சில தருணங்களும் சில நிகழ்வுகளும் 32: கற்பூரம் போல மிச்சமின்றி வாழ்வோம்!

By செய்திப்பிரிவு

தனிமையில் வசிக்க நேரிடும் முதிய தம்பதியர், திட்டமிட்டு வாழ்ந்தால் எல்லா நாட்களையும் சிக்கலின்றிக் கடக்கலாம். நம்முடைய தலைமுறையில் மனைவி 4 - 6 வயது குறைந்தவராகத்தான் இருப்பார். அதனால், பெண்களாகிய நாம்தான் நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். காஸ் சிலிண்டர் புக்கிங், மின்சாரக் கட்டணம் கட்டும் தினம், தொலைபேசி கட்டும் தினம் இவற்றை நாட்காட்டிகளில் குறித்து வைத்து கணவருக்கு நினைவுபடுத்துங்கள். ‘நீங்கள் மறந்திடுவீர்கள், நானே செய்கிறேன்’ என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அது கணவரது தன்னம்பிக்கையைக் குறைத்துவிடும். அவர் உயரத்தில் காற்றில் படபடக்கும் கொடியாக எல்லார் கண்களிலும் படுபவராகவே இருக்கட்டும். ஆனால், நீங்கள்தான் அந்தக் கொடியேறி இருக்கும் கொடி மரம். கொடியின்றி கொடிமரம் நிற்கும். ஆனால், கொடிமரம்தான் கொடிக்கு ஆதாரம்.

தினசரி செலவுக்குத் தவிர, வீட்டில் ஒரு இடத்தில் 5 ஆயிரமோ, 10 ஆயிரமோ அவசர நிதியாக வைத்திருங்கள். அவசர மருத்துவச் செலவுக்கு உபயோகமாகும். முழுச் செலவும் அல்ல, முதல்நிலை செலவுக்குப் பயன்படும். ‘டெபிட் கார்டு’, ‘கிரெடிட் கார்டு’ நம்பர்களைச் சுலபமாக நினைக்கும் எண்களாகப் பதிவுசெய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் ஒருவருடைய பிறந்த வருடம், கல்யாணமான வருடமாக இருக்கலாம். எழுதிவைத்துக் கொள்ளுவதாக இருந்தால் சங்கேதமாக எழுதுங்கள். அது உங்களுக்கு மட்டும் புரிவதாக இருக்கட்டும். உதாரணமாக ‘6766’ என்று இருந்தால் ‘ஆறுமுகம், ஏழுமலை, ஆறுபடை ஆறுவிதம்’ என்றோ, ஸம்ஸ்கிருத திதிகளாகவோ ‘5167’ ‘பஞ்சமி, பிரதமை, சஷ்டி, சப்தமி’ என்றோ குறித்துக்கொள்ளுங்க்ள். அந்தக் காகிதத்தைக் கண்டிப்பாக அட்டைகளுடன் வைக்கக் கூடாது.

கஷ்டம் என்னவென்றால் நாம் வெகு ஜாக்கிரதையாக ஓரிடத்தில் முக்கியமானவற்றை வைத்துவிட்டு அந்த இடம் என்னவென்று மறந்து தலையைச் சொறிந்து கொள்வதுதான். அநேகமாக வேறு எதையோ தேடும்போது வேறு ஒன்று கிடைக்கும்.

வங்கி பாஸ் புக்கை ‘அப்டேட்’ செய்ய நீங்களே செல்லுங்கள். நம் கையிருப்பு வேறு ஒருவருக்குத் தெரிய வேண்டாமே! இப்போதெல்லாம் வங்கியின் பெயரைச் சொல்லி வயதானவர்களை ஏமாற்றுவது சாதாரணமாகிவிட்டது. என் அனுபவத்தைக் கூறுகிறேன். ‘பேங்க் மேனேஜர் பேசுகிறேன். உங்கள் ஆதார் எண்ணைப் பதிவுசெய்ய வேண்டும். கூறுங்கள்’ என்று ஒரு போன் கால். நான் ‘ஏற்கெனவே பதிந்து இருக்கிறேனே’ என்றபோது, ‘இல்லை. வருடா வருடம் பதிவு செய்ய வேண்டும்’ என்றார். நான் ‘நேரில் அட்டையுடன் வருகிறேன்’ என்றேன். ‘உங்களுக்கு ஏன் கஷ்டம்... போனிலேயே கூறுங்கள்’ என்றார். நான் ‘என் தம்பி மகள் அதே பேங்க்கில் ஆழ்வார்பேட்டை கிளையில் வேலை செய்கிறாள். அவளைக் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்று ஒரு பொய்யைச் சொன்னதும், மறுமுனையில் நிசப்தம். பின் ஒரு முறை இதேபோல் ஒரு அழைப்பு. நான் ‘சொல்ல விரும்பவில்லை’ என்றதும், ‘அப்படியானால் உங்கள் கணக்கை முடக்க வேண்டும்’ என்றார்.

‘தாராளமாகச் செய்யுங்கள். நான் ஓய்வுபெற்ற அரசாங்க ஊழியர். என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியும்’ என்றதும், ‘பட்’டென்று அணைக்கப்பட்டது தொடர்பு. வயதானவர்களைப் பயமுறுத்துவது சுலபம். அலைபேசியில் வருபவற்றைக் கூடச் சட்டை செய்யாதீர்கள். உங்கள் ஆடிட்டர், வக்கீல் யாருடனாவது கலந்தாலோசியுங்கள்.

உங்கள் வைப்பு நிதிப் பத்திரங்களில் எல்லாம் வாரிசுகளின் பெயரைக் குறியுங்கள். பத்திரங்களின் பின்னால் உங்கள் கையொப்பம் இட்டு வைப்பது நல்லது. உடல்நலக் குறைவால் எழுத முடியாத நிலை வந்தால், நம் மகனோ, மகளோ நமக்கு வேண்டிய பணத்தை எடுக்க முடியாமல் போகலாம். ஆனால், நம் குழந்தைகளைத் தவிர வேறு எந்த உறவினரிடமும் இந்த கையொப்பம் இட்ட பத்திரங்களைக் கொடுக்க வேண்டாம். யாரையும் நம்புவதற்கில்லை.

அசையாச் சொத்துகள் இருந்தால் உயிலில் கணவனுக்குப் பின் மனைவியோ, அல்லது மனைவிக்குப் பின் கணவனோதான் தலையாய வாரிசு என்று குறிப்பிடுங்கள். உயிலுக்கு பதில் அசையா சொத்துகளை ‘செட்டில்மென்ட்’ ஆகப் பதிவு செய்யலாம். அப்போது உங்களுக்கு அனுபவ பாத்யதையே தவிர விற்கும் உரிமை கிடையாது. சொத்தும் உங்கள் இருவர் காலத்துக்குப் பிறகுதான் வாரிசுகளுக்குப் போய்ச் சேரும். மேலும், சொத்திலிருந்து வரும் வருவாயை, உதாரணமாக வாடகையை அனுபவிக்க வாரிசுகளுக்கு உரிமை இல்லை. இது உயில் எழுதி அதை நம் காலத்துக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஒப்படைத்து அனுமதி (probate) பெற வேண்டும். வெளிநாட்டில் இருக்கும் மக்கள் இந்தக் காரியத்தை வக்கீலிடம் ஒப்படைப்பார்கள். காலதாமதம், பண விரயம் இரண்டும் ஏற்படும். probate கட்டணமும் அதிகம். சொத்தின் நிகழ்கால மதிப்பின்படி வேறுபடும். ‘செட்டில்மென்ட்’ பதிவுச் செலவு மாறாதது. உங்கள் காலத்திலேயே இந்த ‘செட்டில்மென்ட்’-ஐ ரத்து செய்யவோ, மாற்றவோ பெற்றோருக்கு முழு உரிமை உண்டு. அதனால், பிள்ளைகளால் கைவிடப்பட்டால் என்னவாகும் என்கிற அச்சம் வேண்டாம்.

வீடு சொந்தமாக இருப்பவர்களுக்கு இன்னொரு யோசனை. உங்கள் வாழ்வாதாரத்துக்கு உங்கள் மக்களிடமிருந்து பண உதவி கிடைக்காவிட்டாலோ அல்லது அவர்களிடம் கேட்டுப் பெற உங்களுக்கு விருப்பமில்லை என்றாலோ, ‘இரண்டாவது அடகு’ (Second mortgage) என்று ஒரு வழியிருக்கிறது. பேங்க்கில் உங்கள் வீட்டை அடகு வைக்கலாம். உங்கள் வயதைப் பொறுத்தும், உடல் நிலையை கவனத்தில் கொண்டும், உங்கள் சொத்தின் மதிப்பை நிர்ணயித்து உங்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட வருடங்களுக்கு அளிப்பார்கள். உங்கள் காலத்துக்குப் பிறகு வாரிசுகள், பேங்க் அதுவரை அளித்த தொகையைச் செலுத்தி வீட்டை மீட்டுக்கொள்ளலாம். அல்லது வீட்டை பேங்க் எடுத்துக் கொண்டு அதன் மதிப்பில் உங்களுக்குக் கொடுத்த தொகையைக் கழித்துக் கொண்டு மிச்சப் பணத்தை வாரிசிடம் அளிப்பார்கள்.

ஒரு பரிந்துரை... நீங்கள் வாரிசுகளுக்கு அளிப்பது, பணமோ, நகைகளோ, சொத்தோ எப்படிப் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள் என்பதை நீங்கள் இருவரும் தீர்மானியுங்கள். வாரிசுகளிடம் ஆலோசனை கேட்டால் குழப்பமும் சில சமயம் கசப்பும் ஏற்படலாம். உங்கள் தீர்மானத்தை ஒரு ‘செய்தி’யாக மட்டும் தெரியப்படுத்துங்கள். வாதித்து ஆலோசனை தெரிவிக்கும் விஷயமாக்காமல் இருப்பது நல்லது.

கோயிலோ, கடையோ, கடற்கரையோ சேர்ந்தே போக முயலுங்கள். நடைப்பயிற்சியும் ஆகும். இணக்கமும், மனம் விட்டுப் பேசுவதும் அதிகரிக்கும். ஒருவேளை தனியாகப் போவதானால் அல்லது துணையை இழந்து நீங்கள் தனிமையானால் உங்கள் சட்டைப் பையிலோ, கைப்பையிலோ உங்கள் முகவரி, தொலைபேசி / அலைபேசி எண், தெரிவிக்க வேண்டிய உறவினர் பெயர், தொலைபேசி எண் முதலியவற்றைத் தெளிவாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். 364 நாட்கள் இது தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், 365-வது நாள் தேவைப்பட நேரிடும். கும்பலின் நடுவில்கூட யாரென்று தெரியாத நபராகக் கிடக்க வேண்டாம்.

இதேபோலத்தான் அடுத்து உள்ள மயானத்தின் தொலைபேசி எண், குளிரூட்டப்படும் சவப்பெட்டி கிடைக்கும் இடத்தின் தொலைபேசி எண் இவற்றை நான் முன்பு கூறிய வெள்ளை அட்டையில் குறிப்பிடவும். இதைப் படிக்கும்போது மனதும், வயிறும் சங்கடப்படுகிறதா? இது நம் குழந்தைகளுக்கு, அதுவும் அவர்கள் பதைபதைத்து வரும்போது உதவியாக இருக்கும்.

துணையை இழக்க நேர்ந்தால், துயரம்தான். ஆனால் விளக்கில் திரியும் எண்ணெயும் பெரும்பாலும் ஒன்றாகத் தீர்ந்துபோவதில்லை அல்லவா? காரியங்கள் மற்ற விசாரங்கள் தீர்ந்து குழந்தைகள் திரும்பிப் போனால் பெரிய வெற்றிடம் ஏற்படும்தான். தம்பதிகளிடையே வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத தருணங்கள், நினைவுகள் மனதில் சுழலும். நெகிழ்வான, இனிமையானவற்றை அசை போடுங்கள். குழந்தைகள் கூட வரும்படி அழைப்பார்கள். ஒரு மாறுதல் தேவையென்று தோன்றலாம். ஆனால், பழகிய வீடு, சாமான்கள், நினைவுகள் இவற்றை விட்டு வேரோடு வேறு இடத்தில் நடப்படுவது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தும். துக்கத்தின் கூர்மை சற்று மழுங்கட்டும். சாதாரண தினசரி வாழ்க்கையைத் தொடங்கி பிறகு மாற்றங்களைப் பற்றி யோசியுங்கள். தனிமைக்கு மனத்தையும் வாழ்க்கையையும் தயார்படுத்திக்கொள்ள நேரம் தேவை.

கை, கால் திடமாக இருக்கும்வரை சார்ந்து இருக்க வேண்டாம் என்றுதான் தோன்றும். வயது கூடக் கூட மனமும் உடலும் மேலும் தளர்வடையும். வளைந்து கொடுத்துப் பிள்ளைகளைச் சார்ந்து இருப்பது, வெளி மனிதரைச் சார்ந்தோ, வேலையாட்களைச் சார்ந்தோ இருப்பதைவிட எவ்வளவோ தேவலை அல்லவா!

வயதானவரை ‘நூறு வயது இருப்பீர்கள்’ என்று வாழ்த்தாதீர்கள். ‘ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். கற்பூரம் போல பிரகாசமாக, வாசனையாக, மிச்சமில்லாமல் போக வேண்டும்’ என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

சந்திப்போம்... சிந்திப்போம்...

கட்டுரையாளர், இதயநோய் நிபுணர் (பணி நிறைவு)

டாக்டர் கல்யாணி நித்யானந்தன், 1969-ல் தமிழகத்தின் முதல் கரோனரி சிறப்பு சிகிச்சைப் பிரிவு சென்னையில் அமையக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர்.

தொடர்புக்கு:joenitya@yahoo.com

ஓவியம்: வெங்கி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்