சிம்பு, அநிருத் இருவரின் காவாலித்தனம் என்றுதான் முதலில் தலைப்பு கொடுத்தேன். பிறகு நீண்ட நேரம் யோசித்தேன். ஏனென்றால், யாரையும் ஒருபோதும் திட்டக் கூடாது என்று உண்மையிலேயே சங்கல்பம் செய்துகொண்டிருக்கிறேன். அதனால்தான் சமூக விரோத செயல் என்று மாற்றினேன். ஆனாலும் அவர்கள் செய்திருப்பது பச்சையான காவாலித்தனம்தான்!
இந்தப் பாடலுக்குப் பெயர் பீப் சாங். சினிமா வசனத்தில் கெட்ட வார்த்தைகள் வரும் போது பீப், பீப் என்று வரும் அல்லவா, அதுதான். சிம்பு அந்தக் ‘கெட்ட வார்த்தை’யைப் பயன்படுத்திப் பாடுகிறார். “என்ன …க்கு லவ் பண்றோம், என்ன ….க்கு லவ் பண்றோம்?” என்று திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டே இருக்கிறார். பாடலின் இடையேயும் … வருகிறது. … வரும் இடங்களில் எல்லாம் ஒரு பீப் சத்தம் வந்தாலும், அவர்கள் உச்சரிக்கும் மோசமான வார்த்தை புரிகிறது.
ஒரு வார்த்தையை எங்கே பயன்படுத்துகிறோம்; எப்படிப் பயன்படுத்துகிறோம் என்ற இங்கிதத்துக்குத்தான் நாகரிகம் என்று பெயர் வைத்திருக்கிறோம். இதுபோன்ற வார்த்தைகளை நானும் என் நாவல்களில் கதைகளில் பிரயோகித்திருக்கிறேன். அதை 18 வயதுக்கு உட்பட்டவர்கள் படிக்க மாட்டார்கள். ஆனால் இது சினிமா ஹீரோ பாடியது. இந்தப் பாடலை நாளை விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாலு வயதுக் குழந்தை பாடப்போவதை எண்ணியே நான் பயப்படுகிறேன்.
நாடும் மக்களும் எப்படிப்பட்ட சூழலில் இருக்கும்போது இப்படி ஒரு பாடலை வெளியிடுவதில் வெளிப்படும் வக்கிரம் இங்கே கவனிக்க வேண்டியது. சினிமா ஆட்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; கேட்க நாதி இல்லை என்ற இருவருடைய திமிர்தான் பொதுவெளியில் இப்படியான ஒரு அயோக்கியத்தனத்தை நிகழ்த்தக் காரணம்.
ஒரு ராணுவ கர்னல். என் நண்பரின் உறவினர். 70 வயது இருக்கும். அவர் மனைவி. இருவரும் டிஃபென்ஸ் ஆபீஸர்ஸ் காலனியில் வசிக்கிறார்கள். தரைத்தளம். தண்ணீர் முழங்கால் அளவு ஏறிவிட்டது. வீட்டை உள்ளே பூட்டியிருக்கிறார்கள். மாடிக்குப் போகலாம் என்றால் மாடி வீட்டுக்கு வெளியே இருக்கிறது. போகலாம் என்றால் முடியாது. வீட்டை உள்ளே பூட்டியிருக்கிறார்கள். திறந்துகொண்டு போகலாமே? முடியாது. சாவியைத் தேட முடியவில்லை. வீடு முழுவதும் இருள். மின்சாரம் இல்லை. தண்ணீர் முழங்கால் வரை வந்து இடுப்பு வரை வந்து கழுத்து வரை வந்தது. இப்போது இருவரின் பிணம்தான் கிடைத்திருக்கிறது. ராணுவத்தில் கர்னல். இப்படி ஆயிரம் கதைகள். இப்போதுதான் சிம்பு “என்ன …க்கு லவ் பண்றோம்?” என்று பாடுகிறார். அநிருத் இசை அமைக்கிறார். ஏன் தம்பிங்களா, நீங்கள் சென்னையில்தான் இருக்கிறீர்களா அல்லது வேறு எதாவது கிரகத்தில் இருக்கிறீர்களா?
சென்னையே வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இன்னும் முழுமை யாக மீண்டு வரவில்லை. ஆயிரக் கணக்கான மக்கள் முகாம் களில் இருக்கிறார்கள். கட் அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்யப்பட்ட முன்னணி நடிகர்கள் ஏதோ சில லட்சங்களை பைல்ஸ் வந்தவன் முக்குவதுபோல் முழு மனசில்லாமல் முக்கி முக்கிக் கொடுத்து விட்டுப் பதுங்கிவிட்டார்கள். களத்தில் இறங்கி வேலை செய்ததெல்லாம் பாலாபிஷேபகத்துக்கு ஆட்படாத சித்தார்த், விஷால், கார்த்தி, ஆர்ஜே பாலாஜி, பார்த்திபன் போன்றவர்கள். அரசியலிலும் சினிமாவிலும் தமிழர்கள் யாரையெல்லாம் கொண்டாடினார்களோ அவர்கள் வீட்டுக்குள் பதுங்கிவிட்டார்கள். முகம் தெரியாத பலரும் இறங்கி வேலை செய்தார்கள்.
என் வீட்டுக்குள் தண்ணீர் வந்தால் என்னைக் காப்பாற்ற ஆண்டவனாலும் முடியாத நிலை. பிற மனிதர்களைக் கண்டாலே பேயாட்டம் ஆடும் ஐந்தடி நீளமும் மூன்று அடி உயரமும் கொண்ட ஸோரோ (எடை 60 கிலோ) என்ற க்ரேட் டேன் என்ற நாயுடனும், நடக்க முடியாத கால்களைக் கொண்ட பப்பு என்ற 40 கிலோ லாப் நாயுடனும் முழங்கால் அளவு தண்ணீரில் வீட்டுக்குள் முடக்கப்பட்டேன். நாய்களை விட்டு விட்டு வெளியேற முடியாது என்று முடிவு செய்துவிட்டேன். மொட்டை மாடிக்குப் போகப் படிகள் இல்லை. பப்புவை மிகவும் சிரமப்பட்டு மாடிப்படி ஏற்றினோம் நானும் அவந்திகாவும். இரண்டு பேரும் சாகத் தயாராக இருந்தோம். பப்புவும் ஸோரோ வும் எங்களுக்கு இரண்டு குழந்தைகள். படகே வந்தாலும் ஸோரோ படகைச் சாய்த்துவிடும். பிற மனிதர்களைக் கண்டால் ட்ராகுலாவாகவே மாறிவிடும். அது அப்படித்தான். பழகியவர்களோடு மட்டுமே குழந்தை மாதிரி பழகும்.
என் வீட்டில் தண்ணீர் ஏறியிருந்தால் இந்நேரம் எனக்கு இரங்கல் கட்டுரைகள் வந்திருக்கும். நல்ல வேளையாக, தண்ணீர் முழங்காலோடு நின்றுவிட்டது. தண்ணீரில் மின்சாரம் பாய வாய்ப்பு இருந்ததால் மின்சாரத்தை நிறுத்திவிட்டோம். அதைக்கூட நீ நிறுத்தாதே நான் நிறுத்துகிறேன் என்று சொல்லி ஒரு மரக்கட்டையால் நிறுத்தினாள் அவந்திகா.
இதெல்லாம் ஜுஜுபி. ஆயிரக் கணக்கான கதைகள். எல்லாம் கண்ணீர்க் கதைகள். தண்ணீரில் தன் சொந்தங்கள் பிணமாய் மிதப்பதைப் கண் கொண்டு பாத்தவர்களின் கதைகள் இருக்கின்றன. சிம்பு பாடுகிறார்.
ஆபாசம் என்றால் என்ன? என் அப்பனும் ஆத்தாளும் உறவு கொண்டுதான் என்னைப் பெற்றார்கள். மனிதன் மிருகம் எல்லாம் அப்படித்தான். ஆனால் எதை எங்கே செய்ய வேண்டும் என்று வரைமுறை இருக்கிறதுதானே? கக்கூஸில் மலம் கழிக்கலாம். அங்கே போய் சாப்பிடலாமா? இதைத்தான் சிம்புவிடமும் அநிருத்திடமும் கேட்கிறேன். சோறு தட்டில் இருந்தால் சாப்பாடு. தரையில் கிடந்தால் குப்பை.
சமீபத்தில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்று ஒரு படம் வந்ததில்லையா? “அந்தப் படம் இன்றைக்கு நம் சமூகம் வந்தடைந்திருக்கும் இழிநிலையின், அதன் ஆன்மாவைப் பீடித்திருக்கும் நோய்க்கூறின் அப்பட்டமான வெளிப்பாடு. அரசியலற்றவர்களாக நம் பிள்ளைகளை எந்த இடத்தில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் நாம் என்பதற்கான சாட்சியம்!” என்று ‘தி இந்து’வில் எழுதியிருந்தார் சமஸ். புண் இருந்தால் சீழ் வரும் அல்லவா, நம் சமூகத்தின் புண்ணாக இருந்து புரையோடிவிட்ட சினிமா கலாச்சாரத்திலிருந்து வடிந்திருக்கும் சீழ் சிம்பு - அநிருத்தின் பாடல்.
தொடர்புக்கு: charu.nivedita.india@gmail.com
என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது: சிம்பு
‘பீப்' பாடல் சர்ச்சை விவகாரம் தொடர்பாக யாருடைய கேள் விக்கும் பதில் சொல்ல முடியாது என்று சிம்பு காட்டமாகத் தெரிவித்து, அதற்கான விளக்கத்தையும் கூறியிருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு ‘பீப் சாங்' என்ற பெயரில் அனிருத் இசையில் சிம்பு பாடியதாக ஒரு பாடல் இணையத்தில் வெளியானது. கடும் அதிர்ச்சியையும் எதிர்வினைகளையும் உருவாக்கியிருக்கிறது இந்தப் பாடல்.
இதுகுறித்து சிம்புவிடம் கேட்டோம்.
"அந்தப் பாடலை முதலில் நான் அதிகாரபூர்வமாக வெளியிட வில்லை. நானும் அனிருத்தும் இணைந்து பல்வேறு தளங்களில் சுமார் 150 பாடல்களைத் தயார் செய்துவைத்திருக்கிறோம். அவற்றில் இதுவும் ஒரு பாடல். நான் ஒரு கேள்வி கேட்கிறேன்... அதே இணையத்தில்தானே போர்ன் (ஆபாச வீடியோ) வீடியோக்களும் இருக்கின்றன. தேவை என்றால்தானே போய்ப் பார்க்கிறீர்கள். அதேபோலத்தானே இதுவும்? பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.
நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், பாத்ரூமிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரத்தை நான் யாருக்கும் அளிக்கவில்லை. என்னைக் கேள்வி கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து "நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்" என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு அன்பைப் பரிமாறுங்கள் என்று ஒரு பாடல் வெளியிட்டேன். அப்போது எனக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்களா? என்னுடைய வேலையைப் பற்றி குறை சொல்பவர்கள் யாருக்கும் நான் பதில் வேண்டிய அவசியமில்லை!"
- கா.இசக்கி முத்து
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago