ஒன்றிய மாநில அரசுகளுக்கிடையிலான அதிகாரப் பகிர்வுகளின் அபத்தங்களைக் கரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் நமக்கு அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ஏழாவது அட்டவணையின் மாநிலப் பட்டியல் இடுகை 6-ன்படி மக்கள் நல்வாழ்வு, துப்புரவு, மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவை மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. ஆனால், மாநில அரசுகளின் நல்வாழ்வுத் துறை தமக்குத் தேவையான நிதியாதாரங்களுக்காகவும் மருத்துவ உதவிகளுக்காகவும் நிபுணத்துவ வழிகாட்டுதல்களுக்காகவும் ஒன்றிய அரசைச் சார்ந்திருக்க வேண்டியிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
தடுப்பூசி, மருத்துவத் தேவைக்கான ஆக்ஸிஜன், உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவற்றின் விநியோகத்தில் மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொள்வதற்கு அரசியல் கருத்து மாறுபாடுகள் காரணமில்லை. மக்கள் நல்வாழ்வு தொடர்பான பொறுப்புகளை மாநிலங்களிடம் ஒப்படைத்துவிட்டு, அதற்குத் தேவையான அதிகாரங்களை ஒன்றிய அரசு தன்னிடமே வைத்துக்கொண்டிருப்பதே உண்மையான காரணம்.
ஒன்றிய அரசின் பொறுப்பு
மக்கள் நல்வாழ்வு மாநிலப் பட்டியலில் இருந்தாலும் ஒன்றியப் பட்டியலின் இடுகை 28-ன்படி, துறைமுகங்களில் தொற்றுநோய்த் தடை, அது தொடர்பான மருத்துவமனைகள் ஒன்றிய அரசின் அதிகாரங்களுக்கு உட்பட்டவை. பொதுப் பட்டியலின் இடுகை 29-ன்படி, தொற்றுநோய்கள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குப் பரவுவதைத் தடுக்கும் அதிகாரமும் ஒன்றிய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தொற்றுநோய்கள் தொடர்பில் ஒன்றிய அரசுக்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது.
தொற்றுநோய்கள் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவையும் பெருந்தொற்றுக் காலத்தில் முடிவெடுக்கும் முழு அதிகாரங்களையும் ஒன்றிய அரசிடமே அளித்துள்ளன. எனவே, ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்காக மாநில அரசுகளின் மீது பழிபோடுவதில் நியாயமில்லை. மாநிலங்கள் தமக்குத் தேவையான தடுப்பூசிகளை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ள வற்புறுத்துவதும் வெவ்வேறான விலை நிர்ணயங்களை அனுமதிப்பதும் ஒன்றிய அரசு தனது சட்டரீதியான பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதாகவே பொருள்படும். சில மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளலாம்; சில மாநிலங்களால் அவ்வாறு வாங்க இயலாத சூழலும் உருவாகலாம் எனும்போது தடுப்பூசி விநியோகத்துக்கு ஒன்றிய அரசு முழுப் பொறுப்பேற்றுக்கொள்வதே முறையானது. ஏற்கெனவே போதிய நிதியாதாரங்கள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் மாநில அரசுகளின் மீது மென்மேலும் நிதிச் சுமையை ஏற்றிவைப்பது கருணையற்ற அணுகுமுறை.
ஆக்ஸிஜன் அரசியல்
ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படும் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்ஸிஜனை, தமது அவசரத் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வதற்கும்கூட ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மருத்துவ ஆக்ஸிஜனுக்கான விலையை ஒன்றிய அரசின் வேதியுரங்கள் மற்றும் ரசாயனத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மருந்து விற்பனை ஆணையம் தீர்மானிக்கிறது. ஆக்ஸிஜன் விநியோகத்தின் மீதான கட்டுப்பாடும் கண்காணிப்பும் பிரதமர் அலுவலகத்தால் அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம் இருக்கிறது. இக்குழுவில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் இடம்பெற்றிருந்தபோதிலும் குடும்ப நலத் துறை, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு என்று ஒன்றிய அரசின் அமைச்சகங்களும் நிறுவனங்களுமே முடிவெடுக்கின்றன.
இந்தியா எப்போதுமே மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியில் மிகையான நாடாகத்தான் இருந்துவந்திருக்கிறது. இப்படியொரு நிலை இதற்கு முன் ஏற்பட்டதில்லை. இரண்டாவது அலையின் ஆக்ஸிஜன் தேவைக்கு முன்கூட்டியே ஆயத்தமாகியிருக்க வேண்டும். அதே நேரத்தில், உயிர் காக்கும் பிராண வாயுவிலும்கூட மாநிலங்களின் தேவைகளைக் காட்டிலும் ஒன்றிய அரசின் ஒப்புதலே முக்கியத்துவம் பெறுவதைப் புரிந்துகொண்டிருக்கிறோம்.
வலுவற்ற கட்டமைப்புகள்
மாநில அரசுகள் தங்களது குறைந்தபட்ச நிதியாதாரங்களைக் கொண்டு மருத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட வாய்ப்பே இல்லை. எனவே, ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் போன்ற அமைப்புகளின் வழிகாட்டுதல்கள் எப்போதுமே மாநிலங்களுக்கு மிகவும் அவசியமாக இருக்கின்றன. ஆனால், அத்தகைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகளில் மாநிலங்களின் பங்கேற்பு என்பது அறவே இல்லை. கூட்டாட்சி நாடான கனடாவின் நல்வாழ்வு ஆய்வு நிறுவனத்தில் அனைத்து மாநிலங்களும் பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் அத்தகைய அணுகுமுறை இதுவரையில் பின்பற்றப்படவில்லை. இந்தியாவில் தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் மருத்துவ ஆராய்ச்சியின் முடிவுகளைச் செயல்படுத்துவதற்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளை மாநிலங்கள் பெற்றிருக்கவில்லை என்பதை உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று (எண்: 3,447, 2004) சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்நிலை இன்றும் தொடரவே செய்கிறது.
மாநிலங்கள் தங்களது பொது சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கும்கூட ஒன்றிய அரசின் தயவுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒன்றிய அரசின் நிதியுதவியுடன் மாநில அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களில், மாநில அரசும் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஆனால், அத்தகைய திட்டங்கள் என்னென்ன என்பதை ஒன்றிய அரசே தீர்மானிக்கிறது. தமிழ்நாடு அரசு பொது சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த நிதியுதவியை எதிர்பார்த்து நின்ற காலங்களில், ஒன்றிய அரசு கிராமப்புறச் சாலைகளை இணைக்கும் திட்டங்களுக்காக மட்டுமே தமது நிதியுதவிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. தமிழகத்தின் கிராமப்புற இணைப்புச் சாலைப் பணிகள் ஏற்கெனவே முழுமையாகிவிட்டன என்பதைக்கூட ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. (ஜெய் சௌத்ரி, இந்தியன் ரிவ்யூ, 9(2), 2010). எனவே, மாநில அரசு தனது பொது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்த முயன்றாலும், ஒன்றிய அரசு அதை அனுமதித்தால்தான் உண்டு.
தொற்றுநோய்க் கட்டுப்பாட்டில் மட்டுமல்ல... அது தொடர்பில் மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்வு, சமூகப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு ஆகியவை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரங்களும் முழுமையானதாகவோ மேலோங்கக்கூடியதாகவோ ஒன்றிய அரசின் வசமே உள்ளன. இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே ஒன்றிய அரசிடம் இப்படித்தான் அதிகாரங்கள் குவிந்துகிடக்கின்றன. ஆனால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த கட்சிகள், கூட்டணிகளின் அணுகுமுறைகளில் வேறுபாடுகளும் உண்டு.
நான்கு காலகட்டங்கள்
இந்தியக் கூட்டாட்சி அமைப்பை ஆய்வுசெய்யும் அறிஞர்கள், முதலாவது பொதுத் தேர்தல் தொடங்கி, இன்று வரையிலுமான காலகட்டத்தை நான்காகப் பிரிக்கிறார்கள். 1952 தொடங்கி 1967 வரையிலான முதலாவது காலகட்டம் ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் ஒற்றைக் கட்சி ஆட்சியாகப் பார்க்கப்படுகிறது. 1967 தொடங்கி 1989 வரையிலான இரண்டாவது காலகட்டம் ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல் காலமாகக் கருதப்படுகிறது. 1989 தொடங்கி 2014 வரையிலான மூன்றாவது காலகட்டம் பல கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சிக் காலமாக மதிப்பிடப்படுகிறது. 2014-லிருந்து தொடங்கும் நான்காவது காலகட்டம் மீண்டும் ஒற்றைக் கட்சி ஆட்சியிலேயே வந்து நிற்கிறது. ஒற்றைக் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதாலேயே 1967 வரையிலான காலகட்டமும் 2014-க்குப் பிறகான காலகட்டமும் ஒன்றல்ல என்பதே ஆய்வுகளின் முடிவு.
காங்கிரஸின் ஒற்றைக் கட்சி ஆட்சிக் காலத்தில் மொழிவாரி மாநிலங்களுக்கான குரல்கள் வலுவாக இருந்தன என்பதால் மாநில உரிமைகளுக்கான குரல்களும் சேர்ந்தே ஒலித்தன. கட்சியின் மாநிலத் தலைவர்கள் தேசிய அளவில் கட்சிப் பொறுப்புகளிலும் ஒன்றிய அமைச்சரவையிலும் இடம் வகித்தனர். முக்கியமாக, அவர்களது குரல்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் உள்கட்சி ஜனநாயகம் அப்போது நிலவியது. நான்காவது காலகட்டமாகக் குறிப்பிடப்படும் இன்றைய அரசியல் சூழலில், கருத்தியல் மட்டுமின்றி நபர்களும் அதிகாரத்தின் மையங்களாக மாறியுள்ளனர்.
முதலாவது காலகட்டத்தில், தேர்தல் அரசியலில் திமுக அடியெடுத்துவைத்த காலம். எதிர்க்கட்சி என்ற நிலையில், மாநில உரிமைகளுக்கு வலுவாகக் குரல்கொடுத்தது. இரண்டாவது காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த திமுகவும் அதிமுகவும் மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தபடியே ஒன்றிய ஆட்சியுடன் நெருக்கம் காட்ட வேண்டிய நெருக்கடிகளையும் எதிர்கொண்டன. மூன்றாவது காலகட்டத்தில், இரு கட்சிகளுக்குமே ஒன்றிய அரசின் கூட்டணி ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அந்தந்தக் காலகட்டங்களின் சூழல்களுக்கு ஏற்ப தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகளும் மாநில உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடியிருக்கின்றன. நான்காவது காலகட்டத்திலும் அந்நிலை தொடர வேண்டும். ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல. வெற்றிநடை தொடர்ந்தாலும் பாதையின் இருபுறமும் முள்வேலி போடப்பட்டிருக்கிறது. ஒரு கரம் ஆயிரம் கரங்களின் பிரம்மாண்டத்தோடு ஒளியை மறைக்கலாம்; ஆனால், விடியலை ஒருபோதும் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது!
- செல்வ புவியரசன், தொடர்புக்கு: puviyarsan.s@hindutamil.co.in
(நிறைந்தது)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago