பாரிஸ் மாநாடு: வெற்றி யாருக்கு?

By ஆதி வள்ளியப்பன்

தங்களின் பொறுப்புகளிலிருந்து சாமர்த்தியமாக விலகியிருக்கின்றன பணக்கார நாடுகள்

‘வரலாற்றுத் திருப்புமுனை ஒப்பந்தம்' - பல்வேறு இந்திய நாளிதழ்களின் ஞாயிற்றுக்கிழமை தலைப்புச் செய்தி இப்படித்தான் இருந்தது.

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய ஒப்பந்தம், உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் ஏற்படுத்த உள்ள தாக்கங்களுக்குத் தீர்வு காண உதவும் என்றே இந்திய ஊடகங்கள் பலவும் நம்புகின்றன.

2009-ல் கோபன்ஹேகனில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஆக்கப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத நிலையில், சமீபத்திய ஒப்பந்தம் புதிய பசுமைப் பாதைக்கு வழிகோலியுள்ளதாக பத்திரிகைகள் பாராட்டுகின்றன. ஆனால், பாரிஸ் ஒப்பந்தம் முழுக்க முழுக்க சமரசத்துக்கு உள்ளான, மிகச் சாதாரணமான கூறுகளைக்கொண்ட ஒப்பந்தம் என்பதுதான் பருவநிலை மாற்றப் பேச்சுவார்த்தைகளின் வரலாற்றை அவதானித்துவரும் சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்து.

காரணங்கள் என்ன?

குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ‘குளோரோ ஃபுளூரோ கார்பன்’ ஒசோன் படலத்தை அரித்துத் தின்பதால் சர்வதேசத் தடை, விஷத்தன்மை கொண்டுள்ளதால் ‘எண்டோஃசல்பான்’ பூச்சிக்கொல்லிக்கு படிப்படியான தடை என்பன போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் உலக நாடுகளால் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தாண்டி, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கும் கார்பன் டைஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களை (Greenhouse Gases) கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சமீபத்திய பாரிஸ் உச்சி மாநாடு கூடியது.

ஆனால், இந்த மாநாட்டின் நோக்கம் நிறைவேறவில்லை என்று சுட்டிக்காட்டுகிறது புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழல் மையம். “பசுங்குடில் வாயு வெளியீட்டை பணக்கார நாடுகள் கட்டுப்படுத்துவதற்கு வலியுறுத்தும் எந்த அர்த்தபூர்வமான இலக்குகளும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை. சுற்றுச்சூழல் சமஉரிமையை நிலைநாட்டுவது பற்றியோ, உலகைக் காப்பாற்றத் தேவையான கார்பன் பட்ஜெட் பற்றியோ ஒப்பந்தத்தில் உருப்படியாக எதுவுமில்லை. பருவநிலை மாற்ற பேதத்தை இது இன்னமும் மோசமடையவே செய்யும்" என்கிறார் இந்த மையத்தின் தலைமை இயக்குநர் சுனிதா நாராயண்.

பாரிஸ் ஒப்பந்தப்படி பார்த்தால் தற்போது உள்ளதைவிட உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸும், அதற்கு மேலும் அதிகரிக்கும். இப்படி புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும் வகையில் 2020-ம் ஆண்டுக்கு முன்னதாக குறிப்பிடத்தக்க அளவு நிதியுதவி செய்வதாகவோ, பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகவோ பணக்கார நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தத்தில் சரியான வார்த்தைகளைப் புகுத்துவதில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் சுற்றுச்சூழல் சமஉரிமையை நிலைநாட்டுவதற்கான நடைமுறைகளையோ, அதிகப்படியாக பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதற்கான சலுகையோ இந்தியாவுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்று இம்மையம் சுட்டிக்காட்டுகிறது.

தப்பித்த பணக்கார நாடுகள்

பருவநிலை மாற்றம் உருவாகக் காரணமாக இருந்த பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டதில் பணக்கார நாடுகளுக்கு வரலாற்றுரீதியில் பொறுப்புடைமை இருக்கிறது. பணக்கார நாடுகளின் அதாவது அமெரிக்க, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள், தொழிற்புரட்சி காலத்தில் இருந்தே புவி வெப்பமடைவதற்குக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டு வந்துள்ளன.

அதன் காரணமாக தங்களுடைய கடந்த கால செயல்பாட்டுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பருவநிலை மாற்றத்தைத் தள்ளிப்போடுவதற்கு ஏழை நாடுகளுக்கு நிதியுதவியையும், தொழில்நுட்ப உதவியையும் அவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க கியோட்டோ பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் (1997) 'வரலாற்றுப் பொறுப்புடைமை' (historical responsibility) என்ற வார்த்தை இந்த அடிப்படையில்தான் இடம்பெற்றது.

பணக்கார நாடுகள் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளும் அந்த ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கியோட்டோ ஒப்பந்தத்தையே நீண்ட காலத்துக்கு ஏற்காமல் இருந்தன. பராக் ஒபாமா பதவியேற்ற பிறகும்கூட பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கு அமெரிக்கா உடனடியாக முன்வரவில்லை.

பெரும்பாலான அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்வதற்காகவே 100-200 கிலோ மீட்டர் சொந்தக் கார்களில் பயணிக்கிறார்கள். ஒவ்வொரு அமெரிக்கரும் பல்வேறு வழிகளில் கணக்கு வழக்கின்றி பசுங்குடில் வாயுக்களை நாள்தோறும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உலகம் அழிவின் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்த பின்னரும், அவர்களுடைய வாழ்க்கை முறையில் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை.

ஐரோப்பியர்கள் தலையிலும் வரலாற்றுரீதியிலான பசுங்குடில் வாயு வெளியீட்டு சுமை இருக்கிறது. அதேசமயம், சிறிய அளவிலாவது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள ஐரோப்பியர்கள் தயாராக உள்ளனர். ஆனால் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பசுங்குடில் வாயு வெளியீடு அதிகரித்துவருகிறது என்ற பூச்சாண்டியைக் காட்டி, அதன் நிழலில் ஒதுங்கிக்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது.

வரலாற்று நழுவல்

பாரிஸ் ஒப்பந்தத்தில் 'வரலாற்றுப் பொறுப்புடைமை' என்ற வார்த்தை நீக்கப்பட்டிருப்பதன்மூலம், விரைவாக உலகைக் காப்பாற்றும் முயற்சியில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் விலகி ஓடியுள்ளதாகவே சொல்ல வேண்டும். இவ்வளவு காலமும் அந்த வார்த்தையை நீக்குவதற்காகத்தான் அந்த நாடுகள் நேரடியாகவும், கார்பரேட் ஆதரவு விஞ்ஞானிகள், பிரதிநிதிகள் மூலமாகவும் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடுவது, திசைதிருப்புவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்தன. பாரிஸ் மாநாட்டில் தங்கள் நோக்கத்தை அவை எட்டிவிட்டன.

"வரலாற்றுப் பொறுப்புடைமையில் இருந்து பணக்கார நாடுகள் விடுபட்டுள்ள நிலையில், அந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான சுற்றுச்சூழல் சமஉரிமை சீர்குலைந்து, இடைவெளி மேலும் அதிகமாகும். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பணக்கார-ஏழை நாடுகளுக்கு இடையே நிதர்சனமாக இருக்கும் வேறுபாடுகள், புதிய ஒப்பந்தத்தில் அழிக்கப்பட்டுவிட்டன" என்று விமர்சிக்கிறார் அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் துணைத் தலைமை இயக்குநர் சந்திர பூஷண்.

அழிவுக்கு வரவேற்பு?

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் இப்போதுதான் வளர்ந்து வருகின்றன. இந்த நிலையில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதை வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் விரைவாகக் கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்த ஆரம்பித்தால், அது எப்படி நியாயமாகும்? பணக்கார நாடுகள் முழு வளர்ச்சியை எட்டிவிட்டு, இந்தியா போன்ற நாடுகள் மட்டும் நெருக்கடிக்கு இடையிலான வளர்ச்சியை மேற்கொள்ளச் சொல்வது எப்படிச் சரியாகும்?

எடுத்துக்காட்டாக இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். ஆனால், நாம் வெளியிடும் பசுங்குடில் வாயுவின் ஒட்டுமொத்த அளவு குறைவு. இதற்குக் காரணம் அடிப்படை வசதியில்லாமல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களும், சாதாரண மக்களும் கோடிக் கணக்கில் வாழ்வதுதான். வரலாற்றுப் பொறுப்புடைமையில் இருந்து பணக்கார நாடுகள் தப்பிவிட்டதால், பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, ஒவ்வொரு நாடும் இன்றைக்கு எவ்வளவு பசுங்குடில் வாயுக்களை வெளியிடுகிறதோ, அதன் அடிப்படையிலேயே கட்டுப்பாடுகளும் அமையும். நம் நாட்டில் ஒட்டுமொத்த பசுங்குடில் வாயு வெளியேற்றமும் அதிகரித்து வருகிறது,

ஆனால் மக்கள்தொகை அதிகம். அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் இது அப்படியே தலைகீழாகும். அப்படியிருக்கும்போது, மக்கள் தொகையைக் கணக்கில் எடுக்காமல், முன்வைக்கப்படும் கட்டுப்பாட்டை நாம் எப்படி ஏற்க முடியும்?

வழக்கம்போலவே, வார்த்தை ஜாலங்களும், போகாத ஊருக்கு வழி சொல்லும் வாக்குறுதிகளும்தான் இந்த பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலும் நிரம்பியுள்ளன என்பதே சுற்றுச்சூழல் அறிஞர்கள் முன்வைக்கும் விமர்சனம். இனி என்னதான் செய்யப்போகிறது உலகம்?

-ஆதி வள்ளியப்பன்
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்