மக்கள் ஆட்சி

By சமஸ்

ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். “அது என்ன நீங்கள் ‘தி இந்து’வில் இப்படி எழுதுகிறீர்கள், ‘முகம் தெரியாத அரசு ஊழியர்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள்; ஆனால், அரசியல்வாதிகளை முகமாகக் கொண்ட அரசாங்கம் என்று ஒன்று இங்கே இல்லவே இல்லை!’ என்று. அரசாங்கம் வேறு; அரசு ஊழியர்கள் வேறா?” இன்னொரு வாசகர், “இது போன்ற பேரிடர்களின்போது அரசாங்கத்தை விமர்சிக்கலாமா?” என்று கேட்டிருந்தார்.

யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, இரு கருத்துகள் பொதுத் தளத்தை ஆக்கிரமித்திருந்தன. 1. யாகூப் மேமன் ஒரு கொடிய குற்றவாளி; அவரைப் போன்றவர்கள் நிச்சயம் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

2. யாகூப் மேமன் அப்பாவி; மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். நாம் எழுதினோம்: யாகூப் மேமன் அப்பாவி அல்ல; அதேசமயம், அவர் எத்தனை கடுமையான குற்றவாளியாக இருந்தாலும் சரி, அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படக் கூடாது. ஒரு நாகரிகச் சமூகத்தில், அதிலும் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் மரண தண்டனை போன்ற காட்டாட்சிக் காலத் தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.

மரண தண்டனை எதிர்ப்புச் செயல்பாட்டாளர்கள் உடனே விமர்சித்தார்கள், “சரி, யாகூப் மேமன் குற்றங்களைப் பேச இதுதான் நேரமா?” ஆம், அதுதான் நேரம். மக்கள் மத்தியில் எப்போது ஒரு பிரச்சினை விவாதத்தில் இருக்கிறதோ அப்போது அந்தப் பிரச்சினையை விவாதிப்பதுதானே ஊடக அறம்? மேலும், தங்கள் ஆதாயங்களுக்காக நேரம், காலம் பார்த்துப் பேசுவது அரசியல்வாதிகளின் இயல்பு. ஊடகவியலாளர்கள் எதற்காக நேரம் பார்க்க வேண்டும்?

நிச்சயம் அரசு ஊழியர்கள் வழி நாம் பார்க்கும் அரசாங்கம் வேறு; அரசியல்வாதிகள் வழி நாம் பார்க்கும் அரசாங்கம் வேறுதான். செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகளைக் காக்கும் பணியில் பொதுப்பணித் துறையின் ஒரு படை ஈடுபட்டிருக்கிறது; 10 நாட்களுக்கும் மேலாக ராத்தூக்கம் இல்லாமல். தமிழகத்தின் பெரும்பாலான வீரர்கள் - தீயணைப்பு மீட்புப் பணித் துறையினர் - தீபாவளிக்குப் பின் இன்னும் வீட்டுக்குச் செல்லவில்லை. ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.

வெள்ளம் ததும்பும் ஒவ்வொரு பாலத்தைக் கடக்கும்போதும் தன் குடும்பத்தை மறந்தே அரசு பஸ்கள் / ரயில்களை இயக்குகிறார்கள் ஓட்டுநர்கள். மூழ்கிக் கிடக்கும் மின் கம்பங்களில் அறுந்து தொங்கும் கம்பிகளை இணைத்து ஒவ்வொரு பகுதியாக மின்விநியோகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் மின் ஊழியர்கள். வெள்ளத்தை வடியவைக்க வீதி வீதியாகப் புதைசாக்கடைக் குழிகளில் மூச்சை அடக்கிக்கொண்டு உள்ளே நுழைந்து குப்பைகளை அள்ளுகிறார்கள் துப்புரவுத் தொழிலாளிகள். இவர்கள் முகங்கள் எல்லாம் யாருக்குத் தெரியும்? அதேசமயம், நாம் அரசாங்கம் என்று அறிந்துவைத்திருக்கும் முகங்கள் எங்கே?

நம்மிடம் அர்ப்பணிப்பு மிக்க அரசு ஊழியர் படை இருக்கிறது; எல்லாத் துறைகளுக்கும் உரிய பலவீனங்களைத் தாண்டியும். ஆனால், அவர்களால் மேலிருந்து வரும் கட்டளைகளை, பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். எப்போது, எந்தப் பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதை ஆட்சியாளர்களாலேயே தீர்மானிக்க முடியும். முன்கூட்டித் திட்டமிடவும், கொள்கைகளை வகுக்கவும் அவர்களாலேயே முடியும்.

சென்னையின் வெள்ளம் அப்பட்டமாகச் சொல்லும் மிக முக்கியமான செய்தி, ஒரு பெரிய பேரிடரைக் கற்பனை செய்து பார்க்கும் திறன் நம் ஆட்சியாளர்களிடம் இல்லை என்பது. சின்ன உதாரணம், சென்னையைப் பல கூறுகளாகப் பிரிக்கின்றன அடையாறும் கூவமாறும். ரயில் பாதைகள் இரு பெரும் பகுதிகளைப் பிரிக்கின்றன. பல பிளவுகளாக இருக்கும் சென்னையைப் பாலங்களே ரத்த நாளங்களாக இணைக்கின்றன. பாலங்கள் மூழ்கினால், இன்றைய சென்னை ஒரு தீவுக்கூட்டம்.

அதேசமயம், இந்தத் தீவுகள் ஒவ்வொன்றும் பல பெரிய நகரங்களுக்கான இணையானவை. உதாரணமாக, நார்வேயின் ஐந்தாவது பெரிய நகரமான டிராம்மன் அல்லது ஸ்வீடனின் நான்காவது பெரிய நகரமான உப்சாலாவைவிட அதிகமான மக்கள்தொகையைக் கொண்டது சைதாப்பேட்டை. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மூன்று வட்டங்களுக்குள் வசிக்கிறார்கள்.

ஆனால், ஒரு மழையால் இந்தப் பகுதி துண்டாகும்போது, உதவியாக அளிக்க ஒரு ரொட்டித் துண்டைக்கூட வெளியிலிருந்து, அதுவும் வான் வழியாக மட்டுமே உள்ளே கொண்டுவர முடியும் என்ற சூழலிலேயே இருக்கிறோம் என்றால், இது எதைக் காட்டுகிறது? பசியில் கிடப்பவர்களுக்கு ரொட்டித் துண்டுகள்கூட வந்தடையவில்லை என்றால், அது அரசு ஊழியர்களின் தவறா, ஆட்சியாளர்களின் தவறா?

இப்போதுதான் ரொட்டித் துண்டுகளைப் பற்றிப் பேச முடியும், மெழுகுவத்திகளையும் தீப்பெட்டிகளையும் பற்றிப் பேச முடியும். இனியேனும் முன்தயாரிப்புடன் இருக்க எப்படிச் செயல்பட வேண்டும் எனும் கொள்கை வகுத்தலைப் பற்றிப் பேச முடியும்.

பேரிடர்கள் நிறைய விஷயங்களை வெளிக்கொண்டு வரும். சாயங்கள் வெளுக்கும். பெருநகரவாசிகள் இதயமற்ற இயந்திரங்கள் எனும் பிம்பம் உண்டு. சென்னைவாசிகள் அதை நொறுக்கித் தள்ளியிருக்கிறார்கள். குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்நாள்வரை பொதுச் சமூகம் யாரை அதிகம் வெறுப்புணர்வோடும் கசப்புணர்வோடும் பார்த்துக் கடந்ததோ, ஒரு வீட்டை வாடகைக்குவிட யோசித்ததோ அந்த இஸ்லாமிய மக்கள்தான் ஓடிஓடி உதவுவதில் முன்னி லையில் நிற்கிறார்கள்.

ஒவ்வொரு பகுதிக்குள்ளும் படகுகளுடன் வந்து வெள்ளத்தில் தத்தளித்தவர்களை மீட்டுவிட்டு ஓசைபடாமல் திரும்பியவர்களில் பெரும்பான்மை இளைஞர்கள் கடலோடிகள்; நாம் கடற்கரையோடு ஒதுக்கி வைத்திருப்பவர்கள். ஆடம்பரக் கோமான்கள் என்று வர்க்கப் பேத ஒவ்வாமையோடு கடக்கும் அடுக்ககவாசிகளே (குறிப்பாக பிராமணர்கள்) வீதியில் முதல் அடுப்புகளை மூட்டி சாப்பாடு கொடுத்தார்கள்.

தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களிலிருந்தும் தலைநகரம் நோக்கி உதவிகள் குவிகின்றன. முடியாத மூதாட்டி ஒருவர் முந்நூறு பேருக்கு சப்பாத்திகள் போட்டு அனுப்புகிறார்.

குடிமைச் சமூகத்தின் அற்புதமான எழுச்சி இது. மக்களின் அறவுணர்வை ஒரு பேரிடர் மீட்டெடுக்கிறது. “ஈசம்பவம் திருவனந்தபுரத்து மாத்திரம் நடநிரிந்திங்கில், முக்கிய மந்திரி உம்மன் சாண்டியுடே வீட்டுப் படிக்கல் எல்லாரும் குட்டியிருங்ஞேனே; இவ்விட சென்னையில் எந்துகொண்டு இது நடக்குமில்லா?” என்றார் ஒரு கேரளப் பத்திரிகையாள நண்பர். மக்களின் அரசியலுணர்வை இந்தப் பேரிடர் மீட்டெடுத்தால் அதுவும் நடக்கும்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்