இந்தியப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் ‘லைஃப் ஆஃப் பை’. எழுத்தாளர் யான் மார்ட்டலின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
ஒரு சின்ன குடும்பம் கதாநாயகன் பையினுடையது. அம்மா, அப்பா, அண்ணன், பை. வாழ்க்கைச் சூழல்களால் பாண்டிச்சேரியைக் காலிசெய்துவிட்டு புறப்படுகிறது பையின் குடும்பம். கப்பலில் பயணம். கடலில் கடும் புயலில் கப்பல் சிக்குகிறது. அம்மா, அப்பா, அண்ணன் எல்லாரையும் பையின் கண் முன் கடல் காவு கொள்கிறது. பை மட்டும் உயிர் தப்புகிறான் ஒரு படகில். கூடவே ஒரு வரிக்குதிரை, ஒரு ஓநாய், ஒரு குரங்கு, ஒரு புலி. யாவும் கப்பலிலிருந்து தப்பியவை. ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவர்கள். எல்லோருக்கும் பசி. முதலில் வரிக்குதிரையை ஓநாய் கொல்லும். அடுத்து குரங்கைக் கொல்லும். அப்புறம் அந்த ஓநாயைப் புலி கொல்லும். இப்போது மிச்சம் இருப்பது புலியும் பையும். கடும் பசி. இருப்பது நடுக்கடலில். அடிக்கடி அவரவர் இருப்புக்கான சண்டை. இதனிடையே மீண்டும் ஒரு புயல். அந்தப் பயணம் எப்படி முடிகிறது?
ஆன்ம விசாரணை நடத்தும் ஒரு ஆத்மார்த்த அனுபவம் ‘லைஃப் ஆஃப் பை’. நிறைய விஷயங்களைப் படம் பேசும். எது கடவுள்? எது எதிரி? முக்கியமாக, ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவர்கள் முற்றிலும் எதிரானவர்களும்கூட எப்படி ஒரு பயணத்தை எதிர்கொள்ள முடியும்?
படத்தில் ரொம்பவும் பிடித்த வசனம் இது. தண்ணீரைப் பார்த்து மிரளும் சிறுவன் பையிடம் அவனுடைய மாமா சொல்வார், “ஒரு வாய் தண்ணி உன்னை மூழ்கடிச்சுடாது; ஆனா, பயம் மூழ்கடிச்சுடும்.”
இயக்குநர் ஆங் லீ இந்தப் படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றார். சென்னை வந்திருந்தபோது அவரைச் சந்தித்தேன். வாழ்க்கைக்கும் பயத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பேச்சு போனது. எழுத்தாளர் யான் மார்டல் நாவலில் குறிப்பிடுவதை ஆங் லீ நினைவுகூர்ந்தார். “பயம்தான் வாழ்க்கையின் உண்மையான எதிரி. பயம் மட்டுமே நம் வாழ்க்கையைத் தோற்கடிக்க முடியும். அது ஒரு புத்திசாலித்தனமான, நயவஞ்சகமான எதிரி... ஈவிரக்கமற்றது அது. உங்கள் மனதின் மிகவும் பலவீனமான இடத்தை இலக்கு வைத்து அது தாக்கும்; அந்த இடத்தைக் கண்டுபிடிப்பதில் அதற்குச் சிரமமேதும் இருப்பதில்லை. அது, எப்போதுமே உங்கள் மனதிலிருந்துதான் தொடங்கும்… பயம் என்பது ஒரு பிரமைதான். ஆனால், அது உங்களைத் தோற்கடித்துவிடுகிறது!”
இன்றைய இந்தியா உண்மையில் உயிரோடிருப்பது இயக்கங்களால் அல்ல; நேர்மையான நோக்கமும், அர்ப்பணிப்புணர்வும் கொண்ட தனிநபர்களே அதன் உயிர்த் துடிப்பாக இருக்கிறார்கள். அவர்களே நாம் சார்ந்திருக்கும் உளுத்துப்போன அமைப்பை இன்னும் நியாயப்படுத்தக் காரணமாகவும் இருக்கிறார்கள். இந்திய அரசியலும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
ஏன் இந்தியாவில் அரசியல் இத்தனை அசிங்கமாக இருக்கிறது? ஏன் பொதுநல நோக்கோடு அசாத்தியமான காரியங்களை நிகழ்த்துபவர்கள் இந்தியாவில் அரசியலுக்கு வெளியே இருக்கிறார்கள்? காரணங்களை அடுக்கலாம். முக்கியமானது பயம். ஆதிக்கத்துக்கும் அநீதிக்கும் எதிராக இந்நாட்டு மக்களை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல் என்ன? மக்களுக்கு ஆதிக்கத்தின் மீதும் அதிகாரத்தின் மீதும் இருக்கும் பயம். பல நூறு ஆண்டுகள் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறை ஆட்சி நிலவிய இந்நாட்டில், நம்முடைய மரபணுக்களிலேயே அடிமைத்தனமும் கோழைத்தனமும் அதீதமாய்ப் படிந்திருக்கின்றன. அதிகார சக்திகள் ஒரு மாய ஆயுதமாகவே பயத்தை இங்கு வளர்த்தெடுத்திருக்கின்றன.
துல்லியமாக இதைக் கவனித்தவர் காந்தி. இந்திய அரசியலுக்கு காந்தி அளித்தவற்றிலேயே ஆகச் சிறந்த பங்களிப்பு இந்தக் கோழைத்தனத்திலிருந்து மக்களை மீட்டெடுத்தது. “பயம்தான் உண்மையான எதிரி” என்றார் காந்தி. “ஒருவன் அச்சத்துக்கு ஆட்பட்டுக் கிடக்கும்வரை அவனால் சத்தியத்தைப் பின்பற்றி அன்பு வழியில் போக முடியாது. கோழைகள் ஒருபோதும் அறநெறியினர் ஆக முடியாது” என்றார். முக்கியமாக, படித்தவர்கள் பயத்துக்கு ஆட்பட்டுக் கிடப்பதைப் பெரும் சாபமாகப் பார்த்தார்.
1915-ல் இந்தியாவைப் புரிந்துகொள்ள நாடு தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காந்தி. பின் சொன்னார்: “இந்தியாவில் நான் அலைந்து திரிந்தபோது ஒன்றைக் கண்டுகொண்டேன். அதாவது, படித்த மக்கள் அச்சத்தில் உறைந்து கிடக்கிறார்கள். பொது இடங்களில் நாம் வாயை மூடிக்கொண்டிருக்கிறோம்… பொதுவெளியில் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுகிறோம்… கடவுள் மட்டுமே நாம் பயப்பட வேண்டியவர்… வேறெந்த மனிதரிடமும் அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் பயப்பட வேண்டியதே இல்லை.”
காந்தி அஹிம்சையைப் போதித்தவர். உயிர் துறக்கும் கடைசி நொடி வரை வன்முறையை எதிர்த்தவர். ஆனால், அதே காந்திதான் சொன்னார், “வன்முறை வெறுக்கத் தக்கது. ஆனால், கோழைத்தனம் வன்முறையைவிடவும் வெறுக்கத் தக்கது!”
ஒரு ரூபாயை நம்மிடமிருந்து ஒருவர் பிடுங்கிச் செல்வதை நம் மனம் ஏற்பதில்லை. நம் உயிரை, உற்ற உறவுகளை, உடைமைகளை, தேசத்தை, நம் எதிர்காலத்தை என்று சகலத்தையும் சூறையாடப் பின்னின்று அனுமதிக்கிறார்கள் ஊழல் அரசியல் வாதிகள். எது போராடவிடாமல் நம்மை அடங்கிப்போக வைக்கிறது? சுயமரியாதையையும் கண்ணியத்தையும் காப்பாற்றிக்கொள்ளும் தைரியம்கூட இல்லையென்றால், நாம் பெற்ற கல்வியால் என்ன பயன்?
வெள்ளம், வெள்ளம், வெள்ளம் என்று எங்கு பார்த்தாலும் அலறல்கள். மனித உயிர் பிறப்பதற்கு முன்பே நீரோடு உறவாடத் தொடங்கிவிடுகிறது. மனித இனம் பெருங்கடலையும் பேராறுகளையும் கையாளக் கற்று குறைந்தது சில ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஒரு வாய் தண்ணீர் நம்மைக் கொல்லக் கூடியது அல்ல; கொல்வது அரசியல்; கொல்வது அரசியலுக்கும் நமக்கும் இடையேயான தூரம்; கொல்வது அரசியல் உணர்வற்ற நம்முடைய அறியாமை; கொல்வது கோழைத்தனம்; கொல்வது பயம்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago