நூறு தலைப்புகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அமமுக. ஒவ்வொரு தலைப்பின் கீழும் உள்ள வாக்குறுதிகளில் பெரும்பாலானவை திமுக, அதிமுக கட்சிகளின் அறிக்கைகளை ஒத்திருந்தாலும் குறிப்பிட்ட சில வாக்குறுதிகள் அமமுகவின் தனி அடையாளத்தைக் காட்டும் வகையில் அமைந்துள்ளன.
நிதிப் பகிர்வில் தமிழகத்துக்குத் தொடர்ந்து இழைக்கப்பட்டுவரும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்பது, அட்டவணை மொழிகள் அனைத்துக்கும் ஆட்சிமொழித் தகுதி வழங்குவது என திராவிடக் கட்சிகளின் நீண்ட காலக் கோரிக்கைகளை வலியுறுத்தும் அமமுக, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு இந்தியில் மட்டுமல்லாது தமிழிலும் பெயர் சூட்ட வேண்டும் என்று கூறியிருப்பது கவனத்துக்குரியது. ரூ.25 லட்சம் மதிப்பில் உலகத்திலேயே தமிழுக்கு மிக உயர்ந்த இலக்கியப் பரிசை நிறுவும் திட்டத்தையும் அமமுக அறிவித்திருக்கிறது.
உள் இடஒதுக்கீடு
உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும்போது அதனால் எந்தச் சமூகங்களும் பாதிக்கப்படாத வகையில் சரியான கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு, அவற்றின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்ற வாக்குறுதிக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது அமமுக. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே உள் இடஒதுக்கீடு குறித்து விவாதங்கள் நடந்துவரும் சூழலில், இந்த வாக்குறுதி உணர்த்த முனையும் பொருள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதுதான். மேலும், மீனவர்களின் 28 உட்பிரிவுகளை பரதவர் என்ற பொதுப் பெயரில் இணைத்து, அவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தொடரச் செய்வதற்கும் உறுதியளிக்கிறது அமமுகவின் தேர்தல் அறிக்கை.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் மாதம் நான்கு முறை அதன் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்கும் குறைதீர்ப்புக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அமமுக அறிக்கை கூறுகிறது. அரசுக்கு வரியல்லாத மாற்று வருவாய் வாய்ப்புகள் பற்றியும் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரியமைப்பு ஆகியவற்றால் சிறு குறு தொழில் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைப் பற்றியும் அமமுகவின் தேர்தல் அறிக்கை பேசுகிறது. ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டம்-2023ஐ நடைமுறைப்படுத்துவதே அமமுகவின் கொள்கையாகவும் இருக்கிறது. அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியைக் கூடுதலாக இருப்புவைத்துக்கொள்ளவும் உறுதியளிக்கும் அமமுகவின் அறிக்கை காற்றாலை மின் உற்பத்தியாளர்களின் வேதனைகளையும் கவனப்படுத்தியிருக்கிறது. திமுகவைப் போலவே அமமுகவும் சட்ட மேலவையை மீண்டும் கொண்டுவர விரும்புகிறது என்றாலும் தமிழகத்தின் சட்டமன்றத் தொகுதிகளை அதிகப்படுத்தவும்கூட அக்கட்சி உறுதியளித்துள்ளது. அதுபோலவே, பெரிய அளவிலான ஊராட்சிகளைப் பிரித்து, புதிய ஊராட்சிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வேளாண்மை
விவசாயிகளின் மீது சற்றே கூடுதல் அக்கறை காட்டுகிற இந்த அறிக்கையில், விண்ணப்பித்த அறுபது நாட்களுக்குள் விவசாய பம்ப்செட்டுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டங்களில் தனியார் துறையைத் தவிர்த்துவிட்டு, பொதுத் துறை நிறுவனமான தேசிய வேளாண் பொதுக் காப்பீட்டு நிறுவனத்தின் வாயிலாகவே அவற்றைச் செயல்படுத்தும் முடிவு மிகவும் விவேகமானது. தரிசு நிலங்களை மேம்படுத்தி, அவற்றை விவசாயத்தில் ஆர்வம் உள்ள பட்டதாரி இளைஞர் குழுவுக்கு வழங்கும் திட்டம் ஒன்றையும் முன்வைத்திருக்கிறது அமமுக. ஊராட்சி ஒன்றியங்கள்தோறும் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வசதியை உருவாக்கும் அக்கட்சியின் மற்றொரு திட்டம் நிச்சயமாக மலையக மற்றும் வனப் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மருத்துவர்களுக்கும் பெரும் உதவியாக அமையக்கூடியது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ஆண்டுக்கு இருமுறை மருத்துவப் பரிசோதனைகள், அரசு மருத்துவமனைகளில் பெண்களுக்கான உளவியல் ஆலோசகர்கள் நியமனம் ஆகிய திட்டங்கள் இன்றைய பெண்களின் உடல்நல, உளநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளாக அமையக்கூடும்.
வேலைவாய்ப்புகள்
இளைஞர்களுக்கும் சுய உதவிக் குழு அமைப்பை விரிவுபடுத்துவது, அனைத்து நிலை அரசுப் பணிகளுக்கும் வயதுவரம்பை அதிகப்படுத்துவது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தனியார் வேலைவாய்ப்புகளையும் உள்ளடக்குவது போன்ற வாக்குறுதிகள் இன்றைய இளைஞர்கள் எதிர்கொண்டுவரும் வேலைவாய்ப்பின்மைச் சிக்கலின் தீவிரத்தைப் பிரதிபலிக்கின்றன.
அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு, இடைத்தரகர்களுக்கு இடமளிக்காத வகையில் நூலகங்களுக்கு நூல்கள் வாங்குதல், ஆழ்குழாய் மீட்புக் கருவிகள், மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணங்கள் குறைப்பு, சுங்கச் சாவடிக் கட்டணங்கள் மறுவரையறை, பெண்களுக்கான கிராமப்புற வங்கி, மூத்த குடிமக்களுக்குப் பேருந்துகளில் கட்டணச் சலுகை, அரசாங்க முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேகக் காப்பீட்டுத் திட்டங்கள், காவல் துறைக்குச் சீருடை மாற்றம், பெண் காவலர்களுக்கு உரிய கௌரவம், பெண் காவலர்களுக்கு எனத் தனியாகப் பெண் உயரதிகாரி, காவல் துறையில் ஆர்டர்லி முறையை முற்றிலுமாக நீக்குதல் என்று தனது அறிக்கையில் கவனத்துக்குரிய பல திட்டங்களை முன்வைத்திருக்கிறது அமமுக.
விவிஐபி பயணங்களில் பாதுகாப்புக்காகப் பெண் காவலர்கள் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட மாட்டார்கள் என்பதைக் கவனப்படுத்தவும்கூட அமமுக மாதிரி ஒரு கட்சி அதைத் தனது தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம், தமிழக முதல்வர்கள் சென்னையில் வீட்டிலிருந்து கோட்டைக்குச் செல்லும் வழியிலாவது பெண் காவலர்களை வரிசையில் நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago