*
சென்னையின் துயரம் தீரவில்லை. பாதிப் பகுதிகளில்தான் வெள்ளம் வற்றியிருக்கிறது. வற்றியப் பகுதிகளில் கதறல்கள் வெடிக்கின்றன. பிணங்களை கட்டிக்கொண்டு அழுது துடிக் கிறார்கள் மக்கள். ஆயிரக்கணக்கான கால்நடைகள் இறந்துவிட்டன. வீடுகளை துவம்சம் செய்து விட்டது வெள்ளம். லட்சக் கணக்கான வாகனங்கள் அடித்துச் செல்லப் பட்டுவிட்டன. வீடுகளுக்குள் சேறு மட்டுமே எஞ்சியிருக்கிறது. ஆவணங்கள், சான்றி தழ்கள், புத்தகங்கள் எதுவுமே இல்லை. ஆனாலும் வானம் இன்னும் ஓயவில்லை. கருமேகங்கள் திரண்டு வந்து மிரட்டுகின்றன. அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்களால் மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நடந்தது பேரிடர்தான். நாம் மீள நாளாகும். காலம் நம் காயங்களை ஆற்றும். ஆனால், மீண்டும் ஒரு வெள்ளம் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்கள் நண்பர்கள். சமூக வலைத்தளங்களில் சென்னையை விட்டு வெளியேறிவிடுங்கள். குறைந்தபட்சம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கிறார்கள். சென்னையின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. இனி எந்த முதலீட்டாளர்கள் இங்கே வருவார்கள்? எந்த தொழிலும் செய்ய முடியாது. கிடைத்ததை எடுத் துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து விடுங்கள் என்றெல்லாம் வந்துவிழு கின்றன எச்சரிக்கைகள்.
நல்லது நண்பர்களே, உங்கள் அறிவுரைக்கு நன்றி. ஆனால், அந்த அளவுக்கு நன்றி இல்லாதவர்கள் இல்லை நாங்கள். சென்னையின் உப்புக் காற்று எங்கள் நன்றி உணர்வை பெருக்கி யிருக்கிறது. வந்தாரை வாழவைத்த நகரம் இது. உச்சங்களை உலகுக்கு அடை யாளம் காட்டிய மண் இது. நாம் நேசிக்கும் பூமி இது. இங்கிருந்து யாரும் ஒருபோதும் வெளியேற முடியாது. அப்படியானால் அடுத்து என்ன செய்வது? தீர்க்கமாக யோசிப்போம். உணர்ச்சி வசப்படாமல் யோசிப்போம். அறிவியல் பூர்வமாக யோசிப்போம்.
சென்னைக்கு வெள்ளம் புதிது அல்ல. கால வரலாற்றின் பல பக்கங்களை அது புரட்டிப்போட்டிருக்கிறது. எனவே சென்னையின் வெள்ளம் இயற் கையானது. ஆனால், இம்முறை ஏற் பட்டது இயல்புக்கு மீறிய மிகை வெள்ளம். இது மனித பிழைகளால் ஏற்பட்டது. இந்த வெள்ளத்துக்கு காரணங்கள் என்ன? பிரச்சினைகள் என்ன? தீர்வுகள் என்ன? வாருங்கள் தேடு வோம். இயக்கமாக கைகோத்து தீர்வு காண குரல் கொடுப்போம். முதலில் சென்னையின் ஆறுகள், பிரதான கால்வாய்கள் ஆகியவற்றின் அடிப்படை என்ன என்று முதலில் பார்ப்போம்.
சென்னையின் ஆறுகள்
கொசஸ்தலை ஆறு
ஆந்திராவின் கிருஷ்ணாபுரம் தொடங்கி காவிரிப்பாக்கம் ஏரி வழியாக எண்ணூரில் கடலில் கலக்கிறது. இதன் நீர்ப் பிடிப்பு பகுதி 3,757 சதுர கி.மீட்டர். மொத்த நீளம் 136 கி.மீட்டர். சென்னை நகருக்குள் 16 கி.மீட்டர் ஓடுகிறது. ஆற்றுப் படுகையின் அகலம் 150 - 250 மீட்டர். நதியின் அதிகபட்ச கொள்ள ளவு விநாடிக்கு 1,25,000 கனஅடி. சராசரி கொள்ளளவு 1,10,000 கனஅடி. கடைசியாக 2005-ம் ஆண்டில் வெள்ளம் வந்தபோது ஓடிய வெள்ளம் விநாடிக்கு 90,000 கன அடி.
கூவம் ஆறு
திருவள்ளூர் மாவட்டம், கேசவரம் ஏரி தொடங்கி சென்னை நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி 400 சதுர கி.மீட்டர். மொத்த நீளம் 72 கி.மீட்டர். புறநகரில் 40 கி.மீட்டரும் நகருக்குள் 18 கி.மீட்டரும் ஓடுகிறது. ஆற்றுப்படுகையின் அகலம் 40 - 120 மீட்டர். ஆற்றின் அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 22,000 கனஅடி. சராசரி கொள்ளளவு 19,500 கனஅடி. கடைசியாக 2005-ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது ஆற்றில் ஓடிய தண்ணீர் 21,500 கன அடி.
அடையாறு
மாகாணியம் மலையப்பட்டு ஏரியிலி ருந்து உற்பத்தியாகி பட்டினப்பாக்கம் அருகிலும், முட்டுக்காட்டிலும் கடலில் கலக்கிறது. ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி 1,142 சதுர கி.மீட்டர். ஆற்றின் நீளம் 42.5 கி.மீட்டர். புறநகரில் 24 கி.மீட்டரும் நகருக்குள் 15 கி.மீட்டரும் ஓடுகிறது. ஆற்றுப்படுகையின் அகலம் 10.50 - 200 மீட்டர். ஆற்றின் அதிகபட்ச கொள் ளளவு விநாடிக்கு 60,000 கனஅடி. சராசரி கொள்ளளவு 39,000 கன அடி. 2005-ம் ஆண்டு வெள்ளம் வந்தபோது ஆற்றில் ஓடிய தண்ணீர் 55,000 கன அடி.
பிரதான கால்வாய்கள்
வடக்கு பக்கிங்காம் கால்வாய்
எண்ணூர் தொடங்கி கூவம் ஆறு வடக்கு வரை 58 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 10,500 கனஅடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 9,900 கனஅடி.
மத்திய பக்கிங்காம் கால்வாய்
தெற்கு கூவம் ஆறு தொடங்கி அடை யாறு வரை 7.2 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிகபட்ச கொள்ள ளவு விநாடிக்கு 1500 கனஅடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 1,500 கனஅடி.
தெற்கு பக்கிங்காம் கால்வாய்
அடையாறு தொடங்கி மரக்காணம் வரை 108 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 6000 கனஅடி. 2005-ம் ஆண்டு வெள் ளத்தில் ஓடிய தண்ணீர் 5,660 கன அடி.
ஓட்டேரி நல்லா கால்வாய்
கைவிடப்பட்ட பாடி, வில்லிவாக்கம் ஏரிகளிலிருந்து பேசின் பாலம் பக்கிம்காம் கால்வாய் வரை 10.2 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிக பட்ச கொள்ளளவு விநாடிக்கு 1800 கன அடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 1800 கனஅடி.
விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாய்
கைவிடப்பட்ட விருகம்பாக்கம் ஏரியி லிருந்து நுங்கம்பாக்கம் கூவம் ஆறு வரை 6.36 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிகபட்ச கொள்ளளவு விநாடிக்கு 2100 கனஅடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 1700 கனஅடி.
கொடுங்கையூர் கால்வாய்
கொளத்தூர், மாதவரம் ஏரியிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிக பட்ச கொள்ளளவு விநாடிக்கு 1060 கன அடி. 2005-ம் ஆண்டு இதில் வெள்ளம் வரவில்லை.
வீராங்கல் ஓடை
ஆதம்பாக்கம் ஏரியிலிருந்து பள்ளிக் கரணை சதுப்பு நிலம் வரை 2.78 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிக பட்ச கொள்ளளவு விநாடிக்கு 654 கன அடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 654 கன அடி.
கேப்டன் காட்டன் கால்வாய்
வியாசர்பாடி ஏரியிலிருந்து தண் டையார்பேட்டை பக்கிங்காம் கால்வாய் வரை 6.9 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிகபட்ச கொள்ளளவு 1950 கனஅடி. 2005-ல் இதில் வெள்ளம் வரவில்லை.
வேளச்சேரி கால்வாய்
வேளச்சேரி ஏரியிலிருந்து பள்ளிக் கரணை சதுப்பு நிலம் வரை 2.14 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. இதன் அதிக பட்ச கொள்ளளவு 655 கன அடி. 2005-ம் ஆண்டு வெள்ளத்தில் ஓடிய தண்ணீர் 750 கன அடி.
மேற்கண்ட 3 ஆறுகள் மற்றும் 9 பிரதான கால்வாய்களிலும் மொத்தம் 512 சிறு வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள் கலக்கின்றன. இதில் 27% கூவம் ஆற்றிலும், 29 % பக்கிங்காம் கால்வாயிலும் 19 % அடையாற்றிலும் கலக்கின்றன.
இதுதான் சென்னையின் அடிப்படை நீரியல் - புவியியல் அமைப்பு. இவற்றில் எல்லாம் என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றன. ஆற்றின் முகத்துவாரங் கள் எல்லாம் எப்படி இருக்கின்றன. மனிதப் பிழைகள், தொழில்நுட்பப் பிழைகள் என்ன. அவற்றை எப்படி தீர்ப்பது, என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை நாளை பார்ப்போம்.
(நீர் அடிக்கும்)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago