ஜூன் 12 - சர்வதேச குழந்தை உழைப்புக்கு எதிரான தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி, சர்வதேச குழந்தை உழைப்புக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation), குழந்தை உழைப்பின் மோசமான வடிவங்கள் குறித்த உடன்படிக்கையின் (Convention on Worst Forms of Child Labour: 182) உலகளாவிய ஒப்புதலுக்குப் பிறகு, முதன்முதலாக 2021ஆம் ஆண்டை சர்வதேச குழந்தை உழைப்புக்கு எதிரான ஆண்டாக (International Year for the Elimination of Child Labour) ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.
2021ஆம் ஆண்டில், சர்வதேச சமூகம் ஒரு நடுப்பகுதியில் நிற்கிறது - அர்ஜென்டினாவில் 2016-ல் கடைசியாக நடைபெற்ற குழந்தை உழைப்பு தொடர்பான உலகளாவிய மாநாட்டிலிருந்து நான்கு ஆண்டுகள், மற்றும் 2025ஆம் ஆண்டில் குழந்தை உழைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நீடித்த வளர்ச்சி இலக்கு 8.7 ஐ (Sustainable Development Goal 8.7) அடைய நான்கு ஆண்டுகள். இந்த ஆண்டு உலக தினம், ஆண்டு முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி, அடுத்த மைல் கல்லான தென்னாப்பிரிக்கா அரசாங்கத்தால் 2022ஆம் ஆண்டில் நடத்தப்படும் குழந்தை உழைப்பு தொடர்பான உலகளாவிய மாநாட்டிற்குப் பங்களிக்கும்.
இத்தினத்தையொட்டி சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் யுனிசெஃப் இணைந்து, நீடித்த வளர்ச்சி இலக்கு 8.7-இன் கீழ், புதிய உலகளாவிய மதிப்பீடுகள் மற்றும் குழந்தை உழைப்பு தொடர்பான போக்குகளை (2016-2020) ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றால், இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், குழந்தை உழைப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முன்னேற்றத்தின் வேகம் எவ்வாறு பாதிக்கப்படக்கூடும் என்பதற்கான மதிப்பீடும், இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுக்கு ஒருமுறை இந்த அறிக்கையைத் தயாரித்து வருகிறது. இந்தப் புதிய அறிக்கையில், குழந்தை உழைப்புக்கு எதிரான உலகளாவிய முன்னேற்றம், கடந்த 20 ஆண்டுகளில் முதன்முதலாக ஸ்தம்பித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான சூழல் ஆகும். கூடுதலாக, அவசரமான தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால், கோவிட்-19 ஏற்படுத்தும் நெருக்கடியால் லட்சக்கணக்கான குழந்தைகள் குழந்தை உழைப்பு நிலைக்குத் தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
உலகளாவிய மதிப்பீடுகள் மற்றும் போக்குகள்
உலகத்தில் இன்றளவும் குழந்தை உழைப்பு ஒரு தொடர்ச்சியான சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. 2000ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்துள்ளது. 2000ஆம் ஆண்டு 24.55 கோடி; 2004ஆம் ஆண்டு 22.23 கோடி; 2008ஆம் ஆண்டு 21.52 கோடி; 2012ஆம் ஆண்டு 16.8 கோடி; 2016ஆம் ஆண்டு 15.16 கோடி. ஆனால் சமீபத்திய, உலகளாவிய மதிப்பீடுகள், 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 16 கோடி குழந்தைகள் (9.7 கோடி ஆண் மற்றும் 6.3 கோடி பெண்), குழந்தை உழைப்பு முறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.
இது, பத்தில் ஒரு குழந்தை, குழந்தை உழைப்பு முறையில் உள்ளதைக் காட்டுகிறது. இவர்களில் 5 முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் - 8.93 கோடி; 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் - 3.56 கோடி; 15 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் 3.5 கோடி; இவர்களில் 7.9 கோடி குழந்தைகள் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கும் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டு உள்ளார்கள்.
கடந்த நான்காண்டுகளில் குழந்தை உழைப்பு மற்றும் ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் குழந்தைகளின் சதவீதம் மாறவில்லை. ஆனால் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் புதிதாக வேலைக்குச் வந்துள்ளனர்; அவர்களில் 65 லட்சம் குழந்தைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கொடுத்துள்ள மதிப்பீட்டின்படி கணக்கீடு செய்து பார்த்தால், கடந்த நான்காண்டுகளில், சராசரியாகத் தினசரி 5753 பேரும், ஒரு மணி நேரத்திற்கு 240 பேரும், ஒரு நிமிடத்திற்கு 4 பேரும் புதிதாகக் குழந்தை உழைப்பு முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தால் உண்டான வறுமை மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், 2022ஆம் ஆண்டு இறுதியில் மேலும் 89 லட்சம் குழந்தைகள் குழந்தை உழைப்புக்குத் தள்ளப்படுவார்கள்.
பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகள் குழந்தை உழைப்பால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆண் குழந்தைகளில் 11.2 சதவீதத்தினரும், பெண் குழந்தைகளில் 7.8 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைத் தொழிலாளர்கள், நகர்ப்புறங்களை விட கிராமப் புறங்களில் அதிகமாக உள்ளார்கள்; கிராமங்களில் 37.3 கோடி; நகர்ப்புறங்களில் 12.27 கோடி; இது கிராமப்புறங்களில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகக் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதைக் காட்டுகிறது.
70 சதவீதம் குழந்தைகள் (11.2 கோடி) விவசாய வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நான்கில் ஒருவரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட பாதிப் பேரும், உடல் நலம் மற்றும் பாதுகாப்புக்குத் தீங்கு விளைவிக்கும் குடும்பம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளார்கள். ஒட்டுமொத்த குழந்தைத் தொழிலாளர்களில், 72 சதவீதமும், 5 முதல் 11 வயதுக்கு உட்பட்டோரில் 83 சதவீதமும் குடும்பம் சார்ந்த விவசாயம் அல்லது சிறு தொழில்களில் இருக்கின்றனர்.
பள்ளி இடை நின்ற குழந்தைகளுக்கும், குழந்தைத் தொழிலாளர்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. கட்டாயக் கல்வி பெற வேண்டிய வயதில் இருக்கும், 5 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கால் பங்கினரும்,12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கினரும் குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.
தற்போதுள்ள சூழலில், 2025ஆம் ஆண்டுக்குள் குழந்தை உழைப்பை ஒழிக்கும் சரியான பாதையில் நாம் இல்லை. இந்த இலக்கை அடைய வேண்டுமானால் கடந்த 20 ஆண்டுகளாக குழந்தை உழைப்பு முறையை அகற்றச் செயல்பட்டதுபோல் 18 மடங்கு வேகமாகச் செயல்பட வேண்டும். கோவிட்-19 தொற்றுக்கு முன்னால், 2008 முதல் 2016 வரை ஏற்பட்ட மாற்றத்தின் வேகத்தை அடிப்படையாகக் கொண்டு, 2025-ல் 11.4 கோடி பேர் மற்றும் 2030-ல் 12.5 கோடி பேர் குழந்தை உழைப்பில் இருப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் தற்போதுள்ள சூழலில், கூடுதலாக இன்னும் பல லட்சம் குழந்தைகளைப் பாதிக்கும் எனத் தெரிய வருகிறது.
ஆகவே தற்போதுள்ள இந்த மதிப்பீடுகள் குழந்தை உழைப்பு முறையை ஒழிப்பதில் நாம் பின்னோக்கிச் செல்வதைக் காட்டுகிறது. பெருந்தொற்று பொருளாதாரத்தைப் பெருமளவில் பாதித்து பல குடும்பங்கள் தங்கள் குழந்தையின் உழைப்பை சார்ந்து வாழும் ஆபத்தை அதிகரித்துள்ளது. பள்ளிகள் அனைத்தும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மூடியிருப்பது குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதை ஊக்குவிக்கிறது.
தமிழகத்தில், குழந்தை உழைப்பு எதிர்ப்புப் பிரச்சாரம் (Campaign Against Child Labour), கடந்த செப்டம்பர் முதல் நவம்பர் வரை, 24 மாவட்டங்களில் நடத்திய கள ஆய்வில், தமிழகத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 94 சதவீத குழந்தைகள் குடும்பத்தின் பொருளாதார சூழல் மற்றும் அழுத்தத்தால் வேலைக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளார்கள். இதே நிலை அல்லது இதைவிட மோசமான சூழல், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் நிலவும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
இதனால் நீடித்த வளர்ச்சி இலக்கை அடைய, நாம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முழுவீச்சுடன் முடுக்கிவிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏற்கெனவே உள்ள அனுபவங்களின் அடிப்படையில் வறுமை நிலையைக் குறிப்பது, முறைசாராத் தொழில்களில் உள்ள தொழிலாளர்களைப் பாதுகாப்பது, சமூகப் பாதுகாப்பை அதிகரிப்பது, கல்விக்கான நிதியை அதிகப்படுத்துவது மற்றும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகள் மூலமாக குழந்தை உழைப்பு முறையைப் பெருமளவில் குறைக்க முடியும் என்று சர்வதேச அளவில் நிரூபணமாகி இருக்கிறது. இதனடிப்படையில் சிறிதும் தாமதிக்காமல், அரசு உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.
தீர்வுகள்
ஊறுபடத்தக்க சூழலிலுள்ள குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பிழைப்பாதாரம் மற்றும் வருவாய் ஈட்ட வழிமுறைகளைக் கண்டறிந்து, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுடன் குழந்தைகளையும், குடும்பங்களையும் இணைக்க வேண்டும். பெரும்பாலான குடும்பங்கள் அதிக வட்டிக்கு முறைசாராக் கடன் பெற்று வறுமைச் சூழலில் சிக்கித் தவிக்கின்றன. இவர்களுக்கு வங்கிகள் மூலமாக வட்டி இல்லாத அல்லது குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்க வேண்டும். இதன் மூலமாகக் கடன் சுமை தாங்காமல் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதைப் பெருமளவில் குறைக்க முடியும்.
இச்சூழல் சரியாகும் வரை, மாணவர்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்க, உள்ளூர் பஞ்சாயத்து அமைப்புகள், ஊராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு, ஆசிரியர்கள் மற்றும் சமுதாயம் சார்ந்த அமைப்புகள் இணைந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி தொடங்கிய உடன் அனைவரும் பள்ளிக்குச் செல்வதை உறுதி செய்வதுடன் இதுவரை கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சரி செய்ய மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். இதன் மூலமாக பள்ளி உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது, இடைநிறுத்தமான மாணவர்களைக் கண்காணிப்பது, கல்வித் தரத்தை மேம்படுத்துவது, குழந்தை நேயக் கல்விச் சூழலை உருவாக்குவது போன்ற பணிகளைச் சிறப்பாக செய்ய முடியும்.
குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அந்தப் பகுதிக்கு என்று சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். குழந்தைகளை வேலைக்கு அமர்த்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீட்கப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சிறப்புத் திட்டங்களை வகுத்து மறுவாழ்வுப் பணிகளைச் செய்ய வேண்டும். இச் செயல்பாடுகளில் உள்ளூர் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து எந்தக் குழந்தையும் வேலைக்குச் செல்லவில்லை என்ற நிலையை உறுதிப்படுத்தவேண்டும். உடனே செயல்பட்டால் இவை அனைத்தும் சாத்தியமே.
-முனைவர் ப. பாலமுருகன்,
மனித உரிமைச் செயற்பாட்டாளர்,
தொடர்புக்கு: balaviji2003@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago