எப்படி இருக்கிறது புதுவை நிலவரம்?

By புவி

தமிழகத்திலும் கேரளத்திலும் கட்சிகளுக்கிடையே போட்டி நடந்துகொண்டிருக்கிறது என்றால், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் எப்போதும்போல வேட்பாளர்களுக்கு இடையிலான போட்டிதான் நடந்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் கூட்டணிக்கும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையிலான போட்டியாக அது சொல்லப்பட்டாலும்கூட. அதன் காரணமாகவே, தேர்தலுக்குப் பிறகு பாஜக தன்னுடைய வழக்கமான அஸ்திரங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு பெரும்பான்மையை உருவாக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

காங்கிரஸ் கூட்டணியில் திமுக, விசிக, சிபிஐ கட்சிகள் இடம்பெற்றுள்ளன. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் பாஜகவும் அதிமுகவும் உள்ளன. புதுவை சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர்கூட இல்லாத நிலையிலும் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரங்களைத் தனது கையிலேயே பாஜக வைத்திருக்கிறது.

பெரும்பான்மை இல்லை என்று பிப்ரவரி 22-ல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கவிழ்வதற்கு முன்னாலேயே தேர்தலுக்கான வேலையை பாஜக தொடங்கிவிட்டது. வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து வாக்குறுதிகளை அளித்தது. இருந்தாலும், தற்போதைக்கு மக்களிடம் புதிய வேட்பாளர்களைக் கொண்டுபோய் சேர்த்து அவர்களை வெற்றிபெற வைப்பது என்பது சாத்தியமில்லை. அதனால்தான், ஏற்கெனவே மக்களிடம் அறிமுகமான மாற்றுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களையே தனது வேட்பாளர்களாகக் களத்தில் இறக்கியுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவுக்கு மாறியிருக்கும் நமச்சிவாயம், இதுவரை எல்லா மதத்தவர்களுக்கும் பொதுவானவராகத்தான் இருந்தார். ஆனால், இப்போது அவர் பாஜகவின் தரப்பில் போட்டியிடுவதால் அவரது தொகுதியான கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் வில்லியனூரிலேயே போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மண்ணடிப்பேட்டையில் அவர் போட்டியிடுவது அதனால்தான்.

முதல்வராகப் பதவி வகித்த நாராயணசாமி, ஜான்குமார் பதவி விலகிக்கொண்டதன் பேரிலேயே அவரது நெல்லித்தோப்புத் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். அப்போது, காங்கிரஸ் கட்சியில் இருந்த மேலிடத்துச் செல்வாக்கு அவருக்கு முதல்வர் பதவியை எளிதாகப் பெற்றுத்தந்தது என்றாலும், இன்னொரு சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவோடுதான் அவர் சட்டமன்ற உறுப்பினருக்கான தகுதியையே பெற முடிந்தது. இப்போது ஜான்குமாரும் பாஜக பக்கம் தாவிவிட்டார். நாராயணசாமி போட்டியிட்டால் உறுதியாக வெற்றிபெற முடியும் என்று சொல்ல முடியாத நிலையில்தான் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தையே அவர் கைவிட்டுவிட்டார். நாராயணசாமியின் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவில் எந்தப் பெருந்திட்டங்களும் நடக்கவில்லை. மத்திய அரசு நிதி ஒதுக்கினால்தானே, தன்னால் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற கேள்வியையும் நாராயணசாமி எழுப்பத்தான் செய்வார். அதே நேரத்தில் மத்தியில் ஆளும் பாஜகவின் பிரதிநிதியாகவே செயல்பட்ட துணைநிலை ஆளுநர் கிரண் பேடி மீது புதுச்சேரி மக்களிடத்தில் ஒரு ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது என்பதையும் பாஜக புரிந்துகொண்டிருக்கிறது. கிரண் பேடி நீக்கப்பட்டதும் கூடுதல் பொறுப்பை தமிழிசையிடம் வழங்கியிருப்பதும்கூட அதனால்தான்.

காங்கிரஸ் கூட்டணியிலும் கட்சிகளுக்கு இடையிலான பிணைப்பு வலுவானதாக இல்லை. ஜனவரி மாதத்தில் புதுச்சேரியில் தனது தனிப்பட்ட செல்வாக்கைக் காட்ட விரும்பிய திமுக, ஜெகத்ரட்சகனைத் தேர்தல் பொறுப்பாளராக நியமித்தது. காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பாஜக, உடனடியாகத் தன்னுடைய காய்களை நகர்த்த ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ் கட்சி தனித்துத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கலாம் என்ற பேச்சு எழுந்த பிறகு, அந்தக் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அடுத்தடுத்துப் பதவி விலகத் தொடங்கினார்கள். எனவே, இப்போது புதுவையில் ஏற்பட்டிருக்கும் இந்த அசாதாரணச் சூழலுக்கு காங்கிரஸ், பாஜக மட்டுமின்றி திமுகவும் ஒருவகையில் காரணமாகிவிட்டது.

2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் வைப்புத்தொகையைக்கூடத் திரும்பப் பெறவில்லை. உள்ளூர் பாஜக நிர்வாகிகளே அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாத நிலையில், மோடியும் அமித் ஷாவும் புதுச்சேரியின் மீது தனிக்கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அதன் விளைவுகளை இந்தத் தேர்தலில் வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. பாஜகவின் அஸ்திரங்களை முறியடிக்க வேண்டிய காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கடைசியில் பாஜகவிலேயே ஐக்கியமாகிவிட்டனர்.

பாஜகவை உள்ளடக்கிய என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் ரங்கசாமிதான் மக்களிடம் தனிச்செல்வாக்கு பெற்ற தலைவராக இருக்கிறார். இருந்தாலும், இன்னும் அவரைத் தங்களது கூட்டணியின் அதிகாரபூர்வமான முதல்வர் வேட்பாளராக பாஜக அறிவிக்கவில்லை. தற்போது பாஜகவின் தலைவராக இருக்கும் நமச்சிவாயம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெறுவதற்கே பெரும் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. ரங்கசாமி எளிதில் சட்டமன்ற உறுப்பினராகிவிடுவார். அவர் தற்போது போட்டியிடும் தட்டாஞ்சாவடி தொகுதி அவரை ஏற்கெனவே நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக்கியுள்ளது. பாஜக கூட்டணி வெற்றிபெற்றால் முதல்வர் பதவியை அவர் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்கவும் மாட்டார்.

கூட்டணி வெற்றிபெற்று, என்.ரங்கசாமி முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைச்சரவையின் கட்டுப்பாடு பாஜக வசத்தில் இருக்கக்கூடும். எனவே, ஆட்சியைக் கைப்பற்றினாலும் அதைத் தக்கவைத்துக்கொள்வதே ரங்கசாமிக்குப் போராட்டமாக மாறும். தனது கட்சியின் உறுப்பினர்களைப் பாதுகாக்கவே அவர் முழுக் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். புதுச்சேரி மக்கள் தங்கள் முன்னுள்ள தேர்வுகளை வேதனையோடு பார்க்கிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்