அன்பான வாசகர்களுக்கு,
என் வாழ்க்கையின் சில தருணங்களையும் சில நிகழ்வுகளையும் 40 வாரங்களுக்கு உங்களுடன் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. அதில் தொடர்ந்து நிகழ்வுகளையே எழுதுகிறேனே என்று நிகழ்வுகளை உள்ளடக்கிய சிறுகதையுடன் விடைபெறுகிறேன். வேறொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.
*****
சமரசம்
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 40: பழங்கதைகளைப் பேசுங்கள்; அசைபோடுங்கள்!
» சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 39: எல்லைகளுக்கு அப்பால் எவரெஸ்ட் தரிசனம்!
பிரச்சினையே பாலாவின் எதிர்காலம்தான். ஏழே வயதான அவனுக்கு நீண்ட எதிர்காலம்தான். ஆனால், எப்படிப்பட்டது? இந்தப் பிரச்சினையிலிருந்து ஒதுங்கித்தான் இருக்கிறேன். ஆனால், பாலாவைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியவில்லை. சந்துருவின் மனத்தில் இந்தப் பிரச்சினையைத் தவிர வேறு சிந்தனையே இல்லை என்று தோன்றுகிறது.
பாலாவுக்கு மூன்று வயதாக இருக்கும்போதே சந்துருவும் மாலதியும் பிரிந்துவிட்டார்கள். என்ன காரணம் என்று எனக்குச் சரியாகத் தெரியாது. விவரமாகத் தெரிந்துகொள்ளவும் விருப்பமில்லை. சந்துருவுக்கு ஊர் ஊராகச் சுற்றும் விற்பனையாளர் வேலை. மாலதி பெரிய பயண நிறுவனத்தில் வரவேற்பாளினி. அவள் சந்துருவின் குடும்பத்தோடு ஒட்டவே இல்லை என்று சொல்லிக்கொண்டார்கள். பிரிந்தபோது சிக்கல் ஏற்பட்டது. அவர்கள் என்னவோ சுமுகமாகத்தான் பிரிந்தார்கள். ஏற்கெனவே பாலாவுக்குப் பெற்றோராகி இருந்தார்கள். அங்கேதான் சிக்கல். சுமுகமான விவகாரத்தில் குழந்தை விஷயமும் சுமுகமான ஏற்பாடாகத்தான் இருக்கும்.
ஆனால், இவர்களிடையே இரு தரப்பும் ஒத்துக்கொள்கிற மாதிரி முடிவுக்கே வர முடியவில்லை. சந்துருவின் ‘பிரம்மச்சாரி’ குடியிருப்புக்கு மகனை அனுப்ப மாலதிக்கு இஷ்டமில்லை. ‘‘யார் அங்கே வருவார்களோ! அந்தக் கண்ணராவி எல்லாம் பாலா பார்க்க வேண்டாம்’’ என்று மாலதியும், ‘‘வெறும் சனி, ஞாயிறு தகப்பனாக, விலங்குக் காட்சி சாலைக்கும், பீச்சுக்கும் கூட்டிப்போய் ஐஸ்கிரீமும் சுண்டலும் வாங்கிக் கொடுப்பவனாக நான் இருக்க மாட்டேன்’’ என்று சந்துருவும் வாதிட்டார்கள்.
‘‘ஏன் என் வீட்டில் வந்து தங்கி பாலாவுடன் இருக்கலாமே’’ என்று மாலதி கூறினாலும், கிளம்பிப் போகும்போது ‘‘ஏம்பா போறே? எங்கப்பா போறே? இதுதானே நம்ம வீடு?’’ என்று பாலாவுக்கு என்ன பதில் சொல்வது?
இதன் நடுவில்தான் சந்துரு என்னைச் சந்தித்தார். அவர் வேதனையைப் பகிர்ந்துகொள்ளும் சிநேகியாகத்தான் இருந்தேன். பிரச்சினையில் தலையிட்டு அபிப்ராயம் கூறத் தயங்கினேன். சில மாதங்களுக்குப் பிறகு மணந்துகொண்டோம். என் பெற்றோருக்கு சந்துருவைப் பிடித்திருந்தது. நான் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியாக இருந்தேன். தந்தைக்கு வெளியூரில் வேலை என்பதால் வீடு என் வசம்தான் இருந்தது. இப்போதாவது பாலாவை இங்கே கூட்டி வந்து விடுமுறை நாட்களில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற சந்துருவின் ஆசை மாலதியிடம் எடுபடவே இல்லை. ‘‘குழந்தை எது தன் வீடு என்று தெரியாமல் குழப்பம் அடைவான்’’ என்பதுதான் அவள் பதில். இதை மாற்றும் முயற்சியை சந்துரு கைவிடவே இல்லை.
தனி வீடு. மூன்று படுக்கை அறைகள். அதில் ஒன்றை நான் பாலாவுக்காகத் தயார்படுத்தியிருந்தேன். என்றாவது சந்துருவின் முயற்சி பலிக்காதா? ஜன்னல் அருகில் மேஜை, நாற்காலி, கலர் பென்சில்கள், நோட்டுப் புத்தகங்கள். அடுத்து ஒரு சிறிய ஷெல்ஃபில் அம்புலி மாமா உள்ளிட்ட புத்தகங்கள். சுவரில் உலகப் படம். மூலையில் ஸ்டூலின் மீது உலக உருண்டை. ஜன்னல் எதிரில் சுவரை ஒட்டி கட்டில், மெத்தை.
பாலாவுக்குப் பளீரென்ற நிறங்கள் பிடிக்குமாம். மெத்தை மீது ஆரஞ்சும், பச்சையும் கலந்த விரிப்பு. ஜன்னல் வழியாகத் தெரியும் சின்ன தோட்டம். பாலா வந்தால் அந்த வேப்ப மரத்தில் ஊஞ்சல் கட்ட வேண்டும். நினைத்து என்ன பயன்? ஏன் அனுப்ப மறுக்கிறாள்? இங்கே கொட்டிக் கிடக்கும் பாசத்தை, பாலா அனுபவிப்பதை ஏன் தடை செய்கிறாள்? பாலாவின் அன்பைப் பகிர்ந்துகொள்ள முடியாத சுயநலமா? பயமா?
ஒவ்வொரு முறையும் சந்துரு, பாலாவைச் சந்தித்துவிட்டு வரும்போது அவர் முகத்தில் தெரியும் ஏமாற்றமும் வேதனையும் என் நெஞ்சைக் கசக்கிப் பிழியும். என்ன செய்ய? ஒதுங்கியே இருந்தேன். மாலதியை அவளது நிறுவனம் வேறு ஒரு ஊருக்கு மூன்று மாதம் பயிற்சிக்காக அனுப்பினால் நன்றாக இருக்கும். சந்துருவின் பெற்றோருக்கு மாலதியின் மீது கோபம். அவளது பெற்றோருக்கு சந்துரு ஓர் உதவாக்கரை என்கிற நினைப்பு. அதனால், அவர்கள் யாரும் குழந்தையின் பொறுப்பை ஏற்க மாட்டார்கள். அதனால் அந்த மூன்று மாதம் எங்களுடன் பாலா தங்கினால் நன்றாக ஒட்டிக்கொள்வான். பிறகு இங்கு வர வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கலாம் அல்லவா? நல்ல கனவுதான். ஆனால், பகல் கனவு. நிறைவேற முடியாத கனவு.
பாலாவுக்கு ஏழு வயதாகி விட்டது. அவனை வேறு பள்ளிக்கு மாற்றிவிட்டாள். அது எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தது. வாரத்தில் 2 - 3 நாட்களிலாவது பாலாவைப் பள்ளியிலிருந்து இங்கே கூட்டி வந்து பாலும் சிற்றுண்டியும் அளித்து ஆவன செய்கிறேன் என்று சந்துரு, மாலதியிடம் போய் கெஞ்சினார். அது செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது. ‘‘அவனுக்கு எது தன் வீடு என்கிற குழப்பம் வந்துவிடும்’’ என்கிற அதே பதில்தான்.
அன்று எனக்கு வாராந்திர விடுமுறை. முதல் நாள் மாலதியின் வீட்டில் பாலாவைச் சந்தித்துவிட்டுத் தோய்ந்த முகத்தோடு சந்துரு வந்தார். இரவிலும் புரண்டு புரண்டு படுத்தார். காலையில் கீழே வந்து அமர்ந்த அவர் முகம் பார்க்கச் சகிக்கவில்லை. என்னுள் எரிமலையாகக் கோபம் பொங்கி வந்தது. ‘சே! என்ன பொம்பளை இவள்! எத்தனை சுயநலம்! சந்துருவுடன் குடும்பம் நடத்திப் பெற்ற பிள்ளையை அவரிடம் நெருங்க விடாதது என்ன நியாயம்? நானும் அவர் மனைவிதானே! ஒரு கவுரவமான வீடுதானே இதுவும்?’ கஷ்டப்பட்டு வார்த்தைகளை விடாமல் மெளனம் காத்தேன்.
சந்துரு வேலைக்குப் புறப்பட்டார். சாமான்கள் வாங்கும் தேவையிருந்ததால், என்னை வழியில் சூப்பர் மார்க்கெட்டில் இறக்கி விடும்படி சொல்லி, கையில் கூடையுடன் டூவீலரின் பின்னிருக்கையில் அமர்ந்தேன். பாலாவின் பள்ளியைக் கடக்கும்போது ‘‘ஏய், ஏய் வின்னி’’ என்று கைதட்டி கூப்பிடும் குரல் கேட்டுத் திரும்பினால், என் பள்ளி சிநேகிதி சுஜிதான் நின்றிருந்தாள். ‘‘நிறுத்துங்கள் சந்துரு! நான் சுஜியுடன் பேசிவிட்டுக் கடைக்கு நடந்து போகிறேன்’’ என்று இறங்கிக்கொண்டேன்.
பத்து நிமிடம் சுஜியுடன் பேசி அவள் போனதும் நடக்க ஆரம்பித்த நான், சட்டென்று நின்றேன். இன்னும் மணியடிக்கவில்லை. ஆதலால், குழந்தைகள் மைதானத்தில் பந்து விளையாடிக்கொண்டு இருந்தார்கள். ஏதோ ஒரு உந்துதலால், வேலிக்கு அருகே போய் நின்றேன். தூரத்தில் பந்தை உதைத்தபடியே ஓடிவரும் பாலாவை அடையாளம் கண்டுகொண்டேன். அப்பாவுடன் விளையாடி இருப்பானோ! சந்துருவுக்குக் கால்பந்து விளையாட்டு மிகவும் பிடிக்கும்.
நெற்றியில் புரளும் முடி. நல்ல நிறம். இடது கன்னத்தில் ஒரு குழி. சந்துருவின் அடையாளங்கள். உள்ளே போய்ப் பார்க்க ஆவல். ஆனால், யாரும் உள்ளே போக முடியாது. அறியாதவரோடு குழந்தைகள் பேச முடியாது. இந்தக் காலத்துக்கேற்ற விதிமுறைகள் என்னைப் போன்ற இளைய தாயார்களிடமிருந்து காப்பதற்கா? மணியடித்தது. குழந்தைகள் கூச்சலுடன் பள்ளிக் கட்டிடத்தை நோக்கி ஓடினார்கள்.
போகத் திரும்பிய நான், ஒரு பெண்மணி என்னை உற்றுநோக்குவதைக் கண்டேன். மாலதிதான். கடுப்பும் வெறுப்பும் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தன. என் திகைப்பை வெளிக் காட்டாமல் நேராக அவள் முகம் நோக்கி, ‘‘ஹலோ... உங்கள் பிள்ளை நன்றாகப் பந்து விளையாடுகிறானே?’’ என்றேன். முகக் கடுப்பு மாறாமல், ‘‘என் பிள்ளை என்று புரிந்தால் சரி. பள்ளிக்கு வரக் கூடாது என்று சொல்லியிருந்தேனே? உன்னை அனுப்பி வேவு பார்க்கிறானா?’’ என்றாள்.
‘‘வேவு இல்லை. கடைக்குப் போகிற வழியில் நின்றேன். உங்களுக்கு உங்க மகனைப் பற்றிப் பெருமையாக இருக்கு இல்லையா?’’ என்று பதிலளித்தேன். ‘‘ஆமாம். நாளைக்கு உனக்கு மகனோ, மகளோ பிறக்கும்போது பெருமைப்பட்டுக்கொள். இங்கே வர வேண்டாம்’’ என்றாள் முகம் சிவக்க. என் உள்ளே ஏதோ ஒன்று வெடித்தது. ‘‘எனக்கு மகனோ, மகளோ எப்போதும் கிடையாது. ஏன் என்றால் என்னால் தாயாக முடியாது’’ என்று வார்த்தைகளைக் கொட்டிய அடுத்த கணம், நானே அதிர்ந்து போனேன்.
எப்படி..? எப்படி? இதை நான் சொன்னேன்? ‘விசேஷம் உண்டா?’ என்று அடிக்கடி கேட்கும் அத்தையிடமோ, என் தாயிடமோ கூறாத, கூற முடியாத இந்த உண்மையை எப்படி வெளியிட்டேன்? என் உடல் தள்ளாடியது. மாலதியின் முகத்தில் திகைப்பும், அவநம்பிக்கையும். சில கணங்கள் மவுனம். பிறகு ‘‘இது சந்துருவுக்குத் தெரியுமா?’’ என்று சற்றுத் தாழ்ந்த குரலில் கேட்டாள். நான் தலையை ஆட்டி ‘‘கல்யாணத்துக்கு முன்பே சொல்லிவிட்டேன்’’ என்றேன். முகத்தைத் திருப்பிக்கொண்டேன். அவளது பச்சாதாபம் எனக்குத் தேவையில்லை. ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து என்னைச் சமனப்படுத்திக்கொண்டு திரும்பினேன்.
மாலதி பேசவில்லை. ஆனால், அவள் முகத்தில் என்னை நம்புவது தெரிந்தது. அருகில் வந்து, ‘‘நானும் கடைக்குத்தான் போகிறேன். சேர்ந்து போகலாமா?’’ என்று சாதாரண குரலில் கேட்டாள். அவள் என்னை நோக்கித் தயக்கத்துடன் ஒரு விரலை நீட்டுகிறாள். நான் முழங்கைவரை நீட்டுவது என்று தீர்மானித்து, ‘‘வாருங்கள் போவோம்’’ என்றேன். சிநேக பாவத்துடன் நடக்கத் தொடங்கினோம். பேச்சைத் தொடர்வதற்காக ‘‘இன்று எனக்கு விடுமுறை. இப்போது ‘ரெடிகுக்’ பிரியாணி பாக்கெட்டுகள் விற்கிறார்களாம். எனக்குச் சரியாக சமைக்கத் தெரியாது. சமையல் குறிப்புகளை வாசித்துச் செய்வேன். இன்று இரவு பிரியாணி செய்யலாம் என்று நினைத்தேன். நீங்கள் நன்றாகச் சமைப்பீர்களா?’’ என்றேன்.
மாலதி சிரித்துவிட்டு, ‘‘ஓ நோ... சமைப்பதில் நான் மிக மோசம். பாவம் சந்துரு. இந்த விஷயத்தில் துரதிருஷ்டசாலி’’ என்றாள். நான் தலையை உயர்த்தி அவள் கண்களை நேராக நோக்கி, ‘‘உங்களால் அவர் தந்தையாகி இருப்பது அதிர்ஷ்டம் அல்லவா?’’ என்றேன். மாலதி கண்களைத் தாழ்த்திக்கொண்டாள்.
கடைக்குள் நுழைந்தோம். பிரியாணி பாக்கெட்டைக் கையில் எடுத்தேன். ‘‘அடடா இது நான்கு பேருக்குச் செய்யும் அளவு என்று போட்டிருக்கே’’ என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மனதில் ஒரு எண்ணம். வந்தது வரட்டும் என்று ‘‘நீங்களும் பாலாவும் சாப்பிட வந்தால் தீர்ந்துவிடும் அல்லவா?’’ என்றேன்.
மாலதியின் முகத்தில் விவரிக்க இயலாத ஒரு பாவம். எதிரியின் பாசறைக்குள் தன் புத்திர ரத்தினத்தை விரோத பாவமில்லாமல் கொண்டுவர முடியுமா? கண் கொட்டாமல் மாலதியைப் பார்த்தேன்.
மாலதியின் கண்களில் தோன்றிய புன்னகை இதழை வந்து அடைந்து மலர்ந்தது. என் தோளில் கை வைத்து ‘‘பாலாவுக்கு ஏழு மணிக்கு சாதம் கொடுத்துப் பழக்கம். 6.45 மணிக்கு நாங்கள் வரலாமா?’’ என்றாள்.
மேகத்தில் சற்று மறைந்திருந்த சூரியனின் ஒரு கிரணம் வெளிவந்து சுற்றுப்புறத்தை ஒளிமயமாக்கியது. என் மனத்திலும் ஒரு பிரகாசம் மனத்தை லேசாக்கியது.
நிறைவு பெற்றது...
- கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)
டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.
தொடர்புக்கு: joenitya@yahoo.com
ஓவியம்: வெங்கி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago