முதல்வர் 12: பறிக்கப்படும் நிதி அதிகாரங்கள்

By செல்வ புவியரசன்

இடைவிடாத தன்னாட்சிக் குரல்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை அரசுகளின் ஆயுளை வேண்டுமானால் காப்பாற்றி வைத்திருக்கலாம். ஆனால், மாநில அரசுகளின் தன்னாட்சிக்கு அடிப்படைத் தேவைகளான வரிவிதிப்பு, வருவாய்ப் பகிர்வு அதிகாரங்கள் எப்போதும்போல ஒன்றிய அரசின் வசமே உள்ளன. பொருளாதார மற்றும் சமுதாய அளவில் திட்டமிடுதலுக்கான அதிகாரங்கள் மாநிலப் பட்டியலிலோ, பொதுப் பட்டியலிலோ இருந்தாலும் வருமானத்தின் மீது வரிவிதிக்கவும் சர்வதேச வர்த்தகத்தில் சுங்கவரிகளை நிர்ணயிக்கவும் ஒன்றிய அரசே அதிகாரம் பெற்றுள்ளது.

மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் வரியினங்கள் நிலவரி, விவசாய வருமான வரி போன்று விரிவடையாத தன்மை கொண்டவை. குறைந்த வருவாயை மட்டுமே பெற்றுத் தரக் கூடியவை. மாறாக, ஒன்றிய அரசின் வசம் உள்ள வரியினங்களோ விரிவடையும் தன்மை கொண்டவையாக உள்ளன. ஒன்றிய, மாநில அரசுகளுக்குப் பொதுவான வரியினங்களை ஒன்றிய அரசே விதித்து, வசூலித்துப் பின்பு மாநில அரசுகளிடம் அளிப்பதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் வகைசெய்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைக்காக மாநிலங்கள் ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க வேண்டியிருப்பது அதனால்தான்.

கு.ச.ஆனந்தன் எழுப்பிய கேள்வி

தமிழகத்தில் எழுந்த தன்னாட்சிக் குரல் என்பது சட்டமியற்றும் அதிகாரங்களுக்கும் நிர்வாக, நீதித் துறை அதிகாரங்களுக்கும் மட்டுமானதல்ல. நிதியாளுகைக்கான அதிகாரத்தையும் உள்ளடக்கியதுதான். மாநிலத் தன்னாட்சிக்கும் நிதிக் கொள்கைக்குமான உறவை விரிவாக ஆய்வுசெய்த அறிஞர்களுள் ஒருவர் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான கு.ச.ஆனந்தன். ‘மலர்க மாநில சுயாட்சி’ என்ற தலைப்பில் 1,200 பக்கங்கள் கொண்ட பெரும் நூலை எழுதியவர். ‘ஒரு கூட்டாட்சி நாட்டில், மாநில அரசுகள் தத்தம் நிதி வசதிகளைப் பெருக்கிக்கொள்வதற்கும், அவற்றின் செலவுகளை ஈடுகட்டிக்கொள்வதற்கும் உரிய முழுச் சுதந்திரத்தையும் உரிமையையும் பெற்றிருத்தல் வேண்டும்’ என்று வலியுறுத்தினார் ஆனந்தன்.

‘நம் அரசமைப்புச் சட்டத்தில் மக்கள் நல்வாழ்வுப் பணிகள் அனைத்தும் நேரிடையாக மாநில அரசுகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் திறம்படச் செய்து முடிப்பதற்கான நிதி வசதிகளை மாநிலங்கள் பெற்றிருக்க வேண்டாமா?’ என்ற அவரது கேள்வி அரசமைப்புச் சட்டத்தின் கூறுகளுக்கு இடையே உள்ள பொருந்தாத் தன்மையைப் படம்பிடித்துக்காட்டுகிறது. ‘மாநிலங்கள் நிதித் துறையில் சுயமாகவும் உரிமையுடனும் இயங்கும் தன்மையைப் பெற்றிருக்காவிடில், மாநிலங்களின் அரசியல் சுதந்திரமும் நிர்வாக உரிமைகளும் பொருளாதார அதிகாரங்களும் தாமாகவே சுருங்கி, நாளடைவில் மறைந்துபோகும்’ என்பது கு.ச.ஆனந்தனின் எச்சரிக்கை. இதை அவர் எழுதி 45 ஆண்டுகள் ஆன நிலையில், இன்றைய சூழலுக்கு மேலும் பொருத்தமானதாக மாறியிருக்கிறது.

சொன்னபடி நடக்கிறதா?

அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்படும் நிதிக் குழுக்களின் பரிந்துரைப்படியே வரிவருவாய்கள் ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்துகொள்ளப்பட்டுவருகின்றன. 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, நிகர வரி வருவாயில் 42% மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், 2015-16 தொடங்கி, ஏறக்குறைய 33% மட்டும்தான் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுவருகிறது. மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய நிதியைக் குறைத்துக்கொள்ளும் நோக்கத்துடனேயே, பல்வேறு வரிகளிலிருந்து திரட்டப்பட்ட நிதியை ஒன்றிய அரசு தவறாக ஒதுக்கீடு செய்வதும் விமர்சனங்களை எதிர்கொண்டுவருகிறது.

போர், இயற்கைப் பேரிடர்கள் போன்ற சூழல்களில் குறிப்பிட்ட செலவினங்களுக்குச் சிறப்புத் தீர்வைகளை விதிக்கவும் ஒன்றிய அரசுக்கு இந்திய அரசமைப்புச் சட்டம் அதிகாரம் அளிக்கிறது. ஆனால், ஒன்றிய அரசோ அத்தகைய சிறப்புத் தீர்வைகளை நிரந்தரமாகவே விதிக்கும் வழக்கத்தை வைத்துள்ளது. குறிப்பிட்ட நோக்கத்துக்காக வசூலிக்கப்படும் சிறப்புத் தீர்வைகளை அந்த நோக்கத்துக்காகச் செலவிடாமல் பொது வருவாயின் ஒரு பகுதியைப் போல செலவிடும் நிலையும் தொடர்கிறது. இத்தகைய சிறப்புத் தீர்வைகள் மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கப்படுவதில்லை. 14-வது நிதிக் குழு பரிந்துரைத்தபடி மாநிலங்களுக்கு வருவாயைப் பகிர்ந்தளிக்க முடியாத நிலைக்கு ஒன்றிய அரசு விதிக்கும் இந்த சிறப்புத் தீர்வைகளும் ஒரு முக்கியக் காரணம்.

தற்போதைய பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும்கூட ஒன்றிய அரசு விதிக்கும் இத்தகைய சிறப்புத் தீர்வைகள் ஒரு முக்கியக் காரணம். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் சாலை மற்றும் உட்கட்டமைப்புகளுக்கான சிறப்புத் தீர்வையாக லிட்டர் ஒன்றுக்கு ரூ.8 விதிக்கப்படுகிறது. சுங்கத் தீர்வையை உயர்த்தியதோடு இப்படி சிறப்புத் தீர்வைகளிலிருந்தும் வருவாய் ஈட்டிவருகிறது ஒன்றிய அரசு. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க ஒன்றிய, மாநில அரசுகள் தங்களது மறைமுக வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநரே கேட்டுக்கொண்டாலும் ஒன்றிய அரசு அதற்குத் தயாராக இல்லை. மாறாக, மாநிலங்கள் தங்களுடைய மதிப்புக்கூட்டு வரியைக் குறைத்துக்கொள்ளட்டும் என்று விலகியே நின்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று தமிழக அரசியல் கட்சிகள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிக்கு மாநிலங்களின் வரிவருவாயைக் குறைத்துக்கொள்வது என்றே பொருள்கொள்ள வேண்டும்.

குறையும் நிதியுதவிகள்

இப்படி சிறப்புத் தீர்வைகளின் மூலமாகக் கிடைக்கிற வருவாயை ஒன்றிய அரசு தனக்காகச் செலவிட்டுக்கொள்வதில்லை, ஒன்றிய அரசின் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் மாநில அரசுகளுடன் செலவுகளைப் பகிர்ந்துகொள்ளும் திட்டங்களுக்காகவும்தானே செலவிடுகிறது என்று நியாயங்களும் சொல்லப்படுகின்றன. ஆனால், 2016-17-ல் ஒன்றிய அரசு தனது திட்டங்களுக்காகவும் மாநில அரசுகளின் திட்டங்களுக்காகவும் செலவுசெய்தது ஒன்றிய அரசின் மொத்த செலவுகளில் வெறும் 9% மட்டும்தான். ஒன்றிய அரசின் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையைக் காட்டிலும் மாநில அரசுகளின் திட்டங்களுக்காக நிதியுதவி செய்வதற்கு ஒதுக்கப்படும் தொகை எப்போதும் குறைவாகவே இருக்கிறது. 2019-20 நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளின்படி ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் 12% உயர்ந்துள்ள நிலையில், மாநில அரசுகளின் திட்டங்களுக்கான நிதியுதவிகள் 9% மட்டுமே உயர்ந்துள்ளன. மாநிலங்களுக்கான வரி வருவாய்கள் குறைந்துகொண்டிருப்பது மட்டுமில்லை, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதியுதவி செய்வதும் குறைந்துகொண்டே வருகிறது.

இன்னொருபக்கம், வருமானம் குறைவான மாநிலங்கள் நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி வரிவருவாய்ப் பகிர்வில் அதிக பயனடைகின்றன. அதிக வருமானம் உள்ள மாநிலங்களோ, திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் வருவாய்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. இத்தகைய நிலையில், தமிழ்நாடு போன்ற அதிக வரி வருவாயை ஈட்டுகிற மாநிலங்களும்கூட மக்கள் நலத் திட்டங்களுக்காக அதிக அளவில் செலவிட இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

ஜிஎஸ்டி அறிமுகம்

மாநிலங்கள் தங்களது வரி வருமானத்தைப் பலப்படுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பாக விற்பனை வரி பயன்பட்டுவந்தது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஜிஎஸ்டி கவுன்சிலே எந்தெந்தப் பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிப்பது என்று முடிவுசெய்துகொள்ளும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. மறைமுக வரிகளைப் பகிர்ந்துகொள்வதில் ஒன்றிய - மாநில அரசுகளைச் சம பங்குதாரர்கள் ஆக்குவதுதான் இந்தப் புதிய வரியமைப்பின் நோக்கம் என்று சொல்லப்பட்டு, அதற்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பிராந்திய வேறுபாடுகளைக் கண்டுகொள்ளாமல் நாடு முழுக்க ஒரே வரி விகிதத்தை நடைமுறைப்படுத்துவதை மட்டுமே ஜிஎஸ்டி செய்துமுடித்திருக்கிறது.

நாட்டின் வரிவருவாயில் ஏறக்குறைய சரிபாதி, ஜிஎஸ்டியிலிருந்தே கிடைக்கிறது. இந்தப் புதிய வரியமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பைச் சரிசெய்வதில் ஒன்றிய அரசு தான் உறுதியளித்தவாறு நடந்துகொள்ளவில்லை. நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காகக் கடன் பொறுப்பேற்கவும்கூட ஒன்றிய அரசு தயாராக இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. நாடாளுமன்றக் கூட்டங்களைப் போல ஜிஎஸ்டி கூட்டங்களையும் அனைவரது பார்வைக்கும் உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தவண்ணம் உள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், ஒன்றிய அரசிலும் பெரும்பான்மை மாநிலங்களிலும் ஒரே கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும்போது அதன் கருத்தே மற்ற மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். திட்டக் குழுவின் நிதி ஒதுக்கீடுகளுக்காகக் காத்திருந்த காலம் ஒன்றும் இருந்தது. தற்போது நடந்துகொண்டிருப்பது, வரிவருவாயில் நமக்கான பங்கைப் பெறுவதற்கே காத்திருக்கும் காலம்.

- செல்வ புவியரசன்

தொடர்புக்கு: puviyarasan.s@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்