அடிக்கடி நினைத்துப்பார்ப்பது உண்டு. உலகில் நம்மைப் போல வேறு எந்தச் சமூகமாவது சுயநலத்தையும் கோழைத் தனத்தையும் வீட்டுக்கல்வியாகக் கற்றுக்கொடுக்குமா என்று. கல்வியில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக நம் பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். செல்வத்தில் நம்மைவிடச் சில படிகளேனும் மேம்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஏன் வீரத்தில் மட்டும் அவர்கள் நம்மைவிடவும் கோழைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்? எது போராட்டக் குணத்தைப் பொறுக்கித்தனம் என்றும் அரசியலை ஒரு சாக்கடை என்றும் சிறுமைப்படுத்திக் காட்டி அவர்களை ஒதுக்கி வளர்க்கச் சொல்கிறது?
ஊருக்கு ஊர், பள்ளிக்குப் பள்ளி, கல்லூரிக்குக் கல்லூரி மேடை போட்டு உரக்கக் கத்த வேண்டும்போல இருக்கிறது, “கேரியர் என்ற வார்த்தையைச் சொல்லி பிள்ளைகளை அடிமைகளாக்காதீர்கள்” என்று. “உனக்கு கேரியர் முக்கியம்; உனக்கு எதிர்காலம் முக்கியம்!” எனும் வார்த்தைகளைப் போல பிள்ளைகளிடம் சுயநலத்தை விதைக்கும் ஆபாசமான வார்த்தைகள் ஏதுமில்லை. மேலும், உண்மையாகவே நம்முடைய பிள்ளைகள் மகத்தானவர்கள் ஆக வேண்டும் என்றால், அதற்கும் நாம் ஊட்டி வளர்க்கும் இந்தச் சுயநல வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமும் இல்லை.
1869-ல் போர்பந்தரில் காந்தி பிறந்த வீடு மூன்று தளங்களைக் கொண்டது. காந்தி ஏழையாகப் பிறந்தவர் அல்ல. 1893-ல் காந்தி தென்னாப்பிரிக்கா செல்லும்போது அவருடைய வயது 24. தென்னாப்பிரிக்காவுக்குப் புரட்சி செய்வதற்காக அவர் செல்லவில்லை. பொருளீட்டத்தான் சென்றார். ஓரிரு வருஷங்கள் தங்கி வழக்கறிஞர் பணியாற்றச் சென்றார். ஆனால், பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரயில் பயணத்தில் அவருக்கு நேரிட்ட அவமானம் அவர் வாழ்க்கையை மாற்றியது. தான் எதிர்கொண்ட பிரச்சினை தன்னுடையது மட்டும் அல்ல; தான் சார்ந்த சமூகத்தின் பிரச்சினை என்பதை உணர்ந்தார். போராடினார். மாற்றத்தை உண்டாக்கினார். கோகலே அழைப்பின்பேரில் இந்திய அரசியலில் காலடி எடுத்துவைத்தார். 1915-ல் இந்தியா திரும்பியபோது காந்திக்கு வயது 45. ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளமையை அனுபவிப்பதற்கான, பொருளீட்டுவதற்கான, தன் வாரிசுகளுக்கான சொத்துக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான மிக முக்கியமான காலகட்டம் என்று நம்பும் காலகட்டம் அவர் தென்னாப்பிரிக்காவில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தது. இந்தியா வந்த காந்தி சொத்துகளோடு வரவில்லை. அதன் பின்னரும் சாகும் வரை தன் குடும்பத்துக்காகச் சொத்து சேர்க்கவில்லை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல காந்தி.
1916-ல் கமலாவைத் திருமணம் செய்துகொண்டபோது நேருவுக்கு வயது 27. 1936-ல் இறந்தபோது, கமலாவுக்கு வயது 36. நேரு-கமலா தம்பதியின் 20 ஆண்டு தாம்பத்திய வாழ்வில் பெரும் பகுதி நேரு சுதந்திரப் போராட்டக் களத்தில் இருந்தார் அல்லது சிறையில் இருந்தார். அலகாபாத்தில் அரண்மனை போன்ற மாளிகையில் பிறந்த நேரு, ஒருகட்டத்தில் வீட்டில் உள்ள சாமான்களை எல்லாம் விற்கும் முடிவுக்கு வந்தார். காந்தியிடம் ஆலோசனை கேட்டு நேரு எழுதிய கடிதங்களில் முக்கியமானவை தனிப்பட்ட வாழ்வில் அவர் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் தொடர்பானவை. நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல நேரு.
கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகானாமிக்ஸிலும் கிரேஸ் இன்னிலும் பொருளியலும் சட்டமும் படித்துவிட்டு வந்த அம்பேத்கர் காலமெல்லாம் சேரி சேரியாக அலைய தனிப்பட்ட தேவை ஏதும் அவருக்கு இல்லை. நாம் சொல்லும் ‘கேரியர்’ தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல அம்பேத்கர். எல்லாச் சொத்துகளையும் இயக்கத்துக்காக எழுதிவைத்துவிட்டு, 94 வயது வரை ஊர் ஊராக மூத்திரக் குடுவையுடன் பேசித் திரிந்த பெரியார் நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர் அல்ல. இறக்கும் நிலையில் கையில் வெறும் ரூ.110 மட்டுமே வைத்திருந்த காமராஜரும், மாற்று உடை இல்லாமல் இடுப்பில் துண்டுடன் ஒரே உடையைத் துவைத்துக் கட்டிக்கொண்டு அரசியல் நடத்திய ஜீவாவும் நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர்கள் அல்ல.
இந்தியாவில் மட்டும் அல்ல; அரசியலில் மட்டும் அல்ல; இன்னும் அறிவியலில் பொருளியலில் என எந்தத் துறையிலும் மகத்தான மாற்றங்களை உண்டாக்கியவர்கள் நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர்கள் அல்ல. மார்க்ஸும் ஏங்கெல்ஸும் நியூட்டனும் ஐன்ஸ்டினும் நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவ’ப்படி ஆளுமையாக உருவெடுத்தவர்கள் அல்ல. அப்படியென்றால், நாம் சொல்லும் ‘கேரியர் தத்துவம்’ யாராக நம் பிள்ளைகளை உருவாக்கும்? ஏகாதிபத்தியத்துக்கும் அதிகாரத்துக்கும் சேவையாற்றும் அடிமைகளையே உருவாக்கும். தன் சட்டைப்பையில் கை வைத்தால்கூட எதிர்த்துக் கேள்வி கேட்கும் திராணியற்ற சோற்றுக்கு அடிவாங்கும் பிண்டங்களையே உருவாக்கும்!
காந்தி தன் வாழ்வில் 6 ஆண்டுகள் சிறையில் இருந்தார். நேரு தன் வாழ்வில் 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்திய வரலாற்றில் கலகக்காரர்களின் சின்னமாகவே ஆகிவிட்ட பகத் சிங் மொத்தமாக வாழ்ந்ததே 23 ஆண்டுகள்தான். தான் என்னவாக வேண்டும் என்பதை 12 வயதிலேயே பகத் சிங் தீர்மானித்துவிட்டார். ஆனால், பள்ளி-கல்லூரி வாழ்க்கை முடித்து இந்தச் சமூகத்தில் காலடி எடுத்துவைக்கும் வரை எந்தப் போராட்டத் திலும் ஈடுபடுத்திக்கொள்ளாத, சிறைகள் அல்ல; காவல் நிலையங்களைக்கூட மிதித்திடாதவர்களாக வளர்பவர் களையே ‘நல்ல பிள்ளைகள்’ என்று நாம் அழைக்கிறோம். நாட்டுக்கும் சமூகத்துக்கும் உழைக்க ஊரார் யாரேனும் தன் பிள்ளைகளை நேர்ந்துவிட வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். மாற்றம் எப்படி வரும்?
இப்படியெல்லாம் பொத்திப் பொத்தி ஏட்டுக் கல்வி ஒன்றே முக்கியம் என்று சுயநலமாக வளர்க்கப்படுவர்கள் எந்த அளவுக்கு சமூக அறிவு வளர்ச்சியில் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள்? சுழற்சி முறையில் குழுவாகச் சென்று படங்கள் பார்த்து விமர்சனம் எழுதுவது ‘தி இந்து’வில் வழக்கம். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்குச் சென்ற குழுவில் நானும் ஒருவன். என்னை அவ்வளவு அதிரவைத்த ஒரு படம் கிடையாது. ‘மேட்டர்தான் காதல்’ என்பதுதான் படத்தின் ஒரு வரி. படம் முழுக்க இதுபற்றித்தான் பேச்சு. பெண்களை இத்தனை கீழ்த்தரமாக இழிவுபடுத்தும் படத்தை நான் பார்த்ததில்லை. ஒரு காட்சியில் கதாநாயகன் கேட்கிறான், “நான் வெர்ஜின் பையன். எனக்கு வெர்ஜின் பொண்ணுதான் வேணும்.” அதற்கு அவனுடைய சித்தப்பா சொல்லும் பதில்: “வெர்ஜின் பொண்ணா? டேய், அதெல்லாம் டைனோசர் காலத்துலேயே அழிஞ்சுப்போச்சுதுடா.”
ஆர்ப்பரித்துக் கை தட்டுகிறது திரையரங்கம். 90/100 பேர் இளைஞர்கள். பெரும்பகுதியினர் மாணவர்கள். படம் முடிந்ததும் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள். படம் சக்கைப்போடு போட்டது. அடிப்படையில் இது ஒரு படத்தின் வெற்றி அல்ல; இன்றைக்கு நம் சமூகம் வந்தடைந்திருக்கும் இழிநிலையின், அதன் ஆன்மாவைப் பீடித்திருக்கும் நோய்க்கூறின் அப்பட்டமான வெளிப்பாடு. அரசியலற்றவர்களாக நம் பிள்ளைகளை எந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் நாம் என்பதற்கான சாட்சியம்! ஆண் வாழ்வின் சகஜீவி பெண். ஆனால், சகலத்தையும் காசாகப் பார்க்கக் கற்று வளர்பவர்கள் பெண்ணை வெறும் சதைப்பிண்டமாக மட்டும் பார்ப்பதில் வியக்க என்ன இருக்கிறது? இந்த வட்டத்துக்கு வெளியே வருபவர்களே விதிவிலக்குகளாக நம் முன் தெரிகிறார்கள்.
உண்மையான அரசியலின் ஆரம்பம் சக மனிதர் மீதான அன்பில் தொடங்குகிறது. தன் பிரச்சினைகளைச் சமூகப் பிரச்சினையின் ஒரு பகுதியாகவும் சமூகப் பிரச்சினைகளை தன் பிரச்சினைகளின் மையமாகவும் பார்க்கும் புரிதலில் தொடங்குகிறது. உண்மையான அன்பும் உண்மையான சுதந்திரமும் உண்மையான ஜனநாயகமுமே உண்மையான அரசியல். உண்மையான அன்பும் உண்மையான சுதந்திரமும் உண்மையான ஜனநாயகமும் ஒரு பெரும் புரட்சி. போராட்டத்தால் மட்டுமே அதை அடைய முடியும். அதற்கான கல்வி என்ன? “நீ காண விரும்பும் மாற்றமாக நீ இரு” என்கிறார் காந்தி!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago