பிப்ரவரி 1-ம் தேதி மியான்மர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து இந்தியாவின் எல்லைப்புறத்தில் வசிக்கும் மியான்மர் மக்கள், அடைக்கலம் தேடி மிசோரம், மணிப்பூர் மாநிலங்களுக்கு வருகிறார்கள். புகலிடம் தேடி வந்த மியான்மரின் சின் இன மக்களும், மிசோரம் மக்களும் ஒரே தொப்புள் கொடியில் கிளைத்தவர்கள். மாநில அரசுகளால் கதவடைக்க முடியவில்லை. இதுவரை வந்தவர்கள் 3,000 பேர் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் அவர்களால் அகதிகளாக முடியாது. ஏன்?
ஏனெனில், ஐநா 1951-ல் உருவாக்கிய சர்வதேச ‘அகதி உடன்பா’ட்டில் இந்தியா அங்கம் வகிக்கவில்லை. இந்த உடன்பாடு யார் அகதி என்பதை வரையறுக்கிறது. இனம், மதம், தேசிய அடையாளம், அரசியல் சார்பு ஆகிய காரணத்தால் சொந்த நாட்டில் வசிக்க முடியாதவர்களும் வசிக்க அஞ்சுபவர்களும் அச்சுறுத்தப்படுபவர்களும் அகதிகள் ஆகிறார்கள். 1967-ல் இந்த வரையறைக்குள் யுத்தங்களாலும் வன்முறைகளாலும் சொந்த நாட்டில் வசிக்க முடியாமல் போனவர்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். ஒரு புதிய நாடு ஒரு அகதியை ஏற்றுக்கொண்டால், அதன் பிறகு அவர் புதிய நாட்டின் குடிநபர் ஆவார். 1951-ஐநா உடன்பாட்டில் அங்கம் வகிக்கும் நாடுகள்தான் அகதிகளை ஏற்றுக்கொள்ளும். இதில் இந்தியா உட்படப் பல ஆசிய நாடுகள் அங்கம் வகிக்கவில்லை. இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்திலும் அகதிகளை அனுமதிப்பதற்கோ பராமரிப்பதற்கோ கூறுகள் இல்லை.
இந்தியாவில் அகதிகள் இல்லையா?
அப்படியானால் இந்தியாவில் அகதிகளே இல்லையா? இருக்கிறார்கள் - முதலாவதாக, 1959-ல் திபெத் போராட்டத்துக்குப் பிறகு இந்தியா, தலாய் லாமாவுக்கு அடைக்கலம் வழங்கியது. அப்போது இந்தியாவுக்கு வந்த திபெத்தியர்கள். இப்போது சுமார் ஒரு லட்சம் பேர். அடுத்ததாக, 1972-ல் இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பிறகு வந்த ஈழத்தமிழர்களும் இந்திய வம்சாவளி தமிழர்களும். சுமார் ஒரு லட்சம் பேர். மூன்றாவதாக ரோஹிங்கியா முஸ்லிம்கள். மியான்மரிலிருந்து வந்தவர்கள். 2017-ல் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக நடந்த வன்முறைக்குப் பிறகுதான் இவர்களின் இடப்பெயர்வு பெருமளவில் நிகழ்ந்தது. அப்போது அவர்கள் மிகுதியும் (7 லட்சம்) வங்கதேசத்துக்குப் போனார்கள். இந்திய அரசின் கட்டுப்பாடுகளால் குறைவானவர்களே (40,000 பேர்) இந்தியாவுக்கு வந்தார்கள். வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்கள் கணிசமானவர்கள். அவர்களைக் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்கள் இல்லை. திபெத்தியர், ஈழத் தமிழர், ரோஹிங்கியர் ஆகிய மூன்று பிரிவினரும் அகதிகள் என்று பொதுவெளியில் அழைக்கப்பட்டாலும், சட்டம் அவர்களை அகதிகளாக ஏற்பதில்லை.
கடந்த ஆண்டு அமலாக்கப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சார்ந்த, துன்புறுத்தலுக்கு உள்ளாகிய மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க வகைசெய்கிறது. இவர்கள் இந்துக்களாகவோ சீக்கியர்களாகவோ பௌத்தர்களாகவோ சமணர்களாகவோ பார்சிகளாகவோ கிறிஸ்தவர் களாகவோ இருக்க வேண்டும். இந்தியாவில் குறைந்தது ஆறு ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின்படியும் மேற்கூறிய மூன்று பிரிவினரால் இந்தியக் குடியுரிமை பெற முடியாது. திபெத்தியர்கள் பௌத்தர்களாக இருந்தாலும், திபெத்தோ சீனாவோ புதிய சட்டத்தில் இடம்பெறவில்லை. ஈழத் தமிழர்கள் இந்துக்களாக இருந்தாலும், இலங்கை எனும் நாடு குடியுரிமைச் சட்டத்துக்குள் வரவில்லை. ரோஹிங்கியாக்களுக்கு அவர்களது மதம், நாடு இரண்டுமே சட்டத்தில் இடம்பெறவில்லை.
ஹாங்காங் எடுத்துக்காட்டு
ஹாங்காங்கும் 1951 உடன்படிக்கையில் ஒப்பம் இடவில்லை. ஆனால், புகலிடம் தேடி வந்தவர்களை ஹாங்காங் திருப்பி அனுப்புவதில்லை. அவர்கள் ஐநாவின் அகதி ஆணையத்தில் அகதிக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். ‘அரசப் படைகள் அல்லது பயங்கரவாத அமைப்புகளினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறோம், எங்களால் சொந்த நாட்டுக்குப் போக முடியாது’ என்று அவர்கள் நிறுவ வேண்டும். கோரிக்கை ஏற்கப்பட்டால் அவர்கள் அகதிகளாவார்கள். அதன் பிறகு அகதி உடன்படிக்கையில் ஒப்பமிட்டிருக்கும் ஒரு நாட்டுக்கு விண்ணப்பிப்பார்கள். அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டால் புதிய நாட்டுக்கு அகதியாகப் போகலாம். சொந்த நாட்டில் அச்சுறுத்தல் இருப்பதை நிரூபிக்க முடியாதவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களால் அகதிகளாக முடியாது. இந்த வழக்கும் விசாரணையும் ஆண்டுக் கணக்கில் நடக்கும். அப்போது ஹாங்காங் அரசு அவர்களுக்கு இருப்பிடமும் அரிசி பருப்பும் சிறிய உதவித்தொகையும் வழங்கும். அவர்களது பிள்ளைகளைப் படிக்கவைக்கும். வளரும் நாடுகள் பலவும் மேலை நாடுகளும் அகதிகளை ஏற்கின்றன. ஆனால், நமது சட்டங்களில் மட்டுமல்ல, நமது குடிமைச் சமூகத்திலும் சிலருக்கு அகதிகளைக் குறித்து ஒவ்வாமை இருக்கிறது. சமீபத்தில் ஓர் இணைய இதழில் மியான்மரின் சின் அகதிகளை நாம் பேண வேண்டும் என்று ஒரு செய்தியாளர் எழுதியிருந்தார். அதற்கு, அகதிகளை அனுமதிக்கக் கூடாது என்று பல வாசகர்கள் கடுமையான சொற்களில் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.
சமீபத்தில் மியான்மருக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்ட ரோஹிங்கியாக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால், நமது சட்டப் புத்தகத்தின் எந்தக் கூறும் அவர்களுக்குச் சாதகமாக இல்லை. விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழையும் எவரும் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்தான். அவர்கள் அகதிகள் ஆக மாட்டார்கள்.
என்ன செய்யலாம்?
நீண்ட வரலாறும் நாகரிகமும் பாரம்பரியமும் ஜனநாயக விழுமியங்களும் மிக்க இந்தியா, தனது அகதிக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 1951 ஐநா உடன்பாட்டில் இணைவதைத் தொலைநோக்காக வைத்துக்கொள்ளலாம். முதற்கட்டமாக, குடிமக்கள், குடியேற்றக்காரர்கள், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், புகலிடம் நாடுபவர்கள், அகதிகள் முதலான ஒவ்வொரு பிரிவினருக்கும் சட்டரீதியிலான வரையறைகளை வகுத்துக்கொள்ள வேண்டும். அவை ஐநா அகதி ஆணையத்தின் வழிகாட்டல்களுக்கு இசைவாக இருக்க வேண்டும். இதன் மூலம் எல்லாப் பிரிவினருக்கும் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும். சட்டம் மாட்சிமையோடு விளங்கும். அகதிகளின்பால் பரிவோடு நடந்துகொள்ள வேண்டும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது முழக்கமாக மட்டுமில்லாமல் வாழ்க்கை நெறியாகவும் மாற வேண்டும்.
- மு.இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago