இடம் இல்லை என்பதற்காக மெரீனா கடற்கரையில் வீடு கட்டிக்கொள்ள முடியுமா? தாகம் தணிக்கச் சாக்கடைத் தண்ணீரை அள்ளிக் குடிக்க முடியுமா? சில இடங்களில் வீடு கட்டினால் மழை அதிகரிக்கும்போது வீடு முழுகும் அபாயம் இருக்கிறது என்றால், அங்கு வீடு கட்டக் கூடாது என்பதுதான் ஒரே முடிவாக இருக்க முடியும்.
கடும் நெருக்கடியிலிருந்து சென்னை நகரம் மீண்டு கொண்டிருக்கிறது. அரசு இயந்திரத்தைக் காட்டிலும் வேகமாகக் களமிறங்கிய பொதுமக்களின் அர்ப்பணிப்பு மிகுந்த செயலூக்கம் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. உரிய முன்னெச்சரிக்கைகள் கிடைத்தும் அரசு எடுக்கத் தவறிய முன்னேற்பாடுகள் குறித்த கேள்விகள் கூர்மையாக எழுகின்றன. இந்தச் சமயத்தில் தொலைநோக்கில் இந்த நெருக்கடியைப் பற்றி யோசிக்கலாம்.
சென்னையின் விரிவாக்கத்தில் தொடங்குகிறது இந்தப் பிரச்சினை. சென்னையை நோக்கி லட்சக்கணக்கான மக்களை ஈர்த்ததன் காரணம், மற்ற பகுதிகளின்பால் அரசு காட்டிய உதாசீனம் என்பது தனியே விவாதிக்கப்பட வேண்டியது. சென்னையை நோக்கி வந்த மக்கள் பல்வேறு வகைகளில் தங்களைப் பொருத்திக்கொண்டார்கள். பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்கவும் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான கட்டுமானங்களுக்காகவும் சென்னை விரிவடைய வேண்டியிருந்தது. அப்போது வறண்டிருந்த ஏரிப் பகுதிகள் முதல் இலக்காயின.
ஏரிகள் வறண்டிருந்தாலும் அவை ஓரிடத்தின் நீர் வள அமைப்பின் முக்கியமான கண்ணிகள். நீர் வளம் குறித்த அடிப்படை அறிவு கொண்டவர்கள் அவற்றின்மீது எக்காரணம் கொண்டும் கைவைக்க மாட்டார்கள். இங்கோ ஏரிகள் மனைகளாவதற்குக் கண்மூடித்தனமாக அனுமதி வழங்கப்பட்டன. ஆட்சியாளர்கள், அதிகாரிகள், வீடு கட்டிக் குடியேறியவர்கள், தொழிலகங்களை, அரசு அலுவலகங்களை, நினைவுச் சின்னங்களை அமைத்தவர்கள் எனப் பலருக்கும் இதில் பங்கிருக்கிறது.
துரைப்பாக்கம் பகுதி பற்றி பத்திரிகையாளர் சங்கர் முகநூலில் தரும் தகவல்கள் ஏரிப் பகுதிகள் கையாளப்பட்ட விதம் பற்றி உணர்த்துகின்றன. பள்ளிக்கரணை ஏரியிலிருந்து குரோம்பேட்டை பாலம் வரை இருந்த 10 ஏரிகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்குகள், பல்கலைக்கழகம், டாஸ்மாக் கடைகள், குப்பைக் கிடங்கு, அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவை முளைத்திருக்கின்றன. பள்ளிக்கரணை ஏரிப்பகுதியிலும் குப்பைக் கிடங்கு, பறக்கும் ரயில்வே, கடல்சார் பல்கலைக்கழகம், மாற்று எரிபொருள் ஆய்வு மையம் ஆகியவை இருப்பதை சங்கர் குறிப்பிடுகிறார். இந்த ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கவில்லை என்றால், மழைப் பொழிவின் பெரும் பகுதியை இவை மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டிருக்கும். நகரம் காப்பாற்றப்பட்டிருக்கும்.
சரி, இந்தக் கட்டிடங்களுக்கான தேவையை எப்படிச் சமாளிப்பது என்று கேட்கலாம். இடம் இல்லை என்பதற்காக மெரீனா கடற்கரையில் வீடு கட்டிக்கொள்ள முடியுமா? தாகம் தணிக்கச் சாக்கடைத் தண்ணீரை அள்ளிக் குடிக்க முடியுமா? சில இடங்களில் வீடு கட்டினால் மழை அதிகரிக்கும்போது வீடு முழுகும் அபாயம் இருக்கிறது என்றால், அங்கு வீடு கட்டக் கூடாது என்பதுதான் ஒரே முடிவாக இருக்க முடியும். இந்த இடங்களில் கட்டத் தடை விதிக்கப்பட்டு, அது அமல்படுத்தப்பட்டிருந்தால் சென்னை விரிவாக்கத்தின் முகமே மாறியிருக்கும்.
‘சென்னைக்கு மிக அருகில்’
ஏன் அனைவரும் சென்னையின் மையமான பகுதிகளில் அல்லது ‘சென்னைக்கு மிக அருகில்’ வசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்? பல அம்சங்களும் ஒரு சில இடங்களில் மட்டும் மையம் கொண்டிருப்பதுதான் காரணம். அரசு, தனியார் அலுவலகங்கள், முக்கியமான சந்தைகள், பெரிய கடைகள், நல்ல திரையரங்கங்கள் என எல்லாமே சில இடங்களில் நெருக்கமாக அமைந்திருக்கின்றன. இந்த இடங்களுக்கு வந்துபோவதில் உள்ள போக்குவரத்து / நேரம் சார்ந்த நெருக்கடிகள்தான் அனைவரையும் சென்னைக்குள் அல்லது அதன் அருகில் வசிப்பதற்கான அவசியத்தை உருவாக்குகின்றன. சந்தைகள், கடைகள், அலுவலகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகளை முதலிலிருந்தே திட்டமிட்டு சென்னையின் பல்வேறு இடங்களிலும் பரவச் செய்திருந்தால் இந்தப் பதற்றம் மக்களுக்கு வந்திருக்காது.
மக்கள் அன்றாடம் வந்து செல்ல வேண்டிய இடங்களில் முக்கியமானவை, அலுவலகங்கள். பல சமயம் அலுவலக வேலையைக் காட்டிலும் அதிகச் சிரமத்தைத் தருவது வந்துபோவதற்கான போக்குவரத்து நெருக்கடிதான். எல்லா அலுவலகங்களுமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இயங்குகின்றன. எந்த அலுவலகத்திலும் ஊழியர்களுக்கு நெகிழ்வான வேலை நேரம் இல்லை. அதிக நேரம் உட்கார்ந்திருப்பவர் நல்ல ஊழியராகக் கருதப்படுகிறார். தன்னுடைய வேலையை முடித்துவிட்டுச் சீக்கிரம் கிளம்பும் ஊழியரின் ஈடுபாடு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் போக்குவரத்து நெருக்கடியைச் சமாளிக்க ஒருவர் காலை ஆறரைக்குக்கூட அலுவலகம் வரலாம். தன் வேலை முடிந்ததும் கவலை இல்லாமல் கிளம்பலாம். வாரம் 40 மணி நேரம் வேலை செய்கிறாரா, கொடுத்த பணியை முடிக்கிறாரா என்பதுதான் முக்கியம். இங்கே 8 மணி நேரம் முடிந்த பிறகும் உட்கார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. வேலை செயற்கையாகத் திணிக்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு மேல் கிளம்பி வெகு தூரம் செல்வதில் உள்ள அலுப்பைக் கணக்கில் கொண்டே ‘மிக அருகில்’ வசிப்பதற்கான அவசியம் உருவாகிறது.
இப்படிப் பல விதங்களில் உருவாகும் பதற்றமும் நிர்வாகத்தின் தொலைநோக்கற்ற பார்வையும்தான் கண்ட இடத்திலும் கட்டுமானங்கள் முளைக்கக் காரணமாக அமைந்தன. தொழில், கல்வி நிறுவனங்கள் தொடங்குபவர்களும் பல்வேறு வசதிகளுக்காகச் சென்னைக்கு அருகில் மையம்கொள்ள விழைவதால் கட்டிடங்களுக்கான தேவைகள் அதிகரிக்கின்றன. இவை அனைத்தும் சேர்ந்து ஏரிகளைச் சூறையாடுகின்றன. முடிச்சூர், படப்பை, போரூர் என எல்லா இடங்களிலும் இதே நிலைதான். எல்லா அரசுகளும் பல்வேறு தொழிலதிபர்களும் கல்வித் தந்தைகளும் பொதுமக்களும் இணைந்து செய்த பெருங்குற்றம் இது. அனுமதி தருவது என்னும் மந்திரச் சாவியைக் கையில் வைத்திருக்கும் அரசுக்கு இதில் கூடுதல் பொறுப்பு உள்ளது.
இனி என்ன செய்யலாம்?
நீர்நிலைகளின் ஒரே ஒரு அங்குலத்தைக்கூட இனி எதற்கும் தரக் கூடாது எனச் சபதம் எடுத்து அதைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றலாம். புதிய இடங்களில் ஏரிகள், குளங்களை உருவாக்கலாம். இருக்கும் ஏரி, குளங்களின் கொள்ளளவுகளை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து செயல்படுத்தலாம். பருவ மழை தொடங்கு முன் தூர் வாருதல், வாய்க்கால்களைச் சீரமைத்தல் முதலான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மழை நீர் சேகரிப்பை அறிவியல்பூர்வமாகத் திட்டமிட்டுக் கறாராகப் பின்பற்றலாம். ராஜஸ்தானில் ராஜேந்திர சிங் சாதித்துக் காட்டிய நீர் சேகரிப்புத் திட்டங்களைத் தமிழகம் முழுவதும் நேர்மையாக அமல்படுத்தி, நீருக்காக யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லாத நிலையை உருவாக்கலாம்.
நகரத்தை நோக்கி மக்கள் குவிவதைத் தவிர்க்கத் தீவிரமான நடவடிக்கைகள் வேண்டும். சென்னையின் முக்கியமான மையங்களை உடைத்து, நகரத்தின் வசதிகளைப் பரவலாக்கலாம். வேலை நேரம் சம்பந்தமான பதற்றங்களைத் தணிக்க அலுவலக நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கலாம்.
மக்கள் மீது அக்கறையும் தொலைநோக்கும் உறுதியும் நேர்மையும் கொண்ட நிர்வாகத்தால் மட்டுமே இவை சாத்தியப்படும். அரசுகள் மாறினாலும் திட்டங்கள் தொடரும் எனும் பக்குவமான அணுகுமுறை இருந்தால் மட்டுமே இவை நடக்கும். இன்றைய தமிழக அரசியல் பின்புலத்தில் இதையெல்லாம் யோசிக்கும்போது ஆற்றாமையே மிஞ்சுகிறது. ஆனால், கடும் நெருக்கடியில் மகத்தான ஆற்றலை, அசத்தியமான செயல் துடிப்பை வெளிப்படுத்திவரும் மக்களின் அழுத்தம் கூடினால் நிர்வாகம் மண்டியிடத்தான் வேண்டும். இது ஜனநாயக நாடு. மக்கள் சக்தியே இறுதியில் வெல்லும். இப்போது உருவாகியுள்ள செயலூக்கம் தொலைநோக்குத் திட்டங்களை நோக்கி அரசைச் செலுத்தக்கூடும் என்றால் மாற்றம் வெகு தொலைவில் இருக்காது.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago