திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டு வாரியம் காணாமல்போனது ஏன்?

By கே.சந்துரு

திரைப்படச் சான்றிதழ்களுக்கான மேல்முறையீட்டு வாரியத்தை ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் திடீரென்று ஒன்றிய அரசு கலைத்துவிட்ட செயல், பல கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளது. ஒருசாரார் மேல் முறையீட்டு வாரியம் கலைக்கப்பட்டது தவறு என்றும், மண்டலத் தணிக்கைக் குழுக்களின் உத்தரவுகளை எதிர்த்து முறையிடுவதற்கு வாய்ப்பில்லாமல் ஆக்கியது தவறு என்றும் விமர்சித்துள்ளனர். மறுசாராரோ மேல்முறையீட்டு வாரியம் இல்லாவிட்டாலும் உயர் நீதிமன்றங்களில் தணிக்கைக் குழுவின் உத்தரவுகளை எதிர்த்து முறையிட முடியும் என்றும் கூறியுள்ளனர்.

திரைப்பட மேல்முறையீட்டு வாரியம் கலைக்கப்பட்டது தவறா இல்லையா என்பதையும், அதற்கான சூழ்நிலை ஏன் ஏற்பட்டது என்பதையும் பார்க்கலாம். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறு 19(1)-ன் கீழ் பேச்சுரிமையையும் கருத்துரிமையையும் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டுள்ளபோதும் கூறு 19(2)-ல் அவ்வுரிமைகள் நியாயமான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 1952-ல் திரைப்படச் சட்டத்தை நாடாளுமன்றம் உருவாக்கியது. அந்தச் சட்டத்தின் கீழ் மண்டலரீதியாகத் திரைப்படத் தணிக்கைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. அந்தக் குழுவில் ஒன்றிய அரசின் மண்டல அதிகாரியும், அவருக்கு ஆலோசனை வழங்குவதற்கான பல பகுதிகளைச் சேர்ந்த தணிக்கை உறுப்பினர்களும் அங்கம் வகிப்பார்கள். அந்தக் குழுவிலுள்ள சில உறுப்பினர்களை முன்னறிவிப்பின்றி அழைத்துத் திரைப்படங்களைத் தணிக்கை செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

நான்கு வகைச் சான்றிதழ்கள்

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதற்கு முன்னால் தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்குத் திரைப்படம் போட்டுக்காட்டப்பட்டு, அவர்கள் திரைப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடலாம் என்று கூறி தணிக்கைச் சான்றிதழ் வழங்கிய பின்னர்தான் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடலாம். இல்லையென்றால், அது கிரிமினல் குற்றமாகும். தணிக்கைச் சான்றிதழ்கள் நான்கு வகைப்படும். அவை: அனைவரும் பார்க்கலாம் (U), வயது வந்தோருக்கு மட்டுமே (A), வயது வந்தோரின் வழிகாட்டுதலின் கீழ் (U/A), சிறப்புத் தணிக்கைக்கு உட்பட்டது (S).

சில காட்சிகள் ஆபாசமாக இருப்பதாகத் தணிக்கைக் குழு கருதினால், அந்தக் காட்சிகளை எடுத்துவிடும்படியும் ஆபாச வசனங்களை மௌனமாக்கிவிடும்படியும் அவர்கள் உத்தரவிடலாம். ஒட்டுமொத்தத் திரைப்படமும் ஆட்சேபகரமானது என்று சொன்னால், தணிக்கைச் சான்றிதழ் தர மறுத்துவிடலாம். தணிக்கை உறுப்பினர்களின் பதவிக் காலம் வரையறுக்கப்பட்டது. ஒன்றிய ஆளுங்கட்சியின் ஆதரவில் நியமிக்கப்பட்டவர்களே பல வருடங்களாக மண்டலத் தணிக்கைக் குழுக்களில் அங்கம் வகிக்கிறார்கள். அதனால்தான், ஒன்றிய ஆளுங்கட்சிகளின் விரோதத்தைச் சம்பாதிக்க திரைப்பட உலகம் விரும்புவதில்லை. வருமான வரி ஏய்ப்பு சமாச்சாரம் வேறு. தணிக்கைக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் தாங்கள் தணிக்கை செய்த படத்தைப் பற்றியோ அல்லது உத்தரவிட்ட வெட்டுக்காட்சிகள் பற்றியோ வெளியே சொல்லக் கூடாது என்று விதிமுறை உண்டு. சமீபத்தில், மம்மூட்டியும் பார்வதியும் நடித்து மலையாளத்தில் எடுக்கப்பட்ட ‘வர்த்தமானம்’ என்ற படத்துக்கு அங்கிருந்த தணிக்கைக் குழு தடை விதித்தது. அந்தக் குழுவில் அங்கம் வகித்த பாஜக தலைவரும் வழக்கறிஞருமான சந்தீப் குமார் என்ற உறுப்பினர் அந்தப் படம் தேசவிரோதத்தைத் தூண்டும் வகையில் இருப்பதாகப் பகிரங்கமாகப் பேட்டியளித்தார். உண்மையில், அந்தப் படம் டெல்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் இருவரின் வாழ்க்கை பற்றியது.

மண்டலத் தணிக்கைக் குழுக்களின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான தீர்ப்பாயம் ஒன்றையும் சினிமா சட்டம் ஏற்படுத்தியது. திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் டெல்லியிலிருந்து செயல்படுகிறது. அந்தத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களை ஒன்றிய அரசு நியமிக்கும்.

கே.ஏ.அப்பாஸ் வழக்கு

எழுத்து ஊடகங்களுக்கு விதிக்காத தணிக்கை முறையைத் திரைப்படங்களுக்கு மட்டும் விதிக்கலாமா, அது அடிப்படை உரிமைகளைப் பாதிக்காதா என்ற கேள்வி நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டது. புகழ்பெற்ற பத்திரிகையாளரான கே.ஏ.அப்பாஸ் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் 1952-ம் வருடத்திய சினிமா சட்டமும், அதன் கீழ் அமைக்கப்பட்ட தணிக்கைக் குழுக்களும் சட்டப்படி செல்லும் என்றும், 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே 1918-ல் திரைப்படத் தணிக்கைச் சட்டம் ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்டது என்றும், எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் கூட்டம் பெரும் எண்ணிக்கையில் உள்ள நமது நாட்டில் காட்சி ஊடகங்களால் ஏற்படுத்தப்படும் அழுத்தங்கள் அவர்களைச் சரியான வழியில் இட்டுச்செல்லாது என்றும், கட்டுப்பாடற்ற கருத்துரிமை அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்படவில்லை என்றும், அதனால் திரைப்படங்களுக்கு முன் தணிக்கை தேவை என்றும் தீர்ப்பளித்தனர் (1970).

மண்டலத் திரைப்படத் தணிக்கைக் குழுக்களின் தீர்ப்புகளை எதிர்த்து டெல்லியிலுள்ள மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறப்பட்டாலும், தீர்ப்பாயத்தின் முடிவுகள் இறுதியானதல்ல. தீர்ப்பாயத்தின் உத்தரவு தவறு என்று முடிவுசெய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசு பிரிவு 5-Dன் கீழ் தக்க வைத்துக்கொண்டது. இந்தப் பிரிவு நீதித் துறையை அரசிடமிருந்து பிரிக்கும் அதிகாரத்தை மறுப்பதாகும் என்று கூறி, ஒரு வழக்கு 1979-ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சங்கரப்பா என்ற நபரால் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ஒன்றிய அரசு தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்துசெய்ய வைத்துள்ள அதிகாரம் தவறு என்று தீர்ப்பளித்தது (1990).

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் கதவை ஒன்றிய அரசு தட்டியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதித் துறை நடுவர்களை வைத்துச் செயல்படும் தீர்ப்பாயத்தின் உத்தரவை ஒன்றிய அரசு ரத்துசெய்ய முடியாது என்றும், அது நீதித் துறையின் மாண்பைக் குலைத்துவிடும் என்றும் கூறி மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது (2001).

தணிக்கைக் குழுவின் உத்தரவுக்கு எதிராகத் தீர்ப்பாயத்தில் சான்றிதழ் பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு வேறு வித அபாயங்களும் காத்திருந்தன. சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் காட்டி காவல் துறையின் மூலம் திரைப்படங்கள் வெளியிடப்படுவதை மாநில அரசுகள் தடுக்க முற்பட்டன. ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்ற திரைப்படம் தணிக்கைக் குழுவின் ஒப்புதல் பெற்றிருந்தபோதும், மாநில அரசு சட்டம் - ஒழுங்கைக் காரணம் காட்டி, அதைத் தடைசெய்தது. இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் தணிக்கைக் குழுவின் உத்தரவுகளுக்கு மாறாகத் திரைப்படங்களுக்குத் தடைவிதிப்பது சட்ட விரோதம் என்று அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரங்கராஜன் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது (1989).

உயர் நீதிமன்றங்களுக்குக் கட்டுப்பட்டவை

1976-க்குப் பின் ஒன்றிய அரசு பல தீர்ப்பாயங்களை ஏற்படுத்தி வருவதன் மூலம் உயர் நீதிமன்றங்களின் பாரிய அதிகாரம் பறிக்கப்படுகிறது என்ற கருத்து எழுந்தது. ஒன்றிய நிர்வாகத் தீர்ப்பாயம் அமைத்ததை எதிர்த்து சந்திரகுமார் என்பவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பாயம் அமைப்பதன் மூலம் உயர் நீதிமன்றங்களின் அதிகாரத்தைப் பறிக்க முடியாது என்றும், அமைக்கப்படும் தீர்ப்பாயங்கள் உயர் நீதிமன்றங்களுக்குக் கட்டுப்பட்டவை என்றும் தீர்ப்பளித்ததோடு, தீர்ப்பாயங்களின் உத்தரவுகள் மீது உயர் நீதிமன்றங்களில் நீதிப் பேராணை மனுக்கள் தாக்கல்செய்யலாம் என்றும் கூறியது (1997).

இதைத் தொடர்ந்து சென்னை பார் அசோஸியேஷன் பல வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது. தீர்ப்பாயங்கள் நீதித் துறையைச் சார்ந்தவை என்றும், அவற்றில் நியமிக்கப்படும் தலைவர்கள், உறுப்பினர்கள் இவர்களது தகுதியை அரசு தீர்மானிக்க முடியாது என்றும், அவர்களது நியமனத்துக்கான தகுதிகளையும் நடைமுறையையும் உச்ச நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதற்கிடையில் 2017-ம் ஆண்டு நிதிச் சட்டத்தின் கீழ் தீர்ப்பாயங்களினுடைய உறுப்பினர்களின் தகுதிகளைப் பிறப்பித்தது. இதை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளின் இறுதியாக உச்ச நீதிமன்றம் 2020-ல் உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி தீர்ப்பாயங்களினுடைய உறுப்பினர்களின் தகுதி மற்றும் தேர்வு முறையை உச்ச நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும், ஒன்றிய அரசின் சட்டம் அதைத் தீர்மானிக்க முடியாது என்றும் குறிப்பிட்டது. நீதித் துறை அரசின் அதிகார வரம்பிலிருந்து தனித்துச் செயல்பட வேண்டும் என்றும் கூறியது. இந்தத் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான அரசு உத்தரவைக் குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதையொட்டி ஒன்றிய அரசு புதிய அவசரச் சட்டத்தை வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்குப் பதிலாகப் பத்துக்கும் மேற்பட்ட தீர்ப்பாயங்களைக் கலைத்துவிட்டது அந்த அவசரச் சட்டம். அதில் காணாமல்போனதுதான் 70 வருடங்களாகச் செயல்பட்ட திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம். திரைப்படத் தணிக்கை பற்றியும், மேல்முறையீட்டுத் தீர்ப்பாய உறுப்பினர்கள் நியமன முறையில் அதிகாரத்தை இழந்துவிட்ட ஒன்றிய அரசு வேறு என்ன செய்யும்? தீர்ப்பாயத்தை ரத்துசெய்தது தவறு என்று சிலர் கூறிவருகின்றனர். தமிழ்நாட்டில் தீர்ப்பாயத்தின் செயல்பாட்டின் தாக்கத்தைப் பற்றிய சில சம்பவங்களைப் பார்க்கலாம்.

புகழேந்தி தங்கராஜ், ‘காற்றுக்கென்ன வேலி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். மண்டலத் தணிக்கை வாரியம் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்ட நிலையில், அவர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த தீர்ப்பாயம், திரைப்படத்துக்குச் சான்றிதழ் தர மறுத்துவிட்டது. அதற்கு அவர்கள் கூறிய காரணம் கேலிக்குரியது. திரைப்படத்தில் வரும் சில குணச்சித்திரங்களின் பெயர்கள் விடுதலைப் புலிகளின் பெயர்கள்போல் இருப்பதாகக் கூறினர். அதற்கு உதாரணமாக, படத்தில் பெண் பாத்திரத்தின் பெயர் மணிமேகலை என்று இருந்ததுதான் காரணம். இப்படித் தமிழ்க் கலாச்சாரத்துக்கும் பாரம்பரியத்துக்கும் சம்பந்தம் இல்லாத நபர்கள் தீர்ப்பாயத்தில் பதவி வகித்தால் இதுபோன்ற முடிவுகள்தான் வெளிவரும்.

ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘குற்றப்பத்திரிகை’ என்ற திரைப்படம் தீர்ப்பாயத்தில் பட்ட பாட்டைச் சொல்லி மாளாது. 1994-ல் தணிக்கைக் குழு படத்தை வெளியிட அனுமதி மறுத்ததை எதிர்த்து அவர் தொடர்ந்த சட்டப் போராட்டம் 15 வருடங்களுக்குப் பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் முடிவுக்கு வந்தது (2007). இதற்குள் நடந்த குளறுபடிகள், குழப்பங்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளன. ஒரு படம் தயாரான பின்னர் 17 ஆண்டுகள் பெட்டிக்குள் முடங்கிவிட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பல பேட்டிகளில் செல்வமணி குறிப்பிட்டுள்ளார். எனவே, தீர்ப்பாயம் நடைமுறையில் செயல்பட்டதும் ஒன்றுதான்... செயல்படாமல் தற்போது காணாமல்போனதும் ஒன்றுதான். காணாமல்போனதால் தற்போது மக்கள் வரிப்பணமாவது மிச்சப்படும். எனவே, வருந்துவதற்கு ஒன்றுமில்லை.

- கே.சந்துரு, மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்