மழையில் பல சாயங்கள் வெளுக்கின்றன. அதில் தனியார்மயமும் ஒன்று. இது என் அனுபவம். டிசம்பர் 2 இரவு திருச்சியில் ஒரு பெற்றோரிடமிருந்து தகவல் வருகிறது, “எங்களுடைய மகளும் வேறு சில பெண்களும் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் சிக்கிக்கொண்டுள்ளனர். கைபேசியிலும் தொடர்புகொள்ள முடியவில்லை. வசிக்கும் வீட்டின் முதல் மாடியில் மின்சார வசதியற்ற நிலையில் இருக்கின்றனர்” என்று.
திருவள்ளூர் மாவட்டத்தில் வசிக்கும் நான் புறப்பட்டேன். உதவிக்கான பொதுத் தொலைபேசிகள்கூடச் செயலிழந்திருந்தன. முதலில் ஆவடிக்கும் அங்கிருந்து கோயம்பேட்டுக்கும் சென்றபோதுதான் திருவான்மியூர், தாம்பரம் பகுதிகளுக்குப் பேருந்து சேவையே கிடையாது என்று தெரிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, “சிறப்புப் பேருந்து இருக்கிறது, மதுரவாயில் உள்சுற்றுவட்டப் பாதை வழியாகச் செல்லும். தாம்பரம் தவிர வேறு எங்கும் நிற்காது” என்று கூறினர். பிறகு தாம்பரம் சென்றபோது, ‘அந்தப் பகுதியில் கழுத்தளவு நீர் இருக்கிறது, உங்களால் போக முடியாது’ என்று எம்.டி.சி. நேரக்காப்பாளர் தெரிவித்தார். மாற்றுவழி என்ன என்று கேட்டபோது, இங்கிருந்து கிண்டி சென்று அங்கிருந்து திருவான்மியூர் செல்லலாம் என்றார். கிண்டியிலிருந்து திருவான்மியூருக்குத் தனியார் வேன்கள்தான் சென்றன.
திருவான்மியூர் பஸ் நிலையம் அருகிலேயே தண்ணீர் பெருக்கு. அங்கிருந்த காவலர்களை அணுகியபோது, அவர்களும் அங்கெல்லாம் போக முடியாது என்றே தெரிவித்தனர். அச்சம் அதிகரித்தது. பிறகு, சரக்கேற்றும் மினி லாரியில் எஸ்.ஆர்.பி. டூல்ஸ் வரை செல்லலாம் என்று கூறினர். அந்த மினி லாரியில் ஏறி அடுத்த தெரு திரும்பியதும் தொடை அளவுக்குத் தண்ணீர் பாய்ந்தது. அந்த லாரி அதற்கு மேல் செல்லாது என்று கூறிவிட்டனர். அங்கிருந்து மற்றொரு மினி லாரியில் ஒக்கியம் துரைப்பாக்கம் சென்றேன். அந்தப் பெண்கள் தங்கியிருந்த பகுதிக்குச் செல்லவே முடியாது, கழுத்தளவு தண்ணீர் என்றே அங்கும் அச்சமூட்டினர். இதற்குள் மதியம் 2 மணியாகிவிட்டது. துணிந்து அந்த இடத்துக்கே சென்றாகிவிட்டது. கரும் பச்சை நிறத்தில் பாசி பிடித்த தண்ணீரிலிருந்து கொப்புளங்கள் வந்தன. அதிலிருந்து மெல்ல ஒரு தலையும், பிறகு தோளும், பிறகு உருவமும் வெளிப்பட்டது. அவர் ஒரு இளைஞர். “இங்கிருந்து 4-வதாக இருக்கும் வீட்டிலிருந்தே இந்த நிலையில் வருகிறேன். நீங்கள் போக வேண்டிய இடம் இன்னும் உள்ளே பள்ளத்தில் இருக்கிறது, எப்படிப் போவீர்கள்?” என்றார். எனக்கு நீச்சலும் தெரியாது. அந்தக் குடியிருப்பின் இன்னொரு பகுதிக்குச் சென்றேன்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மணி 3.20 ஆகிவிட்டது. வானம் கறுக்கத் தொடங்கியது. மீண்டும் மழை வந்தால் நீர்மட்டம் உயர்ந்துவிடும். என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நீரில் இறங்க ஆரம்பித்தேன். முதலில் முழங்கால், பிறகு தொடை, அதன் பிறகு வயிறு, பின் மார்பு வரை தண்ணீர் ஏறியது. கையில் ரொட்டி, பழங்களைப் பையில் போட்டு எடுத்துச் சென்றிருந்தேன். அது தலையில்.
தண்ணீர் மேலே ஏற ஏற, நீரில் இறங்கியபோது நல்ல வேளையாக இரு இளைஞர்கள் டிரம் படகுடன் வந்தார்கள். “பெரியவரே மூழ்கிடாதீங்க. நாங்க அழைத்துச் செல்வோம்” என்றவர்கள் என்னை அதன் மீது ஏற்றினார்கள். இரு டிரம்களைக் கயிறுகளால் பிணைத்துக் கட்டி மறுபக்கத்தில் மரப்பலகை இருக்கையைப் பொருத்தியிருந்தனர். டிரம் நிலையாக மிதப்பதற்கு அதனுடன் ஒரு ஸ்டூலையும் சேர்த்துக் கட்டியிருந்தனர். இந்த டிரம் படகைத் தயாரிக்க அவர்கள் எங்கே கற்றார்கள் என்று வியப்பாக இருந்தது. இளைஞர்கள் இருவரும் ஜெயின் கல்லூரி மாணவர்கள். குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். வீடு மூழ்கியிருந்தது. கார் நிறுத்தும் போர்டிகோ படித்துறையாகப் பயன்பட்டது.
நான் தேடிச் சென்ற வீட்டில் 3 பெண்கள் மாடியில் இருந்தனர். பெண்களையும் என்னையும் அதே படகில் ஏற்றிக்கொண்டு வந்து கரை சேர்த்தனர். கண்களில் கண்ணீருடன் கையசைத்து அவர்களிடமிருந்து விடைபெற்றோம். வழியில் மேலும் 2 பெண்கள் சேர்ந்துகொண்டனர். பெரம்பூரில் ஒருவர் சகோதரருடன் வீடு போய்ச் சேர்ந்தார். பிறகு, வந்த வழி திரும்பிப் பயணமாகி வீடு வந்து சேர்ந்தோம். இரவு 10 மணி. கதை இதோடு முடியவில்லை. இனிதான் முக்கிய கட்டம்.
இரு நாட்களுக்கும் மேல் தண்ணீருக்கு நடுவில் சிக்கி, மின்சாரம் இல்லாததால் வெளியே தொடர்புகொள்ளாமல் இருந்த 4 இளம்பெண்களும் குளித்து, இரவு உணவு உண்டு, தங்களுடைய கைபேசிகளை உயிர்ப்பித்து அலுவலகம் உட்பட எல்லோரிடமும் தாங்கள் பத்திரமாக இருக்கும் தகவல்களை அனுப்பினார்கள். பெண்களின் வீட்டிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வடிந்து ஐந்து நிமிடங்கள் இருக்காது. அவர்கள் அலுவலகத்திலிருந்து ஒரு தகவல் செல்பேசியில் வந்தது. “வாழ்த்துகள். நீங்கள் இனி சென்னையில் அவதிப்பட வேண்டாம். நாளையே பெங்களூரு சென்றுவிடுங்கள். நாளையே வேலையைத் தொடர வேண்டும்!”
நான்கு பெண்களும் “ஊருக்குப் போய்ப் பெற்றோரைப் பார்த்துவிட்டு இரு நாட்கள் ஓய்வுக்குப் பின் திரும்புகிறோம்” என்றதற்கு, “ஏற்கெனவே வேலைகள் கெட்டுவிட்டன; தாமதித்தால் ஐதராபாத் செல்ல வேண்டியிருக்கும்” என்பதே மறுமொழி. பெண்கள் நால்வரும் மறுநாள் அதிகாலையே பெங்களூரு புறப்பட்டுச் சென்றார்கள்.
தனியார்மயம் தொடர்பாக நிறையப் பேசுகிறோம். கடந்த ஒரு வாரமாக நான் கேள்விப்படும் தனியார் நிறுவனக் கதைகள் பல கண்ணீர்விட வைக்கின்றன. தனியார்மயத்துக்கு மூளை என்னவோ நிறையத்தான் வேலை செய்கிறது; இதயம்தான் இறுகிப்போய்க் கிடக்கிறது!
- ரங்காச்சாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago