற்றில் பன்னெடுங்காலமாகத் தமிழ்நாடு முக்கியமானதொரு பண்பாட்டு மையமாக விளங்கிவருவதை செக் நாட்டு தமிழறிஞர் கமில் சுமிலபில் எழுதிய கட்டுரையிலிருந்து இந்தத் தீர்ப்பு மேற்கோள் காட்டியுள்ளது. பாண்டியர்களும் சோழர்களும் பல்லவர்களும் பின்பு வந்த விஜயநகர மன்னர்களும் கலைகளுக்கும் கட்டுமானங்களுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தைச் சொல்லி இந்த வரலாற்றுச் சின்னங்களே அதிகாரபூர்வமான சான்றாதாரங்களாக இருப்பதையும் கடந்துவந்த காலத்தின் மீது கவிந்திருக்கும் இருள் மீது ஒளிவீசி துலங்கச் செய்வதையும் குறிப்பிடுகிறது. அவற்றைப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைக்கு விட்டுச்செல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாகவே இந்தத் தீர்ப்பின் பெரும்பகுதி அமைந்துள்ளது.

சமூகங்களின் மையம்

பாரம்பரிய வழிபாட்டு முறையில் திருமறைகளும் வேதமும் ஒலித்திட, கூடவே நடனமும் நாடகமும் நாட்டார் கலைகளும் நிகழ்த்தப்பட்டன. உலகின் மிகப் பழமையான நடன வகைகளில் ஒன்றான பரதமானது கோயில்களிலிருந்துதான் உருவானது. அங்கு இருந்த மண்டபங்களில்தான் காவியங்கள் அரங்கேற்றப்பட்டன. மண்டபத்தின் ஒவ்வொரு தூணும் சிற்பங்களின் தோரணங்களாய் அமைந்திருந்தது. விதானத்து சித்திரங்கள் அந்தக் கோயில்களின் தல புராணங்களைச் சித்தரித்தன. இசையோ ஓவியமோ எந்தவொரு கலையும் பயிலப்பட்டால் மட்டுமே உயிர்தரித்து நிற்கும். எனவே, கோயில் வழிபாட்டில் ஏதேனும் ஒரு கலை குறைகிறது என்றால் அது மற்ற கலைகளின் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது. எனவே, கோயில் பாதுகாப்பு என்பது அங்கு வழக்கத்தில் இருந்துவரும் கலைகளையும் சேர்த்து காப்பாற்றுவதையே குறிக்கும் என்று சுட்டிக்காட்டுகிறது இந்தத் தீர்ப்பு.

சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் சொல்லப்பட்டுள்ள தமிழிசை வடிவங்கள், தேவாரமும் திவ்யபிரபந்தங்களும் தமிழை வளர்த்த விதம் என்று ஒரு ஆய்வுக் கட்டுரையைப் போல விரியும் இந்தத் தீர்ப்பில் தமிழின் முக்கிய ஆய்வாளர்கள் பலரது நூல்களிலிருந்தும் தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தேவாரப் பண்களை இசைப்பதற்காக ஐம்பது இசைக் கலைஞர்கள் நியமிக்கப்பட்ட கல்வெட்டுச் செய்தி குடவாயில் பாலசுப்பிரமணியனின் ‘ராஜராஜேச்வரம்’ நூலிலிருந்து மேற்கோள் காட்டப்படுகிறது. (தீர்ப்பின் மற்றொரு இடத்தில் ஆய்வறிஞர் அ.கா.பெருமாள் எழுதிய ஆதிகேசவப் பெருமாள் ஆலய வரலாற்று நூலைப் பற்றிய குறிப்பும் வருகிறது.) இசைக் கலைஞர்களுக்கான அத்தகைய பணி நியமனங்கள் தற்போது மிகச் சில கோயில்களில் மட்டுமே தற்போது நடைமுறையில் இருக்கிறது.

அற நிலையங்கள்

கோயில்கள் ஆவணக் காப்பகங்களாகச் செயல்பட்டுவந்த வரலாற்றையும்கூட இந்தத் தீர்ப்பு கவனப்படுத்துகிறது. நில ஆவணங்கள் மட்டுமல்ல; பக்திப் பனுவல்களைக் கொண்ட ஓலைச்சுவடிகளும் கோயில்களில் பாதுகாக்கப்பட்டுவந்திருக்கின்றன. தில்லையம்பலத்திலிருந்து திருமுறையை மீட்டுவந்த ராஜராஜ சோழனின் வரலாறும் இங்கு நினைவுகூரப்பட்டுள்ளது. மக்களின் வழக்குகளைத் தீர்த்து வைத்துத் தீர்ப்பு சொல்லும் முறைமன்றங்களாகவும்கூடக் கோயில்கள் செயல்பட்டுள்ளன. அறநிலையங்களாக மக்களுக்கு உதவியுள்ளன. மருத்துவமனைகளாகத் துயர்நீக்கியுள்ளன. கல்வி நிலையங்களாகக் கண் திறந்துள்ளன. இயற்கைப் பேரிடர்களின்போது உயிர்காக்கவும் இடம்தந்துள்ளன.

கோயில்களின் பெயரில் எழுதிவைக்கப்படும் நிலங்களும் காணிக்கையாக அளிக்கப்படும் நகைகளும் அங்கு நடந்துவரும் வழிபாடுகள் அதே வகையில் தொடர வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டிருந்ததைக் கல்வெட்டுகளிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. அன்றைய வரலாற்றுச் செய்திகளுக்கான ஆதாரங்களாகவும் அந்தக் கல்வெட்டுகளே இருக்கின்றன. உத்திரமேரூர் வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டுகளிலிருந்துதான் சோழர் காலக் குடவோலை முறைத் தேர்தலைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறுகின்றன என்பதையும் இந்தத் தீர்ப்பு நினைவூட்டுகிறது.

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பைப் பற்றி விவாதிக்கும் இந்தத் தீர்ப்பு யுனெஸ்கோ அமைப்பின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பிரிவு தொடங்கி அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின் தொல்லியல் அமைப்புகள் வரையில் விரிவானதொரு அறிமுகத்தையும் அவற்றின் பணிகளையும் அறிமுகப்படுத்துகிறது. சர்வதேச அளவிலான அந்தத் தரத்தை இந்திய தொல்லியல் துறையும் தமிழ்நாடு தொல்லியல் துறையும் எட்ட வேண்டும் என்பதுதான் இந்த அறிமுகங்களுக்கான தேவையாக இருக்கக்கூடும்.

தமிழ் மணக்கும் தீர்ப்பு

இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான மகாதேவன், தனது தீர்ப்புகளில் பழந்தமிழ் இலக்கியங்களை மேற்கோள் காட்டுகையில் அவற்றை மொழிபெயர்க்கவும் ஒலிபெயர்க்கவும் செய்வதோடு தமிழ்வடிவத்தையும் தவறாது குறிப்பிடுபவர். கணியன் பூங்குன்றனார், திருமூலர் என்று இந்தத் தீர்ப்பின் இடையிடையே தமிழ் படிக்க முடிகிறது. அவ்வாறே, மாமல்லபுரத்தைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சுருக்கத்தையும் இந்தத் தீர்ப்பில் காணமுடிகிறது. தமிழகத்தில் உள்ள ஏறக்குறைய அனைத்துப் பழஞ்சிறப்பு மிக்க கோயில்களுமே இந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. கூடவே அவற்றைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் தவறாமல் இடம்பிடித்திருக்கின்றன. சிதம்பரம் நடராஜரின் உருவத்தை உலகத்தின் தாள லயத்தைத் தத்ரூபமாகப் பிரதிபலிப்பதாகப் புகழ்பெற்ற சிற்பக் கலைஞரான ரோடின் கூறியதில் தொடங்கி சோழர் கால ஐம்பொன் சிலைகளின் சிறப்பம்சங்களைச் சொல்கிறது தீர்ப்பின் ஒரு பத்தி.

தற்போது அயல்பணியின் அடிப்படையில் அறநிலையத் துறையில் பணியாற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகள் கோயில் புனரமைப்பில் போதிய நிபுணத்துவம் பெற்றிருப்பதில்லை என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். பழமையான கட்டுமானங்களை எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் புனரமைக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள் இது கோயில்களுக்கு மட்டுமின்றி, சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் பொருந்தும் என்று கூறியிருக்கிறார்கள். தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நாகசாமியின் அறிக்கையிலிருந்து புனரமைப்புக்கு வழிகாட்டும் சில பரிந்துரைகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

முக்கிய உத்தரவுகள்

கோயில் பாதுகாப்பு குறித்து இதற்கு முன்பு உயர் நீதிமன்றம் அளித்த முந்தைய உத்தரவுகளும் பாரம்பரியச் சின்னங்கள் தொடர்பிலான சட்டப் பிரிவுகளும் இந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. கோயில் பாதுகாப்புபோலவே சொத்துகள் ஆக்கிரமிப்பும் தீர்க்க முடியாத பெரும் பிரச்சினையாகத்தான் இருக்கிறது. ஆவணங்களின்படி அறநிலையத் துறைக்கு 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்தாலும் தற்போது 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மட்டுமே அதன் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், வெவ்வேறு கோணங்களை உள்ளடக்கிய இந்தத் தீர்ப்பின் 75 உத்தரவுகளும் இவ்விஷயத்தில் அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்கியுள்ளன.

பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாப்பதற்கான வல்லுநர்கள் ஆணையம், மாமல்லபுரம் உலகப் பாரம்பரியப் பகுதி மேலாண்மை ஆணையம் இரண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடங்கி ஆக்கிரமிப்பு மீட்பு, வாடகை பாக்கி வசூல், கோயில் ஊழியர்களுக்கான ஊதிய நிர்ணயம், அறங்காவலர் நியமனம், கோயில் நிதியைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், கோயில் தொடர்பான வழக்குகளுக்குத் தனி தீர்ப்பாயம், கோயில் நகைகளின் பட்டியல், கோயில் வரவுசெலவுகள் கண்காணிப்பு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆகியவை இந்த உத்தரவுகளின் முக்கிய அம்சங்கள்.

இந்தத் தீர்ப்பின் முக்கியப் பரிந்துரைகளில் சில ஏற்கெனவே பேசப்பட்டு நடைமுறைப்படுத்தவும் முயன்று பார்க்கப்பட்டுத் தோல்வியில் முடிந்தவை. ஆட்சிப் பணித் துறை அதிகாரியான தா.கி.ராமச்சந்திரன் ஆணையர் பொறுப்பேற்பதற்கு முன்பே அறநிலையத் துறை, தொல்லியல் துறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தீவிரம்காட்டினார். வெற்றி கிட்டவில்லை. அவருக்கு முந்தைய ஆணையர்களில் ஒருவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கோயில்களைப் பற்றிய விவரங்களும் அங்குள்ள சிற்பங்கள், சிலைகள் ஆகியவற்றின் புகைப்படங்களும் கொண்ட ஒரு இணைய தளத்தை உருவாக்கும் முயற்சி எடுத்தார். அதற்காகத் தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமும்கூடப் போடப்பட்டது. இன்றளவும் அது பார்வைக்குக் கிடைக்கவில்லை.

பெருந்தொற்றில் வாடகை எதற்கு?

அற நிலையத் துறையால் வசூலிக்கப்படாத வாடகைகளும் குத்தகை நிலுவைகளும் நிறையவே இருக்கின்றன. ஆனால், கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு இந்தப் பெருந்தொற்றுக் காலத்திலாவது வாடகையைத் தள்ளுபடி செய்தால்தான் என்ன? விவசாயம் மூலமாகக் கிடைத்துவிடக்கூடிய வருமானம் ஆண்டுக்காண்டு அதிகரித்தபடியேவா இருக்கிறது, வருவாயைப் பெருக்க வேண்டும் என்றால் உடனடியாக விவசாய நிலங்களின் குத்தகையை உயர்த்த முயல்வது ஏன்? கோயில் நிலங்களில் குடியிருப்போர் மின் இணைப்புக்கு அனுமதி பெறுவதற்கு இணை ஆணையர்தான் அனுமதியளிக்க வேண்டுமா, செயல் அலுவலரே அதைச் செய்யலாமே? கோயிலுக்கான நிதி ஒதுக்கீடுகளைச் செயல் அலுவலரின் முழுமையான அதிகாரத்தின் கீழ் ஒப்படைத்துவிட்டு அதன் பிறகு உதவி, இணை ஆணையர்களைத் தணிக்கை செய்ய வைப்பதைத் தவிர்த்துவிட்டுத் தொடக்க நிலையிலேயே உயர் அதிகாரிகளின் கண்காணிப்புக்கு வகைசெய்யலாமே?

அறநிலையத் துறையானது அடிப்படையில் வழக்கறிஞர்களாலேயே பெரிதும் நிர்வகிக்கப்படுகிற அமைப்பு. ஆட்சிப் பணித் துறை அதிகாரிகளை ஆணையர்களாக நியமித்தாலும் அடுத்தடுத்த நிலைகளிலுள்ள அவர்களது ஆதரவு இல்லாமல் செயல்படவே முடியாது. எனவே, அந்தத் துறையின் ஒழுங்கின்மைக்கான சகல காரணங்களையும் நீதிமன்ற வட்டாரங்கள் தெளிவாகவே அறியும். பணிநியமனங்களிலேயே குழப்பங்கள் தொடங்கிவிடுகின்றன. வழக்கறிஞர் என்ற அடிப்படையில்தான் முதனிலை செயல் அலுவலர்களும் உதவி ஆணையர்களும் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், நீதிமன்றப் பணியனுபவங்கள் குறைவாக உள்ளவர்களை உயர் அதிகாரிகளாகவும், அதிகப் பணியனுபவம் கொண்டவர்களைக் குறைந்தபட்ச வயது வரம்பின் பெயரில் அவர்களுக்குக் கீழும் பணியாற்றச் செய்யும் முறையே இன்றும் பின்பற்றப்பட்டுவருகிறது. நிர்வாகக் கட்டமைப்புக்குள் நடக்கும் சகல குளறுபடிகளுக்கும் இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலராகப் பணியில் சேர்பவர்தான் பணிமூப்பின் அடிப்படையில் கூடுதல் செயலாளர் நிலை வரைக்கும் உயர முடியும். அப்படியொரு பணிநியமன முறையை ஏன் அறநிலையத் துறையும் பின்பற்றக் கூடாது? கோயில் சார்ந்த வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாக்கவும் ஆய்வுகள் செய்யவும் ஆவணப்படுத்தவும் ஒவ்வொரு இணை ஆணையர் அலுவலகத்திலும் ஏன் தொல்லியல் அலுவலர்களையும் நியமிக்கக் கூடாது?

உயிர்த் தியாகத்துக்கான மரியாதை

சட்டரீதியான அதிகாரங்களைச் செயல்படுத்தத் துடிக்கும் செயல் அலுவலர்கள் நம்பிக்கைகளுக்கும் வழக்கங்களுக்கும் ஏன் மதிப்பளிக்க விரும்புவதில்லை? பரம்பரை அறங்காவலர்கள் விஷயத்தில் ஏன் இவ்வளவு கெடுபிடி காட்டுகிறார்கள்? கிராமத்துப் பெருங்கோயில்களில் அளிக்கப்பட்டுவரும் பரம்பரை அறங்காவலர் பதவி இந்த மண்ணுக்காக அந்நியர்களுடன் போராடி உயிர் நீத்த, ரத்தம் சிந்திய முன்னோர்களின் வாரிசுகளுக்கு அன்றைய மன்னர்களால் அளிக்கப்பட்ட மரியாதை என்பதை ஏன் இவர்கள் உணர மறுக்கிறார்கள்? அறநிலையத் துறைப் பணிகளுக்கு வருபவர்கள் சைவ, வைணவச் சமயங்களின் தத்துவங்களை அறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்வுகள் நடத்தப்படுகின்றன. உள்ளூர் வழக்கங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது ஏன் அவர்களுக்குக் கற்பிக்கப்படுவதே இல்லை? ஒருவேளை, சமூகத்தின் மையமே கோயில்தான் என்கிறபோது அதற்குள்ளும் அரசியல் இயங்குகிறதோ? இது தொடர்பில் விவாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதற்கெல்லாம் இந்தத் தீர்ப்பு ஒரு திருப்புமுனையாக இருக்கும்.

மொத்தத்தில், இந்தத் தீர்ப்பை வாசிக்கும்போது மனதுக்குள் புலர்பொழுதின் பூபாளம் நாகசுரத்தில் ஒலிக்கிறது. கோயிலுக்கேயான ஒரு சுகந்தத்தை உணர முடிகிறது. அறநிலையத் துறையைப் பற்றிய இந்தத் தீர்ப்பைப் படித்து முடித்தபோது ஆட்சிமொழித் துறையின் நினைவும் வந்துபோகிறது. தமிழ்ச் சமூகத்துக்கு மிகவும் நேரடியாகப் பயன்படக்கூடிய இத்தகைய குறிப்பிடத்தக்க தீர்ப்புகளின் அதிகாரபூர்வமான தமிழ் மொழிபெயர்ப்புகள் உடனடியாக வர வேண்டியது அவசியம். இடைநின்றுபோன ‘தீர்ப்புத் திரட்டு’ம் உயிர்பெறட்டும்.

- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்