மூத்த பத்திரிகையாளரும் மார்க்ஸியச் சிந்தனையாளருமான இரா.ஜவஹர் கரோனா தொற்று காரணமாக மே 28 அன்று காலமானார். கல்லூரிக் காலத்திலேயே மாணவர் சங்கத்தில் சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர் அவர். பிறகு சென்னைக்கு வந்து 1976 வரையில் அம்பத்தூர் பணியில் சேர்ந்தபோது தொழிற்சங்கத்தில் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். பின்னர், தமிழ்நாட்டின் முன்னணி நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் பணியாற்றினார். அவர் இதழியலைத் தொழில்முறையாகப் பயின்றவர் இல்லை. தன் சொந்த முயற்சியால் பெரிதும் பாராட்டப்பட்ட பத்திரிகையாளராக உயர்ந்தார். ‘நக்கீரன்’ இதழில் ஜவஹர் எழுதிய ‘கம்யூனிசம்: நேற்று இன்று நாளை’ என்னும் தொடர் 2003-ல் நூலாக வெளியிடப்பட்டது. 2017-ல் அதன் ஆறாம் பதிப்பு வெளியாகும் அளவுக்கு ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்தது. பல இளைஞர்களை இடதுசாரி இயக்கத்தின் பால் ஈர்த்தது.
அதேபோல், சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 கொண்டாடப்படுகிறது அல்லவா? அதன் தொடக்கம், அது எதனால் கொண்டாடப்படுகிறது, மார்ச் 8 என்னும் தேதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவை தொடர்பாகப் பெரிய அளவில் ஆய்வுகளைச் செய்து, ’மகளிர் தினம்: உண்மை வரலாறு’ என்னும் கட்டுரைத் தொடர் எழுதினார். ரஷ்யாவில் 1917 பிப்ரவரியில் நடந்த புரட்சியில் பெண்களின் பங்களிப்பை நினைவுகூர்வதுதான் உலக மகளிர் தினத்தின் நோக்கம் என்பதை நிறுவும் அந்தத் தொடரில் தான் கூறும் தகவல்கள் அனைத்துக்கும் ஆதாரமும் கொடுத்திருப்பார். ‘பாரதி புத்தகாலயம்’ அதை நூலாக வெளியிட்டது. ஆங்கிலம், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிப் புகழ்பெற்றது. எந்த விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதன் அடி ஆழத்துக்குச் சென்று ஆராய்ந்து எழுதும் வழக்கமுடைய ஜவஹர், தன்னுடைய ஆசான் வி.பி.சிந்தன் என்பார்.
இதழியலாளர், எழுத்தாளர், இடதுசாரிச் சிந்தனையாளர் என்பதையெல்லாம் தாண்டி அவர் மிகத் தீவிரமான வாசகர். வாசிப்பை சுவாசிப்பாகக் கருதியவர். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், அம்பேத்கர், பெரியார் ஆகிய பெருந்தலைவர்களைக் கற்றுத் தேர்ந்திருந்தவர். விரிவான, ஆழமான வாசிப்புப் பழக்கம் இருந்ததால் உண்மைத் தகவல்களை ஆதாரத்துடன் விரைவாகத் தேடித் தருவதில் அவருக்குப் பெரும் வல்லமை இருந்தது. எந்தத் தகவலைக் கேட்டாலும் குறைந்த நேரத்தில் தேடி எடுத்துவிடுவார். அவர் ஒரு அபாரமான எடிட்டரும்கூட.
ஜவஹரின் துணைவியார் பேராசிரியர் சி.பூரணம் கடந்த ஆண்டு கரோனா முதல் அலையின்போது மரணித்தார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஏராளமான இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் அவருடைய வீட்டுக்குச் செல்வார்கள். அவர்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராகக் கருதினார். அவர்களுடன் விவாதிப்பார். அவர்கள் மீது பெரும் தாக்கம் செலுத்திய ஆளுமையாகத் திகழ்ந்தார்.
அரசியல் களத்தில் கடைசி வரை இடதுசாரிச் சிந்தனையாளராகவே வாழ்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது கூடுதல் பற்றும் மதிப்பும் கொண்டிருந்தாலும் அனைத்து இடதுசாரிக் கட்சிகள், அமைப்புகளின் மதிப்புக்குரியவராகத் திகழ்ந்தார். அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கத்தவருடனுன் தொடர்ந்து இணக்கமாகச் செயல்பட்டார். விரிவான தளத்தில் அனைத்து ஜனநாயக சக்திகள், சமூக மாற்றத்துக்கான அமைப்புகளுடனும் நட்புறவைப் பேணியதோடு அவற்றின் மீது அக்கறையும் மதிப்பும் கொண்டவராக இருந்தார்.
கடைசிக் காலத்தில் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்தார். கடந்த மாதம் வரைகூட அவரைச் சந்திக்க தோழர்கள் பலர் வந்து சென்றுகொண்டிருந்தனர். நோயின் வலியில் தவித்துக்கொண்டிருந்த அவருக்குத் தோழர்களைச் சந்திப்பதும் பேசுவதுமே ஆறுதலாக இருந்தன. இதழியல் துறை, இடதுசாரி இயக்கம், மற்ற ஜனநாயக இயக்கங்கள் ஆகியவற்றுக்கு ஜவஹரின் மரணம் பெரும் இழப்பு.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago