நெல் உற்பத்திக்கும் காவிரி நீருக்கும் என்ன தொடர்பு?

By தங்க.ஜெயராமன்

காவிரி நீரால்தான் காவிரிப் படுகையில் நெல் உற்பத்தியாகிறதா என்று அங்குள்ள விவசாயியைக் கேளுங்கள். “ஒரு நேரத்தில் அப்படி இருந்தது. இப்போது பாதிக்குப் பாதி அப்படி இல்லை” என்று சொல்வார். ஜூன் 12 அன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது வழக்கம். அந்த அணை உருவாகி 40 ஆண்டுகள் வரை, 1974 வரை, இந்த தேதிக்குக் காவிரிப் படுகையில் இருந்த மகத்துவம் இன்றைக்கு இல்லை.

மாமூல் நிகழ்வுதான்

காவிரிப் படுகையில் நெல் சாகுபடியின் பருவங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன; அதன் பாதிப் பரப்புக்கு மேல் சாகுபடி முறையும் மாறிவிட்டது. மேட்டூரில் ஜூன் 12-ம் தேதியே தண்ணீர் திறக்கலாமா என்பதைப் பரிசீலிக்கும்போது இந்த மாற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். மாற்றங்களைக் கவனிக்காமல் இந்தத் தேதியில் தண்ணீர் திறப்பதையே ஒரு சாதனைக் குறியீடாக நாம் வைத்துக்கொள்வதற்கு ஓர் எடுத்துக்காட்டு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் முதல் வாரத்திலேயே தண்ணீர் திறந்தார்கள். ஒரு வருடாந்தர மாமூல் நிகழ்வைத் தன் சாதனையாளர் பிம்பத்துக்கு மெருகேற்றும் சாகசமாகவே அன்றைய அரசு இதைக் கொண்டாடிக்கொண்டது.

ஜூன் 12-ல் தண்ணீர் திறந்தாலும் இரண்டு மாதங்களுக்குப் பிறகு திறந்தாலும் அதில் காவிரிப் படுகை விவசாயிகளுக்கு இப்போதெல்லாம் வேறுபாடு தோன்றுவதில்லை. விவசாயத்தை அவர்கள், இந்தத் தண்ணீர்த் திறப்பை ஒட்டித் திட்டமிடுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. காவிரியின் மேல்மடையிலோ கடைமடையிலோ அல்லாமல் அதன் மையப் பகுதியில் உள்ளது குடவாசல். அந்தப் பகுதி கிராமங்களில் சம்பாவுக்கு ஆகஸ்ட் கடைசி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் நாற்று விடுகிறோம். ஆகஸ்ட் வரை வயலில் பருத்திச் செடி நிற்கிறது. திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பாதிப் பரப்புக்கு மேல் இதுதான் நிலவரம். நாங்கள் செப்டம்பர் முதல் வாரம் நாற்று விடுவதற்கும் ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கும் அரசின் அக்கறைக்கும் எவ்வளவு பொருத்தம் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்.

மழைதான் வேண்டும்

வெண்ணாறு பாசனப் பரப்பில் கடைமடைப் பகுதி முழுவதிலுமே கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நேரடி விதைப்பு. அங்கே நாற்றுவிட்டு நடுவதில்லை. சென்ற ஆண்டு வழக்கமான நாளில் தண்ணீர் திறந்தார்கள். அந்தத் தண்ணீர் வாய்க்கால் தலைப்புக்கு எட்டிய சில கிராமங்களில்கூட விவசாயிகள் அதை வயலுக்கு விடாமல் மதகை அடைத்து வைத்திருந்தார்கள். அது வயலில் புகுந்தால் விதைப்பு வயல் வீணாகிவிடும் என்பதுதான் காரணம். மேட்டூர் தண்ணீரை ஆற்றோடு செல்லவிட்டு விவசாயிகள் மழைக்கு வேண்டிக்கொண்டிருந்தார்கள். ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கலாமா என்பதை முடிவுசெய்ய இந்த நிலவரத்தையும் கவனிக்க வேண்டும். விதைப்பு நேரத்தில் மேட்டூர் தண்ணீர் புழுதி உழவுக்குப் பகையாகிவிடும் என்பது கிட்டத்தட்ட மூன்று லட்சம் ஏக்கர் பரப்பின் நிலவரம்.

காவிரிப் படுகையில் குறுவை நெல் சாகுபடி செய்பவர்கள் காவிரி நீரை நம்புவதில்லை. ஜூன் 12-ல் தண்ணீர் திறந்தாலும், மாதக்கணக்கில் அது தள்ளிப்போனாலும் குறுவைச் சாகுபடி சுமார் இரண்டரை லட்சம் ஏக்கரில் நடந்துவிடும். ஆழ்துளைக் கிணற்று நீரைக் கொண்டு இந்தச் சாகுபடி. அப்போது விவசாயிகள் கோருவது தடையில்லாத மும்முனை மின்சாரம்; காவிரி நீரல்ல.

குறுவையைத் தவிர்த்து நேராக சம்பா சாகுபடிக்குச் செல்பவர்கள் வடகிழக்குப் பருவ மழையை நம்புகிறார்கள்; மேட்டூர் நீரை நம்புவதில்லை. ஆற்றில் காவிரி நீர் வந்தாலும் ஆழமாகிப்போன நம் ஆறுகளில் அது வாய்க்கால் தலைப்புக்கு எட்டாது. அப்படியே தப்பித்தவறி வாய்க்காலுக்குள் வந்துவிட்டால், அந்தத் தண்ணீர் கிராமத்தின் கடைமடைக்கு எட்டாது. எட்டிவிட்டது என்றே வைத்துக்கொண்டாலும் அது வயல் மடையில் வாய் வைப்பதற்குள் ஆற்றில் வரும் முறைத் தண்ணீர் நின்றுவிடும். ஐந்து நாட்கள் கழித்து அடுத்த முறை தண்ணீர் வரும்போதும் இப்படியே சொல்லிவைத்ததுபோல் திரும்பவும் நடக்கும். ஆற்றில் வரும் காவிரி வயலுக்குள் வராது.

மேட்டூரிலிருந்து விடுதலை

குறுவையை நச்சாமல் சம்பா சாகுபடி செய்பவர்கள் அறுவடை முடிந்த கையோடு கோடைச் சாகுபடிக்கு தை மாதக் கடைசியில் நாற்றுவிடுகிறார்கள். மேட்டூர் அணையை ஜனவரி 28-ல் மூடிவிடுவதால் இந்தக் கோடைச் சாகுபடி முழுக்க முழுக்க ஆழ்துளைக் கிணற்றையும் மின்சாரத்தையும் நம்பியே நடக்கிறது. இந்தச் சாகுபடிப் பரப்பும் காவிரிப் படுகையில் இரண்டு லட்சம் ஏக்கரை எட்டும். இப்படி நீங்கள் எந்தக் கணக்கை வைத்து ஆராய்ந்தாலும் காவிரிப் படுகை மேட்டூர் நீரிலிருந்து தன்னைக் கிட்டத்தட்ட விடுவித்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். விவசாயிகளிடமிருந்து அரசு ஒரு ஆண்டில் ஐந்து மூட்டை நெல் கொள்முதல் செய்தால் அதில் இரண்டு மூட்டை மேட்டூரிலிருந்து அரசு வழங்கிய காவிரி நீரால் விளைந்ததல்ல. விளையும் நெல்லில் ஐந்தில் இரண்டு பங்குக்கு காவிரி நீர் காரணமல்ல. இந்த நிலவரத்தில் ஜூன் 12-ல் மேட்டூர் அணையைத் திறக்கவில்லையே என்று எத்தனை காவிரிப் படுகை விவசாயிகள் கவலைப்படுவார்கள்?

வழக்கமான ஜூன் 12-ல் தண்ணீர் திறந்தால் ஆழ்துளைக் கிணறு இல்லாத கடைமடையிலும் குறுவைச் சாகுபடி நடக்கும்; அந்த அளவுக்கு வேலைவாய்ப்பும் நெல் உற்பத்தியும் பெருகும் என்று நீங்கள் சொல்லக்கூடும். குறுவைப் பரப்பு சொற்ப அளவில் பெருகக்கூடும், உற்பத்தியும் அதை ஒட்டி சொற்பமாகக் கூடலாம். ஆனால், அது அறுவடைக்கு வரும் ஐப்பசி மாதம் நெல்லைப் பாதுகாக்கவும், விற்கவும், அடுத்து வரும் தாளடி நடவுசெய்யவும் விவசாயிகள் படும் இன்னலுக்கு அந்த சொற்ப லாபம் ஈடாகாது. எவ்வளவு ஈரமானாலும் எடை வைத்து மூட்டையைத் தைக்கும்போது அது முளைக்காமல் இருக்க அரைப்படி யூரியாவை அதில் கொட்டிக் கொள்முதல் செய்த அந்தக் காலம் மீண்டும் வராது. நெல் மிதமிச்சமாக இருப்பு இருக்கும்போது குறுவைப் பரப்பை அதிகரிப்பது பற்றி அரசுக்குத் தயக்கமிருந்தால் அதுவும் நியாயம்தானே!

- தங்க.ஜெயராமன், ‘காவிரி வெறும் நீரல்ல’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்