தடுப்பூசிக்குப் பிறகும் கரோனா: எப்படிப் புரிந்துகொள்வது?

By ஜேக்கப் கோஷி

கரோனாவுக்கான தடுப்பூசி இரண்டு தவணைகளையும் போட்டுக் கொண்டவர்களில் 10 ஆயிரம் பேரைப் பரிசோதித்ததில் அவர்களில் இரண்டிலிருந்து நான்கு பேர் வரை கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக ‘இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்’ (ஐ.சி.எம்.ஆர்.) தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் கரோனா தொற்று ஏற்படுவதற்கு ‘தடுப்பைத் தாண்டிய தொற்று’ (பிரேக்த்ரூ இன்ஃபெக்‌ஷன்) என்று பெயர். இது ‘மிகச் சிறிய எண்ணிக்கை’யிலானவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்றும் இது தடுப்பூசியின் பலனைக் குறைக்கவில்லை என்றும் ஐ.சி.எம்.ஆரின் பொது இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா கூறியிருக்கிறார். விஷயம் என்னவென்றால், இப்படியான ‘தடுப்பூசியைத் தாண்டிய தொற்று’ என்பது வழக்கத்தை மீறிய ஒன்றல்ல.

தடுப்பூசிகள் ஏன்?

உலகெங்கும் போடப்படும் தடுப்பூசிகள் நோய்க்கு எதிரான பாதுகாப்புக்காகப் போடப்படுகின்றனவே தவிர, அவை தொற்றை முழுமையாகத் தடுப்பதில்லை. தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பு நடத்தப்படும் வெள்ளோட்டங்களின்போதே கணிசமானோருக்குத் தொற்று ஏற்படுவது தெரியவந்திருக்கிறது. உதாரணமாக, ‘ஆஸ்ட்ராஜெனகா’வின் வெள்ளோட்டத்தின்போது தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 5,807 பேருக்கு, அதாவது 0.5%, இரண்டாவது தவணை ஊசி போட்டுக்கொண்ட 14 நாட்களுக்குப் பிறகு தொற்று அறிகுறிகள் ஏற்பட்டதுடன் பரிசோதித்துப் பார்த்ததில் அவர்களுக்குத் தொற்று இருப்பதும் தெரியவந்தது.

அமெரிக்காவின் ‘நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய’ங்களின் (சி.டி.சி.) தரவின்படி ஏப்ரல் 20-வரை 7,157 பேருக்குத் தடுப்பைத் தாண்டிய தொற்றுகள் ஏற்பட்டிருக்கின்றன. அமெரிக்காவில் இரண்டு தவணைகளும் தடுப்பூசி போடப்பட்ட 8.7 கோடிப் பேருடன் ஒப்பிட்டால் இது வெறும் 0.008%-தான், அல்லது ஒரு லட்சத்தில் 8 பேர். இவர்களில் 498 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட, 88 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் நிலை

மருத்துவர் பார்கவா அளித்த தரவின்படி, இந்தியாவில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை இரண்டு தவணைகளும் போட்டுக்கொண்டவர்களில் 695 பேருக்கு, அதாவது 0.04%, கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசியை இரண்டு தவணைகளும் போட்டுக்கொண்ட 1.57 கோடிப் பேரில் 5,014 பேருக்கு, அதாவது 0.03%, கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
இந்தியச் சூழலில் எப்படிப் பலனளிக்கும் என்பது பற்றி கோவிஷீல்டு மருந்து பரிசோதிக்கப்படவில்லை. கோவேக்ஸின் மருந்து தயாரிப்பாளர்களான பாரத் பயோடெக் நிறுவனம் அந்த மருந்தின் திறன் பற்றி அது நடத்தும் வெள்ளோட்டத்தின் முடிவுகளை இன்னும் வெளியிடவில்லை. இரண்டு தடுப்பூசிகளையும் பொறுத்தவரை இரண்டாவது தவணை போட்டுக்கொண்ட 1.70 கோடிப் பேரில் 5,709 பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பது 10 ஆயிரம் பேரில் மூன்று பேர் என்ற அளவில் தொற்று ஏற்பட்டிருப்பதை உணர்த்துகிறது, இது அமெரிக்காவின் எண்ணிக்கையான ஒரு லட்சம் பேரில் 8 பேர் என்ற அளவைவிட மிகவும் அதிகம்.

தொற்று அரிதானதா?

தடுப்பைத் தாண்டிய தொற்றுகள் குறித்த அமெரிக்காவின் சி.டி.சி.யின் வழிகாட்டும் நெறிமுறைகள் இப்படிப்பட்ட தொற்றுகள் இனம் காணப்படும் எண்ணிக்கையைவிட நடைமுறையில் அதிகமாக இருக்கும் என்கின்றன. “தொற்றுகளைக் கண்டறிவதற்குப் போதுமான அளவு சோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பதால், உண்மையில் உள்ள அனைத்துத் தொற்றுகளும் கணக்கில் வருவதில்லை” என்று சி.டி.சி.யின் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, அரசு ஆய்வகங்களிலும் தனியார் ஆய்வகங்களிலும் பின்பற்றப்படும் அரசின் பரிசோதனை வழிமுறையானது கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு ஏற்கெனவே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. தடுப்பைத் தாண்டிய தொற்றுகள் பற்றி ‘கோ-வின்’ தரவுத் தளத்திலிருந்து திரட்டப்பட்ட தகவல்கள் மக்கள் தாங்களாகவே கூறிய தகவல்களைக் கொண்டு திரட்டப்பட்டவையாகும் என்று ஐ.சி.எம்.ஆர். தொற்றுநோயியல் பிரிவின் துறைத் தலைவரான சமீரன் பாண்டா ‘தி இந்து’விடம் தெரிவித்தார். “தடுப்பூசிக்குப் பிறகும் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நம்முடைய கவனத்துக்கு வந்திருப்பதைவிடவும் அதிகம் இருக்கலாம். இது எதிர்பார்க்கக் கூடியதே. ஆனால், தடுப்பூசியின் செய்தி என்னவெனில், அது நோய்க்கு எதிராக பெரிய அளவில் நம்மைப் பாதுகாக்கிறது என்பதுதான்” என்கிறார் அவர்.

எவ்வளவு பாதுகாப்பு?

தடுப்பூசிக்குப் பிறகுமான தொற்றுகளில் மருத்துவத் துறையினரும் முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் கரோனா தொற்றாளர்கள் இருக்கும் இடத்தில் நடமாடுவதால் அவர்களுக்குத் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார் மருத்துவர் பார்கவா. ‘அதிக அளவில் பரவும் திறன் கொண்ட புது வகை கரோனா வைரஸ்களும் மற்றுமொரு காரணம்’ என்கிறார் அவர்.

கரோனா வைரஸின் ‘பிரிட்டன் வகை’, ‘இந்திய வகை’ இரண்டின் மீதும் ‘கோவேக்ஸின்’ வெற்றிகரமாகச் செயல்பட்டு அந்த வைரஸ்களைச் செயலிழக்கச் செய்கிறது என்பதை ஆய்வக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதே ‘ஆஸ்ட்ராஜெனகா’வின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டால், ‘பிரிட்டன் வகை வைரஸ்’, ‘தென்னாப்பிரிக்க வகை வைரஸ்’ ஆகியவற்றின் மீது தடுப்பூசியின் செயல்படும் திறன் குறைகிறது என்பதை ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் ‘பிஃபைஸர்’, ‘மாடர்னா’, ‘ஜான்ஸன் & ஜான்ஸன்’ தடுப்பூசிகள் போட்டுக்கொண்ட 8.70 கோடி பேரில் 88 பேர் இறந்திருக்கிறார்கள் என்று சி.டி.சி.யின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் 10 லட்சத்தில் ஒருவர் மீண்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைய நேரிடும் என்று அர்த்தமாகிறது. இதை இந்தியாவுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80-90 கோடிப் பேரில் ஏறத்தாழ 800 இறப்புகள் நேரிட வாய்ப்பு இருக்கிறது.

ஆக, தடுப்பூசிகள் நோய்க்கும் மரணத்துக்கும் எதிராக சந்தேகத்துக்கிடமின்றிப் பாதுகாப்பு அளிக்கின்றன; அதே நேரத்தில் இந்தப் பாதுகாப்பானது நூற்றுக்கு நூறு பேருக்கும் முழுமையாகக் கிடைப்பதில்லை.

‘தி இந்து’, சுருக்கமாகத் தமிழில்: ஆசை

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்