தமிழ்நாட்டைப் பிரிக்கலாமா?

By சமஸ்

பனிமேகப் பழுப்பு மலைக் குன்றுகளும், பசும்புல்வெளிகளும் நிரம்பியதான சிக்கிம் ஞாபகம் வரும்போதெல்லாம், ‘இந்த நாட்டில் சிக்கிமர் ஒருவர் பிரதமராகும் நிலை என்றாவது வருமா?’ என்று பிரதீப் பாஞ்சுசோபாம் கேட்ட கேள்வியும் நினைவுக்கு வரும். ‘சிறிய மாநிலங்களே சிறந்தது’ என்று சொல்லி மாநிலங்களை உடைக்க வாதிடுபவர்களிடம் எல்லாம் அவசியம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்றும் தோன்றும்.

இந்தியாவின் சிறிய மாநிலம் சிக்கிம். 7,096 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்ட சிக்கிமின் மொத்த மக்கள்தொகை வெறும் 6.10 லட்சம். தமிழ்நாட்டோடு ஒப்பிட 18-ல் ஒரு பங்கு நிலப்பரப்பையும், 139-ல் ஒரு பங்கு மக்கள்தொகையையும் கொண்டது.

சிறிய மாநிலங்களே வளர்ச்சிக்கு உகந்தது என்று சொல்லி தமிழ்நாட்டின் பிரிவினைக்குப் பொது அறிவுஜீவியான ஞாநி போன்றவர்களே வாதிட்டிருக்கும்போது, பாமக நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் தொடர்ந்து இதைப் பேசுவதில் ஆச்சரியம் இல்லை. இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களுக்கு முன்னத்தி ஏரான ஆந்திர பிரதேசம் பிளவுண்டதில் சாதிக் கணக்குகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. தெலுங்கர்கள் ஒரே மொழியினராய்ச் சிந்தித்தபோது இந்தியாவில் இந்திக்கு அடுத்து அதிகமாகப் பேசப்படும் மொழியின் தாய்நிலமாக சக்திமிக்க ஆந்திர பிரதேசம் பிறந்தது. அதே தெலுங்கர்கள் ரெட்டிகளாகவும் கம்மாக்களாகவும் காப்புக்களாகவும் மீண்டும் பிளவுண்டபோது ஆந்திரம், தெலங்கானா இரண்டு மாநிலங்கள் உருவானதோடு, அடுத்து ‘ராயலசீமா’வுக்கான மூன்றாவது கங்கும் கனன்றுகொண்டிருக்கிறது. முன்னதாக வடதமிழ்நாடு, தென்தமிழ்நாடு என்று பேசிவந்த ராமதாஸ் அடுத்து கொங்குநாடு என்ற பிளவையும் சேர்ப்பது, தமிழர்களை மறைமுகமாகச் சாதிரீதியாகப் பிளப்பதே ஆகும். நேரடியாக வன்னியர் நாடு, கவுண்டர் நாடு, தேவர் நாடு, நாடார் நாடு என்றும் அடுத்தடுத்து இதைப் பேசலாம்.

இந்தியாவில் வளர்ச்சி என்ற பெயரில் மாநிலப் பிரிவினையையும், சின்ன மாநிலங்களுக்கான தேவையையும் நிர்வாகரீதியாகப் பேசுபவர்கள் வசதியாக ஒரு விஷயத்தை மக்கள் பார்வைக்கு அப்பால் கொண்டுசெல்கிறார்கள். தமிழ்நாடுபோல மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் உணர்வாலும் பிணைக்கப்பட்ட ஏழு கோடி சொச்ச மக்களையே நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கலாம் என்றால், நூற்றுமுப்பத்தைந்து கோடி மக்களோடு ஆயிரம் வேற்றுமைகள் இடையே ஒற்றுமையைப் பேச முனையும் இந்தியாவை நிர்வாகரீதியாக எப்படி அணுகலாம்? ‘ஐயோ பிரிவினை… அபாயம்! நம்முடைய ஒற்றுமைதானே நம்முடைய வளம்; இந்தப் பெரும் மக்கள்தொகைதானே சர்வதேச அளவில் இந்தியாவின் பலம்!’ என்ற குரல் உடனே ஒலிக்கிறதல்லவா? மாநிலங்களுக்கு மட்டும் அது எப்படிப் பொருந்தாமல்போகும்? வட்டங்கள், மாவட்டங்கள் மாதிரி மாநிலமானது இந்தியாவில் வெறும் நிர்வாக அலகு அல்ல. ரத்தமும் சதையும் கனவுகளும் லட்சியமும் நிரம்பிய இறையாண்மைமிக்க உயிர் அது.

நிர்வாகரீதியாகவே பேச வேண்டும் என்றாலும்கூட ஒரு மாநிலத்தின் வளமும் பலமும் வெறும் பொருளாதார வரவுசெலவுக் கணக்குகளில் மட்டும் இல்லை. இந்தியாவின் 9 பிரதமர்கள் உத்தர பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், நாட்டின் மக்களவையில் மாநிலங்களிலேயே அதிக பிரதிநிதித்துவமான 80 இடங்களை உத்தர பிரதேசம் கொண்டிருப்பதும் ஒன்றுக்கொன்று பிணைந்தவை. இன்னும் நூறாண்டுகளானாலும் சிக்கிமிலிருந்து ஒரு பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியம் குறைவு என்று சிக்கிமர்கள் குறிப்பிடக் காரணம் மக்களவையில் அது பெற்றிருக்கும் பிரதிநிதித்துவம் ஒரே இடம். ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுமே இன்று வரை இந்திய அரசியலின் பெரும் போக்கிலிருந்து புறந்தள்ளியே வைக்கப்பட்டிருப்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, வடகிழக்கின் 8 மாநிலங்களுக்கும் சேர்த்து மக்களவையிலுள்ள பிரதிநிதித்துவம் 25 இடங்கள். பிரதமர்களின் உருவாக்கத்தில் மட்டுமல்ல; இந்தியா போன்ற சமத்துவமற்ற ஒரு கூட்டாட்சியில் எந்த ஒரு திட்டத்திலும், நிதி ஒதுக்கீட்டிலும் தனக்கான பங்கைப் பெற மாநிலங்கள் கொண்டிருக்கும் பெரும் பேர சக்தி அவை கொண்டிருக்கும் ஜனத்தொகையின் வழியிலான பிரதிநிதித்துவம்தான்.

மேலும், இந்தியாவில் சிறிய மாநிலங்கள் பெரும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன, பெரிய மாநிலங்கள் எல்லாமே பின்தங்கியிருக்கின்றன என்பதற்கு இங்கு வலுவான ஆதாரமும் இல்லை. இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் இன்று முதல் வரிசையில் நிற்கும் மஹாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், தமிழகம் எதுவுமே சிறிய மாநிலம் கிடையாது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதற்கும்கூட அதன் அளவு முக்கியமான காரணி இல்லை என்பதை வரலாற்றை அறிந்தவர்கள் உணர்வார்கள். இன்றைக்கு ஒப்பிட சுதந்திர இந்தியாவின் தொடக்கக் காலகட்டத்தில் நன்றாக நிர்வகிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று அது. சாதியமும் மதவியமும் தோய்க்கப்பட்ட வெறுப்பு அரசியலால் ஒரு சமூகமாக அது பிளவுண்டிருப்பதும், எப்போது வேண்டுமானாலும் வன்முறை, கலவரச் சுழலில் மக்கள் தள்ளப்படும் கலாச்சாரத்துக்கு அது ஆட்பட்டிருப்பதுமே உத்தர பிரதேசம் கீழே தள்ளப்பட பிரதான காரணம்.

இந்தியாவில் எப்போது ஒரு மாநிலத்தின் எல்லை தனித்து வரையறுக்கப்படுகிறதோ அப்போதே அதன் ஆன்மாவிலும் பிளவு உண்டாகிவிடுகிறது. ஓர் உதாரணத்துக்கு, புதுச்சேரியின் அரசியல் சூழலை எந்த அளவுக்குத் தமிழக மக்கள் அக்கறையில் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம்; புதுச்சேரியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரின் பெயர் தமிழ்நாட்டில் எத்தனை பேருக்குத் தெரியும்? வளர்ச்சியின் பெயரால் மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்களைத் தனி ‘பெருநகர மாநிலங்கள்’ ஆக்கிவிட வேண்டும் என்று பேசும் மேட்டிமையர்களும் இதை யோசிக்க வேண்டும். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு பெருநகரமும் அது சார்ந்த மாநிலத்தின் பெட்டகம். ஒரு பெருநகரத்தை அதன் மாநிலத்திலிருந்து பிரிப்பது ஒரு துண்டிப்பு என்பதோடு அந்த மாநில மக்களின் அர்ப்பணிப்புக்கும் தியாகத்துக்கும் இழைக்கப்படும் வரலாற்றுத் துரோகமும் ஆகும். எல்லாவற்றிலும் முக்கியம், மனித வளத்தில் உண்டாகும் இழப்பு. தமிழகத்தை மூன்றாகப் பிரித்தால் மூன்று ராஜாஜிக்கள், மூன்று பெரியார்கள், மூன்று காமராஜர்கள், மூன்று அண்ணாக்கள் உருவாகிவிடுவார்களா?

சுதந்திர இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கான தேவை பிரிட்டிஷார் தங்களுடைய காலனியாதிக்க நிர்வாக வசதிக்காக வைத்திருந்த கோளாறான பகுப்பின் விளைவாக உருவானது. இனியும்கூட மாநிலங்களை நாம் பிரிக்கலாம். அது எங்கோ உள்ளடக்கும் பண்பைக் கொண்டிருக்க வேண்டும்; மக்களைப் பிளப்பதாகக் கூடாது. மேலும், ஒரு நல்ல நிர்வாகத்துக்கான சிறப்பு, பிராந்தியம் சிறியதா பெரியதா என்பதைக் கொண்டு அமைவதில்லை. அந்தப் பிராந்தியத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் வளர்ச்சியும் வாய்ப்புகளும் சமமாகக் கொண்டுசெல்லப்படுவதிலும், மக்கள் பாகுபாடின்றி அணுகப்படுவதிலும், நிர்வாகமும் அதிகாரமும் பரவலாக்கப்படுவதிலும் இருக்கிறது. பிளவுக்கும் பிரிவினைக்கும் மறுபெயர் பரவலாக்கம் அல்ல!

- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்