தேவை பாதாளக் கால்வாய்கள்

By என்.ராமதுரை

நகர் விரிவடைவதைத் தடுக்க முடியாது; தீர்க்கமான திட்டங்களே கைகொடுக்கும்

ஐப்பசி - கார்த்திகையில் அடைமழை பெய்யும் என்பார்கள். ஆனால், இந்த ஆண்டில் தமிழகத்தில் அது அடாத மழையாகிவிட்டது. மழை மற்றும் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக, பழைய நிலைமை திரும்பப் பல வாரங்கள், அல்லது பல மாதங்கள் ஆகலாம். அந்த அளவுக்குப் பெரும் சேதத்தை இந்த மழை ஏற்படுத்திவிட்டது.

இந்த மழை சீசனில் குறிப்பிடத் தக்க அம்சம் ஒன்று உண்டு. வங்கக் கடலில் இந்த டிசம்பர் கடைசிக்குள்ளாக ஒரு புயல் தோன்றுமா என்பது தெரியாது. ஆனால், இந்த ஆண்டில் இதுவரை ஒரு புயல்கூடத் தோன்றவில்லை. பெய்த மழை அனைத்தும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களால் ஏற்பட்டதே. புயல் என்றால், கரையிலிருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் கடலில் உருவாகிப் பின்னர் கரையை நோக்கி நகரும். மழையைவிடக் காற்றுதான் அதிகமாக இருக்கும். புயல் காற்றினால் ஏற்படக்கூடிய சேதங்கள் வேறு விதமானவை. ஆனால், புயலுடன் ஒப்பிட்டால் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள்தான் அதிக மழையை அளிப்பவை. இந்த ஆண்டில் பல சமயங்களிலும் இவை கரை ஓரமாக அமைந்து நிறைய மழை பெய்யும்படி செய்திருக்கின்றன.

சேதத்துக்குக் காரணம்

பெருமழையால் ஏற்பட்ட பயங்கர நிலைமைக்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவதாக, மிகக் குறுகிய காலத்தில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடும் மழை பெய்தது. இதன் விளைவாக வெள்ள நீர் போவதற்குத் தகுந்த வழியும் அவகாசமும் இல்லாமல் போய்விட்டது. வெள்ள நீர் வடிகால்கள் போதுமான அளவில் இல்லை. இது தொடர்பான பெரிய திட்டங்கள் எதுவும் அமலாக்கப்படவில்லை. அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் போன்றவற்றின் கரைகளில் கடந்த பல ஆண்டுகளாக அனுமதிக்கப்பட்டு வந்த ஆக்கிரமிப்புகள் வெள்ள நீர் எளிதில் வடிய இயலாமல் தடுத்தன.

இந்த நீர் நிலைகளில் தேங்கிக்கிடந்த குப்பைகளும் பிரச்சினையாகின. ஆக்கிரமிப்புகளில் பலருக்கும் பங்கிருந்தது. சென்னை விரைவு ரயில்பாதையின் ரயில் நிலையம் குறைந்தபட்சம் ஓரிடத்தில் பக்கிங்காம் கால்வாய் மீது குறுக்காக அமைந்துள்ளது. சென்னை விமான நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட ஓடுபாதை அடையாறு நதி மீதே இருந்தது.

வெள்ள நீர் போகத் தகுந்த வழி இல்லாமல் நகரமே நீரில் மிதந்தபோது செம்பரம்பாக்கம், புழல் போன்ற ஏரிகளின் பாதுகாப்புக் கருதி ஏராளமான உபரி நீர் திடீரெனத் திறந்துவிடப்பட்டது. இது ஏற்கெனவே இருந்த நிலைமையை மிக மோசமாக்கியது. கடந்த பல ஆண்டுகளாக வழக்கமான அளவில் அல்லது அதற்குக் குறைவான அளவில் மழை பெய்து வந்துள்ள காரணத்தால் ஆக்கிரமிப்புகளின் விளைவுகள் வெளிப்படாமல் போயின. எதுவும் பெரிதாக ஏற்பட்டுவிடாது என்ற எண்ணம் நிலவியது.

இயற்கை மீது கை வைக்கலாமா?

சென்னை நகரம் கடந்த பல ஆண்டுகளாக வேகமாக விரிவடைந்துவருகிறது. மக்கள்தொகையும் அதிகரித்துவந்துள்ளது. புதிய தொழில்கள், வணிக அமைப்புகள், கல்வி அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடம் தேவை, மக்கள் குடியிருக்கவும் இடம் தேவை. ஏற்கெனவே குறிப்பிட்டபடி அவ்வித விரிவாக்கத்தின்போது முன்னர் ஏரிகளாக இருந்த இடங்களும் வயல்களும் விழுங்கப்பட்டுவிட்டன. இது தவிர்க்க முடியாததே. இப்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும், எழும்பூர் ரயில் நிலையமும் இருக்கின்ற இடங்கள் முன்னர் வயல்களாக இருந்திருக்கலாம். இப்போது தமிழகத்தில் குறுக்கும் நெடுக்குமாக உள்ள ரயில் பாதைகளும், நெடுஞ்சாலைகளும் பல இடங்களில் வயல்களின் ஊடே அமைக்கப்பட்டவையே. தூர்ந்துபோன ஏரிகளின் வழியே அமைக்கப்பட்ட சாலைகளும் உண்டு.

இயற்கை மீது கைவைக்கலாகாது என்று கூறுவோர் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். இயற்கையாக ஓடிக்கொண்டிருந்த காவிரி நதி மீது கரிகால் சோழ மன்னன் கல்லணை கட்டியபோதே இயற்கை மீது மனிதன் கைவைக்க ஆரம்பித்துவிட்டான். அந்த அளவில் முன்னர் ஏரிகள் இருந்த இடங்கள் மீது கைவைக்கலாகாது என்ற வாதம் சரியானதாக இருக்க முடியாது.

ஐரோப்பாவில் நெதர்லாந்து நாட்டில், ஏரிகள் என்ன, கடலையே தூர்த்து நிலத்தை மீட்டுவருகின்றனர். இது பல நூற்றாண்டுகளாக நடைபெற்றுவருகிறது. நெதர்லாந்தின் கடற்கரை வளைந்து நெளிந்து அமைந்துள்ளதால் இது சாத்தியமாகியுள்ளது. பல இடங்களில் மீட்கப்பட்ட நிலம் கடல் மட்டத்தைவிடத் தாழ்வாக உள்ளது. கடல் நீர் உள்ளே புகாமல் இருக்க நீண்ட தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடலைத் தூர்த்து மீட்கப்பட்ட நிலத்தைக்கொண்டு 1986-ல் புதிய மாகாணமே தோற்றுவிக்கப்பட்டது.

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டியின் கதை வேறு விதமானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய ஏரியின் நடுவே அமைந்த தீவில் தான் தலைநகரம் அமைந்திருந்தது. எதிரிப் படைகள் எளிதில் தாக்க முடியாத வகையில் இந்த ஏரி ஒரு அரண் போல விளங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஏரி மறைய ஆரம்பித்தது. பின்னர் திட்டமிட்டே ஏரியைத் தூர்த்தனர். தூர்க்கப்பட்ட ஏரியின் மீதுதான் இப்போது நகரம் உள்ளது. தண்ணீர் தேங்கும் பிரச்சினையை சமாளிக்க இப்போது அந்நகருக்கு அடியில் 62 கிலோ மீட்டர் நீளத்துக்குப் பெரிய பாதாளக் கால்வாய் அமைக்கப்பட்டுவருகிறது. சென்னையில் மெட்ரோ ரயில் பாதைக்கு அமைக்கப்பட்டுவரும் சுரங்கப் பாதையைவிட இது பெரியது.

செய்ய வேண்டியது என்ன?

சென்னையிலும் இது போன்று பெரிய அளவில் பாதாளக் கால்வாய் அமைக்கப்படுமானால், மழைக் காலத்தில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை இருக்காது. இவ்விதக் கால்வாய் பல கிளைக் கால்வாய்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். உலக வங்கி, ஆசிய வங்கி போன்றவற்றிடமிருந்து இதற்குக் கடன் பெற முடியும்.

பெரிய மழை பெய்தால் இடுப்பளவு தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளில் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடிக் கட்டிடங்களை இடித்துத் தள்ளுவது என்பது பெரிய பிரச்சினை. இதனால் ஏராளமான பேர் வீடிழப்பர். வேலை இழப்பர். தவிர, சென்னை பெருநகரம் மேலும் விரிவடைவதைத் தடுக்க இயலாது. ஆகவே பாதாளக் கால்வாய்களைக் கட்டுவதுதான் ஒரே வழி.

பெரிய பிரச்சினையைச் சமாளிக்கப் பெரிய திட்டம் தேவை. அவசியமானால் மெக்சிகோ சிட்டியில் இது எப்படி அமலாக்கப்படுகிறது என்பதைக் கேட்டறியலாம். ஆனால், இத்திட்டம் வெளிநாட்டு நிபுணர்களின் மேற்பார்வையில் நடைபெறுவதாக இருக்க வேண்டும். அதே சமயம், அடையாறு உட்பட நீர் வழிகளின் கரைகளில் மறுபடி ஆக்கிரமிப்பு நடைபெறாதபடி கண்டிப்புடன் தடுக்க வேண்டும். விவேகத்துடன் கையாண்டால் தீர்வுகாண முடியாத விஷயம் என்று எதுவுமே இருக்க முடியாது.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,

தொடர்புக்கு: nramadurai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்