இந்தச் சுதந்திர நாளன்று தமிழ்நாட்டில் சேஷசமுத்திரம் கிராமத்தில் தேர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இன்னும் பல ஊர்களில் திருவிழாக்கள் தடைபட்டு கிடக்கின்றன. கோயில்களையும் கடவுளர்களையும் சாதிய ஆதிக்கத்திலிருந்து பிரிக்கவே முடியவில்லை. அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குக்கான அடிப்படை தமிழகத்தில் உருவானது. உச்ச நீதிமன்றம் அரசுக்குச் சாதகமான ஒரு தீர்ப்பை அளித்தும்கூட இன்னும் தமிழக அரசின் அறநிலையத் துறைத் தரப்பிலிருந்து ஒரு மூச் சத்தம் இல்லை. வெளிமாநிலக் கோயில்களுக்கு / மாற்று மதத்தினர் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் அங்கு பக்தர்களுக்குக் கிடைக்கும் வசதிகளைத் தமிழகக் கோயில்களின் சூழலுடன் ஒப்பிட்டு காலங்காலமாக மாய்கிறார்கள். மேம்படுத்த ஒரு நடவடிக்கை இல்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் என்ன உடைகளில் வர வேண்டும்; எப்படி வர வேண்டும் என்றெல்லாம் நமக்குக் குறிப்பாணை அனுப்புகிறார்கள்.
ஆண்கள் என்றால், சட்டை வேஷ்டி / பேன்ட், பைஜாமா, பெண்கள் என்றால், தாவணி/சேலை/ மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் என்றால், முழுமையாக மூடப்பட்ட எதாவது ஒரு ஆடையும் அணிந்து வர வேண்டுமாம். அரை டிரவுசர், ஷார்ட்ஸ், மினி ஸ்கர்ட், மிடி, கையில்லாத மேலாடை, இடுப்புக்கு கீழ் நிற்கும் ஜீன்ஸ், இடுப்புக்கு மேல் நிற்கும் டி-ஷர்ட் எதற்கும் கோயிலுக்குள் இனி அனுமதி கிடையாதாம்.
ஒரு கோயில் வெறும் வழிபாட்டுத்தலம் மட்டும் அல்ல; அடிப்படையில் அது ஒரு பொதுவெளி. பண்பாட்டு மையம். ஒன்றுகூடலின், சங்கமித்தலின் குவிப்புள்ளி. வெறுமனே அது கடவுள் இருக்கும் இடம்; பக்திக்கு மட்டும்தான் அங்கே இடம் என்றால், வெளியிலிருந்து விடுதலையாகி உள்ளுக்குள் உறைவதே பக்திக்கான பாலபாடம். சுயம் துறத்தலே தெய்வீகம். கடவுள் இருக்குமிடம் என்று நம்பும் இடத்துக்கு வரும் நேரத்தில்கூடப் புலனடக்கம் எனக்குள் இருக்காது; எனக்கு வெளியிலிருப்பவர்கள் ஒரு குழந்தையும்கூட இழுத்துப் போர்த்திக்கொண்டு என் முன்னே வர வேண்டும் என்பது யோக்கியமான அணுகுமுறை அல்ல. மேலும் எது வழிபாட்டுக்கு ஏற்ற உடை என்பதை யார் தீர்மானிக்க முடியும்?
திருச்சியில் ஒரு கோயில் உண்டு. ரொம்ப நாசூக்காக மனிதர்கள் மீது வன்முறையைச் செலுத்துவது எப்படி என்பதில் தமிழக அறநிலையத் துறைக்கே அவர்கள் முன்னோடி. “செல்பேசி பேசுவதைத் தவிர்க்கலாமே!”, “அமைதியாக வரிசையில் வரலாமே!” என்பதுபோல, “பெண்கள் துப்பட்டாவைப் போட்டுக்கொள்ளலாமே!” என்று எழுதி வைத்திருப்பார்கள். போதாக்குறைக்கு கோயிலுக்கு வரும் பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்களா என்று பார்த்து, துப்பட்டாக்கள் வேறு கொடுப்பார்கள். இதற்காகவே இரண்டு பணியாளர்கள் வேறு. எவ்வளவு பெரிய வன்முறை!
என்னுடைய தோழி அடிக்கடி சொல்வார், “இந்தியாவுல மினி ஸ்கர்ட் போட்டுட்டு போறதைவிட ஆபத்தானது புடவை கட்டிட்டுப் போறது.” அப்படியென்றால், புடவையை எப்படிக் கட்ட வேண்டும், லோ-ஹிப் கட்டலாமா; கூடாதா; ரவிக்கை எவ்வளவு நீளம் இருக்க வேண்டும்; ஜன்னலுக்கு அனுமதி உண்டா, இல்லையா என்றெல்லாம்கூட வரையறைகள் வருமா? பெண்களுக்குத்தான் பிரச்சினை என்று இல்லை. கேரளப் பழக்கதோஷத்தில் கன்னியாகுமரி பக்கம் இருக்கும் சில கோயில்களில், சட்டையைக் கழற்றிவிட்டுத்தான் கோயிலுக்குள் ஆண்கள் நுழைய வேண்டும் என்கிறார்கள். சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலுக்குப் போனபோது இப்படிச் சட்டையைக் கழற்றச் சொன்னது பெரும் சங்கடமாகிப் போனது (ஆண்களுக்கும் கூச்சம் இருக்கும்பா!). அப்போதுதான் இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். முடிகள் அடர்ந்த மாரோடும் கக்கத்தோடும் தொந்தியும் தொப்பையுமாக நடந்துகொண்டிருந்தார்கள் பல ஆண்கள். முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள் பெண்கள். அதே கோயிலில் பாலுறவுப் படைப்புகளும் இருக்கின்றன. இருபாலரையுமே அவை உறுத்தியதாகத் தெரியவில்லை. எனில், எது ஆபாசம்? கலாச்சாரக் காவலர்கள் சிந்திப்பதாக இல்லை.
இந்தக் கலாச்சார விவாதத்தின் மிக முக்கியமான புள்ளி உடை அல்ல; அதன் பின்னே உறைந்திருக்கும் மாயக்கருவியான `புனிதம்'.
எந்தப் புனிதத்தின் பெயரால், அதிகாரம் உடைகளைக் குறிவைக்கிறதோ, அதே புனிதத்தின் பெயரால்தான் ஆதிக்கம் மனிதர்களைக் குறிவைக்கிறது. கோயில்களிலிருந்து உடைகளை வெளியே தள்ளுகிறது அதிகாரம். கோயில்களிலிருந்து மனிதர்களை வெளியே தள்ளுகிறது ஆதிக்கம்.
எனக்குப் பக்தகோடிகளை நினைத்துக்கூட வருத்தம் இல்லை. சாமிகளை நினைத்துதான் பயமாய் இருக்கிறது. நம்மூர் கோயில்களில் பெரும்பாலான சிற்பங்கள் ஆடையின்றிதான் நிற்கின்றன. ஆடைகளின் பெயரால் சாமிகளையும் வெளியேற்றிவிட்டால், கோயிலுக்குள் என்னதான் இருக்கும்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago