சென்னையின் எச்சரிக்கை பகுதிகள் எவை?

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

சென்னையை எட்டிப் பார்த் திருக்கிறது சூரியன். வெயிலை பார்த்து வெறுமையோடு புன்னகைக்கிறார்கள் மக்கள். வீடுகளில் தேங்கிய சேறுகளை மெல்ல அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் மக்கள். வீதியெங்கும் மக்கள் சாரை சாரை யாக வாகனங்களைத் தள்ளிக் கொண்டு செல்கிறார்கள். திட்டமிடாத நகரமயமாக் கலின் நாசங்களை நன்றாகவே உணர்ந்து விட்டோம். தென் சென்னையின் நவீனத்தைப் பார்த்து பிரமித்தவர்கள் எல்லாம் திக் பிரமை அடைந்திருக்கிறார்கள். இது வளர்ச்சி அல்ல; வீக்கம் என்று புரிந்துவிட்டது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் ஏராளமான ஏரிகள் உடைந்துவிட்டன. வயல்கள் மூழ்கிவிட்டன. கடந்த காலங்களில் ஏரிகளில் நடந்த பணிகள் எல்லாம் கண் துடைப்பு என்று புலம்புகிறார்கள் விவசாயிகள். அவர்கள் சொல்வது உண்மைதான். நமது நீர் நிலைகளைக் காக்க இங்கே திட்டங்கள் இல்லாமல் இல்லை. நிதி இல்லாமல் இல்லை. உள்ளூர் பஞ்சாயத்து தொடங்கி உலக வங்கி வரை கை கொடுக்கின்றன. தமிழகத்தின் ஏரிகள், குளங்கள் எவ்வளவு சீரழிந்துக் கிடக்கின்றன என்பது கண்கூடாக எல்லோருக்கும் தெரியும். ஆனால், தொடர்ச்சியாக 30 ஆண்டுகளாக ஏரிகளில் பணி நடந்திருப்பதாக சொல்கின்றன அரசின் புள்ளிவிவரங்கள்.

1984 தொடங்கி 1998 வரை தமிழகத்தில் ஏரிகளை மேம்படுத்த ஐரோப்பிய பொருளாதாரக் குழு (European commission) ரூ.175 கோடி மானியம் அளித்தது. இந்த நிதியில் 200 ஏரிகள் சீரமைக்கப்பட்டதாக சொல்கிறார்கள். அதைத் தொடர்ந்து உலக வங்கி கடனில் நீர்வள ஆதாரத் திட்டம் ரூ.1,252 கோடியில் செயல்படுத்தப்பட்டது. அதிலும் நூற்றுக்கணக்கான ஏரிகளை சீரமைத்ததாகச் சொல்கிறார்கள்.

மிக சமீபத்தில் உலக வங்கி கடன் உதவியுடன் நீர்வள - நிலவளத் திட்டத்தில் கடந்த 2015, ஜூன் வரை ரூ.2,500 கோடியில் ஏரிகள் சீரமைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதாவது, 1985 தொடங்கி 2015 வரை தொடர்ந்து 30 ஆண்டுகள் ஏரிகளில் வேலை பார்த்திருக்கிறார்களாம். எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது ஏரிகளில் கொட்டிய மக்களின் வரிப் பணம். உண்மையில் அப்படி வேலை நடந்திருந்தால் இன்று இப்படி ஓர் அழிவு நடந்திருக்காது. இனியாவது திட்டமிடுவோம்.

சென்னையின் மழைப் பொழிவு (மி.மீ)

சோளிங்கர் சுற்றுவட்டாரம் : 800 - 900

திருத்தணி, காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரம் : 900 - 1,000

அரக்கோணம், மணப்பாக்கம், ராணிப்பேட்டை சுற்றுவட்டாரங்கள் : 1,000 - 1,100

பூண்டி, திருவொற்றியூர், தாமரைப்பாக்கம் சுற்றுவட்டாரங்கள் : 1,100 - 1,200

சத்தியவேடு, பொன்னேரி, வல்லூர், திருவள்ளூர்,

சோழவரம், கொரட்டூர், பெரும்புதூர், தாம்பரம்,

மகாபலிபுரம், நுங்கம்பாக்கம் சுற்றுவட்டாரங்கள் : 1,200 - 1,300

மீனம்பாக்கம், ரெட் ஹில்ஸ் சுற்றுவட்டாரங்கள் : 1,300 - 1,400

செம்பரம்பாக்கம் சுற்றுவட்டாரம் : 1,400 - 1,600

கூவம் ஆற்றங்கரை பாலங்கள்

கடந்த காலங்களில் கூவம் ஆற்றில் கீழ்கண்ட பகுதிகளில் இருந்த குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. அண்ணாநகர் பாலம், அமைந்தகரை பாலம், முனிரோ பாலம், கல்லூரி பாலம், கமாண்டர் இன் சீஃப் பாலம், ஹாரிஸ் பாலம், ஆண்ட்ரியூ’ஸ் பாலம், கால் லா’ஸ் பாலம், வெலிங்கடன் பாலம், ஹட்டன் பாலம், வாலாஜா பாலம், நேப்பியர் பாலம்.

முன் எச்சரிக்கை பகுதிகள் 36

மேற்கண்ட பகுதிகளைத் தவிர, 2005-ம் ஆண்டு வெள்ளத்தின் அடிப்படையில் சென்னை நகருக்குள் முத்தமிழ் நகர், கண்ணதாசன் நகர், எம்.கே.பி.நகர், சத்தியமூர்த்தி நகர், கொளத்தூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், புளியந்தோப்பு, கொசப்பேட்டை, புரசைவாக்கம், சூளை, பெரியமேடு, நம்மாழ்வார்பேட்டை, எஸ்.எஸ்.புரம், அயனாவரம், அண்ணா நகர், வில்லிவாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு, டிரஸ்ட்புரம், வள்ளுவர்கோட்டம், மிர்சாகிப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், ஃபோர் சோர் எஸ்டேட், அடையாறு, கிழக்கு மற்றும் மேற்கு வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், கே.கே.நகர், அசோக் நகர், திருவான்மியூர், மாம்பலம், ரங்கராஜபுரம், பெரம்பூர், தாண்டவராய சத்திரம் ஆகிய 36 பகுதிகள் வெள்ள அபாய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. வெள்ள அபாய காலங்களில் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாவிட்டாலும் தங்கள் உடைமைகளை பத்திரப்படுத்திக்கொள்வது முக்கியம்.

எங்கெல்லாம் எச்சரிக்கை தேவை?

அடையாற்றங்கரை: ஆற்றோரங்களில் வசிக்கும் மக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த வகையில் அடையாற்றில் கடந்த காலங்களில் கீழ்கண்ட பகுதிகளில் அதிக வெள்ளம் வந்திருக்கும் பகுதிகளைப் பார்ப்போம். நந்தம்பாக்கம் - போரூர் பகுதியில் 1985-ல் 9.75 மில்லியன் கனஅடி தண்ணீரும், 2005-ல் 9.75 மில்லியன் கனஅடி தண்ணீரும் புகுந்தது. ஜாபர்கான்பேட்டையில் 1985-ல் 7.85 மில்லியன் கன அடி தண்ணீர் புகுந்தது. சைதாப்பேட்டை மறைமலை அடிகள் பாலத்தில் 1985-ல் 7 மில்லியன் கன அடியும், 2005-ல் 5.6 மில்லியன் கனஅடியும் தண்ணீர் புகுந்தது. 1985-ல் அடையாறு வடக்குப் பகுதியில் 3.75 மில்லியன் கனஅடி தண்ணீர் புகுந்தது. இவைத் தவிர, சைதாபேட்டை ரயில் பாலம், வீராணம் பைப் பகுதி, திருவிக பாலம், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளிலும் கடந்த காலங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேற்கண்ட பகுதிகளில் மக்கள் முன் எச்சரிகையுடன் இருப்பது நல்லது.

கால்வாய்கள் நிலவரம்

சென்னையில் பலர் கழிவு நீர் கால்வாய் களில் அடித்துச் சென்றுதான் இறந்திருக் கிறார்கள். மழைக் காலங்களில் இவற்றில் எவ்வளவு கழிவு நீர் ஓடும் என்று ஆய்வு களில் தெரியவந்துள்ளது. அதன் விவரம்:

கலக்கும் கழிவு நீரின் அளவு

கூவம் ஆறு : 31%

அடையாறு : 16%

ஓட்டேரி நல்லா : 12%

தெற்கு பக்கிம்காம் கால்வாய் : 7%

மத்திய பக்கிம்காம் கால்வாய் : 8%

வடக்கு பக்கிம்காம் கால்வாய் : 16%

ரெட் ஹில்ஸ்

உபரி நீர் கால்வாய் : 4%

மாம்பலம் கழிவு நீர் : 4%

கேப்டன் காட்டன் கால்வாய் : 4%

கொடுங்கையூர்

புதிய கால்வாய் : 1%

அம்பத்தூர் ஏரி

உபரி நீர் கால்வாய் : 1%

கலக்கும் வெள்ள நீரின் அளவு

கூவம் : 13%

அடையாறு : 49%

ஓட்டேரி நல்லா : 9%

தெற்கு பக்கிம்காம் : 2%

வடக்கு பக்கிம்காம் : 11%

மாம்பலம் கால்வாய் : 17%

(நீர் அடிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்