கரோனா தடுப்பூசி தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் அச்சங்களையும் சந்தேகங்களையும் களைந்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதில் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் திணறிக்கொண்டிருக்கின்றன. இதே போன்ற நெருக்கடியை போலியோ ஒழிப்புப் பயணத்திலும் நாம் எதிர்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போதும் தவறான தகவல்களைப் பரப்புவது, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுவது, அறிவியல்ரீதியான தடைகள் எல்லாம் இருந்தன. அதையெல்லாம் வெற்றிகரமாக முறியடித்து இன்று போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கியிருக்கும் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள நமக்குப் பாடங்கள் இருக்கின்றன.
போலியோ தடுப்பியக்கம் தொடங்கிய கதை
1981-ல் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) பேராசிரியர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் பரீட்சார்த்த அடிப்படையில் போலியோ சொட்டு மருந்தை அறிமுகப்படுத்தினார். அதுதான் தொடக்கம். அப்போது தமிழகத்தில் அதிக அளவில் போலியோ பாதிப்புகள் இருந்தன. சிஎம்சியும் உள்ளூர் ரோட்டரி கிளப்பும் இணைந்து இந்தப் பகுதிக் குழந்தைகளுக்குப் போலியோ தடுப்பு மருந்து கொடுக்க முடிவெடுத்தனர். ஆண்டுக்கு ஒரு முறை 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளித்தனர். பிறகு, அது அளிக்கும் பலன் குறித்து ஆராய்ந்து ஆதாரபூர்வமான தகவல்களை வெளியிட்டனர். இந்த அணுகுமுறையானது இன்றைய கரோனா தடுப்பூசித் திட்டத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை ஆய்வுக்கு உட்படுத்துவதும், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து முறையான தகவல்களை மக்கள் முன் சமர்ப்பிப்பதும் அவசியமானதாகும்.
அடுத்ததாக, அரசு முன்னெடுக்கும் தடுப்பூசித் திட்டத்தின் மீது நம்பிக்கையை உருவாக்கும் பணி. போலியோ உச்சத்தில் இருந்தபோதும்கூடச் சொட்டு மருந்தைப் பலரும் ஏற்கவில்லை. மக்களின் மனதில் நம்பிக்கையை விதைப்பதற்கு நேரடி உரையாடல்களே சிறந்த வழி என்று கருதி நாடு முழுவதும் பல மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் மக்களைச் சந்தித்து ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் போலியோ தடுப்புத் திட்டம் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்தது. அன்று இந்திய அரசோடு உலக சுகாதார நிறுவனம், எண்ணற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பலதரப்பட்ட தன்னார்வலர்கள் களத்தில் நின்று பணியாற்றினர். இன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் நம்பிக்கைக்குரிய உரையாடல்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது எளிதான காரியம்.
தடுப்பூசிகளும் வதந்திகளும்
சில இடங்களில் போலியோ சொட்டு மருந்து பலன் அளிக்காத நிலையில், உத்தர பிரதேசம், பிஹார் பகுதிகளில் மக்களை அணுகுவதில் சிரமம் இருந்தது. இன்றுபோலவே அன்றும் வதந்திகள் பரவின. ‘குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கினால் ஆண்மை இழந்துவிடுவார்கள்’ என்று வதந்தி பரப்பப்பட்டது. இதை மறுப்பதற்காக மக்கள் முன்னிலையில் சொட்டு மருந்தை மருத்துவப் பணியாளர்கள் அருந்தி, நம்பிக்கை ஏற்படுத்த வேண்டியிருந்தது. இன்று கரோனாவும் தடுப்பூசியும் மக்கள்தொகையைக் குறைப்பதற்கான சதி என்று பேசப்படுவதுபோலவே போலியோ பயணத்திலும் ஒரு மோசமான அனுபவம் இருந்தது. 2002-ல் உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் குழந்தைகளில் அதிக அளவிலானோர் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இப்பகுதியில் வலுவாக உள்ள முஸ்லிம் மக்கள்தொகையைக் குறைப்பதற்காகவே போலியோ சொட்டு மருந்தைக் குழந்தைகளுக்கு அளிப்பதாக வதந்தி பரவியது. இதை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகமும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவும் மிகச் சரியாகக் கையாண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தின. போலியோ குறித்த தவறான தகவல்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் தங்கள் மதத்தவருக்கு மதத் தலைவர்கள் அறிவுரை வழங்க வேண்டும் என யுனிசெப் நிறுவனம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து, துண்டுப் பிரசுரங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்தால் ஏற்படும் பலனை விளக்கி மதத் தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர்.
1985-ல் ‘போலியோ சொட்டு மருந்துத் திட்டம்’ தொடங்கப்பட்டபோது இந்தியாவில் 50 ஆயிரம் முதல் 1.5 லட்சம் குழந்தைகள் போலியாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த திட்டம் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினத்தில், நாடு முழுவதும் 5 லட்சம் இடங்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றினார்கள். ஒரே நாளில் 17 கோடியே 20 லட்சம் குழந்தைகளுக்கு வீடுகளுக்கே சென்று சொட்டு மருந்து வழங்கிய வரலாறும் உண்டு. இது முறையான திட்டமிடலால்தான் சாத்தியப்பட்டது.
ஆரம்ப கட்டத்தில் இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து சக்திவாய்ந்ததாக இல்லை. போலியோ மருந்து பயன் தராத பிஹார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பல முறை போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டியிருந்தது. இந்த இரு மாநிலங்களிலும் குறிப்பிட்ட சமுதாயத்தினர் போலியோ சொட்டு மருந்தை ஏற்கவில்லை. இந்த இரு மாநிலங்களிலும் எங்களால் அறிவியல்பூர்வ காரணங்களைச் சொல்லி விளங்க வைக்க முடியவில்லை என்கிறார் டாக்டர் ஜான். ஆண்டுக்கு 3 முறை சொட்டு மருந்து கொடுத்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 2005-ல் டாக்டர் ஜான் கூறியபடி 2 மடங்கு சக்திவாய்ந்த போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டதும் பிஹார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றது.
நமக்கான பாடம்
இன்று கரோனாவை எதிர்கொள்ள எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் எந்த அளவு அக்கறை காட்டுகிறோமோ அதே அளவுக்குத் தடுப்பூசி தொடர்பான ஆய்வுகளின் வெளிப்படைத்தன்மை, சந்தேகங்களை நிவர்த்திசெய்வது, வதந்திகளிடம் சிக்கிக்கொண்டு தவிக்கும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது, திட்டமிட்ட அணுகுமுறை போன்றவற்றுக்கும் நாம் முன்னுரிமை தர வேண்டும். பிந்தையதைத் தவறவிட்டோம் என்றால் முந்தையதற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.
- ஆ.கோபண்ணா, ஆசிரியர், ‘தேசிய முரசு’.
தொடர்புக்கு: desiyamurasu@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 mins ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago