அழிவுக்கு யார் பொறுப்பு?

By சமஸ்

வீடு முழுக்க வெள்ளம் சேர்த்த சேறு. ஒரு வாரம் தண்ணீரில் மூழ்கியிருந்ததில் வீட்டின் உள்பக்கச் சுவர்கள் சாயும் நிலையில் இருந்தன. வீட்டின் அத்தனை சாமான்களும் வீட்டுக்கு வெளியே வீதியில் வெயிலுக்காகப் பரப்பிக் கிடந்தன. வீட்டுச் சுவரில் ஒரு பக்கம் இரட்டை இலை, ஒரு பக்கம் உதயசூரியன். இரண்டுக்கும் நடுவே உட்கார்ந்து பைத்தியம் பிடிக்காத குறையாக அரற்றிக்கொண்டிருந்தார் சின்னக்கா: “ஏ தெய்வமே நான் என்ன செய்வேன்?” பேரழிவுக்குள்ளான கடலூரில் பயணித்தபோது, தமிழகத்தின் சமகால சமூக நிலை யையும் அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் கணத்தில் உணர்த்தும் ஒரு குறியீடுபோல இருந்தது அந்தச் சூழல்.

வீடுகள் அப்படியே வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்ட விசூரில் மணிவேலைச் சந்தித்தேன். பள்ளி மாணவன். தீபாவளிக்கு முறுக்கு சுடும் மாவோடு அடுப்படியிலிருந்த அம்மாவையும் அக்காவையும் கண் முன்னே வெள்ளம் அடித்துச் சென்றதைப் பார்த்தவன். “பெரிய அலைபோலத் தண்ணி வந்துச்சுண்ணன். திடீர்னு பூந்துச்சு. ‘இரு தம்பி வந்துர்றேன்’னாங்க. அதுக்குள்ள அம்மா, அக்கா ரெண்டு பேரையும்…” தேம்பி அழுகிறான்.

மணிவேல் அந்த ஆற்றைக் காட்டினான். தூர்வார ஆரம்பித்திருக்கிறார்கள் இப்போது. ஆற்றிலிருந்து அகழப் பட்ட மண் மலைபோல இரு கரைகளிலும் குவிக்கப்பட்டிருக் கிறது. “அன்னைக்குத் தண்ணி வந்தப்ப ஆத்துப்பாதை இப்படி இல்லண்ணன். மண்ணும் புதருமா மண்டிருந்துச்சு. அதனாலதான் கரை மேல தண்ணி ஏறுச்சு” என்றான்.

பெரியகாட்டுப்பாளையம் ஜீரணிக்க முடியாதது. காட்டாற்றின் ஓட்டத்தைத் திசை திருப்பி ஆக்கிரமிக்கப்பட்ட மேட்டிலும் கரையிலும் காலனி வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறது அரசாங்கம். ஆற்றுப்பாதையும் காலனி வீடுகள் அமைந்திருந்த தெருவும் கிட்டத்தட்ட ஒரே மட்டத்தில் இருந்தன. இங்கு வெள்ளம் வந்தபோது வீடுகள் கூரை அளவுக்கு மூழ்கியிருக்கின்றன. ஒரே வீட்டில் 10 உயிர்கள் பறிபோன ஊர் இது. தவறுகளை மறைக்க இப்போது தூர்வாருகிறார்கள்.

பூதம்பாடியில் நுழைந்தபோது ஏதோ போரில் நிர்மூலமாக்கப்பட்ட ஊர்போல இருந்தது. மண் சுவர்களை வெள்ளம் கரைத்துவிட்ட நிலையில், மேற்கூரை அப்படியே குப்பைபோலப் பல இடங்களில் குவிந்து கிடந்தது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் வெறித்தனமாக அடித்துக்கொண்டு நின்றனர். “வக்கத்து நிக்கிறோம். மூவாயிரத்து ஐநூறு ரூவா நிவாரண உதவி கொடுக்குது அரசாங்கம். அதுவும் எல்லாருக்கும் கெடைக்கலை. ரேசன் கார்டு இல்லாட்டினா இல்லங்குறாங்க அதிகாரிங்க. வூட்டையே வெள்ளம் அடிச்சுட்டுப்போயிட்டு; ரேசன் கார்டுக்கு எங்கய்யா போவோம்?”

கோபம் நியாயமானது. ஆனால், வக்கற்றவர்கள் வெறும் கோபத்தால் அதிகாரவர்க்கத்தை என்ன செய்ய இயலும்? நிவாரணம் கிடைத்தவர்களுடன் கிடைக்காதவர்கள் அடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.

பெரும் பகுதி வயல்களை வெள்ளம் சூறையாடியிருந்தது. கல்குணத்தில் விவசாயி ராமலிங்கம் அடித்துக்கொண்டு அழுதார். “நெய்வேலி சுரங்கக்காரங்க திடீர்னு தண்ணியை உடைச்சுவிட்டுட்டாங்கய்யா. வயலப் பாருங்க, வெறும் தண்ணி மட்டும் இல்ல; சாம்ப மண்ணைக் கரைச்சுக்கிட்டு வந்து பூந்திருக்கு. இனி இந்த வயலுல என்ன வெளையும்? மண்ணோடு மண்ணாப் போச்சே, அத்தனையும்…”

அந்திராசம்பேட்டை, ஓணான்குப்பம், காடாம் புலியூர், மேல்பாதி, கீழ்பாதி, சர்வராஜன்பேட்டை, குறிஞ்சிப்பாடி… ஊர்ப் பெயர்களும் மனிதர்கள் பெயர்களும் மாறுகின்றன. கதை அதே கதை. தூங்க விடாமல் துரத்துகின்றன குரல்கள்.

தமிழகத்தின் மிக அழகான மாவட்டங்களில் ஒன்று கடலூர். அதன் உண்மையான முகம் இதுவல்ல. நீலம் பாவிய கடல். கடலில் கால் பதித்தால் கால்கள் அப்படியே தெளிவாகத் தெரியும். பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு, உப்பனாறு, வெள்ளாறு, கொள்ளிடம் வாரித் தள்ளும் பசுமை. பிரிட்டிஷ்காரர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஏழு ஆண்டுகள் போர் நடத்தியிருக்கிறார்கள் கடலூருக்காக. எவ்வளவு நாசப்படுத்திக்கொண்டிருக்கிறோம் நாம்!

2004-ல் சுனாமி. 2005-ல் பரவனாற்று வெள்ளம். 2010-ல் நிஷா புயல். 2011-ல் தானே புயல். 2013-ல் நீலம் புயல். 2015-ல் மீண்டும் ஒரு பேரழிவு. திரும்பத் திரும்ப மக்கள் மீது அடி விழுகிறது. அதிகாரவர்க்கத்தின் போக்கில் அதே அலட்சியம், அதே அத்துமீறல், எல்லாவற்றையும் காசை வைத்து அடித்துவிடலாம் எனும் அதே அகங்காரம்; துளி மாற்றம் இல்லை. ஏன்?

இரு காரணங்கள் முக்கியமானவை.

1. கடலூரின் சாவு எண்ணிக்கை இந்தக் கட்டுரை யை எழுதும்போது 50. இவர்களில் சரிபாதியினர் தலித்துகள்; மறுபாதியினர் அவர்களுக்கு இணையான பொருளாதாரத்தில் இருப்பவர்கள். ஏழைகள். வெள்ளத்துக்கு சாதி, வர்க்க பேதம் தெரியுமா என்று கேட்கலாம். ஆனால், சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் விளிம்புநிலையில் இருப்பவர் களையே அது அதிகம் சூறையாடுகிறது. ஏன்? அவர்களின் உயிர்களும் குரல்களும் அதிகாரவர்க்கத்துக்கு ஒரு பொருட்டல்ல. பெரியகாட்டுப்பாளையத்தில் ஆற்றுப்பாதையை ஆக்கிரமித்து காலனி அமைக்கப்பட்டது எதன் நீட்சி? காலங்காலமாகத் தொடரும் நிலப்பிரத்துவ மனோபாவ ஊர் கட்டமைப்பின் நீட்சி. ஊரின் நடுவே மேட்டில் கோயில். அதைச் சுற்றி சாதிய, பொருளாதார அடுக்குகளின்படி வீடுகள். ஊருக்கு வெளியே ஆற்றங்கரையை ஒட்டி சேரிகள். நவீன யுகத்தில் சேரிகளின் இடத்தில் காலனிகள். ஏன் மேட்டுக்குடிகளை இயற்கை ஒன்றும் செய்வதில்லை?

2. வெள்ளச் சேதம் தொடர்பான டிவி விவாதம் ஒன்றில் பங்கேற்றேன். அரங்குக்கு வெளியே முதல்வர், பிரதமர் என்று எல்லோரையும் சாடிக்கொண்டிருந்தார்கள், மக்கள் தரப்பில் பேச வந்தவர்கள். நிகழ்ச்சி தொடங்கியதும் எளிய இலக்குகளான உள்ளூர் கவுன்சிலர்களே ஒட்டுமொத்த பாதிப்புகளுக்கும் காரணம் என்பதுபோலப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

ஒருகட்டத்தில் தொகுப்பாளர் கேட்டார், “சரி, எல்லாவற்றுக்கும் காரணம் உங்கள் கவுன்சிலர்கள் என்று சொல்கிறீர்களே, அவர்கள் என்னவெல்லாம் பணிகள் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; எதையெல்லாம் செய்யாததால் உங்கள் வீடு மிதந்ததாகச் சொல்கிறீர்கள்? உங்களில் எத்தனை பேர் பொதுப் பிரச்சினைக்காக மக்கள் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள்?” அவர்களால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. ஒரு கவுன்சிலரின் கடமைகள், அதிகாரங்கள் என்ன என்று பலருக்கும் தெரியவில்லை; சிலருக்குத் தம் பகுதி கவுன்சிலரின் பெயர் தெரியவில்லை; தங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஓடும் வாய்க்காலின் பெயர் தெரியவில்லை. மெத்தப் படித்தவர்கள். ஊருக்குக் கருத்துக் கூற வந்தவர்கள்.

ஒரு சமூகத்தில் படித்தவர்கள் எந்த அளவுக்குக் குடிமைச் சமூகச் செயல்பாடுகளில் விழிப்புணர்வோடும் அக்கறையோடும் பங்கேற்கிறார்களோ, அந்த அளவுக்கு அந்தச் சமூகத்தில் அதிகாரவர்க்கத்தின் இறுகிய பிடி தளரும். ஒட்டுமொத்த வாழ்க்கைச் சூழலின் மேம்பாடு விளிம்புநிலை மக்களின் வாழ்விலும் எதிரொலிக்கும். நாம் எந்த அளவுக்கு சமூகத்துடன் தொடர்பற்று நம் வீடு, நம் குடும்பம் என்று சுருக்கிக்கொண்டு வெற்று விமர்சகர்களாக வாயை மெல்லுகிறோமோ அந்த அளவுக்கு மானுட விழுமியங்கள் மிதித்து நசுக்கப்படும்.

சென்னையில் மீண்டும் மழை. வழக்கம்போல மழையைக் கண்டதும் கால் டாக்ஸிகள், ஷேர் வேன்கள் மீண்டும் மாயமாகியிருந்தன. அரசு பஸ் உள்ளே நெரிசலிலும் வெளியே வெள்ளத்திலும் தத்தளித்தவாறு நகர்ந்தது. குரல்கள் ஒலிக்கின்றன: “என்ன மாரி வண்டியை வெச்சிருக்காய்ங்க பாருங்க சார், பிரைவட்டசேஷன்தான் ஒரே தீர்வு.”

அவர்களால் எப்படி நம்மைச் சோற்றாலும் காசாலும் அடிக்க முடிகிறது, தெரிகிறதா?

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்