*
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எப்போது அதிக அளவில் உபரி நீரை வெளியேற்றுவது என்பதில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்றும், இதுவே சென்னையின் வெள்ளப் பாதிப்புகளை அதிகமாக்கி விட்டது என்றும் பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது.
குறிப்பாக டிசம்பர் 1-ம் தேதி இரவு வினாடிக்கு 29 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அன்று காலை நிலவரப்படி வெறும் 900 கன அடி மட்டுமே வெளியேற்றப்பட்டது ஏன் என்ற கேள்வி பிரதானமாக எழுப்பப்படுகிறது.
நவம்பர் 30, டிசம்பர் 1-ம் தேதி வாக்கில் கனமழை பெய்யக் கூடும் என உள்நாட்டு வானிலை ஆய்வு மையங் களும், சர்வதேச வானிலை நிறுவனங் களும் எச்சரிக்கை செய்தன. எனினும் இந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாத காரணத்தால் செம்பரம்பாக்கம் அணையின் நீர் அளவை கையாள்வதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அணை நீர்மட்ட நிலவரம்
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. சென்னை குடிநீர் வடிகால் வாரிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் நவம்பர் 1-ம் தேதி நிலவரப்படி ஏரியின் நீர் இருப்பு வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே. அதன் பிறகு வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் அடுத்த பத்து நாட்களிலேயே மூன்று மடங்கு அதிகரித்து, நவம்பர் 10-ம் தேதி 791 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உயர்ந்தது.
அதன் பிறகு பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது. குறிப்பாக நவம்பர் 16-ம் தேதி வினாடிக்கு 9 ஆயிரத்து 717 கனஅடி, மறுநாள் 17-ம் தேதி 12 ஆயிரத்து 31 கன அடி என்ற அளவுக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் அணையின் நீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. நவம்பர் 1-ம் தேதி 228 மில்லியன் கன அடி மட்டுமே இருந்த நீர் இருப்பு 17-ம் தேதி 3 ஆயிரத்து 197 மில்லியன் கன அடி என்ற அளவுக்குத் தண்ணீர் பெருகியது.
இதன் காரணமாக முதல் நாள் வரை வினாடிக்கு வெறும் 64 கன அடி வரை மட்டுமே வெளியேற்றப்பட்ட உபரி நீர் 17-ம் தேதி திடீரென 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
அதன் பிறகு அணையின் நீர் இருப்பை 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கு மேல் இருக்குமாறு பொதுப் பணித் துறையினர் பராமரித்து வந்தனர். நவம்பர் 25-ம் தேதி வினாடிக்கு 5 ஆயிரத்து 629 கனஅடி நீர்வரத்து இருந்த போது 5 ஆயிரம் கன அடியும், நவம்பர் 28-ம் தேதி 610 கன அடி நீர் வந்தபோது, 500 கன அடியும் வெளியேற்றினர். அதாவது ஏரிக்கு வரும் நீரின் அளவுக்கு ஏற்ப வெளியேற்றும் நீரின் அளவையும் பராமரித்தனர்.
இதற்கிடையே நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் மிகக் கனத்த மழை பெய்யக் கூடும் என்ற வானிலை எச்சரிக்கை அறிவிப்புகள் வந்து கொண்டே இருந்தன. இந்த நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய, பெரிய ஏரிகள் முழுவதும் நிரம்பி இருந்தன. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைப் போலவே மழை பொழிந்தால் அந்த ஏரிகளில் இருந்து வினாடிக்குப் பல்லாயிரக்கணக்கான கனஅடி வீதத்தில் உபரி நீர் வெளியேறும் என்பதும், அவை யாவும் சென்னைக்குள்தான் புகும் என்பதும் எதார்த்தம். ஆகவே, அதே நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்தும் பெரிய அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டால் பெரும் வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்பதும் நிச்சயம்.
ஆனால் இந்த ஆபத்தைச் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள் கணிக்கத் தவறிவிட்டனர் என்பதே இப்போது பிரதான விமர்சனமாகக் கூறப்படுகிறது. குடிநீர் வடிகால் வாரிய இணையதளத் தகவல்களின்படி, நவம்பர் 29-ம் தேதி வினாடிக்கு 570 கன அடி, நவம்பர் 30-ம் தேதி வினாடிக்கு 600 கன அடி என்ற அளவிலேயே நீர் வெளியேற்றம் இருந்துள்ளது.
பெரும் மழை பெய்த டிசம்பர் 1-ம் தேதி கூட முதலில் வினாடிக்கு 900 கன அடி என்ற அளவில் மட்டுமே நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் ஏரிக்கான நீர் வரத்து அதிகரிக்கவே, அதன் பிறகு வெளியேற்றும் நீரின் அளவையும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. டிசம்பர் 1-ம் தேதி அதிகபட்சமாக 29 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
நவம்பர் 30-ம் தேதியே மழை தொடங்கிவிட்ட போதிலும் செம்பரம் பாக்கம் அணையிலிருந்து அதிக அளவு உபரி நீரை வெளியேற்றாததன் காரணம் என்ன என்பதுதான் இப்போது விவாதத்துக்குரிய கேள்வியாக எழுந்துள்ளது. இது குறித்துப் பொதுப் பணித் துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:
ஓர் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு நீரை வெளியேற்ற வேண்டும் அல்லது எவ்வளவு வரை நீரை தேக்கி வைத்திருக்கலாம் என்பதைத் துறைத் தலைவர்களாக இருக்கக் கூடிய ஐஏஎஸ் அதிகாரிகளால் கணிக்க இயலாது. பல ஆண்டு காலம் தொடர்ந்து அந்தந்தப் பகுதியிலேயே பணியாற்றி வரும் பொதுப்பணித் துறையின் பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்களால்தான் அதனைத் தீர்மானிக்க முடியும். அந்தந்தப் பகுதியில் பெய்யும் மழையின் அளவு, அணைக்கு வரும் நீர்வரத்து, அன்றைய நீர்மட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த அளவுக்கு நீரை அணையில் வைத்திருக்கலாம் மற்றும் எவ்வளவு உபரி நீரை வெளியேற்றலாம் என்பதை அவர்களால் தெளிவாகக் கணிக்க முடியும். இவ்வாறு அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்தும் நடைமுறை ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இருந்து தொடர்கிறது.
வெள்ள நீர் சூழ்ந்த மணப்பாக்கம் குடியிருப்பு பகுதி. | படம்: க.ஸ்ரீபரத்
ஆனால் அண்மைக் காலங்களில் இந்தப்போக்கு மாறியுள்ளது. சிறிய அணைகளில் கூட எவ்வளவு நீர் வெளியேற்ற வேண்டும் என்பதை உயர் அதிகாரிகளின் உத்தரவைப் பெற்றுச் செயல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மக்களுக்கு அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில் செம்பரம்பாக்கம் அணையிலிருந்து எந்த நேரத்தில் எவ்வளவு உபரி நீரைத் திறக்க வேண்டும் என்பது அணையைத் தொடர்ந்து கண்காணித்து வரும் பொறியாளர்களுக்கும், அங்குள்ள களப்பணியாளர்களுக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களே முடிவெடுத்துச் செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்காக அவர்கள் காத்திருக்க நேர்ந்ததாலேயே முன்னதாகவே அதிக அளவில் உபரி நீரைத் திறக்காமல், திடீரெனப் பெருமளவு உபரி நீர் திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படுவது உண்மையாக இருப்பின், சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு இவைதான் முக்கிய காரணம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
குடிநீருக்காக தேக்கப்பட்டதா?
சென்னையில் கடந்த ஜூன், ஜூலை தொடங்கி, நவம்பர் முதல் வாரம் வரை கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. டிசம்பர் 1-ம் தேதி 3 ஆயிரம் மில்லியன் கன அடிக்கும் மேல் இருந்த செம்பரம்பாக்கம் ஏரியில் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் நவம்பர் 1-ம் தேதி வெறும் 228 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருந்தது. இதிலிருந்தே நவம்பர் முதல் வாரம் வரை எந்த அளவுக்குக் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது என்பதை உணர்ந்து கொள்ளலாம். சென்னைக்குக் குடிநீர் விநியோகம் செய்யச் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டனர். ஒருகட்டத்தில் மழை வேண்டிப் பல கோயில்களில் வருணப் பகவானுக்குப் பூஜைகள் கூடச் செய்தனர்.
இந்தச் சூழலில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட குடிநீர் தரும் ஏரிகளில் இருந்து அதிக அளவுக்கு உபரி நீரை வெளியேற்ற வேண்டாம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும் கூறப்படு கிறது. ஒருவேளை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போலக் கனமழை பெய்யாமல் போய்விட்டால், குடிநீருக் காகத் தேக்கி வைத்திருக்கும் பெருமளவு தண்ணீரை வீணாக்கி விடக் கூடாதே என்ற அச்சத்துடன் இந்த அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அடுத்த நான்கைந்து மாதங்களில் வரப்போகும் சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது எனக் கருதி, அதிக அளவு உபரி நீரைத் தக்க சமயத்தில் வெளியேற்ற அதிகாரிகள் தயங்கினார்களா என்ற கேள்வியும் உள்ளது.
ஆக, காரணங்கள் எதுவாயினும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஒரே நேரத்தில் 29 ஆயிரம் கன அடி அளவுக்கு உபரி நீர் திறக்கப்பட்டது சென்னையின் வெள்ளப் பாதிப்புகளுக்கு ஒரு காரணமாகி விட்டது.
நவம்பர் 17-ம் தேதி செம்பரம்பாக்கத் திலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டபோது அடையாற்றில் பெரிய அளவில் வெள்ளப் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் டிசம்பர் 1-ம் தேதி இரவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற ஏரிகளில் இருந்து அடையாற்றுக்கு சுமார் 40 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வந்து கொண்டிருந்த நேரத்தில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட 29 ஆயிரம் கன அடி உபரி நீரும் அதனுடன் சேர்ந்து கொண்டதால் பாதிப்புகள் அதிகமாயின.
ஆகவே, இனியாவது துல்லியமான நீர் மேலாண்மை என்பதற்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இதுவே எதிர்காலத்தில் இதுபோன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பாதிப்புகளைக் குறைக்க உதவியாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago