பொதுவாழ்வில் தனது தலைவராகவும் வழிகாட்டி யாகவும் ஏற்றுக்கொண்ட அண்ணாவின் அகால மறைவு, கையறு நிலையில் கதறித் துடித்த அன்புத் தொண்டர்கள், கொள்கைவயப்பட்ட ஆட்சிக்குக் குந்தகம் நேருமோ என்று கவலையுற்ற கட்சியின் மூத்த தலைவர்கள்… இவற்றுக்கு இடையிலேதான் 1969 பிப்ரவரி10-ல் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் மு.கருணாநிதி. அவரது வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டும் என்றால், ‘முள்முடி’ சூட்டப்பட்டது. தாயற்ற சிறுமியைப் போல பெரும்பளுவைச் சுமக்கலானார்.
1969-லும் ஆளுநர் மாளிகையில் மிகவும் எளிமையான முறையில்தான் பதவியேற்பு விழா நடந்தது. அதையடுத்து, கி.வீரமணியின் அடையாறு இல்லத்தில் தங்கியிருந்த பெரியாரிடமிருந்து மட்டும் கருணாநிதி வாழ்த்துகளைப் பெறவில்லை; எதிர்க்கட்சித் தலைவர்களான காமராஜர், பக்தவத்சலம் ஆகியோரிடமும் தோழமைக் கட்சித் தலைவர்களான ராஜாஜி, காயிதே மில்லத் ஆகியோரிடமும் நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார் கருணாநிதி. தோழமைக் கட்சிகளின் மூத்த தலைவர்களுக்கு மதிப்பளிப்பதும் எதிர்க்கட்சிகளுடனான நட்புறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் தமிழக அரசியலில் அப்போதே அழுந்தப் பதிக்கப்பட்ட முன்னோடித் தடங்கள்.
உரிமை முழக்கம்
அப்போதும்கூட ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே முட்டல் மோதல் போக்குதான் நடந்துகொண்டிருந்தது. பிரதமர் இந்திரா காந்தி, தமிழகத்தின் புதிய முதல்வரான கருணாநிதியை ஒன்றிய அரசோடு தகராறு செய்யக்கூடியவராகத்தான் பார்த்தார். அந்த ஐயப்பாடுகளுக்கு கருணாநிதி சொன்ன பதில், தமிழக அரசியலின் முழக்கமாகவே மாறிப்போனது. அந்தப் பதில்தான், ‘உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல்கொடுப்போம்’. உறவுக்குப் பின்னாலேதான் உரிமை.
கருணாநிதி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டபோது அவரது ஆட்சிக் காலம் எப்படியிருக்கும் என்பதைவிடவும் கட்சி பிளவுபடுமா என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருந்தது. தன் பெயரே ஒரு கெட்ட வார்த்தையாகத்தான் அரசியல் உலகத்தில் சித்தரிக்கப்பட்டது என்று தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் கருணாநிதி. ஆனால், அதற்கெல்லாம் சோர்வடைந்துவிடக்கூடியவராக அவர் இல்லை. அதே நேரத்தில், தனக்குக் கிடைத்த பெரும்பான்மைப் பலத்தைச் சர்வாதிகார வலிமையாக ஆக்கிக்கொள்ள நினைத்திடாமல் எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு ஆட்சியையும் கட்சியையும் நடத்திடவே எல்லா வகையிலும் முயன்றதாக அவர் கூறியிருக்கிறார்.
இன்றுபோல் அன்றும்
இன்று தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருக்கும் திமுக, பெருந்தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது என்றால், அன்று கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது வறட்சி நிலையோடு போராட வேண்டியிருந்தது. கருணாநிதி முதல்வரானதும் கூட்டப்பட்ட முதலாவது சட்டமன்றத் தொடரிலேயே ஒன்றிய அரசு உடனடியாக வறட்சி நிதியை அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக நிதியுதவியும் உணவு தானியங்களும் கோரி தமிழ்நாட்டின் நிதியமைச்சரும் வேளாண் துறை அமைச்சரும் டெல்லிக்கு விரைந்தார்கள். கோரிக்கை மறுக்கப்படவில்லை. 20,000 டன் அரிசியை வழங்க அன்றைய ஒன்றிய அரசு முன்வந்தது.
வறட்சி நிலை துயர் தணிப்போடு அம்மைநோய்த் தடுப்பிலும் முன்னின்று செயல்பட்டது திமுக தலைமையிலான அன்றைய அரசு. அம்மைக் குத்திக்கொள்ளும் திட்டம் 1963-லேயே நடைமுறைக்கு வந்துவிட்டாலும் திமுக ஆட்சியில் அது மேலும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டது. மற்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் சில ஆண்டுகளில் கைவிடப்பட்டுவிட்டாலும் தமிழகம் தொடர்ந்து செயல்படுத்தியது. அதன் விளைவாக அம்மைநோய் அறவே நீங்கிய மாநிலமாகத் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியானது. அதற்கு முக்கியக் காரணம், அம்மைப்பால் தயாரிப்பில் தமிழகம் முன்னோடியாக இருந்ததுதான். சென்னை கிங் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட அம்மைப்பால் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அது சென்றடைவதற்குள் வீரியம் இழந்துவிடுவதாகக் கண்டறியப்பட்டதும் திரவ வடிவில் அனுப்புவதற்குப் பதிலாகக் குளிர்நிலையில் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
1963-ல் தமிழகத்தில் அம்மைத் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,559. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற 1967-ல் அந்த எண்ணிக்கை 71 ஆகக் குறைந்தது. கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்ற 1969-ல் அம்மை காரணமான உயிரிழப்பு பூஜ்ஜியமானது. 1969-ல்கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றது ஒரு அரசியல் தலைவராக அவருடைய வெற்றி. ஆனால், அந்த ஆண்டில் தமிழகத்தில் அம்மைநோயால் ஒருவர்கூட இறக்கவில்லை என்பது ஒரு முதல்வராக அவர் சாதித்துக்காட்டிய வெற்றி. உலக சுகாதார நிறுவனமே தமிழ்நாட்டை அன்று பாராட்டியது. அம்மை ஒழிப்புத் திட்டத்தைக் கைவிட்ட மாநிலங்கள் பிறகு தமிழகத்தைப் பார்த்துத் தாங்களும் பின்பற்றத் தொடங்கின. கருணாநிதியின் முதலாவது ஆட்சியாண்டில் அம்மைநோய்த் தடுப்பில் தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டியது. இன்று ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அவ்வாறு முன்னுதாரணமாகட்டும்.
வரியில்லாத பட்ஜெட்
மீண்டும் முதல் மாதத்துக்கே வருவோம். முதலாவது சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. காமராஜரின் இலவசக் கல்வித் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டது. காமராஜர் காலத்தில் எஸ்எஸ்எல்சி வரை வழங்கப்பட்டுவந்த இலவசக் கல்வியானது, கருணாநிதி பொறுப்பேற்ற முதல் மாதத்தில் புகுமுக வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டது. புதிய அமைச்சரவையின் நிதிநிலை அறிக்கை புதிய வரிகள் அல்லாததாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்ற முதல் மாதத்துக்குள் புதுவை ஒன்றியப் பிரதேசத்தின் சட்டமன்றத் தேர்தலும் நடந்துமுடிந்தது. திமுக 15 இடங்களில் வெற்றிபெற்று, கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து ஆட்சியமைத்தது. காலையில் ஒரு முதல்வர், மாலையில் ஒரு முதல்வர் என்றிருந்த புதுவையில் முதன்முறையாக நிலையான ஆட்சியை அளித்த பெருமையும் திமுகவுக்குக் கிடைத்தது.
இன்றுபோலவே அன்றும் வங்க அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் மோதல் உச்சக்கட்டத்தில் இருந்தது. ஆளுங்கட்சி தயாரித்து அளித்த உரையில் சில பகுதிகளை வாசிக்க ஆளுநர் மறுத்தார் என்பது தேசிய அளவில் மிகப் பெரும் பிரச்சினையானது. வங்கத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஆதரவுக் குரல் கொடுத்தது திமுக. கருணாநிதி முதல்வராகப் பொறுப்பேற்றதும் சட்டமன்றத்தில் ஆளுநர் நிகழ்த்திய முதல் சட்டமன்ற உரையின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வர் என்ற முறையில் கருணாநிதி அன்று அளித்த பதிலில் இன்றும் திமுக விடாப்பிடியாகத்தான் இருக்கிறது: ‘ஒன்றிய ஆட்சிக்கு ஒத்துழைப்பை நல்கும் அதே வேளை அந்த ஒத்துழைப்பானது ஒரு சார்பிலிருந்து கிடைக்கக்கூடிய ஒத்துழைப்பாக இருக்க முடியாது; அது இரு சார்பிலும் ஒருவருக்கொருவர் அளிக்கக்கூடிய ஒத்துழைப்பாகவே அமைய முடியும்.’
செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in
ஜூன் 3: மு.கருணாநிதியின்பிறந்த நாள்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago