வாருங்கள்... சென்னையைக் காப்போம்

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு

*

இயற்கைதான் மனிதனை உருவாக்கியது. மனிதன் இயற்கையை உருவாக்க முடியாது. இயற்கையை நாம் என்னதான் சீரழித்தாலும் அது தன்னைத் தானே தகவமைத்துக்கொள்ளும். ஆறுகளும் அப்படித்தான். நாம் ஆக்கிரமித்தாலும் அது தன் இடத்தை அடைந்தே தீரும். இப்போது அதுதான் நடந்திருக்கிறது. தினமும் நம் வீட்டில் இருந்து குப்பைகளை ஆற்றில் வீசினோம். இப்போது அந்தக் குப்பைகளை நம் வீட்டுக்குள் எறிந்துவிட்டுச் சென்றிருக்கிறது ஆறு. வருந்தி ஆகப்போவது ஒன்றுமில்லை; அடுத்து என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

சென்னையின் வெள்ளம்

சென்னையில் 1976, 1985, 1996, 1998, 2005, 2009-ம் ஆண்டுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு களில் வந்த வெள்ளத்துக்குப் புள்ளி விவரங்கள் இல்லை. 1976-ல் செம்பரம் பாக்கம் ஏரியில் வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் கோட்டூர்புரம் வீட்டுவசதி வாரிய வீடுகள் மூழ்கின. 1985-ல் அடையாற் றில் 63 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கரையோர வீடுகள் மூழ்கின. 1996-ல் அடையாற்றில் 20 ஆயிரம் கனஅடி தண்ணீரும்; பூண்டி ஏரியில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. கார னோடை பாலம் உடைந்தது. 1998-ம் ஆண்டு வெள்ளத்தில் கொடுங்கை யூர் - பக்கிக்காம் கால்வாய் உடைந்தது. 2005-ல் ஒரேநாளில் 40 செ.மீ மழை கொட்டியது. கூவத்தில் 19 ஆயிரம் கன அடியும் அடையாற்றில் 40 ஆயிரம் கன அடியும் தண்ணீர் ஓடியது. பக்கிம்காம் கால்வாய், விருகம்பாக்கம் - அரும் பாக்கம் கால்வாய் உடைப்பெடுத்து தண் ணீர் ஓடியது. சுமார் ஒரு லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டார்கள்.

அடையாறு வெள்ளம் ஏன்?

இப்போது வந்த வெள்ளத்தைக் கடைசியாக 2005-ம் ஆண்டு வந்த வெள் ளத்துடன் ஒப்பிடுவோம். 2005-ல் கொசஸ் தலை ஆற்றில் ஓடிய தண்ணீர் வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி. இப்போது ஓடிய தும் கிட்டத்தட்ட அதே அளவுதான். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் ஆற்றுப் படுகையின் அளவு சுமார் 50 மீட்டர் குறுகிவிட்டது. அந்தக் கொள்ளளவுக் கான சுமார் 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறிவிட்டது. திருவள்ளூர், திரு வாலங்காடு, எல்லாபுரம், திருக்கண்டலம் உள்ளிட்டப் பகுதிகளில் ஏற்பட்ட வெள் ளத்துக்கு முக்கிய காரணம் இது.

2005-ல் அடையாற்றில் ஓடிய வெள் ளம் வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி. இப்போது 20 ஆயிரம் 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே ஓடியிருக் கிறது. ஆனால், அடையாற்றின் சீற்றத் தைத் தணிக்கும் பல்லாவரம், குரோம் பேட்டை, போரூர் ஏரிகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இதனால் தண்ணீர் அனகா புத்தூர், பள்ளிக்கரணை, பொழிச்சலூர், பம்மல், குரோம்பேட்டை குடியிருப்பு களை மூழ்கடித்து நேராக அடையாற் றுக்கு வந்துவிட்டது. அடையாற்றின் அகலம் 10.50 - 200 மீட்டர். ஆனால், பொத்தேரி தொடங்கி திருநீர்மலை வரை சுமார் 20 கி.மீ தொலைவுக்கு அடை யாறு 30 மீட்டர் வரை ஆக்கிரமிக்கப்பட் டுள்ளது. அந்த 30 மீட்டருக்கான வெள்ளம் முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளை மூழ்கடித்துவிட்டது. நந்தம்பாக்கம் தொடங்கி மணப்பாக்கம் வரை சுமார் 10 கி.மீ வரை அடையாற்றின் படுகைகளை அரசே பட்டா நிலங்களாக மாற்றியது. நந்தம்பாக்கம், மணப்பாக்கம் மூழ்கி விட்டது. சென்னை நகருக்குள் சைதாப்பேட்டை தொடங்கி அடையாறு முகத்துவாரம் வரை ஆக்கிரமிப்புகள். சைதாப்பேட்டை, கோட்டூர்புரம் மூழ்க முக்கிய காரணம் இதுதான்.

கூவத்தில் வெள்ளம் ஏன்?

கூவம் ஆற்றில் 2005-ம் ஆண்டு ஓடிய வெள்ளம் வினாடிக்கு 21,500 கனஅடி. தற்போது கேசவரம் அணைக்கட்டில் இருந்து கூவம் ஆற்றுக்குத் திறந்து விடப்பட்ட வெள்ளம் 13,113 கனஅடி மட்டுமே. கூவம் ஆற்றுப்படுகை புறநக ரில் மதுரவாயலில் தொடங்கி திருவேற் காடு வரை 50 சதவீதம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. நகருக்குள் எம்.எம்.டி.ஏ. காலனி தொடங்கி பல்லவன் சாலை வரை 20-40 சதவீதம் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது. மேற்கண்டப் பகுதிகள் எல்லாம் இப்போது வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

அழிவுக்கு ஆக்கிரமிப்பு ஒரு காரணம் என்றால் ஆறுகளை நாம் பராமரிக்காதது இன்னொரு காரணம். அடையாறு மற்றும் கூவம் இரு ஆறுகளிலும் சுமார் 10 - 15 அடி ஆழம் வரை சேறு மற்றும் திடக் கழிவுகள் நிரம்பியிருக்கின்றன. இந்த ஆறுகளில் 60 சதவீதம் சேறு தேங்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறது பொதுப்பணித்துறையின் ஆய்வு அறிக்கை. இதனால், ஆற்றின் கொள் ளளவும் 60 சதவீதம் குறைந்தது. அந்த அளவுக்கான தண்ணீர்தான் ஊருக்குள் புகுந்துவிட்டது.

கால்வாய்கள் தரும் வேதனை

குடியிருப்புகளுக்குள் சாக்கடை தண்ணீர் புகுந்ததற்கு முக்கியக் கார ணம் கால்வாய்களின் சீரழிவுதான். பக்கிம்காம் தொடங்கி சென்னையில் இருக்கும் ஒன்பது பிரதான கால்வாய் களும் மிகப் பழமையானவை. இதுவரை ஒருமுறைகூட அவை தூர் வாரப் படவில்லை அல்லது ஆவணங்களில் மட்டுமே தூர்வாரப்பட்டன. பக்கிம்காம் மின் மூன்று கால்வாய்களும் ஓட்டேரி நல்லா ஓடையும் அதீத ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கின்றன. கடந்த 15 ஆண்டு களில் பக்கிம்காம் கால்வாய்களில் இருந்து கடலுக்கு செல்ல அமைக்கப் பட்ட சிறு கால்வாய்கள் பொறியியல்ரீதியாக திட்டமிடப்படாதவை. அவை நீரியல் ஓட்டத்துக்கு எதிராக அமைக்கப்பட்டுள் ளன. பழைய மகாபலிபுரம் சாலையில் உருவாக்கப்பட்ட மென்பொருள் நிறு வனங்கள், குடியிருப்பு நகரங்களுக் காக புதிய கால்வாய்கள் அமைக்கப்பட வில்லை. அங்கு உற்பத்தியாகும் கழிவு நீரும் பக்கிம்காம் கால்வாய்க் குக் கூடுதல் சுமையாக அமைந்து விட்டது.

மூடிக்கொண்ட முகத்துவாரங்கள்!

கொசஸ்தலை, கூவம், அடையாறு இவற்றின் முகத்துவாரங்கள் முறையே எண்ணூர் (120 மீட்டர் அகலம்), நேப்பியர் பாலம் (150 மீட்டர் அகலம்), பட்டினப்பாக்கம் (300 மீட்டர் அகலம்), முட்டுக்காடு (100 மீட்டர் அகலம்) ஆகிய இடங்களில் அமைந்திருக்கின்றன. இங்கிருக்கும் ஆறுகளின் மட்டமும் கடல் மட்டமும் சமநிலையில் இருக்கின்றன. இதனால், இயல்பாகவே ஆற்றின் தண்ணீர் வேகமாக கடலுக்குள் செல்லாது. சென்னை கடற்கரையில் வடக்கில் இருந்து அடித்துவரப்படும் மணல் துறைமுகத்தின் தெற்கே மணல் மேடாக குவிந்துக்கிடக்கிறது. இதுவும் ஆற்று நீரை தடுக்கிறது.

சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சீற்றம் அதிகம் கொண்டது. இங்கு எழும் அலைகள் வேகமானவை; உயரமானவை. ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே இங்குக் கடல் அலைகள் உள்வாங்கும். இது ஓதம் எனப்படும். கடல் ஓதம் வாங்கும்போது மட்டுமே ஆற்று நீர் உள்ளே செல்ல முடியும். அடுத்து, கடல் நீரோட்டங்கள் (Rip Currents). இங்கு அக்டோபர் - பிப்ரவரி வரை மங்கோலியா, பர்மா பகுதியில் இருந்து வீசும் வடகிழக்குப் பருவக் காற்று அபாயம் நிறைந்தது. இது கடற்கரையையொட்டியே கடலுக்குள் சுமார் 2 ஆயிரம் நீரோட்டங்களை உருவாக்குகிறது. கடலுக்குள் குறுக்கும் நெடுக்குமாக வேகமான ஆற்றைப் போலச் செல்லும் இந்த நீரோட்டங்கள் சமவெளியின் ஆற்று நீர் கடலுக்குள் புகுவதைத் தடுக்கின்றன. இவை எல்லாம் இயற்கையான காரணங்கள்.

அடுத்து மனிதப் பிழைகள். சென்னை யில் தினமும் சேகரமாகும் 45 லட்சம் கிலோ குப்பைகள் மற்றும் 70 ஆயிரம் கிலோ கட்டிடக் கழிவுகளில் 40 சதவீதம் கூவத்திலும் அடையாற்றிலும் கொட்டப்படுகிறது. இந்தக் கழிவுகள் முகத்துவாரங்களை அடைத்துள்ளன. குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு அணைக்கட்டின் சுவரைப் போல கடலுக்கு நதிக்கும் இடையே தடைபோடு கிறது. 1960-களில் சென்னை துறைமுகம் அருகே கடலுக்குள் கட்டப்பட்டத் தடுப்புச் சுவர்கள் ஆற்று நீர் கடலுக்குள் செல்லத் தடையாக இருக்கின்றன.

என்ன செய்ய வேண்டும்?

மேற்கண்ட மனிதப் பிழைகள் களையப்பட வேண்டும். ஒன்பது பிரதான கால்வாய்களையும் தூர் வார வேண்டும். பொதுப் பணித்துறை தொடங்கி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வரை சுமார் 12 துறைகள் மேற்கண்ட ஆறுகளின் சீரமைப்பு ஆய்வுகளுக்காக மட்டுமே சுமார் ரூ.100 கோடியை செலவிட்டுள்ளன. 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் அடையாறு முகத்துவாரம் அகலப்படுத்தும் பணி தொடங்கியது. ஆனால், அடையாற்றைத் தூர் வாரும் திட்டம் எதுவுமில்லை.

2014-15 ஆண்டு நிதி நிலை அறிக்கையில் கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டம் ரூ. 1934 கோடியே 84 லட்சம் மதிப்பில் அறிவிக்கப்பட்டது ஓர் ஆறுதலான விஷயம். முதல் கட்டமாக ஆவடி அருகே பருத்திப்பட்டு அணையில் இருந்து கூவம் முகத்துவாரம் வரை 27.3 கி.மீ தொலைவுக்கு கூவம் ஆற்றை தூர் வாரி சீரமைக்க, கடந்த செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

கூவத்தில் கழிவு நீரை தடுப்பது, திடக் கழிவு மேலாண்மையை மேம் படுத்துவது, நதியின் கொள்ளளவை மேம்படுத்திப் பராமரிப்பது, நதிக்கரை மக்கள் மறுவாழ்வு, மறு குடியமர்வு, நதியில் பல்லுயிர் பெருக்கம் ஆகியவை திட்டத்தின் முக்கிய அம்சங்கள். மேற் கண்ட பணிகளைத் தீவிரப்படுத்த வேண் டும். கூவத்தை விட அடையாற்றில்தான் வெள்ள அபாயம் அதிகம். எனவே, அடையாற்றிலும் சீரமைப்பு பணிகளைத் தொடங்க வேண்டும். போர்க் கால அடிப்படையில் இந்தப் பணிகளை எல்லாம் முடுக்கிவிட்டால் மட்டுமே எதிர்காலத்தில் வெள்ள அபாயங்களில் இருந்து சென்னையைக் காப்பாற்ற இயலும்.

(நீர் அடிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்