சில நாட்களுக்கு முன்னர், அரபுக் கல்வியாளர்களுக்காக குவைத்தில் நடைபெற்ற, ஐ.எம்.எஃப். கருத்தரங்கில் கலந்துகொண்டேன். மத்தியக் கிழக்கு நாடுகளின் கல்வியில் தொழில்நுட்பப் போக்குகள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து அரை மணி நேரம் விவாதித்தோம். அப்போது எகிப்தைச் சேர்ந்த கல்வி அதிகாரி, கையை உயர்த்தி, தனிப்பட்ட முறையில் ஒரு கேள்வியைக் கேட்கலாமா என்று என்னிடம் கேட்டார். “அமெரிக்காவில் மசூதிகளை மூட வேண்டும் என்றும் டொனால்டு டிரம்ப் கூறியிருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றார், மிகுந்த வருத்தத்துடன். “நமது குழந்தைகள் இதைத்தான் கற்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோமா?” என்று என்னிடம் கேட்டார். பன்மைத்தன்மை தொடர்பாக அமெரிக்கா கொண்டிருக்கும் உறுதிப்பாடு ஆழமானது என்பதால், டொனால்டு டிரம்ப் ஒருபோதும் அமெரிக்க அதிபராகப் போவதில்லை என்று அவருக்கு உறுதியளிக்க முயன்றேன்.
அமெரிக்கா (மற்றும் ஐரோப்பா)வுக்குள் முஸ்லிம் களை அனுமதிக்கக் கூடாது என்று சொல்வதன் மூலம் முஸ்லிம் உலகைத் தனிமைப்படுத்த முயற்சிக்கும் டிரம்ப், ஐஎஸ் அமைப்பின் ரகசிய உளவாளிபோல் செயல்படுகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வசிக்கும் ஒவ்வொரு முஸ்லிமும், தான் தனிமைப் படுத்தப்பட்டதாக உணர வேண்டும் என்றுதான் ஐஎஸ் அமைப்பு விரும்புகிறது. அப்படி நடந்துவிட்டால், இனிமேலும் ஆள் சேர்க்க வேண்டிய அவசியம் ஐஎஸ்ஸுக்கு இல்லை. ஐஎஸ் மற்றும் இஸ்லாமியப் பயங்கரவாதம் ஆகியவை முஸ்லிம்களின் பெரும் பிரச்சினைகள். அவற்றை முஸ்லிம்களால்தான் தீர்க்க முடியும். இப்படியிருக்க, ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அமெரிக்கர்களின் எதிரிகளாகக் கட்டமைப்பது, முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும்.
நம்பகமான கூட்டணியா?
சரி, டிரம்ப் சொல்வது தவறு என்றால், அதிபர் ஒபாமாவின் நிலைப்பாடு மட்டும் சரியா? பாதி சரி. ஐஎஸ்ஸை வீழ்த்தும் முயற்சியில் நிரந்தரத் தீர்வு வேண்டும் எனில், ஒரு கூட்டணியின் துணை தேவை. மிதவாத சன்னி முஸ்லிம் படைகள் இராக்கின் ஒவ்வொரு வீடாகச் சென்று ஐஎஸ்ஸுக்கு எதிராகப் போரிட வேண்டும். ஐஎஸ் அமைப்பு விடுக்கும் செய்திகள் சட்டபூர்வமற்றவை என்று சன்னி மதத் தலைவர்கள் ஒவ்வொரு முஸ்லிமின் மனதிலும் பதிய வைக்க வேண்டும். இராக்கின் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் சன்னி முஸ்லிம்களுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கும் இடையில் சுமுகமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஈரான் முன்வர வேண்டும். அப்போதுதான் ஈரானிடம் இருந்து தங்களைக் காக்கும் கேடயமாக ஐஎஸ் அமைப்பைக் கருதாமல், அதை எதிர்த்துப் போர் புரிய சன்னி அரேபியர்கள் முன்வருவார்கள்.
