கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை, கடந்துசெல்லும் ஒவ்வொரு நாளையும் தொற்றுகளைப் பற்றிய செய்திகளாலேயே நிறைத்துக்கொண்டிருக்கிறது. உலகத்திலேயே அதிகம் பேர் தொற்றுக்கு ஆளான நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்தபடியே உள்ளது. இந்தியாவின் மொத்தமுள்ள 718 மாவட்டங்களில் 533 மாவட்டங்களில் பரிசோதனைகளில் 10%-க்கும் அதிகமாகத் தொற்று உறுதிசெய்யப்பட்டுவருகிறது. தமிழகத்திலும் 34 மாவட்டங்களில் இந்நிலை நிலவுகிறது. பரிசோதனைகளில் 5%-க்கும் குறைவான தொற்று கண்டறியப்படும்போதுதான் இரண்டாவது அலை முடிவை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகப் பொருள்கொள்ள முடியும்.
மே மாத மத்தியில் இந்தியாவில் இப்படியொரு இரண்டாவது அலை உருவாகக்கூடும் என்று தொற்றுநோயிலாளர்கள் முன்கூட்டியே எச்சரித்தார்கள். ஆனால், கரோனாவின் முதல் அலையின் முடிவிலேயே அந்தத் தொற்றை நாம் வெற்றிகொண்டுவிட்டதாகத் தப்புக்கணக்குப் போட்டுவிட்டோம். நமக்கு முன்பு அமெரிக்கா, பிரிட்டன் இரண்டு நாடுகளுமே இரண்டாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. பொதுமுடக்கத்தை அடுத்து அந்த நாடுகளில் தொற்றின் வேகம் குறைந்தது. ஆனால், பொதுமுடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டதும் மீண்டும் தொற்றுப் பரவல் அதிகரித்தது. பொதுமுடக்கத்தின் நடுவே அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டதால் மட்டுமே அந்த நாடுகளால் பெருந்தொற்றின் பாதிப்புகளிலிருந்து விரைவில் வெளியே வர முடிந்தது.
மாறாக, பிரேசில் நாட்டில் ஆரம்பத்தில் தொற்றுகளின் வேகம் அதிகரித்தும் பிறகு குறைந்தும் காணப்பட்ட சில பகுதிகளில் சமூகத் தடுப்பாற்றல் (Herd immunity) உருவாகிவிட்டதாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இத்தகைய தவறான புரிதல்கள் கரோனா விஷயத்தில் பிரேசில் ஒரு தெளிவான தேசியக் கொள்கையை எடுக்கவிடாமல் செய்துவிட்டன. கடைசியில், இரண்டாம் அலையை எதிர்கொள்வதில் ஒரு நாடு எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கு பிரேசில் ஒரு உதாரணமாகிவிட்டது.
கண்டுகொள்ளப்படாத எச்சரிக்கை
அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதற்கு முன்பாக, முகக்கவசம் அணிவதும் தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவதுமே தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும். இந்தியா போன்ற ஒரு வளரும் பொருளாதார நாட்டில் ஏற்கெனவே பொருளாதாரச் செயல்பாடுகள் முடங்கிப்போன நிலையில், மக்கள் முழுமையான கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை என்பதில் ஆச்சriயமில்லை. இதனுடைய விளைவாகத்தான் மார்ச் தொடக்கத்தில் 12,000 ஆக இருந்த புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தற்போது நாளொன்றுக்கு 3,00,000 லட்சத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஆனால், கரோனா தொற்றுப் பரிசோதனைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படுகின்றனவா, கரோனா காரணமான மரணங்கள் முழுவதுமாகப் பட்டியலிடுகின்றனவா என்பது குறித்து இன்னும் கேள்விகள் எழுந்தவண்ணமே உள்ளன. உண்மையான பாதிப்புகளின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்றும்கூட சில மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. கிராமங்களில் நோய்வாய்ப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதன் காரணமான மரணங்களின் எண்ணிக்கையும் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருக்கின்றன என்பதையே தொற்றுப் பரவலுக்கான குறியீடாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
சில வடஇந்திய மாநிலங்களில் தொற்றுப் பரவல் மிகவும் குறைந்துள்ளதாக வெளிவரும் தகவல்களையும் தொற்றுநோய் நிபுணர்கள் சந்தேகத்தோடுதான் பார்க்கிறார்கள். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில், தொற்றுப் பரவல் குறைவதற்கான வாய்ப்பு என்பது அறவே இல்லை. பரிசோதனைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதன் வாயிலாகத் தொற்றுப் பரவல் எண்ணிக்கையும் குறைத்துக் காட்டப்படுவதாக நிபுணர்களின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.
வேற்றுருவ கரோனா
வேற்றுருவ கரோனா என்பது இன்னும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாய் இருக்கிறது. இந்தியாவின் வேற்றுருவ வகையாகச் சொல்லப்படும் பி.1.617 மிகவும் வேகமாகத் தொற்றும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. மஹாராஷ்டிரத்தில் சேகரிக்கப்பட்ட சில மாதிரிகளில் இந்த வேற்றுருவ கரோனாவின் வகை கண்டறியப்பட்டுள்ளது. இதன் தொற்றும் வேகம் அதிகமாக இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறதே தவிர, முதல் அலையைப் போல கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் படுமோசமாகப் பாதிக்கப்படவும் மரணமடையவும் காரணமாக இருக்கிறதா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஏற்கெனவே தொற்றுக்கு ஆளாகி உடலில் உருவான நோய் எதிர்ப்பாற்றல், தடுப்பூசியால் உருவான நோய் எதிர்ப்பாற்றல் இரண்டையும் தாக்குப்பிடித்துப் பரவும் தன்மையை வேற்றுருவ கரோனா கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவில் தற்போது பெருமளவில் போடப்பட்டுவரும் இரண்டு தடுப்பூசிகளும் கரோனாவின் வேற்றுருவங்களுக்கு எதிராகவும் வினைபுரிகின்றன என்பது ஆறுதலானது.
முதல் அலையைப் போலவே இரண்டாவது அலையின்போதும் சமூகத் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை நிறுத்தவே மாநில அரசுகள் போராடிக்கொண்டிருக்கின்றன. ஏறக்குறைய இந்தியாவின் மூன்றில் இரண்டு பகுதிகள் முழுமையான பொதுமுடக்கத்தின் கீழேயோ அல்லது கடுமையான கட்டுப்பாடுகளின் கீழேயோ தற்போது இருந்துவருகின்றன. பொருளாதார அளவில் குறுகிய காலப் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளில் இது நீண்ட காலப் பயன்களை அளிக்கும் நடவடிக்கையாகவே பரிந்துரைக்கப்பட்டுவருகிறது. பொருளாதாரப் பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றாலும் முழுமையான நோய்த் தடுப்பு நடவடிக்கையாலேயே அது சாத்தியம்.
ஒருங்கிணைந்த நடவடிக்கை
இந்த இரண்டாவது அலை எப்போது முடிவுக்கு வரும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும். இரண்டொரு மாதங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கணிப்பாக இருக்கிறது. ஆனால், மூன்றாவது அலை ஒன்றையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் தொற்றுநோயியலர்கள். அதற்கு முன்பு தற்போதைய கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை உடனடியாகச் சரிசெய்துகொள்ள வேண்டும்.
நாட்டின் பல பகுதிகளில் மருத்துவ உட்கட்டமைப்புகளின் சறுக்கல்களைக் கண் முன் சாட்சிகளாகப் பார்த்துக்கொண்டிருக்கும் நாம், அனைவருக்கும் தடுப்பூசி போடுவதால் மட்டுமே பெருந்தொற்றின் பாதிப்புகளிலிருந்து முழுமையாக விடுபட முடியும். தடுப்பூசிகளுக்கான காப்புரிமை விலக்கை மருந்துகளைப் போல எளிதாகவும் பயன்படுத்திவிட முடியாது. தடுப்பூசிக்கான புதிய தொழில்நுட்பங்கள் தயாரிப்பதற்கு எளிதானவையல்ல என்பதால், தொழில்நுட்பப் பரிமாற்றத்தையே நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். பெருந்திரளான மக்கள் எண்ணிக்கைக்குத் தடுப்பூசி போடுதற்குக் குறுகிய கால இலக்கை நிர்ணயிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புறக்கணிக்கவும் முடியாது. அதுவரையில், இரண்டாம் அலையின் வீச்சிலிருந்து நம்மால் முழுமையாக விடுபட்டுவிட முடியாது. எனவே, அரசால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தீர்க்கத்துடனும் அமைய வேண்டிய அவசியம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago