கேரளம்: இடது கூட்டணி வெற்றி சொல்லும் சேதி

By செ.இளவேனில்

கேரளத்தில் சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் எழுதப்படாத விதி. 1982-க்குப் பிறகு இப்போதுதான் அங்கு ஆளுங்கட்சி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. 140 இடங்கள் கொண்ட கேரள சட்டமன்றத்தில், இடது கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் இடங்கள் 99. இந்தத் தேர்தலில் கணிசமான இடங்களைப் பிடித்துவிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக, இருந்த ஓரிடத்தையும் இழந்துள்ளது.

பொதுத் தொகுதிகளில் மட்டுமின்றி, பட்டியல் இனத்தவருக்கான தனித் தொகுதிகளிலும் இடது கூட்டணி பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறது. பழங்குடியினருக்கான தனித் தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கூட்டணி சற்றே அதிக இடங்களைப் பெற்றிருக்கிறது. அதுபோல, கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் பிராந்தியங்களில் இடது கூட்டணி பெருவெற்றியைப் பெற்றிருந்தாலும் மலபார் பிராந்தியத்தில் சற்றே பின்தங்கிவிட்டது. சிறுநகரங்களிலும் ஊரகங்களிலும் இடது கூட்டணி பலம் பெற்றிருந்தாலும் நகர்ப்புறங்களில் காங்கிரஸ் கூட்டணி இன்னும் தமது பலத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.

இரண்டு பெண்களின் வெற்றி

கேரளத்தில் இரண்டு பெண்களின் வெற்றி முக்கியமான பேசுபொருளாக இருக்கிறது. முதலாமவர், கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா. 60,963 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கேரளத்தில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது சைலஜா டீச்சர்தான். நிபா, கரோனா பெருந்தொற்றுகளை வெற்றிகரமாகச் சமாளித்ததற்காக மக்கள் அவருக்கு அளித்திருக்கும் பூங்கொத்து இது. மற்றொருவர், காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ரேமா. சிபிஐ(எம்) கட்சியிலிருந்து வெளியேறி இந்திய புரட்சிகர மார்க்ஸிஸ்ட் கட்சியைத் தொடங்கியதால், சிபிஐ(எம்) கட்சியினரால் கொல்லப்பட்ட டி.பி.சந்திரசேகரனின் மனைவிதான் ரேமா. வடக்கன்சேரியிலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அரசியல் படுகொலைக்குப் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது. கேரளச் சட்டமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8-லிருந்து 11 ஆக அதிகரித்துள்ளதும் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இடது கூட்டணியின் வெற்றிக்குக் காரணகர்த்தா சர்வநிச்சயமாக முதல்வர் பினராயி விஜயன்தான். சிபிஐ(எம்) கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். அதன் விளைவாக, புதியவர்கள் பலருக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. 2016 சட்டமன்றத் தேர்தலைக் காட்டிலும் இடது கூட்டணி கூடுதலாக 8 இடங்களைக் கைப்பற்றியிருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. 30 வயதுக்கு உட்பட்ட நால்வரை வேட்பாளர்களாக நிறுத்தியது இடது கூட்டணி. மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகளான இவர்கள் ஏற்கெனவே உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களில் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.

சட்டமன்றத்துக்குச் செல்லும் உறுப்பினர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பாலுசேரி தொகுதியில் வெற்றிபெற்றுள்ள 27 வயது கே.எம்.சச்சின் தேவ். வழக்கறிஞரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான சச்சின் தேவ் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் தர்மாஜன் பால்குட்டியை வென்றது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. திருவம்பாடி தொகுதியிலிருந்து இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த லிண்டோ ஜோசப் உறுப்பினர் ஆகியிருக்கிறார். முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை எதிர்த்து நின்ற 26 வயது இளைஞரான ஜெய்க் தாமஸ், வண்டூர் தொகுதியில் ஏற்கெனவே நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த ஏ.பி.அனில்குமாரை எதிர்த்துப் போட்டியிட்ட 28 வயது மிதுனா இருவரும் வெற்றிவாய்ப்புகளை இழந்தாலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். ஐம்பது ஆண்டுகளாக புதுப்பள்ளி தொகுதியிலிருந்து தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுவரும் உம்மன் சாண்டி இம்முறையும் அந்தத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றுள்ளார். ஹரிபாத் தொகுதியிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா மீண்டும் ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸின் அடுத்த முதல்வர் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னிதலா, இம்முறை அந்த வாய்ப்பை இழந்துவிட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இடையிலான கோஷ்டிப் பூசல்களும்கூட அதற்கு ஒரு காரணம்.

தோல்வியை மறக்கடித்த தொடர் வெற்றி

2019 மக்களவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது இடது கூட்டணி. இருபது தொகுதிகளில் ஓரிடத்தில் மட்டுமே வென்றது. எஞ்சிய 19 இடங்களையும் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றது. சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் அணுகுமுறை அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும், நடந்து முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் இடது கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதற்குப் பெருந்தொற்றுக் காலத்தை அம்மாநில அரசு எதிர்கொண்ட விதமே காரணம் என்று கருதப்படுகிறது. மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருட்களைக் கொண்டுசேர்க்கவும் முதியோர் ஓய்வூதியம் வழங்கவும் பினராயி விஜயன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன. அவரது ஆட்சி நிர்வாகத்துக்குக் களங்கம் விளைவித்த தங்கக் கடத்தல் குற்றச்சாட்டுகளையெல்லாம் பெருந்தொற்றுக் கால அரசுச் சேவைகள் பின்னால் தள்ளிவிட்டன.

இந்தத் தேர்தலிலும் கேரளத்தில் வழக்கமான இருமுனைப் போட்டியே நிலவியுள்ளது. பாஜக தனது முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திய மெட்ரோமேன் ஸ்ரீதரனை பாலக்காடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர் ஷாபி பரம்பில் வென்றிருப்பதும், அது இந்துக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. கும்மணம் ராஜசேகரன், கே.சுரேந்திரன் என்று கேரள பாஜகவின் முன்னாள், இந்நாள் மாநிலத் தலைவர்களும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். திருச்சூர் தொகுதியின் பாஜக வேட்பாளரான பிரபல நடிகர் சுரேஷ் கோபி மூன்றாவது இடத்தைத்தான் பிடிக்க முடிந்தது. ஏற்கெனவே, மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார் சுரேஷ் கோபி.

மே 17 அன்றுதான் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க இருக்கிறது. ஆனால், அதற்குள்ளேயே அமைச்சரவையில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் என்று தீவிர விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இடது கூட்டணிக்கு சிபிஐ(எம்) கட்சியே தலைமை வகித்தபோதும் கூட்டணியில் இடம்பெற்ற மற்ற கட்சிகளும் அமைச்சரவையில் அங்கம் வகிப்பது அங்கு வழக்கமாக இருக்கிறது. இடது கூட்டணியில் சிபிஐ இரண்டாவது பெரிய கட்சி. மேலும், கேரள காங்கிரஸ்(எம்), மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசிய காங்கிரஸ் கட்சி, லோக்தந்திரிக் ஜனதா தளம் என்று 8 சிறிய கட்சிகளும் 11 சுயேச்சைகளும் இந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தனர். காங்கிரஸ் கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக். அந்தக் கூட்டணியிலும் 6 சிறு கட்சிகளும் 2 சுயேச்சைகளும் இடம்பெற்றிருந்தனர்.

கேரளத்தில் தேர்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்குவதும் ஒரு பெரிய சவால். இம்முறை மூன்று இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருக்கும் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சியும்கூட அமைச்சரவையில் இடம் கேட்டுவருகிறது. கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியான சிபிஐ கட்சி தங்களுக்கு அமைச்சரவையில் நான்கு இடங்களும் துணை சபாநாயகர் பதவியும் கேட்பதாகத் தெரிகிறது. கேரள காங்கிரஸ்(எம்) இரண்டு இடங்கள் கேட்கிறதாம். ஏற்கெனவே அமைச்சராக இருந்தவர்களுக்கும் புதியவர்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார் சிபிஐ(எம்) கட்சியின் மாநிலச் செயலாளர் விஜயராகவன். மேலைக் காற்று தமிழகத்தை நோக்கியும் வீசட்டும்!

கடந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தலிலும், இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் இடது கூட்டணி பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதற்குப் பெருந்தொற்றுக் காலத்தை அம்மாநில அரசு எதிர்கொண்ட விதமே காரணம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்