“சீட்டு விளையாட்டில் யார் ஏமாளி என்று உனக்குத் தெரியாது. அது நீயாக இருக்கலாம்” என்று சொல்வார்கள். ஒபாமா சொன்னதில் ஏற்றுக்கொள்ளத்தக்க விஷயம் இதுதான். இராக் மற்றும் சிரியாவில் நாம் அந்த விளையாட்டைத்தான் விளையாடிக்கொண்டிருக்கிறோம். நமது கூட்டணி நாடுகள் ஐஎஸ்ஸை வீழ்த்த வேண்டும் என்று நாம் விரும்பலாம். ஆனால், அந்நாடுகளுக்கு அது முதன்மையான நோக்கம் அல்ல.
ஐஎஸ் பிடியிலிருந்து மொசூல் நகரை விடுவித்து இராக்கின் ஷியா அரசிடம் ஒப்படைப்பதற்காகக் குர்து வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துச் சண்டையிட மாட்டார்கள். அதைத் தங்கள் வசம் வைத்துக் கொள்ளவே விரும்புவார்கள். துருக்கியர்கள் குர்து வீரர்களுக்குத் தடை ஏற்படுத்தவே விரும்புகிறார்கள். ஐஎஸ்ஸை நசுக்க வேண்டும் என்று ஈரானியர்கள் விரும்புகிறார்கள். எனினும், ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் மிதவாத சன்னி முஸ்லிம்கள் வசம் வந்துவிடும் என்றும், ஒரு நாள் இராக்கிலும் சிரியாவிலும் உள்ள தங்கள் கூட்டுப் படைகளுக்கு அது ஆபத்தாகிவிடும் என்றும் ஈரான் அஞ்சுகிறது.
அதேபோல், ஐஎஸ் அழிய வேண்டும் என்று சவூதி அரசு கருதலாம். எனினும், யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களை நசுக்குவதுதான் தற்போது அந்நாட்டுக்கு முதன்மையான விஷயமாக இருக்கிறது. 1,000 சவூதி இளைஞர்கள் ஐஎஸ் அமைப்பில் இணைந்திருக்கிறார்கள். புரூக்கிங்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வின்படி உலகிலேயே ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான ட்வீட்டுகள் அதிகம் வருவது சவூதி அரேபியாவிலிருந்துதான் என்று தெரியவந்திருக்கிறது. எனவே, ஐஎஸ்ஸுக்கு எதிரான மோதல் விஷயத்தில் அந்நாடு கவனமாக இருக்கிறது. ரஷ்யர்கள் ஐஎஸ் அமைப்புடன் போரிடுவதாகச் சொல்லிக்கொண்டாலும் அவர்கள் சிரியாவில் இருப்பது பஷார் அல் அஸாத் அரசைக் காக்கவும் அவரது எதிரிகளை வீழ்த்தவும்தான்.
அச்சுறுத்தும் ஐஎஸ்
இது ஒன்றும் ‘டி-டே’கூட்டணி (இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்த பிரான்ஸில் களமிறங்கிய நாடுகளின் கூட்டணி) அல்ல. முழுவதும் கோமாளிகள் அடங்கிய இந்தக் கூட்டணியில் யாரும் ஐஎஸ் அமைப்பை வீழ்த்தவோ, அந்த அமைப்புக்குப் பதிலாகப் பல இனக்குழுக்கள் அடங்கிய ஜனநாயக அமைப்பை இராக்கிலும் சிரியாவிலும் ஏற்படுத்தவோ விரும்பவில்லை. ஐஎஸ் ஆட்கள் சாதுரியம் மிக்கவர்கள்; மிக மோசமானவர்கள். எத்தனை ஆண்டு காலம் அவர்கள் அந்தப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் கொடூரத் தன்மை அதிகரிக்கும்.
நமது (அமெரிக்க) தரைப் படைகள் போதுமான அளவுக்கு இறக்கப்பட்டால், ஐஎஸ்ஸை அழித் தொழிப்பது எளிது. ஆனால், அமெரிக்கப் படைகளுக்கு மாற்றாக, நம்பகமான உள்ளூர் அரசை நிறுவ நாம் முயன்றாலும், நமது கூட்டணியில் இருப்பவர்கள் வெவ்வேறு நோக்கங்களைக்கொண்டிருக்கும்போது, நாம் என்ன செய்ய முடியும்?
இந்த விஷயத்தில் நான் சில வார்த்தைகளைச் சொல்வேன். ஐஎஸ்ஸுக்கு எதிராகப் போரிடும் தரைப் படைகளுடன் இணைந்துகொள்ளுமாறு சன்னி கூட்டுப் படைகளுக்கு மேலும் அழுத்தம் தரலாம். ஐஎஸ்ஸை சட்டபூர்வமற்றதாக ஆக்குமாறு சவூதி மக்கள் மற்றும் பிற சன்னி மக்களிடம் வலியுறுத்தலாம். இராக் மற்றும் சிரியாவில் ஆக்கபூர்வமான பங்காளியாக ஈரான் நடந்துகொள்ளவில்லை என்றால், அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்போம் என்று எச்சரித்துவிடலாம். ஐஎஸ் சிந்தாந்தம் என்பது, இஸ்லாமின் மிக இறுக்கமான, பன்மைத்தன்மைக்கு எதிரான சலாஃபிஸ இயக்கத்திடமிருந்து நேரடியாக உற்பத்தியாவது. ஷியாக்கள், யூதர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு எதிரான பகைமையை ஊக்குவிப்பது. இந்த அமைப்பின் இறுக்கமான மதக் கொள்கைகளிலிருந்து தாக்கம் பெற்றுக்கொண்டு சிலர் படுகொலைகளைச் செய்வது, மக்களை முடக்கிப்போடுவது என்று இறங்கிவிடுகிறார்கள். இவற்றைச் சரி செய்ய வேண்டியது முஸ்லிம் இயக்கங்கள்தான். ஏனெனில், ஜிகாதிகளின் பயங்கரவாதம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தனிமைப்படுத்துகிறது.
எதிர்க் குரல்!
சில நல்ல அறிகுறிகள் உண்டு. அமெரிக்காவின் ‘நேஷனல் பப்ளிக் ரேடியோ’ வெளியிட்ட செய்தி இது. “கிழக்கு லண்டனின் சப்வே பகுதியில் மூன்று பேரைக் கத்தியால் குத்திய மனிதன் ‘இது சிரியாவுக்காக’என்று கத்தினான். போலீஸாரால் அவன் கைவிலங்கிடப்பட்டபோது, அங்கிருந்த ஒருவர் அவனை நோக்கிச் சத்தமிட்டார். “நீ ஒன்றும் முஸ்லிம் இல்லை. நிச்சயம் முஸ்லிம் இல்லை ப்ரோ”. மீண்டும் மீண்டும் அவ்வாறு சத்தமிட்டார். அப்படிச் சத்தமிட்ட நபர் யாரென்று தெரியவில்லை. ஆனால், ‘யூ எய்ன்ட் நோ முஸ்லிம் ப்ரோ’எனும் ஹேஷ்டேக் உலகமெங்கும் டிரெண்டாகப் பிரபலமடைந்தது” என்றது அந்த வானொலிச் செய்தி. இந்த முழக்கத்தை எழுப்பியிருப்பவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதில் சந்தேகமில்லை. நாம் எதிர்பார்க்கும் விஷயம் இதுதான்.
டிரம்புக்கு வருவோம். அவரது இனவெறி மிக்க, நடைமுறைக்குச் சரிவராத, குழந்தைத்தனமான பேச்சுக் களைக் கேட்கும்போது இதுதான் தோன்றுகிறது. ‘இதெல்லாம் பெரிய அளவிலான விளையாட்டு. போய் ‘கோ ஃபிஷ்’ (சிறிய அளவிலான சீட்டாட்டம்) விளையாடுங்கள்’. அமெரிக்க அரசியல் சூழலையும், ஜனநாயகக் கொள்கைகளையும் மாசுபடுத்துவதன் மூலம் ஐஎஸ் நோக்கங்களுக்குப் பலியாகியிருக்கும் டிரம்ப், ஐஎஸ்ஸை ஒழித்துக்கட்டுவதற்குத் தேவையான கூட்டணியை வழிநடத்தும் விஷயத்தில், அமெரிக்காவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறார்.
‘தி நியூயார்க் டைம்ஸ்’
தமிழில் சுருக்கமாக: வெ. சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago