சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 40: பழங்கதைகளைப் பேசுங்கள்; அசைபோடுங்கள்!

By செய்திப்பிரிவு

என் மகன் அமெரிக்காவில் இருந்து கடந்த ஒரு வருடமாக தினமும் தவறாமல் என்னுடன் பேசுகிறான். முன்பெல்லாம் வாரம் ஒரு முறை. ஆனால், இப்போது அரட்டை அடிக்கிறோம். என் தினசரி டானிக் அது.

நேற்று அவன் ஒரு சங்கதி சொன்னான். அவனது நண்பர்கள் பலரின் பெற்றோர் இந்தியாவில் தங்கி இருப்பவர்கள், என் மாதிரி. சிலர் துணையை இழந்து. இந்த கரோனாவால் மன உளைச்சலுக்கு ஆளாகித் தவிக்கிறார்கள். எந்த விதத்தில் அவர்களுக்கு உதவுவது என்று பிள்ளைகளுக்குத் தெரியாமல் தவிக்கிறார்கள் என்றான். இது என் நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்றது.

எத்தனை மனக் கோட்டைகள் மணல் கோட்டைகளாகச் சரிந்தன. எல்லாம் சொன்னால்தான் உங்களுக்குப் புரியும். இன்று நானும் இதே தனிமையில் இருந்தாலும் எப்படி மீண்டேன் தெரியுமா? அதற்கு முன் 2019-ல் இருந்து நடந்தவற்றை விவரிக்க வேண்டும். எனக்கு வீட்டை நடத்துவதில் சலிப்பு ஏற்பட்டது. முதியோர் குடியிருப்பில் போய் தங்க வேண்டும். என்ன சமையல், உப்பு இருக்கா, புளி இருக்கா என்று கவலைப்படாமல் என் வயதை ஒத்தவர்களோடு பேசி ஸ்லோகம், பஜனையில் தொடங்கி, சாரம், சீட்டு, தாயக்கட்டம் விளையாடிக் கவலையற்று வாழ ஆவலாக இருந்தேன். அத்தகைய குடியிருப்புகளைப் பற்றி விசாரித்து, சிலவற்றைப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். சென்னை அருகிலேயே ஒன்று வாடகைக்குக் கிடைத்தது. அறிந்தவர்கள் சிலர் அங்கு இருந்தார்கள்.

உரிமையாளரைச் சந்தித்துப் பேசி ஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டபோது, எனக்கு ஓர் அதிர்ச்சி. ஏற்கெனவே இரண்டு முறை மாரடைப்பு, போதாக்குறைக்கு இடுப்பு மூட்டு முறிந்து மூட்டு மாற்று சிகிச்சை. இப்போது மூன்றாம் ‘அட்டாக்’கின் அறிகுறிகள். இதே துறையில் பணி செய்ததால் என்னால் அறிய முடிந்தது. உடனே மருத்துவமனையில் சேர்ந்து நானே குழந்தைகளுக்கும் தெரிவித்தேன். (போன முறைகளில்கூட நானேதான் மருத்துவமனையில் சேர்ந்தேன். என் தாயார் சொல்வதுபோல் குனிந்து நமஸ்கரித்து நிமிர்ந்து, எனக்கு நானே ஆசீர்வாதம் செய்துகொள்ளும் ராசியாம் எனக்கு).

படுக்கையில் படுத்து என் உதவியாளருடன் பேசியதுதான் நினைவு இருக்கிறது. என் கண்கள் மேலே சொருகி வாய் பிளந்துவிட்டதாம். நினைவு திரும்பியபோது விலா எலும்பில் பயங்கர வலி. முகம் மூடி பிராணவாயு, நடு மார்பில் வட்டமாக இரண்டு சூட்டுக் காயங்கள். ஆஹா.. மேலுலகத்தை எட்டிப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன். பெண்ணும் பிள்ளையும் பதறி, பறந்து வந்தார்கள். படிப்படியாக குணமடைந்து வீடு திரும்பினேன். தாதியை நியமித்து, கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார்கள். பிறகு, எம்ப்ராய்டரி செய்யும் அளவுக்குத் தேறிவிட்டேன்.

குடிபோகும் ஏற்பாட்டைச் சற்று தள்ளிப்போட்டேன். மார்ச் முதல் வாரத்துக்குப் பதிலாக ஏப்ரல் முதல் வாரம் என்கிற உறுதியுடன் பால் காய்ச்ச நல்ல நாள், வாஷிங் மெஷின், குளிரூட்டும் சாதனம் பொருத்துதல் எல்லாம் முடிந்து புது வருடப் பிறப்பைக் கண்டிப்பாகக் குடியிருப்பில்தான் கொண்டாடுவேன் என்கிற எதிர்பார்ப்புடன் இருந்தபோதுதான் இந்த உலக மகா அதிர்ச்சி.

கரோனா அசுரனின் படையெடுப்பு வீட்டிலேயே முடக்கிப்போட்டது. வீட்டு வேலைக்குக்கூட ஆளின்றி, வீடு நடத்தத் தவித்தேன். சரி பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், டெங்கு மாதிரி அலையடித்துப் போய்விடும் என்றுதான் நினைத்தோம். கொஞ்சம் கொஞ்சமாக இதன் தீவிரம் புரியத் தொடங்கியது. இது ‘ரக்தபீஜன்’ - தன்னைத் தானே பெருக்கிக் கொண்டது.

நானோ ஓர் ‘ஊர் சுற்றி’. ஒரு மாதத்தில் ஒரு முறையாவது, குறைந்தபட்சம் 4 - 5 நாட்களுக்குக் கிளம்பிவிடுவேன். ஏதாவது ஒரு ஊர், சில கோயில்கள் என்று கூட வர என் ஆப்த சிநேகிதியோடு காரில் கிளம்பி, ஹோட்டல்களில் தங்குவோம். உள்ளூர் கோவில்களும் விலக்கல்ல. பஜனை வகுப்பு, அந்தக் குழுவோடு மாதம் ஒரு முறை நல்ல உணவகத்தில் சாப்பிடுதல். இவையெல்லாம் ‘ஸ்விட்சை’ அணைத்ததுபோல் திடீர் முடிவுக்கு வந்தன. சில உறவினர், நீண்ட நாள் சிநேகிதி இவர்களை கரோனாவுக்குப் பலி கொடுத்தேன். அடுத்து யாருமின்றி, முகமுழிகூடக் கிடைக்காமல் கோவிந்தாக் கொள்ளி கொடுமை.

நடு இரவில் எழுந்து, ‘எதற்காக மீண்டு வந்தேன்? இந்த கரோனா அனுபவத்திற்காகவா?’ இருண்ட பாரம் என்னை அழுத்துவது போன்ற உணர்வு. என் தூக்கத்தை மெல்ல மெல்ல அரித்துக்கொண்டே போனது. சுய பச்சாதாபம் மேலிடத் தொண்டை அடைத்தது. எனக்கே என்னைப் பிடிக்கவில்லை. இன்று பல முதியோர்களுடைய வாழ்க்கை இந்த நிலையில்தான். ஒருநாள் ஞானோதயம் பிறந்தது. இந்தப் புதைகுழியிலிருந்து நானாக வெளிவரவில்லை என்றால் என்னுடன் தொடர்பு உள்ளவர்களையும் உள்ளே இழுத்துவிடுவேன் என்று உணர்ந்தேன். என் வாழ்வில் நிகழ்ந்தவற்றைம், நினைவுகளையும் யோசிக்கத் தொடங்கினேன்.

ஒரு நினைவு மற்றொன்றைத் தூண்ட சங்கிலித் தொடராக நினைவுகள் மனத்தில் நடமாடத் தொடங்கின. பரணில் கிடக்கும் ஒரு ட்ரங்குப் பெட்டியில் ஏதோ ஒன்றைத் தேடுவதற்காகக் கீழிறக்கித் திறப்போம். தேடியது தவிர, சில கடிதங்கள், புகைப்படங்கள், ஒரு பழைய புடவைத் துண்டு, சின்னப் பெட்டியில் ஒரு வெள்ளி மோதிரம், ஓலைப் பெட்டியில் சோழிகள் இப்படிப் பல கிடைக்குமல்லவா? என் மனப் பெட்டியில் இப்படி மறைந்து கிடந்தவை பல வெளிவந்தன. ஒவ்வொன்றுக்கும் பின்னால் ஒரு கதை, ஒரு சுவாரஸ்யமான விஷயம்.

இந்த நினைவுகளைக் குழந்தைகளோடு பேசும்போது பகிர்ந்துகொண்டேன். அவர்களும் நான் பேச்சுவாக்கில் சொல்லியிருந்த பல அனுபவங்களை ஞாபகப்படுத்திக் கேட்க ஆரம்பித்தார்கள். ‘‘அம்மா இதையெல்லாம் எழுதி வையேன்’’ என்று என் மகள் சொன்னாள். ‘‘சுலபம் அம்மா... நீ ஒரு நல்ல கதைசொல்லி. அதனால், பேசுவது போலவே எழுது. பாட்டியை (என் தாயார்) பற்றி எழுது. சண்டைக் காலத்து கிராமத்து அனுபவங்களை எழுது. எங்களுக்கும் தெரிய வேண்டாமா?’’ என்றாள்.

முதலாக என் மனத் தளர்வை எப்படி வெல்ல முயன்றேன் என்பதை ஒரு சிறு கட்டுரையாக எழுதினேன். அதுவரை நான் ஆங்கிலத்தில் மருத்துவ இதழ்களில் மட்டுமே எழுதின அனுபவம். தமிழில் எழுதியதே இல்லை. நிறைய தமிழ் எழுத்தாளர்களைப் படித்த அனுபவம் உண்டு. இந்த ஆச்சரியத்திலிருந்து மீளுவதற்கு முன் தொடர் எழுதும் வாய்ப்பு. இதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன். ஆங்கிலத்தில் 'Life line' என்று கூறுவார்கள். இதைப் பிடித்து இருளிலிருந்து வெளிவந்தேன்.

பலருக்கும் தெரிந்த கதைதான். துரத்தும் புலியிடமிருந்து கிணற்றில் குதித்தவனின் கதை. கீழே தண்ணீரில் ஒரு முதலை. விழும்போது ஒரு வேரைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறான். அப்போது ஒரு எலி வெளிவந்து அந்த வேரைக் கடிக்கத் தொடங்குகிறது. வானத்தை நோக்கி கூச்சலிட வாயைத் திறக்கிறான். அப்போது மரக் கிளையில் உள்ள தேனடையிலிருந்து தேன் சொட்டி அவன் நாவில் விழுகிறது. இத்தனை ஆபத்திலும் ஒரு இனிமை... சுவைக்கிறான்.

இந்தக் கதையின் முடிவு என்னவென்று யாருக்குத் தெரியும்? எனக்குக் கிடைத்த தேன் துளி எனக்குள் தெம்பை ஊட்டியது. கல்லிடுக்கில் வேறொரு வேர் கிடைக்குமென்று தேடினேன். அந்தத் தெம்பு என்னை வெளியேற்றிவிட்டது. இந்தத் தொடர் மூலம் என்னைப் புதுப்பித்துக்கொண்டேன்.

பிள்ளைகளே! பெற்றோருடன் பேசுங்கள், கரோனாவைத் தவிர மற்றதெல்லாம். பழைய நினைவுகளைத் தூண்டுங்கள். இளம்பருவ அனுபவங்கள், கல்யாணமான புதிதில் நடந்தவை, கூட்டுக் குடும்ப நிகழ்வுகள், உங்கள் தாத்தா, பாட்டிகளிடமிருந்து கற்றவை, கற்கத் தவறியவை போன்றவற்றைத் தெரிந்துகொள்ளுங்கள்.

விட்டுப்போன உறவுகளைத் தேடிப் பிடியுங்கள். எல்லாப் பழங்கதைகளையும் அவர்கள் சொல்லும்போது குரல்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள். நடைப்பயிற்சி, உடல் தசைகளை உறுதிப்படுத்துவதுபோல், இந்த மனப் பயிற்சி அவர்களது மூளையின் திசுக்களை உறுதியாக்கும்; சந்தேகமே இல்லை.

பெற்றோர்களே! ‘இதுவும் கடந்து போகும்’ என்று எண்ணாமல், ‘இதையும் கடந்து போவோம்’ என்கிற தன்னம்பிக்கையுடன் இருங்கள். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்கிற புத்துணர்ச்சியுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்குங்கள்!

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு: joenitya@yahoo.com.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்